முதுவை ஹிதாயத் பக்கம்

புதிய செய்திகள்
முதுநிலை படிக்க பெண்களுக்கு யுஜிசி உதவித் தொகை


சென்னை, அக். 2: பெண் குழந்தைக்கான "இந்திரா காந்தி உதவித் தொகை' குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகம், கல்லூரி ஆகியவற்றில் எம்.ஏ., எம்.எஸ்ஸி., எம்.காம். உள்ளிட்ட முதுநிலைப் பட்டப் படிப்பில் சேரும் மாணவி, உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த உதவித் தொகை ஆண்டுக்கு 10 மாதங்கள் என இரண்டு ஆண்டுகளுக்கு மொத்தம் 20 மாதங்களுக்கு வழங்கப்படும். ஆண்டுதோறும் நாடு முழுவதும் 1,200 பேர் இந்த உதவித் தொகையைப் பெறுவர். மேலும்
விவரங்களுக்கு:
A.K. Dogra, Joint Secretary (SA), University Grants Commission, Bahadurshah Zafar Marg, New Delhi-110002.
Website: www.ugc.ac.in

எஸ்எஸ்எல்சி, பிளஸ் டூ கட்டணம் ரத்து


பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொது தேர்வு கட்டணம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாநில கல்வித் திட்டத்தின் கீழ் 10,12ம் வகுப்புகள் பயிலும் அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் இது பொருந்தும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளிலும், உதவி பெறாத பள்ளிகளிலும் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 10ம் வகுப்பு தேர்வுக் கட்டணமாக ரூ. 115ம், பிளஸ் டூ தேர்வுக் கட்டணமாக ரூ.175ம் வசூலிக்கப்பட்டு வந்தது.

செய்முறை தேர்வுடன் கூடிய பாடங்கள் படிக்கும் பிளஸ் டூ மாணவர்களிடம் ரூ.205 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டண ரத்து மூலம் சுமார் 6 லட்சம் எஸ்எஸ்எல்சி மாணவர்களும், 5.5 லட்சம் பிளஸ் டூ மாணவர்களும் பலனடையவுள்ளனர்.

இந்த கட்டண ரத்தால் அரசுக்கு சுமார் ரூ.16 கோடி இழப்பு ஏற்படும். ஆனாலும் இந்தச் சலுகை மூலம் மேலும் பல மாணவர்கள் தமிழ் வழிக் கல்வியை நாடுவார்கள் என்பதால் இத் திட்டம் அமலாக்கப்படுவதாக அரசு
அறிவித்துள்ளது.

முதுகுளத்தூரில் அரசுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றோருக்கு பரிசளிப்பு ! ஆசிரியர்களுக்கும், உலமாக்களுக்கும் பாராட்டு !!


முதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் பரிசு பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசளிப்பு விழாவும், இதற்கு தூண்டுகோலாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் உலமாக்களுக்கு பாராட்டு
விழாவும் 30.09.2007 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இஸ்லாமிய பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்றது.

துவக்கமாக திடல் பள்ளிவாசல் இமாம் மெளலவி ஏ. அமானுல்லாஹ் ஆலிம் இறைவசனங்களை எடுத்தியம்பினார்.

விழாவிற்கு பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மெளலவி எஸ்.அஹமது பஷீர் சேட் ஆலிம் தலைமை வகித்தார். அவர் தனது தலைமை உரையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிந்து வரும் நமதூர் வாசிகள் நமது
மாணவர்கள் உயர்கல்வியில் சிறப்பான நிலையை அடைய வேண்டும் எனும் நன்னோக்கில் நடத்தப்பட்டு இப்பயிற்சி மையத்தையும், அதன் நூலகத்தையும் பயன்படுத்தி வாழ்வில் உயர்நிலையை அடைய கேட்டுக்
கொண்டார்.

