|
பேராசிரியர் - தளபதி ஷபீகுர் ரஹ்மான் - சமுதாயப் பிரமுகர்கள் பங்கேற்பு
அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் மீலாதுப் பெருவிழா, வெள்ளி விழா மற்றும்
மலர் வெளியீடு உள்ளிட்டவற்றை முப்பெரும் விழாவாக 15.05.2008 வியாழக்கிழமை மாலை
அபுதாபி ஹோட்டல் கிராண்ட் கண்டினெண்டில் நடைபெற்றது.
விழாவிற்கு அய்மான் சங்க தலைவர், கீழக்கரை டவுண் காஜி அல்ஹாஜ் காதர் பக்ஷ்
ஹுசைன் சித்திக்கீ தலைமை தாங்கினார். துவக்கமாக உத்திர பிரதேச மாநிலம்
காஸிபூரைச் சேர்ந்த இமாம் மௌலவி முஹம்மது அஸ்லம் முஃப்தி இறைவசனங்களை அரபி
மொழியில் ஓதினார். அதன் தமிழாக்கத்தை அய்மான் சங்க மார்க்க செயலாளர்
பெரியபட்டணம் மௌலவி முஹம்மது ஷர்புதீன் ஆலிம் விவரித்தார்.
'நினைவு யாவும் உங்கள் மீது யா ரசூலுல்லாஹ்' எனும் பாடலை தேரிழந்தூர் தாஜுதீன்
தனது கம்பீரக் குரலில் பாடினார்.
அய்மான் சங்க செயலாளர் கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார்.
அல்ஹாஜ் காதர் பக்ஷ் ஹுசைன் சித்திக்கீ
அல்ஹாஜ் காதர் பக்ஷ் ஹுசைன் சித்திக்கீ தனது தலைமையுரையில் அய்மான் சங்கம்
கடந்த 27 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. திருச்சியில் துவங்கப்பட்ட
அய்மான் மகளிர் கல்லூரியின் துவக்கம் முதல் பேராசிரியரின் பங்கு மகத்தானது.
அய்மான் சங்கம் அமீரகத் தலைநகரில் பல்வேறு சமுதாயப் பணிகளை மேற்கொண்டு
வருகிறது. அமீரகத்தில் உள்ள ஊர் ஜமாஅத்துகளுக்கு வழிகாட்டும் பணி உள்ளிட்ட பல
பணிகளைச் செய்து வருகிறது. அய்மான் சங்கப் பணியில் ஆரம்பத்தில் ஈடுபட்ட பலர்
இன்று தாயகத்தில் இருந்தாலும் அவர்கள் கல்லூரிக்கு வந்து உற்சாகம் அளித்து
வரும் நிகழ்வுகள் மிகவும் மகிழ்வையளிக்கிறது என்றார்.
தளபதி ஷபீகுர் ரஹ்மான்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி செயலாலர் தளபதி ஷபீகுர்
ரஹ்மான் அவர்கள் தனது தொடக்கவுரையில் பெண் கல்வி கற்றால் ஒரு சமுதாயம் கல்வி
கற்றதற்கு ஒப்பாகும் என்றார். இதன் காரணமாக திருச்சியில் துவங்கப்பட்டுள்ள
மகளிர் கல்லூரி மிகவும் பாராட்டுக்குரிய முயற்சி. தத்துவாஞ்சேரி பள்ளி திறப்பு
விழாவில் திருப்பனந்தாள் ஆதீனம் உள்ளிட்ட சகோதர சமுதாயப் பிரமுகர்கள் பங்கேற்ற
போது அவர்களிடம் நபிகளாரின் வழிமுறைகளில் குறித்து விவரிக்க முடிந்தது. இதன்
மூலம் இஸ்லாம் குறித்த அவர்களது தவறான கண்ணோட்டங்கள் மறைய வாய்ப்பு ஏற்படும்.
கடந்த 1982 ஆம் ஆண்டு சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்கள் மதினா வந்த
போது 2000 தமிழக சகோதரர்கள் பங்கேற்ற சிறப்பான மீலாதுப் பெருவிழா நடைபெற்றது.
