|
கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் பெண்கள்
கல்லூரி பட்டமளிப்பு விழா
கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர்
பெண்கள் கல்லூரி பட்டமளிப்பு விழா
நடைபெற்றது. இதில் உடல் ஊனமுற்ற, கண் பார்வையற்ற மாணவிகள் பட்டம் பெற்றனர்.
பட்டமளிப்பு விழா
கீழக்கரையில் உள்ள தாசிம்பீவி அப்துல் காதர்
பெண்கள் கல்லூரி யின் 16-வது பட்டமளிப்பு விழா
கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி
தாளாளர் டாக்டர் ரகுமத்நிஷா ரகுமான் வரவேற்றார். கல்லூரி முதல்வர் பேராசிரியர்
சுமையா தாவூது பட்டமளிப்பு நிகழ்ச்சியை
தொடங்கி வைத்தார். மதுரை மண்டல கல்லூரி
கல்வித்துறை இணை இயக்குனர் டாக்டர் உதய
பாஸ்கரன் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
பி.ஏ., பி.காம், பி.எஸ்.சி., மற்றும் எம்.ஏ.,
எம்.காம்., எம்.எஸ்.சி., உள்பட இளநிலை மற்றும்
முதுகலை பட்டம் பெற்ற 174 மாணவிகளுக்கு
சான்றிதழ் வழங்கினார். இதில் எம்.காம்.,
படித்த இருகால்களும் ஊனமுற்ற உமா மகேசுவரி
என்ற மாணவி தவழ்ந்து வந்து பட்டத்தை பெற்றுக்கொண்டார்.
சாதனை
கண் பார்வை இழந்த ஆயிஷா தஸ்லிமா என்ற மாணவி
எம்.ஏ., ஆங்கிலம் பாடத்தில் பல்கலைக் கழக
அளவில் முதலாவது ரேங்க் பெற்று தங்கப்பதக்கம்
பெற்றார். உடல் ஊனமுற்ற மற்றும் கண்
பார்வையற்ற மாணவிகள் பட்டம் பெற்றதை அனைவரும்
பாராட்டினார்கள். காரைக்குடி அழகப்பா
பல்கலைக்கழக அளவில் 30 மாணவிகள் ரேங்க்
பெற்றனர். இவர்கள் அனைவருக்கும் பதக்கம்
வழங்கப்பட்டது. எம்.ஏ. ஆங்கிலம் பாடத்தில் பல்கலைக்கழக அளவில் முதல் 10 ரேங்க்களையும் இந்த
கல்லூரி மாணவிகளே பெற்றனர்.
விழாவில் கல்லூரி கல்வி துறை இணை இயக்குனர்
உதய பாஸ்கரன் பட்டமளிப்பு உரை யாற்றி
பேசியதாவது:- பெண்கள் சமுதாய
முன்னேற்றத்திற்காக அரசு எண்ணற்ற திட்டங்களை
நிறைவேற்றி வருகிறது. பெண்கள் கல்விக்காக
அரசு கோடிக்கணக்கில் செலவிட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பின் தங்கிய பகுதியில்
அமைந்துள்ள இந்த கல்லூரி பெண்களின் கல்லூரி
கல்விக்கனவை நிறை வேற்றி வருகிறது. இதற்காக
இப்பகுதி மக்கள் இந்த கல்லூரி நிர்வாகிகளுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளனர். எனவே
தான் இப்படிப்பட்ட பெண்களுக்கான நிறுவனங்களை
அரசு ஊக்குவித்து வருகிறது.
பெருமை
உலகின் சிறந்த கல்வியாளர்கள் இந்தியாவில் தான்
உள்ளனர். வலிமையான பாரதம் பெண்களின் கையில்
தான் உள்ளது. இவ்வளவு பெண்களை பட்ட
தாரியாக்கிய ஆசிரியர்களுக்குத் தான் இதன்
பெருமை சேரும். பெண்களை சக்தி என்று நம்
நாட்டில் அழைக்கிறோம். ஏனெனில் பெண்கள்
கையில் தான் நாட்டை, குடும்பத்தை, சமுதாயத்தை
முன்னேற்றும் சக்தி உள்ளது. பத்திரிகை துறை,
கம்ப்யூட்டர் துறையில் பெண்கள் சாதனை
பாராட்டுக்கு உரியது.
