|
பாஸ்போர்ட் பெறுவதற்கான
விதிமுறைகள்
எளிதாக்கப்பட்டுள்ளது
பாஸ்போர்ட் பெறுவதற்கான
விதிமுறைகளை மத்திய அரசு எளிதாக்கி உள்ளது.
எளிதாக்கப்பட்ட புதிய விதிமுறைகள் இன்று முதல்
அமலுக்கு வருகின்றன. வெளிநாடுகளுக்குச் செல்ல
விரும்புபவர்கள் பாஸ்போர்ட் எடுப்பதில்
பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்பட்டு
வருகின்றன.
இதில் சில திருத்தங்களை மேற்கொண்டு பாஸ்போர்ட்
பெறுவதை எளிதாக்க மத்திய வெளியுறவு அமைச்சகம்
முடிவு செய்தது. அதற்கென எளிய விதிமுறைகள்
உருவாக்கப்பட்டுள்ளன. அந்த புதிய நடைமுறை
இன்று முதல் அமலுக்கு வருகிறது.
பாஸ்போர்ட் வழங்குவதில் ஏற்படும் தாமதங்களை
தவிர்ப்பதற்காக, அட்டவணையில் குறிப்பிட்டுள்ள
14 ஆவணங்களில் போட்டோ உடன் கூடிய ஒரு ஆவணம்
உட்பட மூன்று ஆவணங்களை மட்டும் அளித்தால்
போதுமானது. வாக்காளர் அடையாள அட்டை, பணி
அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம்,
வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை உள்ளிட்ட
ஆவணங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. பாஸ்போர்ட்
கோரி விண்ணப்பம் செய்யும் நபர் பல்கலைக்கழக
வகுப்பில் சேர தகுதி உடையவராக இருந்தால்
அவருக்கு "ஈ.சி.என்.ஆர்.,' தேவையில்லை.
தற்போது இந்த சலுகை பட்டதாரிகளுக்கு மட்டுமே
உள்ளது. இது தவிர போலீஸ் சோதனை சான்றிதழில்
இருந்து விடுதலை அளிக்கப் பட்டுள்ளது. புதிய
விதிமுறைப்படி போலீஸ் சான்றிதழுக்கு பதிலாக
துணைச் செயலர், தாசில்தார் மற்றும்
எஸ்.எச்.ஓ., ஆகியோரிடம் சான்று பெறலாம்.
மேலும், விண்ணப்பதாரருக்கு எதிரான எந்தவொரு
தவறான தகவ<லும் இல்லாத பட்சத்தில் அவருக்கு
பாஸ்போர்ட் மறு வழங்கல் செய்யும் முன்போ
அல்லது பின்போ போலீஸ் சோதனை சான்றிதழ்
தேவையில்லை. அதே நேரத்தில் நான்கு
நாட்களுக்குள் பாஸ்போர்ட் மறு வழங்கல்
செய்யப்படும்.
தட்கல் திட்டத்திலும் மாறுதல்கள்
செய்யப்பட்டுள்ளன. தற்போதைய விதிகளின்படி
"தட்கல்' பாஸ்போர்ட்டுகள் 20 நாட்களில்
வழங்கப்பட்டு வருகின்றன. இனிமேல் 14
நாட்களுக்குள் வழங்கப்படும். அதே நேரத்தில்
விண்ணப்பதாரர்கள் மேலும் ரூ.500 செலுத்தினால்
ஏழு நாட்களுக்குள் பாஸ்போர்ட் கிடைக்கும்.
"தட்கல்' திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் மறு
வழங்கல் மூன்று நாட்களுக்குள் செய்யப்படும்.
புதிய விதிகளின்படி, "தட்கல்' பாஸ்போர்ட்
விண்ணப்பிப்பவர் அதற்கான காரணங்களை குறிப்பிட
தேவையில்லை. உள்துறை அமைச்சகத்தின் எதிர்ப்பு
காரணமாக முகவரி சரிபார்த்தலில் மட்டும்
வெளியுறவு அமைச்சகத்தின் எண்ணம் ஈடேறவில்லை.
