முதுவை ஹிதாயத் பக்கம்

புதிய செய்திகள்

முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தில் உறுப்பினராக சேர அழைப்பு


முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தில் உறுப்பினராக விருப்பமுள்ளவர்கள் சேரலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கிர்லோஸ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டத்தில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் தமிழக அரசு உத்தரவின்படி அமைக்கப்பட்டு உள்ளது. இச்சங்கத்தில் முஸ்லிம் சமூகத்தை சார்ந்த ஆதரவற்ற மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள மகளிருக்கு சுயதொழில் தொடங்க கடனுதவி, முஸ்லிம் விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட வறிய நிலையில் உள்ளவர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை வழங்கப்படும். மேலும் பாதுகாப்பு இல்லம் ஏற்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த இச்சங்கத்திற்கு அரசு ரூ.1 லட்சம் வழங்குகிறது.
இச்சங்கத்திற்கு நிதி ஆதாரங்கள் நன்கொடைகள் மூலம் திரட்டப்பட உள்ளது. திரட்டப்படும் தொகைக்கு இணையான தொகையை சங்கத்திற்கு மானியமாக அரசு வழங்கும். இச்சங்கத்தில் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த இருபாலரும் உறுப்பினராக சேரலாம்.
பேட்ரன் உறுப்பினராக ரூ.5ஆயிரமும் ஆயுள்கால உறுப்பினர் ரூ.ஆயிரமும், சாதாரண உறுப்பினராக ரூ.500ம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரிடம் செலுத்தி சேர்ந்து கொள்ளலாம். இத்தொகை மூலம் ஏழ்மையில் உள்ள முஸ்லிம் இன பெண்கள் பயன்அடைவர். எனவே நன்கொடையாளர்கள் தாராளமாக நன்கொடை அளிக்க முன்வரவேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசு கலைக் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு துவக்க வேண்டுகோள்


ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் உடனடியாக முதுகலைப்பட்டப் படிப்பு துவக்கப்பட வேண்டும் என அக்கல்லூரியின் பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் எம்.கே.காஜாமுகைதீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

ராமநாதபுரத்தில் 1994-ல் தொடங்கப்பட்ட அரசு மகளிர் கல்லூரியில் சுமார் 600 க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். ஆனால் இன்று வரை இளங்கலை பட்டப்படிப்பு மட்டும் உள்ளது. தொடங்கி 14 ஆண்டுகள் ஆகியும் இதுவரை முதுகலைப்பட்டப் படிப்பு தொடங்கப்படவில்லை.

எனவே உடனடியாக முதுகலைப்பட்டப் படிப்பு தொடங்கப்பட வேண்டும். ராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரியும், தொழில் நுட்ப பூங்காவும் விரைவில் தொடங்கப்பட வேண்டும் என எம்.கே.காஜா முகைதீன் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஒலிம்பிக் மாரத்தானில் பங்கேற்க விரும்பும் அமீரக தமிழ் இளைஞர்


ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராம் துபாயில் உள்ள ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தின் ஒரு அங்கமாக விளங்கி வரும் ஜீனத் லேண்ட் டிரான்ஸ்போர்ட்டில் பணி புரிந்துவருபவர் யு. அஹமது சுலைமான் ( வயது 31 ). தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தைச் சேர்ந்த இவர் தற்பொழுது திருச்சியில் வசித்து வருகிறார்.


பள்ளி, கல்லூரிகளில் பயிலும் போதே பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்றதன் காரணமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிடுகிறார்.