இவ்வாறு அவர் பேசினார். விழாவில் சீதக்காதி
அளக்கட்டளை செயலாளர் காலித் ஏ.கே.புகாரி,
சுலைமான் ஆலிம், அறக்கட்டளை தலைவர் சாகுல்
ஹமீது ஆலிம், சீதக்காதி அறக் கட்டளையின்
பெண்கள் கல்வி இயக்குனர் செரீபா அஜீஸ், துணை
பொது மேலாளர் சேக் தாவூது, யூசுப் சுலைஹா மருத்துவமனை நிர்வாகி டாக்டர் செய்யது அப்துல்
காதர் உள்பட ஏராளமான மாணவிகளும், பெற்றோர்களும் திரளாக கலந்து கொண்டனர். மாணவி
சூர்யா நன்றி கூறினார். |
|
ராமநாதபுரம் அருகே ஒரே கிராமத்தில் 100
பேர்
புற்றுநோயால் மரணம் காரணம் என்ன?
ராமநாதபுரம் அருகே பெரிய பட்டினம் கிராமத்தில் புற்றுநோய் காரணமாக சுமார் 100 பேர்
மரண மடைந்துள்ளனர். வெடிவீசி பிடித்த
மீன்களை சாப்பிட்டதாலேயே இந்த நோய் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நாட்டு நலப்பணி முகாம்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே
உள்ளது பெரியபட்டினம் மீனவ கிராமம்.
இந்த ஊரை சேர்ந்த பலர் படித்து ஐ.ஏ.எஸ்.,
ஐ.எப்.எஸ். அதிகாரிகளாகவும், டாக்டர்,
விஞ்ஞானிகளாகவும் ஆகியுள்ளனர்.
இந்த ஊரில் சமீபத்தில் கீழக்கரை
தாசிம்பீவி அப்துல்காதர் பெண்கள் கல்லூரி
சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
நடந்தது. இந்த கல்லூரி மாணவிகள் மருத்துவ
விழிப்புணர்வு குறித்த பிரசாரம்
செய்தபோது, அந்த ஊரில் பலர் புற்றுநோய்
இறந்திருப்பதாக பொது மக்கள் தெரிவித்தனர்.
நாட்டுநலப்பணி முகாமுக்காக சென்ற கல்லூரி
பேராசிரியைகள் வாசுகி, ஜானகி ஆகியோர்
நிருபர்களிடம் கூறியதாவது:- நாங்கள் பெரியபட்டினம் சென்றிருந்த போது, அந்த ஊர்
மக்கள் கூறிய தகவல்கள் எங்களை
அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அங்கு
பெரும்பாலோனார் புற்று நோயால்
பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஓராண்டு
காலத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்டோர்
இந்த நோயால் இறந்துள்ளனர். 3 ஆண்டுகளில்
சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள்
இறந்திருக்கலாம் என்று கருதுகிறோம்.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் 40 முதல்
50 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்த ஊரில்
பலர் புற்றுநோயால் பாதிக்கப்
பட்டிருந்தாலும் அதுபற்றி சரிவர
தெரியாததாலும், வெட்கப்பட்டும் வெளியே
சொல்ல மறுக்கின்றனர். இவ்வாறு அவர்கள்
கூறினர்.
டாக்டர் ஆய்வு
இதனை அறிந்தகல்லூரி முதல்வர் சுமையா
தாவூது, மதுரை பெரிய ஆஸ்பத்திரி
புற்றுநோய் பிரிவு டாக்டர். மோகன்
பிரசாத்திடம் இது பற்றி தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து டாக்டர். மோகன் பிரசாத்
பெரியபட்டினம் வந்து, ஆய்வு செய்ததுடன்,
பொது மக்களுக்கு புற்றுநோய் குறித்து
விளக்கி கூறினார்.