எஸ்.அப்துல் மாலிக் முன்னிலை வகித்தார். இஸ்லாமிய பயிற்சி மைய முதல்வர் ஹெச்.ஏ. சுல்தான் அலாவுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

பத்தாம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணாக்கர்கள் எம்.பெனாசிர், பி. முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் உரை நிகழ்த்தினர். அவர்கள் தங்களது உரையில் பயிற்சி மைய ஆசிரியர்களும், நிர்வாகிகளும்
தாங்கள் உயர் மதிபெண்கள் பெற வேண்டும் எனும் நன்னோக்கில் திட்டமிட்டு நடத்தப்பட்டு வரும் கல்விச்சேவையைப் பாராட்டியதுடன், படிப்பில் உயர்நிலையை அடைய வேண்டும் எனும் தன்னம்பிக்கையை வளர்க்க
உதவியதுமே இத்தகைய சிறப்பைப் பெற வைத்ததாகக் குறிப்பிட்டனர்.

பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 460 மதிப்பெண்கள் பெற்ற கே. அஜிபா நஸ்ரின் பாத்திமாவுக்கு முதல் பரிசை தேசிய நல்லாசிரியர் டாக்டர் எஸ். அப்துல் காதரும், 433 மதிப்பெண்கள் பெற்ற பி.
முஹம்மது இப்ராஹிமிற்கு இரண்டாம் பரிசை மெளலவி எஸ். அஹம்து பஷீர் சேட் ஆலிமும், 426 மதிப்பெண்கள் பெற்ற எம்.பெனாசிருக்கு மூன்றாம் பரிசை முதுவைக் கவிஞர் ஏ உமர் ஜஹ்பரும், 404
மதிப்பெண்கள் பெற்ற ஜெ.அஸ்பக் அஹமதுக்கு நான்காம் பரிசை ஆசிரியர் ஏ. ஹபீப் முஹம்மதுவும், ஆறுதல் பரிசுகளை ஆசிரியர் ஏ. அஸ்கர் அலியும் வழங்கினர்.

மாணவ, மாணவியருக்கு சேவை மனப்பான்மையுடன் பாடங்கள் நடத்திய ஆசிரியர்கள் எஸ்.அப்துல் காதர், என். காஜா நிஜாமுதீன் குரைசி, ஹெச்.ஏ. சுல்தான் அலாவுதீன், ஏ. அஸ்கர் அலி, மார்க்க போதனை
வகுப்புகள் எடுத்த இமாம்கள் மெளலவி பஷீர் சேட், மெளல்வி உமர் ஜஹ்பர், மெளலவி அமானுல்லாஹ் ஆகியோருக்கு ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் அதன் நிர்வாகக்குழு
உறுப்பினர்கள் ஏ. கஸ்ஸாலி, ஜே. சேக் அலி ஆகியோர் கைக்கடிகாரங்களை நினைவுப் பரிசாக வழங்கினர்.

பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி உதவித் தலைமையாசிரியர் என். காஜா நிஜாமுதீன் குரைசி நன்றி கூறினார்.

தகவல் : முதுவை ஹிதாயத்
 

ஷார்ஜா - கோவை புதிய விமான சேவை


மத்திய கிழக்கு நாடுகளின் முதலாவது குறைந்த கட்டண விமானசேவை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் ஷார்ஜா மற்றும் கோவை இடையே அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தனது விமான சேவையைத்
துவக்கியுள்ளது. இவ்விமானசேவை வாரந்தோறும் இரண்டு முறை இருக்கும். நவம்பர் மாதம் முதல் இச்சேவை வாரத்திற்கு மூன்று முறையாக அதிகரிக்கப்படும்.
 

நோன்பு திறப்பதற்கு தயாரிக்கும் வகைகளில் கடல் பாசியும் ஒன்று. உடலை குளிர்ச்சியாக்கும் கடல்பாசி தயாரிக்கும் முறை‍

தேவையானப் பொருட்கள்

கடல் பாசி - 10 கிராம் பால் - கால் கப்
சீனி - அரை கப் ஏலக்காய் பொடி - கால் தேக்கரண்டி
பச்சை கலர் பவுடர் - ஒரு சிட்டிகை பன்னீர் - அரை தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி  

கடல் பாசி செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி அதில் பால் ஊற்றி மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.