எனவே காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்
பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்தால் ஐந்து
ஆண்டுகளுக்கான முகவரி ஆவணங்களை அளிக்க
வேண்டும். இது தவிர அவர்களது விண்ணப்பங்களை
உள்துறை அமைச்சகமும் பரிசீலனை செய்யும். இந்த
விதியானது சொந்த மாநிலத்தை விட்டு பிற
மாநிலத்துக்கு சென்று குடியேறி
இருப்பவர்களுக்கும் பொருந்தும்.
இது தவிர பாஸ்போர்ட் தாரர்களின் விரல் ரேகை
போன்றவற்றை பதிவு செய்யும் "பயோ மெட்ரிக்'
முறையை அறிமுகப்படுத்தவும் வெளியுறவு
அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு
முதல் நடைமுறைக்கு வரும் அந்த திட்டமானது
துõதரக மற்றும் அலுவலக ரீதியிலான
பாஸ்போர்ட்டுகளில் முதல் கட்டமாக
அறிமுகமாகிறது. |
ராமநாதபுரத்தில் மருத்துவ கல்லூரி
-
அமைச்சர் தங்கவேலன் தகவல்
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் விரைவில்
மருத்துவ கல்லூரி வர உள்ளதாக தமிழக
வீட்டு வசதி துறை அமைச்சர் தங்கவேலன்
தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடை திட்ட
அடிக்கல் நாட்டு விழாவில் கல்வெட்டை
திறந்து வைத்து அவர் பேசியதாவது: முதல்வர்
கருணாநிதி 1971ல் ஊட்டியில் நடந்த
விழாவில் ராமநாதபுரம் மாவட்டத்தை ஊட்டி
போல் மாற்ற வேண்டும் என அப்போதே கூறினார்.
தற்போது அதை நிறைவேற்றும் வகையில்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதாள சாக்கடை
போன்ற பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து
மாவட்டத்தை முன்னேற்றும் நடவடிக்கையில்
இறங்கியுள்ளோம்.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு ரூ.3.25
கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போல்
பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம்,
திருவாடானை, பனைக்குளம் போன்ற அனைத்து
பகுதிகளிலும் மருத்துவமனைகள் நவீன
படுத்தப்பட உள்ளன.
விரைவில் ராமநாதபுரம் மாவட்டத்தில்
மருத்துவ கல்லூரி வரஉள்ளது. இங்கு
சேதுசமுத்திரதிட்டம், கிழக்கு கடற்கரை
சாலை, அகலரயில் பாதை, போன்ற பல்வேறு
திட்டங்கள் நிறைவேறி வருகிறது.
சேதுசமுத்திர திட்டத்தை தொடர்ந்து
மாவட்டத்தில் பல்வேறு துறைமுகங்கள் வர
உள்ளதால் தொழில் வளங்கள் பெருக
வாய்ப்புகள் உள்ளன. மாவட்டம் நல்ல
முன்னேற்றத்தை நோக்கி செல்கிறது.
ராமநாதபுரத்தை தொடர்ந்து விரைவில்
ராமேஸ்வரம், பரமக்குடி, கீழக்கரையில்
பாதாளசாக்கடை திட்டம் கொண்டு வரப்படும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார். விழாவுக்கு
கலெக்டர் முத்துச்சாமி தலைமை வகித்தார்.
நகராட்சி தலைவர் லலிதரத்தினம் வரவேற்றார்.
பவானி எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் ஹசன்அலி,
முருகவேல், மாவட்ட பஞ்., தலைவர்
ரவிசந்திரராமவன்னி, சீதக்காதி அறக்கட்டளை
தலைவர் அப்துர் ரஹ்மான், துபாய் இ.டி.ஏ.