இதுபற்றி மதுரை புற்றுநோய் பிரிவு
டாக்டர். மோகன் பிராத் கூறியபோது, "தவறான
உணவு பழக்க வழக்கத்தினாலேயே புற்று நோய்
பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. இந்த பகுதி
மக்கள் கடலில் வெடிவைத்து பிடிக்கும்
மீன்களை வாங்கி சாப்பிடுவதாலும், அவ்வாறு
பிடிக்கப்பட்டு விற்கப்படும் கருவாடுகளை
சாப்பிடுவதாலும் புற்று நோய் பாதிப்புக்கு
உள்ளாகி இருக்கலாம். இதுபற்றி அவர்களுக்கு மருத்துவ ரீதியான விழிப்புணர்வை
ஏற்படுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். |
தூத்துக்குடியில் உள்ளதை போல மூக்கையூரில் பெரிய அளவில்
துறைமுகம் அமைக்கப்படும்
தூத்துக்குடி துறைமுகம் போல, மூக்கையூரில்
தனியார் நிதி உதவியுடன் மிகப்பெரிய
துணைமுகம் அமைக்கப்படும் என்று அமைச்சர்
சுப.தங்கவேலன் தெரிவித்தார்.
தொழிற்பயிற்சி மையம்
துபாயில் உள்ள இடிஏ நிறுவனங்களின் சார்பு
நிறுவனமான ஸ்டார் எச்.ஆர். (மனிதவள
மேம்பாடு) டிரைனிங் சர்வீசஸ் பிரைவேட்
லிமிடெட் நிறுவனம் சென்னை, ஹைதராபாத்,
மும்பை, டெல்லி போன்ற நகரங்களில்
பன்னாட்டு வேலை வாய்ப்பு தொழிற்பயிற்சி
மையங்களை நடத்தி வருகிறது. இந்த
நிறுவனத்தின் சார் பில் ராமநாதபுரம்
பட்டணம் காத்தானில் தொழிற்பயிற்சி மையகிளை தொடங்கப்பட்டு உள்ளது.
இதன் திறப்பு விழா முகம்மது சதக்
அறக்கட்டளை தலைவர் எஸ்.எம்.ஹமீது அப்துல்
காதர் தலைமை தாங்கினார். வெஸ்ட் ஏசியா
நிறுவனங்களின் இயக்குனர் ஏ.ஜி.ஏ.அகமது
ரிபாய் வரவேற்றார்.
அமைச்சர் பேச்சு
விழாவில் கலந்து கொண்டு ஸ்டார் எச்.ஆர்.
பன்னாட்டு வேலை வாய்ப்பு தொழிற்பயிற்சி
மையத்தை திறந்து வைத்து அமைச்சர்
சுப.தங்கவேலன் பேசியதாவது:-
ஸ்டார் எச்.ஆர். நிறுவனம்
தொழிற்பயிற்சியும் கொடுத்து, அவர்களுக்கு
விசா செலவு இல்லாமல், பயிற்சிக்கேற்ற
வேலையை வெளிநாட்டில் வழங்கு வது
மிகப்பெரிய சாதனையாகும். வளைகுடா நாடுகளில் இந்த நிறுவனத்தின் கீழ் 47 ஆயிரம்
தமிழர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொழில்
முனைவோர்கள் இணைந்து பெரிய தொழில்களை
தொடங்க வேண்டும். அதற்கான ஆய்வுக்கூட்டம்
கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் வெஸ்ட் ஏசியா நிறுவன
இயக்குனர் செய்யது சலாகுதீன், சதக்
அறக்கட்டளை, சீதக்காதி அறக்கட்டளை
தலைவர்கள் எல்லாம் கலந்து கொள்ள வேண்டும்.
மூக்கையூர் துறைமுகம்
ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் கடல்
பகுதி, தூத்துக்குடி துறைமுகத்தைவிட 3
மடங்கு ஆழம் கொண்ட பகுதி. இந்த ஊரில்
ரூ.23 கோடியில் துறைமுகம் அமைக்கப்பட
உள்ளது. தனியார் தொழில் அதிபர்கள்
உதவினால் இங்கு தூத்துக்குடி போன்ற பெரிய
துறைமுகம் அமைக்க முடியும். எனவே இதற்கான
முயற்சிகளை இந்த மாவட்டத்தில் உள்ள வசதி
படைத்தலைவர்கள் மேற் கொள்ள வேண்டும்.
