|
சித்தார்கோட்டையில் இலவச கலர் டி.வி. வழங்கல்
ராமநாதபுரம், ஆக. 3: ராமநாதபுரம் அருகேயுள்ள
சித்தார்கோட்டை முகமதியா மேல்நிலைப் பள்ளி
வளாகத்தில் அரசின் சார்பில் இலவச வண்ண
தொலைக்காட்சிப் பெட்டிகளை தமிழக வீட்டு
வசதித்துறை அமைச்சர் சுப.தங்கவேலன்
வியாழக்கிழமை வழங்கினார்.
விழாவிற்கு ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர்
எம்.என்.பூங்கொடி தலைமை வகித்தார்.
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்
கண்ணகிமணி, சித்தார்கோட்டை ஊராட்சி மன்றத்
தலைவர் ஜி.முகம்மது அப்துல்கனி ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக வீட்டு வசதி மற்றும்
குடிசைமாற்று வாரியத்துறை அமைச்சர்
சுப.தங்கவேலன் கலந்து கொண்டு அரசின் சார்பில்
இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை
வழங்கிப் பேசினார். ஊராட்சி ஒன்றியக் குழு
உறுப்பினர்கள் ஜமீர்ஹசன், சாந்தி சாத்தையா,
மண்டபம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்
கனகராஜன் உள்பட கிராம பொதுமக்கள் பலர் கலந்து
கொண்டனர். |
|
மிஃராஜின் ஒப்பற்ற பரிசு
மவ்லானா மவ்லவி அல்ஹாஜ்
ஏ முஹம்மது இஸ்மாயீல் பாஜில் பாகவி
நீடூர் நெய்வாசல், நாகப்பட்டினம் மாவட்டம்
எவரேனும் தொழாமல் தூங்கி விட்டாலோ, மறந்து
விட்டாலோ நினைவு வந்தபின் தொழுது
கொள்ளவும். இதைத் தவிர அவருக்கு வேறு
பரிகாரம் இல்லை.
அறிவிப்பாளர் : ஹள்ரத் அனஸ் பின் மாலில் (
ரளி ) அவர்கள்
நூல் : ஸஹீஹ¤ல் புகாரி
அண்ணல் நபி ( ஸல் ) அவர்கள் விண்ணுலகு
சென்றிருந்த பொழுது வல்ல அல்லாஹ் இந்த
சமுதாயத்துக்கு வழங்கிய பெறற்கரிய
பேரற்புதப் பரிசு தான் '"ஐவேளைத் தொழுகை"'
என்பது சிறியவரும் அறிந்த உண்மை.
தொழுகையின் சிறப்புப் பயன்களை, அகில உலக
அனைத்து மாந்தரும் சந்தேகமின்றி அறிந்தே
உள்ளனர். தொழுகை மூலம் உள்ளத்துக்கும்,
உடம்புக்கும், உயர்வும், ஆரோக்கியமும்
உள்ளன என்பதையும் ஐவேளையும் இறையோனுடன்
தொடர்பு கொள்ள வாய்ப்பு கிடைத்து அவனது
அளவிலா பேரருட்களை பெற இந்தத் தொழுகை
தொடர்புச் சாதனமாக விளங்குவதையும் அவர்கள்
புரிந்து வைத்துள்ளனர்.
இந்த இனிய பரிசை இன்றைய இஸ்லாமிய தலைமுறை
எவ்வளவு மதித்துக் காப்பாற்றுகிறது ?
என்பது தான் வேதனைக்குரிய கேள்வியாகும்.
எத்தனையோ பேருக்கு தொழுகை வேளை வந்து
போவதே நினைவிருப்பதில்லை.
பருவம் வந்துவிட்டால் ஐவேளையும்
தொழவேண்டும். ஒருவேளை விட்டாலும், கடமை
தவறிய குற்றத்திலிருந்து இறையோனிடம் தப்ப
முடியாது என்பதெல்லாம் இவர்களுக்குத்
தெரியாததல்ல.
ஒரு மனிதன் தொழுவதன்றி தூங்கிவிட்டாலோ,
மறந்து விட்டாலோ அவனுக்கு உணர்வு வந்ததும்
தொழுது விட வேண்டுமென்று மேற்கணட ஹதீஸ்
கட்டளையிடும் பொழுது; இந்தக் காரணம் ஏதும்
இன்றி பொழுதைக் கழித்தவர் எவ்வளவு
கண்டிப்பாக தொழுது விட வேண்டுமென்பது
வெள்ளிடை மலையாக தெரிகிறது.