மீலாது விழா என்று நடத்தாத ஊரில் அங்குள்ளவர்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்ட
பின்னர் அப்பெருவிழா சிறப்புற நடந்தேறியது. இன்றைக்கு தங்கத் தமிழக
ஆட்சிக்கட்டிலை அனுபவித்து வருபவர்களானாலும் சரி, சட்டமன்ற, நாடாளுமன்ற
பொறுப்புகளை வகித்து வரும் பலர் மீலாது விழா மேடைகள் மூலம் பரிணமித்தவர்களே.
இனவெறியை ஒழித்தது இஸ்லாம். இதனை இஸ்லாத்தை ஏற்று உம்ரா பயணமாக அமெரிக்காவில்
இருந்து வந்த கறுப்பு இனத்தவர்கள் மூலம் பார்க்க முடிந்தது என்றார்.
சையது ஜாபர்
அய்மான் கல்லூரி செயலாளர் அல்ஹாஜ் சையது ஜாபர் அவர்கள் கல்லூரி
ஆரம்பிக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஐந்து பட்டமளிப்பு விழாக்கள்
நடத்தப்பட்டுள்ளன. இதுவரை 58 பேர் பல்கலைக்கழக ரேங்கினைப் பெற்றுள்ளனர்.
மேலும் பல்வேறு போட்டிகளிலும் மெடல்கள் பெற்று சமுதாயப் பெண்கள் சாதனை புரிந்து
வருகின்றனர். எண்பது சதவீத முஸ்லிம் பெண்கள் கல்வி பயின்று வருவது அய்மான்
மகளிர் கல்லூரியின் தனிச்சிறப்பு. விரைவில் புதிய விடுதிக் கட்டடம் திறக்கப்பட
உள்ளது.
அய்மான் சங்க வெள்ளி விழா மலர் இஸ்லாமிய அறிவுக் களஞ்சியம் ( இரண்டு )
பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் எம்.பி. அவர்களால் வெளியிட சமுதாயப்
புரவலர் நோபிள் மெரைன் சாகுல் ஹமீது முதல் பிரதியினை பெற்றுக்கொண்டார். அதனைத்
தொடர்ந்து அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் முத்துப்பேட்டை எம். அப்துல்
ரஹ்மான், ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி
உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.
பேராசிரியர் கே.எம்.கே.
பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள் தனது விழாப்பேருரையில் அய்மான்
சங்கத்திற்கு அடித்தளமிட்ட நல்லுளங்களை நினைவு கூர்ந்தார். பணியின் நிமித்தம்
அமீரகத் தலைநகர் அபுதாபியில் பணிபுரிய வந்த நல்லுள்ளங்கள் தாயகத்தை, சமுதாயத்தை
நினைவு கூர்ந்து கல்வி மற்றும் சமுதாயப் பணிகளுக்காக அய்மான் சங்கத்தை
ஏற்படுத்தியுள்ளனர். பொழுதுபோக்கு அமைப்பாக இல்லாமல் மார்க்க அடிப்படையில்
ஒழுக்கத்தை நிலைநிறுத்தக்கூடிய வகையில் இச்சங்கத்தின் பணியில் இருந்து வருவது
குறிப்பிடத்தக்கது. தூர நோக்குப் பார்வையுடன் நிறுவப்பட்ட இச்சங்கம் இன்று
மகளிர் கல்லூரியைச் செயல்படுத்தி வருவது பாராட்டுக்குரியது.
இன்றைக்கு திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள் பல இருந்தாலும் இருபது ஆண்டுகளுக்கு
முன்பே திருவை அப்துல் ரஹ்மானின் கம்பீரக்குரலி திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பை
ஒலிநாடாவில் வழங்கி சாதனை படைத்துள்ளது அய்மான் சங்கம்.
முஸ்லிம்கள் அந்நியர்கள் என்று சொல்கின்றனர் சிலர். முஸ்லிம்கள் இந்திய
நாட்டின் மண்ணின் மைந்தர்கள். ரிக் வேதத்தில் பிஸ்மிக்க யா அல்லாஹ் என
குறிப்பிடப்பட்டுள்ளது என விவரித்த பேராசிரியர் அல்லாஹ் எனும் வாசகம் அரபு
நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்ததல்ல. இந்தியாவிலிருந்து அரபு நாட்டிற்குச்
சென்றது என பல்வேறு மேற்கோள்களுடன் தனது திருக்குர்ஆன் குறித்த ஆராய்ச்சி
ஞானத்தை வெளிப்படுத்தினார்.