அஸ்கான் நிறுவன நிர்வாக மேலாண்மை
இயக்குனர் ஜலாஹூதீன், மேலாளர் ரிபாய்,
முகம்மது அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல்
காதர், இ.சி.சி.ஐ., தலைவர்
சதக்அப்துல்காதர், செய்யதம்மாள்
இன்ஜினியரிங் கல்லூரி தாளாளர் டாக்டர்
பாபு அப்துல்லா, தமிழ்நாடு குடிநீர்
வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர்
பெரியசாமி, நகராட்சி துணை தலைவர்
கவுசல்யாபாய் உட்பட பலர் பங்கேற்றனர்.
நகராட்சி கமிஷனர் தர்மராஜ் நன்றி
கூறினார். |
|
கீழக்கரையில் மீன்பிடி
துறைமுகம்
கீழக்கரை : கீழக்கரையில் மீன்பிடி
துறைமுகம் அமைக்கப்படும் என வீட்டு வசதி
துறை அமைச்சர் தங்கவேலன் தெரிவித்தார்.
கீழக்கரை நகராட்சி தலைவர், துணைத் தலைவர்,
கவுன்சிலர்களுக்கு முகம்மது சதக்
அறக்கட்டளை சார்பில் நடந்த பாராட்டு
கூட்டத்தில் அவர் பேசியதாவது:
கீழக்கரை மக்களின் கோரிக் கைகள் அனைத்தும்
நிறைவேற் றப்படும். நகரில் தேங்கும் கழிவு
நீரை சுத்திகரிக்கப்பட்ட நீராக கடலில்
விடவும், இங்கு மாநில அரசு நிதி உதவியுடன்
மீன்பிடி துறைமுகம் ஏற்படுத்த நடவடிக்கை
எடுக்கப்படும். கீழக்கரையை தாலுகாவாக
மாற்றுவது குறித்து அரசு பரிசீலனைக்கு
எடுத்துச் செல்லப்படும். கடல் நீரை
நன்னீராக்கும் திட்டம், காவிரி குடிநீர்
திட்டம் செயல்படும்போது கீழக்கரை குடிநீர்
பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.
கீழக்கரையில் தீயணைப்பு நிலையம்,
தூத்துக்குடி கயத் தாறு மின்சாரத்தை
இணைப்பது மற்றும் பல கோரிக்கைகள் குறித்து
நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு
அமைச்சர் கூறினார்.
முகம்மது சதக் அறக் கட்டளை தலைவர் ஹமீது
அப்துல் காதர் தலைமை வகித் தார்.
மேலத்தெரு உஸ்வத்துன் ஹசனா முஸ்லிம்
சங்கம் தலைவர் செய்யது சலாஹூதீன்,
முன்னாள் பேரூராட்சி தலைவர் ஷாகுல் ஹமீது
முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம்
எம்.எல்.ஏ., ஹசன் அலி, நகராட்சி தலைவர்
பஷீர் அகமது துணை தலைவர் ஜெய்னுதீன்,
நிர்வாக அலுவலர் தெய்வ நாயகம்,
மின்சாரத்துறை நிர்வாக இன்ஜினியர்
அருணாசலம், சென்னை மெஜஸ் டிக் பவுண்டேசன்
தலைவர் கரீம், சுலைமான் ஆலிம் டிரஸ்ட்
தலைவர் அகமது உசேன், முகம்மது சதக்
அறக்கட்டளை செயலாளர் கபீர் சாகிபு, சென்னை
ஏஎம்எஸ் இன்ஜினி யரிங் கல்லூரி தலை வர்
நூர்தீன், தாளாளர் ஜமாலு தீன், கீழக்கரை
ஹமீதியா ஆண் கள் பள்ளி தாளாளர் செய்யது
அப் துல் காதர், சீதக்காதி அறக் கட்டளை
செயலாளர் காலித் புகாரி, அறக்கட்டளை
நிர்வாக உறுப்பினர் அசன் தம்பி, சென்னை,
மார்பஹா டிரா வல்ஸ் உரிமையாளர் முகம்மது
உசேன், இடிஏ கன்ஸ்ட்ரக்சன் நிர்வாகிகள்
சதக் அன்சாரி, அக்பர் அலி, வெஸ்ட் ஆசியா
நிறுவன தென்கிழக்கு ஆசியா நாடுகளின்
நிர்வாக இயக்குனர் அகமது ரிபாய், சென்னை
சீதக்காதி அறக் கட்டளை டிஜிஎம் சேக்
தாவூது, கீழக்கரை வெல்பேர் அசோசியேஷன்
டிரஸ்ட் நிர்வாகி லியாகத் அலிக் கான்,
சென்னை ஹமீதியா ஏஜென்சி நிறுவன நிர்வாகி
இக்பால், கீழக்கரை செய்யது ஹமீதா அரபிக்
கல்லூரி தாளா ளர் அபூபக்கர் சாகிபு உட்பட
பலர் கலந்து கொண்டனர். முகம்மது சதக்
பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன்
நன்றி கூறினார். முன்னதாக கீழக்கரையில்
பல்வேறு வசதிகள் தொடர்பாக கோரிக்கை மனுவை
இடிஏ அஸ் கான் நிறுவன மேலாண்மை இயக்குனர்
செய்யது சலாஹூதீன் அமைச்சர் தங்கவேலனிடம்
வழங்கினார்.