கொதித்ததும் 10 கிராம் அளவு கடல் பாசியில் சிறிதளவு கடல் பாசியை போட்டு 10 நிமிடம் நன்கு கரையும் வரை கரண்டியால் கலக்கவும்.

கரைந்ததும் ஒரு சிறிய தட்டில் வடிகட்டி ஊற்றவும். பிறகு 10 நிமிடம் ஃப்ரிஜ்ஜில் வைத்து உறைய விடவும்.

மற்றொரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி மீதம் இருக்கும் கடல் பாசியை போட்டு மிதமான தீயில் வைத்து கரைய விடவும்.

கரைந்ததும் சீனி, கால் தேக்கரண்டி உப்பு, கலர் பவுடர் மற்றும் பன்னீர் சேர்த்து கலக்கவும். சீனி கரையும் வரை கரண்டியால் 10 நிமிடம் கிளறி கொண்டே இருக்கவும்.

10 நிமிடம் கழித்து இறக்கி ஒரு தட்டில் வடிகட்டியால் வடிகட்டிக் கொள்ளவும். வெள்ளை கடல் பாசி உறைந்ததும் ஃப்ரிஜ்ஜில் இருந்து எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

அதன் பிறகு நறுக்கிய கடல் பாசியை பச்சை நிற கடல் பாசியில் மேலே தூவி ஃப்ரிஜில் 10 நிமிடம் வைக்கவும். 10 நிமிடம் கழித்து வேண்டிய வடிவில் வில்லைகளாக போட்டுக் கொள்ளவும்.

நோன்பு திறக்கும் போது தயாரிக்கும் வகைகளில் இதுவும் ஒன்று . இது உடம்புக்கு மிகவும் குளிர்ச்சியானது.

நன்றி அறுசுவை டாட்காம். குறிப்புக்கு உதவியவர் திருமதி. கமர் நிஷா அவர்கள்.

ரியாத் மத்தியப் பகுதியில் வர்த்தக மையங்கள் நிறைந்த பத்தாஹ்வில்  தீ


கடந்த 29-09 அன்று சவூதி அரேபிய தலைநகர் ரியாத் மத்தியப் பகுதியில் வர்த்தக மையங்கள் நிறைந்த பத்தாஹ்வில் ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கணக்கான கடைகளில் பல கோடிக்கணக்கான பொருள்கள் தீயில் எரிந்து சாம்பலாகிவிட்டன.

இந்த தீ விபத்து 29-09 மாலை 5.30க்கு துவங்கி 01-10ம்தேதி பகல் வரை எரிந்து கொண்டிருந்தது.

கேரளா - எமனி மார்க்கெட் என்று அழைக்கப்படும் ( சபா மக்கா பாலிகிளினிக் - லாவன்யா ரெஸ்ட்டாரன்டிற்கு தெற்கிலும், அன்சார் மீன் மார்க்கெட் - அல்உமரி மணி எக்சேன்ஜ் ரோட்டிற்கு மேற்கிலும், நீயூ செனையா பஸ் நிறுத்தத்திற்கு வடக்கிலும், பத்தாஹ் மேம்பாலத்திற்கு கிழக்கிலுமாக இருந்த) அந்தக்குறிப்பிட்ட பகுதி முழுவதும் தீக்கிரையாகிவிட்டன. அந்தப் பகுதி இந்தியா, எமன் மற்றும் பங்களாதேஸ் நாட்டைச் சேர்ந்த
வியாபாரிகள் நிறைந்த பரபரப்பான வியாபாரப்பகுதியாகும்.

ஜவுளிக்கடைகளும், எலக்கட்ரானிக்ஸ் பொருள்களும் நிறைந்த அந்த மார்கெட் ரமலான் மாதம் என்பதால் புதிய புதிய ரகங்கள் கடைகளில் நிறைந்திருந்தன. நிகழ்வுதினத்தன்று மாலை நோன்பு திறக்கும் நேரத்தில் அனைவரும் நோன்பு திறக்கச் சென்ற நேரம் மார்க்கெட்டின் நான்கு பகுதிகளிலும் ஒரே நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்து மளமளவென எரியத் தொடங்கியது.