ஆனால், இந்த சமுதாயத்தில் பலர்
ஆயிரக்கணக்கான வேளைகள் தொழாமல் இருப்பது
பற்றி சற்றேனும் சட்டை செய்வதில்லை.
சத்திய சஹாபாக்களில் ஆண்மக்களும்,
பெண்மக்களும் ஒரு வேளை தொழுகை தப்பிப்
போவதையும் சகித்துக் கொள்ளவில்லை. தொழுகை
வேளை வந்ததும் தொழாவிட்டால் அவர்களுக்கு
நிம்மதியே இருக்காது.
ஹிஜிரி 6 ஆம் ஆண்டு நிகழ்ந்த
'தாதுரர்ரிகாவும்'
என்ற புனிதப் போரிலிருந்து நண்பர்களுடன்
திரு மதீனா திரும்புகிறார்கள். மதீனா
சற்று தூரத்திலிருக்க, அதன்
அருகாமையிலுள்ள "பய்தா''
எனும் இடத்தில் சற்று ஓய்வெடுக்கிறார்கள்.
அவ்விடத்தில் அன்னை ஹள்ரத் ஆயிஷா ( ரலி )
அவர்களின் கழுத்து மாலை காணாமலாகி
விட்டது.
சுபுஹ¤த் தொழுகைக்கு மதீனா சென்று
விடவிருந்த சஹாபாக்கள் அம்மாலையைத் தேடிக்
கொண்டிருந்ததில் அது கைக்கு அகப்படாமல்
நேரம் நழுவிக் கொண்டிருந்தது ! சுபுஹ¥
நேரம் நெருங்கி விட்டது. அவ்வேளையில்,
சஹாபாக்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சி,
ஒழுச் செய்ய தண்ணீர் இல்லை. தண்ணீர்
இல்லாவிட்டால் எப்படித் தொழுவது
என்பதற்கான மாற்று வழி அப்பொழுது
அறிவிக்கப் பட்டிருக்கவில்லை.
தொழுகை வேளை தொழாமலேயே நழுவி விடுமோ என்ற
அச்சம் அவர்களை ஆட்கொண்டது. அதனால்
படபடப்பு அதிகமானது.
இதனை அன்புத் தோழர்கள் நாயகத்திடம் வந்து
முறையிட்டனர். அல்லாஹ் குர் ஆன் மூலம்
தயம்மச் சலுகையை அறிவித்தான்.
நீங்கள் ஒழுச் செய்ய தண்ணீர் பெறாவிட்டால்
சுத்தமான மணலில் கையால் அடித்து கைகளிலும்
முகத்திலும் தடவிக் கொள்ளுங்கள் ! என்ற
வசனம் தான் அத்தயம்மம் வசனம்.
சஹாபாக்களுக்கு அப்பொழுது தான் போன உயிர்
திரும்பியது போலிருந்தது. அல்லாஹ் வழங்கிய
இந்த நிரந்தரச் சலுகைக்கு காரணமாயிருந்த
அன்னை ஹள்ரத் ஆயிஷா ( ரளி ) அவர்களை
அன்புத்தோழர்கள் வாயாரப் புகழ்ந்தனர். ஒரு
வாகனத்துக்குக் கீழ் மண்ணில் புதைந்து
கிடந்த கழுத்து மாலையும்
கண்டெடுக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.
அன்னை ஆயிஷாவுக்கும் ஏனைய அன்புத்
தோழர்களுக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சியாகி
விட்டது.
சஹாபியப் பெண்களின் ஈமானிய உணர்வு நாயகத்
தோழர்களின் ஈமானுக்கு சற்றும் சளைத்ததாக
இல்லை.
அப்பெண்களுக்கு மாதவிடாய் காலம் வந்தால்
அது நின்று சுத்தமாகும் கட்டத்தில், இரவு
நடுநிசியிலெல்லாம் கண்விழித்து தாம்
சுத்தமாகி விட்டோமா என்பதை
கவனிப்பார்களாம். சுத்தமாகியிருந்தால் இஷா
களா ஆகாமல் இரவே தொழுது விடலாம் என்ற
ஆவலில் !
மார்க்கத்தில் இவ்வளவு தூரம் சிரமம்
எடுக்க வேண்டியதில்லை என்றிருந்தும்,
அவர்கள் தொழுகை களா ஆவதை பொறுத்துக் கொள்ள
இயலவில்லை.