|
|
இரண்டு தலை எருமைக்கன்று பரமத்தி
அருகே அதிசயம்
நாமக்கல்:பரமத்தி அருகே இரண்டு தலையுடன்
பிறந்த எருமைக்கன்றை, பொதுமக்கள்
ஆர்வத்துடன் பார்த்து
செல்கின்றனர்.பரமத்தி அருகேயுள்ள
மாவுரெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்
முத்துசாமி; விவசாயி. பசு மாடு, எருமை
மாடு வைத்திருக்கும் விவசாயி முத்துசாமி,
பால் வியாபாரம் செய்து வருகிறார். சினையாக
இருந்த அவரது எருமை மாடு, பிரசவ வலி
தாளாமல் துடித்தது.உள்ளூர் கால்நடை
மருத்துவர் உதவியுடன் எருமை மாட்டுக்கு
பிரசவம் பார்த்தனர். டாக்டரும்,
விவசாயியும், நீண்ட நேரம் போராடி எருமை
மாட்டின் வயிற்றில் இருந்த கன்றை வெளியே
எடுத்தனர். வெளியில் எடுக்கப்பட்ட
எருமைக்கன்று, இரண்டு தலைகளுடன், காண்போர்
அஞ்சி நடுங்கும் தோற்றத்துடன்
இருந்தது.இரண்டு தலையில் மூன்று காது,
நான்கு கண்கள் இருந்தன. கன்றின்
இரட்டைத்தலை குறுக்கே திரும்பி கொண்டதால்
தான், பிரசவிக்க முடியாமல் எருமை மாடு
திணறியது தெரியவந்தது. "மரபணு
குளறுபடியால் இத்தகைய குட்டி
உருவாகியிருக்கும்' என்று பிரசவம் பார்த்த
கால்நடை மருத்துவர் தெரிவித்தார்.
இரட்டை தலை இருப்பதால் எருமைக்கன்று,
நேராக நிற்க முடியாமல் கீழே விழுகிறது.
விவசாயி குடும்பத்தினர் புட்டிப்பால்
ஊட்டுகின்றனர்.ஒரு தலையில் இருக்கும்
வாயில் தரப்படும் புட்டிப்பால், மற்றொரு
தலையில் இருக்கும் வாய் வழியாக வெளியில்
வந்து விடுகிறது. "அதனால், ஓரிரு
நாட்களில் எருமைக்கன்று இறந்து விடும்'
என்று பிரசவம் பார்த்த கால்நடை மருத்துவர்
தெரிவித்து விட்டார்.இரட்டை தலையுடன்
பிறந்த எருமைக்கன்றை, அக்கம் பக்கத்தை
சேர்ந்த பொதுமக்கள், ஆர்வத்துடன்
பார்த்துச் செல்கின்றனர்.
|
முந்தைய பகுதிகள்
|