தமிழகம் ஒரு அமைதிப்பூங்கா. சகோதர சமுதாய மக்களை மீலாது விழா, பள்ளிவாசல்
திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு அழைத்து கௌரவிப்பதன் மூலம் சமூக
நல்லிணக்கம் வளர பேருதவியாய் இருக்கும் என்பதில் ஐயமில்லை. கம்பம்
செல்வேந்திரன், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் பவானி ராஜேந்திரன் உள்ளிட்ட
பலர் இஸ்லாம் குறித்து தெரிந்து வைத்திருக்கும் தகவல்கள் என்னை வியக்க வைத்தது
என்றார்.
அய்மான் சங்கத்தின் வெள்ளி விழா முழக்கம் ஏழைகளை நேசிப்போம். இல்லாதோர்க்கு
வழங்கி வாழ்வோம், எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் என்பவை சிராஜுல் மில்லத்
அவர்கள் திருக்குர்ஆன் வசனங்களை தமிழ் படுத்தியதை நினைவு கூர்ந்தார்.
அய்மான் சங்கத்தின் பணி சிறக்க வாழ்த்தினார்.
பேராசிரியர் குளச்சல் சாகுல் ஹமீது
பேராசிரியர் குளச்சல் சாகுல் ஹமீது அவர்கள் தனது உரையில் தூர நோக்குப்
பார்வையுடன் செயல்படும் அய்மான் சங்க கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப்
பணிகளைப் பாராட்டினார். அய்மான் சங்க மலர் குறிஞ்சி மலர் போன்றது என்றார்.
பேராசிரியர் ஃபாரூக்
திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா.
முஹம்மது ஃபாரூக் அவர்கள் அய்மான் சங்கம் வெளியிட்ட திருக்குர்ஆன் ஒலிநாடா
பல்வேறு நாடுகளிலும் ஒலிப்பதைக் கண்டு அதற்குக் காரணமான அய்மான் சங்கத்தினரைப்
பாராட்டினார். இஸ்லாம் பல்வேறு துறைகளில் முன்னோடியாய் இருந்து வந்துள்ளதை
பல்வேறு உதாரணங்கள் மூலம் விவரித்தார்.
நோபிள் மரைன் சாகுல் ஹமீது
அய்மான் மேற்கொண்டு வரும் சமுதாயப் பணிகளுக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு நல்க
வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். இன்றைக்கு பல்வேறு அமைப்புகள் புதிது
புதிதாக முளைத்து வந்தாலும் நாம் அனைவரும் ஓரணியில் திரண்டால் மட்டுமே நமது
பலத்தை வெளிப்படுத்த முடியும், இது குறித்து பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள்
சிந்திக்க வேண்டிய தருணம் இது. இனிமேலும் காலம் தாழ்த்தினால் நாம் தான் அதன்
பலனை அனுபவிக்க வேண்டியிருக்கும் எனக்கூறினார்.
அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் எம். அப்துல் ரஹ்மான் அவர்கள் தனது உரையில்
மீலாது விழாக்களில் அமீரகத்தில் எதிர்காலத்தில் சகோதர சமுதாயப் பிரமுகர்களை
அழைத்து நடத்த வேண்டும் என ஏற்பாட்டாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இரவாஞ்சேரி முஹம்மது இக்பால் நன்றியுரை கூற தளபதியின் துஆவுடன் விழா நிறைவுற்றது.
விழாவில் அய்மான் சங்க நிர்வாகிகள் சிட்டிசன் அப்துல் மஜீது, சம்சுதீன்
உள்ளிட்ட நிர்வாகிகள், ஈமான் சங்க நிர்வாகிகள், பல்வேறு ஜமாஅத் நிர்வாகிகள்,
அமீரக காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு
சிறப்பித்தனர்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
தகவல் : முதுவை ஹிதாயத் ( எம். என்.ஏ.)
|