பாத்திமாபின்து என்ற பெண் மணிக்கு
மாதவிடாய் காலத்தில் மட்டுமன்று, மற்ற
காலத்திலும் இரத்தப்போக்கு இருந்தது.
இந்நிலையில் தொழுவது கூடுமா என்ற கவலை
அவர்களை வாட்டியது. கூடாதென்றால் தொழாமல்
நாம் எப்படி தொழுகை வேளையைக் கழிப்பது
என்ற கவலை அவர்களை ஆட்டுவித்தது.
அண்ணலாரிடம் அப்பெண் விரைந்து வந்து
பரிகாரம் கேட்ட பொழுது மாதவிடாய் அல்லாத
காலத்தில் குளித்து விட்டு தொழுது கொள்ள
அனுமதித்தார்கள் நாயகம். அப்பொழுது தான்
அப்பெண்மணிக்கு மனம் சமாதானமானது.
இஸ்லாமிய ஆரம்ப கால வரலாற்றில் எத்தனையோ
புனிதப் போர்கள் மும்முரமாக நடக்கும்
வேளைகளில் தொழுகைகள் களாவாகிய
வண்னமிருந்தன.
குறிப்பாக கன்தக் போரில் நான்கைந்து
தொழுகைக்கள் இஸ்லாமியப் படைக்கு
தப்பிவிட்டன. காபிர்கள், இஸ்லாமியர் மீது
போரைத் திணித்த கோபத்துக்கு மேல், தொழுகை
களா ஆகவும் அவர்கள் காரணமாக இருந்ததால்,
அப்போர் மாலை வேளையில் ஹள்ரத் உமர் ( ரளி
) அவர்கள் அக்காபிர்களை கன்னா
பின்னாவென்று திட்டித் தீர்த்தார்கள்.
சஹாபாக்களின் இந்த ஈமானிய உணர்வை
உணர்ந்திருந்த அல்லாஹ் தன்னை சந்திப்பதால்
அவர்களுக்கு நிலவும் சாந்தியும்
சமாதானமும் மன அமைதியும் பாதிக்கப்படக்
கூடாது என்பதால், போர் நடக்கும்
வேளையிலும் வசதிப்பட்டவாறு தொழுது கொள்ள
அல்லாஹ் சஹாபாக்களுக்கு வாய்ப்பளித்தான்.
ஒரு அணி எதிரிகளுடன் பொருத்திக்
கொண்டிருக்கும் பொழுது, மறு அணி தொழுகையை
நிறைவேற்றிக் கொள்ள சட்டம் தந்தான்
அல்லாஹ்.
போர் மிகவும் உக்கிரமமாக நடந்தால், போர்
வாகனங்களில் இருந்தவாறே சமிக்ஞை மூலம்
தொழுகையை அதா செய்து கொள்ளவும் உரிமை
தந்தான்.
இத்தகைய ஆதாரங்களை முன்னுதாரணமாக்கியே,
ஒரு மனிதன் நெருக்கடியான காலத்திலும்
தொழுகை களாவாகிவிடாமல், பேணி வாழும்படி
சட்டமுறைகள் அறிவுறுத்துகின்றன.
எதிர்பாராமல் தன் உடுப்பை இழந்து அம்மணமாக
உள்ளவன் கூட அமர்ந்தவாறு தொழுகையை
நிறைவேற்ற வேண்டும். ஒருவனுக்கு ஏதோ நோய்
காரணத்தால் இரத்தப்போக்கு அல்லது சிறுநீர்
கழிவு உபாதை இருந்தால், ருகூவு ஸ¤ஜுது
செய்து வந்தால் அந்தப்போக்கு
அத்துமீறுமென்றால் நின்றவாறே சமிக்ஞை
மூலம் தொழுகையை நிறைவேற்ற வேண்டும்.
சுற்றி அசுத்தங்கள் ஓடிக்
கொண்டிருந்தாலும் காலையும் நெத்தியையும்
பதிக்கும் இடம் பரிசுத்தமாக இருந்தால்,
தொழுது கொள்ள வேண்டும். ஒரு கர்ப்பிணிக்கு
பிரசவ வேளையிலும் உணர்வு கட்டுப்பாடாக
இருந்தால் சுத்தத்துடனுமிருந்தால் இயன்ற
மட்டும் தொழ வேண்டும். இவை போன்ற எத்தனையோ
மென்னுணக்கமான தொழுகைச் சட்டங்கள்
தொழுகையின் அவசியத்தை வலியுறுத்துகின்றன.