கடந்த ஜனவரி மாதம் ஸ்டாண்டர்ட் வங்கி ஆதரவில் துபாயில் நடைபெற்ற சர்வதேச மாரத்தான் போட்டியில் ( 42.195 கிமீ ) முதல் முறையாக பங்குபெற்ற இவர் 372 வது இடத்தைப் பிடித்தார். இப்போட்டியில் சுமார் 4 ஆயிரத்து 800 பேர் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதல் ராசல் கைமாவில் நடைபெற்ற அரை மாரத்தான் போட்டியில் பங்கேற்று 210 வது இடத்தைப் பிடித்தார். இதில் 6 ஆயிரம் பேர் பங்கேற்றனர். மேலும் அமீரக பாதுகாப்பு அமைச்சகம் நடத்திய அரை மாரத்தான் போட்டியில் பங்கேற்று 15 வது இடத்தைப் பெற்றார்.

இதன் காரணமாக எதிர்வரும் 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்குபெற்ற பிறந்த நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் எனும் ஆவலில் தற்பொழுது திருச்சி வருகை புரிந்துள்ள இவர் இந்திய ஒலிம்பிக் சங்கத்தை தொடர்பு கொண்டுள்ளார்.

இவரது முயற்சிக்கு இவர் பணிபுரிந்து வரும் நிறுவனமும், துபாய் இந்திய துணைத்தூதரக கன்சல் பி.எஸ். முபாரக், இந்திய முஸ்லிம் சங்கம், துபாய் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் ஆர்வமும், ஊக்கமும் அளித்து வருகின்றன.

இவர் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இவரது தாயக தொடர்பு முகவரி :

138 பெரிய கடை வீதி
திருச்சி 620 008
தொலைபேசி : 0431-270196/98 424 77828

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

துபாயில்  திருச்சி  ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தினரின் சந்திப்பு நிகழ்ச்சி எதிர்வரும் செப்டம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளர் எம்.ஜே.எம். அப்துல் கபூர் சாஹிப், பொருளாளர் கே.ஏ. கலீல் அஹமது. முதல்வர் டாக்டர் எம்.ஷேக் முஹம்மது, முன்னாள் மாணவர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எம்.எம். ஷாகுல் ஹமீது உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க பொதுச்செயலாளர் எம். அப்துல் ரகுமான் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோரும், அமீரகத்தில் பணிபுரிந்து வரும் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களும் ஒருங்கிணைப்பாளர் ஹெச்.இ. ஜாபர் சித்திக்கை 050 5489609 எனும் அலைபேசியிலோ அல்லது hejaf@yahoo.com எனும் மின்னஞ்சல் மூலமோ தொடர்பு கொண்டு தங்களை  பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மதுரையில் ஹஜ்பயணிகளுக்கு இலவச தடுப்பூசி, போலியோ மருந்து


மதுரை : மதுரையில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த ஹஜ் பயணிகளுக்கு போலியோ மருந்துடன் இலவச தடுப்பூசி போடப்பட்டது.முஸ்லிம்கள் புனித கடமையான ஹஜ் பயணத்தை நவம்பரில் மேற்கொள்ள இருக்கின்றனர். ஹஜ் பயணம் செல்வோர் முன்னதாக மூளைக்காய்ச்சலுக்கான தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்று சவுதி அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு முதல் போலியோ சொட்டு மருந்தும் வழங்கும்படி சவுதி அரசு வலியுறுத்தியுள்ளது. மதுரை விஸ்வநாதபுரத்தில் உள்ள மாவட்ட சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் இதற்கான முகாம் நேற்று நடந்தது. மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு நேற்று அங்கு தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. முன்னதாக டாக்டர்கள் சாமி, கபாலீஸ்வரி ஆகியோர் பயணிகளை பரிசோதனை செய்தனர். மதுரை ஹஜ் சர்வீஸ் சொசைட்டி தலைவர் அய்யூப், செயலாளர் ஜஹாங்கீர், நிர்வாகிகள் முகமதுஅலி, இப்ராஹிம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாவட்ட சுகாதாரத்துறை துணைஇயக்குனர் டாக்டர் பழனிச்சாமி பயணிகளுக்கு தடுப்பூசி போட்டதற்கான சர்வதேச சான்றிதழை வழங்கினார்.
 