தீ பற்றிய சில நிமிடங்களிலேயே அந்தப் பகுதி முழுதும் காவல் துறையின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது யாரும் மார்க்கெட் பக்கம் நெருங்க முடியவில்லை அந்தப்பகுதிக்குள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. கடைக்குச்
சொந்தக்காரர்களே கடையில் வைத்திருந்த ரொக்கப்பணத்ததை எடுக்கச் செல்ல முடியாதநிலை. மார்க்கெட்டை சுற்றி காவலுக்கு இருந்த காவல்துறை யாரையும் அந்தப் பகுதிக்குச் செல்ல அனுமதிக்வில்லை.

தகவல் அறிந்ததும் நாம் நிகழ்விடத்திற்கு சென்று பார்த்த போது அதிர்ச்சியில் உறைந்துவிட்டோம். தீ பற்றி சில மணித்துளிகள் ஆகிவிட்ட நிலையில் அனைத்து விதமான உயர்தொழில்நுட்ப வசதிகளையும் கொண்ட தீ
அனைப்புத் துறையின் நடவடிக்கை நம்மை ஆதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தீ ஜுவாலை விட்டு அதன் கோர முகத்தை காட்டத்துவங்கி விட்டது. ஏறத்தால அனைத்து பகுதிகளும் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. கட்டிடத்தின் மேல் பகுதிகளில் கரும்புகைகள் வந்து கொண்டிருந்தவைகள் மாறி தீ ஜுவாலைகள் கொழுந்து விட்டு எரியத் தொடங்கின. 2நாட்கள்; தொடந்து எரிந்த தீ அந்த குறிப்பிட்ட மார்கெட் பகுதியை முழுமையாக முடிந்துவிட்டிருந்ததை மறுநாள் சென்று பார்த்த போது காண முடிந்தது. உள்ளிருந்த
கட்டிடங்கள் சில இடிந்து விட்டிருந்தன.

அந்த மார்க்கெட்டில் தமிழகத்தைச் சேர்ந்த சிங்கப்பூர் ஹவுஸ், சிங்கப்பூர் அல்-ரிப்த்தி, சிங்கப்பூர் எலக்ட்ராணிக்ஸ் (இந்த மூன்று கடைகளும் ஒரே நிறுவனத்திற்குச் சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது) இந்த மூன்று கடைகளும் முழுமையாக தீக்கிரையாகிவிட்டன. லக்கி குரூப்ஸ்க்கு சொந்தமான குயின் பெப்ரிக்ஸ், மற்றும் சிங்கை ஸ்டோர், சிங்கை பேலஸ் ஆகிய தமிழகச் சகோதரர்களின் நிறுவனங்கள் முழுமையக எரிந்து விட்டன.

சம்பவத்திற்கு முன் தினங்கள் விடுமுறை என்பதால் வியாபாரம் செய்து வைத்திருந்த பல லட்சக்கணக்கான ரொக்கப்பணங்களும் தீயில் சாம்பலாகி விட்டதாக அங்கிருந்த சிலர் கூறினர். சிங்கப்பூர் ஹவுஸ் நிறுவனக்கடையில் ரொக்கப்பணம் மட்டும் 2.5 லட்சம் தீக்கிரையாகி விட்டதாக அங்கு வேலை செய்த சகோதரர் நம்மிடம் தெரிவித்தார்.

இந்த தீ விபத்தில் பல கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் யாரும் காப்பீடு செய்யவில்லை என்பது வருத்தத்திற்குறிய விஷயம்.

துபாயில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க முப்பெரும் விழா


துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி, வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஆகிய முப்பெரும் விழா 28.09.2007
வெள்ளிக்கிழமை மாலை துபாய் தேரா லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

துவக்கமாக முஹம்மது அனஸ் இறைவசனங்களை ஓதினார். பரீஜ் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார்.

அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் மன்ற பொதுச்செயலாளர் அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் மன்ற அறிக்கை வாசித்தார். முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் 'துபாய் பிளாக்' என இரண்டு
விடுதிக் கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். வருடந்தோறும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாது கல்லூரி
வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்கம் பல்வேறு வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கி வருவதாகத் தெரிவித்தார்.

முன்னாள் மாணவர் சங்கத்தின் உலக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான முனைவர் எம்.எம். ஷாகுல் ஹமீது தனது உரையில் ஜமால் முஹம்மது கல்லூரிக்கும், முன்னாள் மாணவர்களுக்கும் உள்ள தொடர்பு தாய், மகன் பாசப்பிணைப்பைப் போன்றது என்றார். தாயகம் வரும் ஒவ்வொரு வரும் தனது சொந்த வீட்டிற்கு வருவதைப் போல் கல்லூரிக்கு வருகை தர கேட்டுக் கொண்டார்.

கல்லூரி முதல்வர் முனைவர் எம். ஷேக் முஹம்மது கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டு வரும் பல்வேறு படிப்புகள், கேம்பஸ் இண்டர்வியூ, வருடந்தோறும் ஆகஸ்ட் 15 அன்று நடத்தப்பட்டு வரும் முன்னாள் மாணவர் மன்ற விழா, கல்லூரியில் பள்ளிவாசல் விடுதிக்கட்டிடத்திற்கு உதவிய ஈடிஏ அஸ்கான் மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹ¤தீன் மேலும் பல்வேறு வழிகளில் கல்லூரிக்கு உதவி வரும் ஈடிஏ டி என் எஸ் எக்ஸிகியூடிவ் டைரக்டர் அல்ஹாஜ் நூருல் ஹக், HRM ED அல்ஹாஜ் எம். அக்பர் கான் உள்ளிட்ட பலரை நினைவு கூர்ந்தார்.

கல்லூரி தாளாளர் அல்ஹாஜ் எம்.ஜே. அப்துல் கபூர் சாஹிப் கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவி வரும் முன்னாள் மாணவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கல்லூரி பொருளாளர் அல்ஹாஜ் கே.ஏ. கலீல் அஹமது சாஹிப், பேராசிரியர் கலந்தர் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.

முன்னாள் மாணவர் சங்க தலைவர் சாதிக் காக்கா விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து தனது நிறுவனங்களுக்கு கல்லூரி மாணவர்களைத் தேர்வு செய்யும் திட்டத்தை அறிவித்தார்.
முதுவை ஹிதாயத் நன்றி கூறினார்.

தகவல் : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ. )

ஷார்ஜாவில் பள்ளிவாசல் புகைப்படக் கண்காட்சி

ஷார்ஜாவில் உலகெங்கும் உள்ள பள்ளிவாசல்களின் புகைப்படக் கண்காட்சியை ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர் ஷேக் சுல்த்தான் பின் முஹம்மது அல் காஸிமி துவக்கி வைத்தார். இக்காண்காட்சியில் உலகெங்கும் உள்ள நூற்றி
ஐம்பதுக்கும் மேற்பட்ட அழகுமிகு பள்ளிவாசல்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

இக்கண்காட்சி அக்டோபர் எட்டாம் தேதி வரை தினமும் இரவு எட்டரை மணி முதல் நள்ளிரவு வரை நடைபெறும்.

தகவல் : முதுவை ஹிதாயத்
ஷார்ஜா இந்திய சங்கத்தில் அபூர்வ நாணயக் கண்காட்சி

ஷார்ஜா இந்திய சங்கத்தில் அபூர்வ நாணயக் கண்காட்சியை இந்திய கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணி திங்கட்கிழமை துவக்கி வைத்தார். இக்கண்காட்சி ஷார்ஜா சர்வதேச விமானநிலையத்தில் பணிபுரிந்து வரும்
இந்தியரான ஜஸ்டின் கில்பர்ட் லோபஸ் என்பவரால் சேகரிக்கப்பட்ட நாணயங்கள் இக்கண்காட்சியை அலங்கரித்து வருகின்றன.