இவ்வளவு கண்டிப்பான, கடமையான தொழுகையை ஒரு
முஸ்லிம் பாராமுகமாக்கிட அவனுக்கு எப்படி
மனம் வருகிறது ? நாம் உண்பதும்,
உறங்குவதும், உடுப்பதும், உறவாடுவதும்
எவ்வளவு முக்கியமோ அதைவிட
முக்கியமானதல்லவா தொழுகை ?
அண்ணல் நபி ( ஸல் ) அவர்கள் ஒரு முறை ஒரு
முக்கிய அலுவலில் ஈடுபட்டிருந்த பொழுது
லுஹருடைய பின் சுன்னத் களாவாகிவிட்டதால்,
அதை மீட்டுத் தொழுததுடன், களாவாகிவிட்ட
வருத்தத்தில், ஆயுள் பூராவும் அதைத்
தொழுது வந்ததாக ஹதீஸ் கிரந்தங்கள்
கூறவில்லையா ? இவற்றையெல்லாம் அறிந்த
பின்னும் ஏன் ஐவேளை தொழுவதில் நம்மிடம்
அலட்சியம் ?
ருகூவு, சுஜுது அடங்கிய தொழுகை இல்லாத
மார்க்கத்தில் நன்மையே இல்லை ? என்பது
அண்ணல் நபியின் மணிவாக்காகும். தொழாமல்
வாழ்வதன் மூலம் அந்நன்மையை இழக்க நாம்
காரணமாகி விடக் கூடாது.
பேரற்புதப் பயணமான மிஃராஜுன்னபியின்
பரிசு, இத்தொழுகை தான் ! ஆண்டுக்கொருமுறை
மிஃராஜ் வந்தாலும் வல்ல அல்லாஹ் ஒவ்வொரு
நாளும் ஐவேளைத் தொழுகைகளில்
முஃமின்களுக்கு மிஃராஜை வைத்துள்ளான்.
அவற்றை நாம் நிறைவேற்றுவதன் மூலமே, அண்ணல்
அடைந்த உயர்வில் ஓரளவை நாம் அடைய
முடியும். இறை பக்தியோடு ஐவேளைத் தொழுவதன்
மூலம் அல்லாஹ் நம்மைப் புனிதப்படுத்தி
நமக்கு மேலான அந்தஸ்தை வழங்குவானாக !
நன்றி : குர்ஆனின் குரல்
பொன் விழா கண்ட மாத இதழ்
மதுரை - ஆகஸ்ட் 2007 |
|
மதுரை புத்தக திருவிழாவில்
கருத்தரங்கம்_சொற்பொழிவு
மதுரை புத்தக திருவிழாவில் ஒவ்வொரு நாளும்
கருத்தரங்கம், சொற்பொழிவு நிகழ்ச்சிகளும்
நடைபெறுகின்றது.
இதுகுறித்து மதுரை மாவட்ட கலெக்டர்
எஸ்.எஸ்.ஜவஹர் நேற்று நிருபர்களிடம்
கூறியதாவது
மதுரையில் தென்னிந்திய புத்தக
விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்
சார்பில் 2_வது மதுரை புத்தகத் திருவிழா
2007 தமுக்கம் மைதானத்தில் 10.8.2007
முதல் 19.8.2007 வரை நடைபெறவுள்ளது.
இதற்கான அனுமதி இலவசம்.
புத்தகத் திருவிழாவின் துவக்க விழா
10.8.2007 அன்று மாலை 6 மணிக்கு மதுரை
மாவட்ட கலெக்டர் எஸ்.எஸ்.ஜவஹர் தலைமையில்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம்
தென்னரசு புத்தககண்காட்சியை துவக்கிவைத்து
சிறப்புரையாற்றுகிறார். இவ்விழாவில்
சென்னை பாபாசி தலைவர் காந்தி கண்ணதாசன்
வரவேற்புரையாற்றவும், பத்மஸ்ரீ டாக்டர்
நல்லி.குப்புச்சாமி செட்டி,
வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர்
தேன்மொழி கோபிநாதன் ஆகியோர் வாழ்த்துரை
வழங்கவும், சென்னை பாபாசி செயலாளர்
ஆர்.எஸ்.சண்முகம் நன்றியுரையாற்றவும்
உள்ளனர்.