தேசிய சிறுபான்மையினர் கமிஷன் தலைவர் குரேஷி

 

புதுடில்லி : தேசிய சிறுபான்மையினர் கமிஷன் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் முகமது சபி குரேஷி நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய சிறுபான்மையினர் கமிஷன் தலைவராக இருந்த ஹமீத் அன்சாரி துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் காலியாக இருந்த இப்பதவிக்கு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த குரேஷி நியமிக்கப்பட்டுள்ளார். காஷ்மீர் மாநிலத்தவர் ஒருவர் இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறை

அபிராமம் பள்ளிக்கு சாம்பியன் பட்டம்


கமுதி : பரமக்குடி கல்வி மாவட்ட விளையாட்டுபோட்டிகளில் மாணவிகள் பிரிவில் 150 புள்ளிகளும்,மாணவர் பிரிவில் 163 புள்ளிகளும் பெற்று அபிராமம் முஸ்லிம் மேல் நிலை பள்ளி சாம்பியன் பட்டத்தைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா அபிராமம் முஸ்லிம் மேல் நிலை பள்ளியில் நடந்தது.தாளாளர்

முகமதுயூனுõஸ் தலைமை வகித்தார். செயலாளர் நாசர் முகைதீன் முன்னிலை வகித் தார். தலைமையாசிரியர் பஷிர் அகமது வரவேற்றார்.முருகவேல் எம்.எல்.ஏ.,கமுதி ஒன் றிய தலைவர் கிருஷ்ணன். கமுதி பேரூராட்சி தலைவர் அம்பலம் பரிசுகளை வழங்கினர். உடற் கல்வி இயக்குனர்கள் அன்சாரி, உசையாள் பானு, ஆசிரியர் மணிமாறன் ஆகியோரும் பாராட்டப்பட்டனர்.
 

சவுதியில் திருமணத்துக்கு முன் எய்ட்ஸ் பரிசோதனை கட்டாயமாகிறது


ரியாத் : சவுதி அரேபியாவில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்குள்ள அரசு புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி திருமணம் ஆகவுள்ள மணமகனும், மணமகளுக்கு எய்ட்ஸ் நோய் பரிசோதனை செய்துகொள்வது கட்டாயம் ஆகிறது. வரும் 2008ம் ஆண்டு முதல் இந்த எய்ட்ஸ் பரிசோதனை கட்டாய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது என்று அங்குள்ள சுகாதார அமைச்சர் அல் வாடன் தெரிவித்துள்ளார்.

செளதி அரேபியாவில் அல் ஹயாத் அரபி நாளிதழுக்கு தடை


செளதி அரேபியாவில் வெளியாகிவரும் அரபி நாளிதழ் அல் ஹயாத். லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு வெளிவரும் இந்நாளிதழ் செளதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளிலும் பதிப்புகளைக் கொண்டுள்ளது. செளதி அரேபியாவில் அதிக பட்ச விற்பனையை இந்நாளிதழ் கொண்டுள்ளது.

சமீபகாலமாக இந்நாளிதழ் செளதி அரேபிய அரசின் கொள்கைகள் மற்றும் நாட்டின் கண்ணியத்தை சீர்குலைக்கும் விதமாக செய்திகள் வெளியிடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சர் இயாத் மதானி பலமுறை இதுகுறித்து எச்சரித்தும் இந்நாளிதழ் கண்டுகொண்டதாக தெரியவில்லை.

இந்நிலையில் சமிப்பத்தில் வெளியான ஈராக் குண்டுவெடிப்பு குறித்த செய்தியில் செளதி அரேபியாவில் உள்ள குழுவினருக்கு தொடர்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து அல் ஹயாத் நாளிதழுக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் தடை விதிக்கப்பட்ட காரணம் எதனால் என்பது முழுமையாக தெரிவிக்கப்படவில்லை.

முந்தைய பகுதிகள்


தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )

 Refer to your friends / Relatives

www.Chittarkottai.com