மூக்கையூரில் துறைமுகம் அமைக்க மத்திய,
மாநில அரசு நிபுணர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். எனவே தனியார் கூட்டு
ஒத்துழைப்புடன் மூக்கை யூரில் மிகப்பெரிய
துறைமுகம் அமைக்கப்படுவது உறுதி.பல ரசாயன
பொருட்கள் தயாரிப்புக்கு உப்பு மூலப்
பொருளாக உள்ளது. எனவே உப்பை பயன்படுத்தி,
ரசாயன பொருட்கள் தயாரிக்கும் தொழிற்
சாலைகளை இந்த பகுதியில் தொடங்க வேண்டும்.
சத்திரக்குடிக்கு கிழக்கேயும், உத்திர
கோசமங்கைக்கு மேற்கேயும் பூமிக்கடியில்
நிலக்கரி வளம் இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்துக்கு கிழக்கே
ஏராளமாக இயற்கை எரிவாயு கிடைக்கிறது.
தொழிற்சாலைகள்
இவற்றை கொண்டு பிர மாண்டமான சோப்பு தொழிற்
சாலை, இரும்பு உருக்கு தொழிற் சாலைகளை
இயக்க முடியும். வாலிநோகத்தில் செயல்பட்டு வந்த கப்பல் உடைக்கும் தொழிற்
சாலையை மீண்டும் இயக்க முயற்சி
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கிருந்து
கிடைக்கும் இரும்புகளை உருக்கும்
தொழிற்சாலை அமைக்க இந்த எரி வாயு
பயன்படும். இந்த மாவட்டம் மனித வளம்,
அறிவு வளம், தொழில் வளம் பெற்று
திகழ்கிறது. தி.மு.க. ஆட்சியில்
மின்சாரம், சாலை, தண்ணீர், ரெயில்
போக்குவரத்து வசதிகளிலும் தன்னிறைவு
பெற்றுள்ளது. இதனால் தி.மு.க. ஆட்சியில்
இந்த மாவட்டம் மிக விரைவாக வளர்ந்து
வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் ஸ்டார்
எச்.ஆர். நிறுவன தொழிற்பயிற்சி ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. சோம சுந்தரம்
தொழிற்பயிற்சி குறித்து விளக்கவுரை
ஆற்றினார். அசன் அலி எம்.எல்.ஏ.,
ராம்பிரபு எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி.
காதர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்
ராமவன்னி, கீழக்கரை நகரசபை தலைவர் பஷீர்
அகமது, நகர் தி.மு.க. செயலாளர்
ஆர்.ஜி.ரெத்தினம், செய்யது அம்மாள்
அறக்கட்டளை செல்லத்துரை அப்துல்லா, சேது
என்ஜினீயரிங் கல்லூரி தாளாளர் ஜலீல்,
கலெக்டரின் நேர்முக உதவியாளர் காதர்
உசேன், பயிற்சி நிறுவன பொது மேலாளர்
ஜாபர்அலி, மேலாளர் அப்துல்காதர், ராமேசுவரம் ஜமாத் தலைவர் ஆவுல் மீரா, செய்யது
ஜலாலுதீன், ரகுமத்துல்லா ஆலிம், ஆகியோர்
பேசினார்கள்.
விழாவில் சென்னை தொழில் அதிபர்கள் சதக்
அன்சாரி, டி.பி.எஸ். அகமது,
எம்.கே.இ.உமர், கலைஞர் பாசறை செயலாளர்
கிருபானந்தம், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் அகமது தம்பி, ஒன்றிய செயலாளர் நாகு,
வாணி கருணாநிதி, நகர் காங்கிரஸ் தலைவர்
முத்துராமலிங்கம், மாவட்ட செயலாளர்
துல்கீப், மாணவரணி டி.கே.குமார், மகளிரணி
ஜெய ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை ராமநாதபுரம் வெஸ்ட் ஏசியா
நிறுவன கிளை மேலாளர் டி.கே.அப்துல்
கரீம், அலுவலர்கள் அப்துல்காதர், அசோகன்,
காதர், ஆபிது அலி, முகம்மது ரபி, பைசுல்
ரகுமான் ஆகியோர் செய்திருந்தனர்.
நன்றி:
தினத்தந்தி |
முந்தைய பகுதிகள்
|