12.8.07 அன்று மாலை 3 மணியளவில்
நான்மாடக்கூடல் எனும் அரங்கினை மதுரை
புத்தக கண்காட்சிக்கு வித்திட்டவரும்,
ஈரோடு மாவட்ட கலெக்டருமான த.உதயசந்திரன்
திறந்துவைக்க, பேராசிரியர் தொ.பரமசிவன்
சங்ககால மதுரை என்ற தலைப்பிலும், முனைவர்.
வெ.வேதாச்சலம் நாயக்கர் கால மதுரை என்ற
தலைப்பிலும், சு.வெங்கடேசன் ஆங்கிலேயர்
கால மதுரை என்ற தலைப்பிலும் கருத்துரை
வழங்க மதுரை என்ற கருத்தரங்கம் நடைபெற
உள்ளது.
11.8.2007 அன்று மாலை 6 மணிக்கு எனது
கதாபாத்திரங்கள் எனும் தலைப்பில்
எழுத்தாளர் ஜெயகாந்தன் உள்ளத்தில் நல்ல
உள்ளம் எனும் தலைப்பில் மனநல மருத்துவர்
டாக்டர்.ருத்ரன் ஆகியோர் உரையாற்ற
உள்ளனர்.
13.8.2007 அன்று மாலை 6 மணிக்கு கடந்து
வந்த பாதைகள் எனும் தலைப்பில் எழுத்தாளர்
எஸ்.ராமகிருஷ்ணன் நூல்களே தெய்வம் எனும்
தலைப்பில் மனிதத்தேனீ சொக்கலிங்கம்
ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.
14.8.2007 அன்று மாலை 4 மணிக்கு
பேராசிரியர் தி.சு.நடராஜன், ந.முருகேச
பாண்டியன் ஆகியோர் எழுத்தாளர் ஜி.நாகராஜன்
நினைவு சொற்பொழிவு மற்றும் ப.சிங்காரம்
நினைவு சொற்பொழிவு ஆற்ற உள்ளனர். மாலை 6
மணிக்கு பா.தேவேந்திர ஞீபதி
ஒருங்கிணைப்பில் கலாப்ரியா தலைமையில்
தமிழின் முக்கிய கவிஞர்கள் பங்கேற்கும்
கவிதை வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
15.8.07 அன்று மாலை 6 மணிக்கு திரைப்பட
கவிஞர் பா.விஜய் சிறப்பு நிகழ்ச்சியும்
கவிதையும் மகா கவிதையும் எனும் தலைப்பில்
கவிஞர் சிற்பி எழுத்தும் எழுத்தாளனும்
எனும் தலைப்பில் சா.கந்தசாமி ஆகியோர்
உரையாற்ற உள்ளனர்.
16.8.2007 அன்று மாலை 6 மணிக்கு வானொலித்
தமிழ் என்ற தலைப்பில் கோடைப் பண்பலையின்
நிலைய இயக்குநர் சோமாஸ் கந்தமூர்த்தி
சிறப்புரை ஆற்ற உள்ளார். மேலும்
பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் நடுவராக
பங்குகொள்ளும் ஊடகங்களின் வளர்ச்சியால்
வாசிப்பு குறைந்திருக்கிறது என்ற
தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெற உள்ளது.
17.8.2007 அன்று மாலை 4 மணிக்கு தியாகி
மதுரை ஜார்ஜ் ஜோசப் நினைவு சொற்பொழிவு
லோகநாதன் தியாகி ஜே.சி.குமரப்பா நினைவு
சொற்பொழிவு சி.மோகன் ஆகியோர் நிகழ்த்த
உள்ளனர். மாலை 6 மணிக்கு எழுத்தாளர்
திலகவதி கவிஞர் வெண்ணிலா ஆகியோர்
பங்கேற்கும் மகளிர் தினம் நிகழ்வு நடைபெற
உள்ளது.
18.8.2007 அன்று மாலை 6 மணிக்கு
வாசிப்பும் நேசிப்பும் எனும் தலைப்பில்
எழுத்தாளர் பிரபஞ்சன் மற்றும் எழுத்தாளர்
ஆதவன் தீட்சண்யா, தோழர்.சி.மகேந்திரன்
ஆகியோர் உரை நிகழ்த்த உள்ளனர்.
19.8.2007 அன்று மாலை 4 மணிக்கு மதுரை
எழுத்தாளர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்.
மாலை 6 மணிக்கு மதுரை மாவட்ட கலெக்டர்
எஸ்.எஸ்.ஜவஹர் தலைமையேற்று பரிசுகளை
வழங்குகிறார். |