உலகின் மிகப்பெரும் நாணய சேகரிப்பாளரான இவரது சேகரிப்பிற்கு கின்னஸ் மற்றும் லிம்கா சாதனைச் சான்றிதழ்கள் கிடைத்துள்ளன. இக்கண்காட்சி அக்டோபர் 11 ஆம் தேதி வரை நடைபெறும்.

இக்கண்காட்சி மாணவர்களது அறிவுத்திறனை அதிகரிக்கும் நோக்கிலும், நாணயங்கள் குறித்த தகவலைச் சேகரிப்போருக்காகவும் நடத்தப்பட்டு வருகிறது.

கண்காட்சியைச் துவக்கி வைத்த கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணி ஷார்ஜா இந்திய சங்கம் ஜஸ்டினின் முயற்சிகளுக்கு பெரிது ஆதரவு நல்கி வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷார்ஜா விமான
நிலைய ஆணையக இயக்குநர் அலி சலீம் அல் மித்பா ஜஸ்டினுக்கு பாராட்டு தெரிவித்ததுடன் இவரைப் போன்ற திறமையுடோருக்கு உதவிகள் அளிக்கப்படும் எனத் தெரிவித்தார். ஷார்ஜா இந்திய சங்க தலைவர் மேத்யூஸ்,
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் மற்றும் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

255 நாடுகளைச் சேர்ந்த 255 நாணயங்களை ஜஸ்டின் சேகரித்து ஹாங்காங்கின் சஞ்சய் ரேலன் சேகரித்த 235 நாடுகளது நாணய சாதனை முறியடித்துள்ளதாக கின்னஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் லிம்கா சாதனைப் புத்தகத்தில் 291 நாடுகளின் ஏழாயிரம் நாணயங்களைச் சேகரித்தமைக்காக இடம்பெற்றுள்ளார்.

ஜஸ்டின் கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகிலுள்ள பூவர் நகரைச் சேர்ந்தவர்.
துபாய் ஈமான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் இந்திய துணைத் தூதர்


துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) அமைப்பு சார்பில் வருடந்தோறும் ரமலான் முழுவதும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறது. அமீரகத்தில் தமிழக நோன்புக் கஞ்சியை வழங்கி
வருவதே இதன் சிறப்பம்சம். தினந்தோறும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோன்புக்கஞ்சி தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சிறப்பு மிகு நிகழ்ச்சியை அறிந்த துபாய் இந்திய துணைத்தூதரகத்தின் கன்சல் ஜெனரல் திருமிகு வேணு ராஜாமணி தானும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆவலாய் இருப்பதை தெரிவித்தார்.

இதனையடுத்து ஈமான் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு வியாழன் மாலை வருகை புரிந்த கன்சல் ஜெனரல் திருமிகு வேணு ராஜாமணி , கன்சல் திருமிகு பி.எஸ். முபாரக் ஆகியோரை ஈமான் அமைப்பின் கல்விக் குழுத் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ் தலைமையில் துணைத்தலைவர்கள் அல்ஹாஜ் அஹமது முகைதீன் , அல்ஹாஜ் அப்துல் கத்தீம் , அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் , பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி , பொருளாளர் மீரான் முஹைதீன் , கல்விக்குழுச் செயலாளர்கள் ஏ. முஹம்மது தாஹா , மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ் , விழாக்குழுச் செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தீன் , ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத் , ஜமாஅத ஒருங்கிணைப்பாளர் கீழை ஹமீது யாசின் , சுவாமிமலை முஹம்மது இஸ்மாயில் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.

நோன்புக் கஞ்சியை அருந்தி மகிழ்ந்த கன்சல் ஜெனரல் தமிழகத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். மேலும் தினமும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நோன்புக்கஞ்சியை தயாரித்து வழங்கும் குழுவினரைப் பாராட்டினார். ஈமான் அமைப்பு செய்து வரும் சமுதாயப் பணிகள் சிறப்புற வாழ்த்தினார்.

முந்தைய பகுதிகள்


தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )

 Refer to your friends / Relatives

www.Chittarkottai.com