|
மரபணு மாற்றம் செய்த பி.டி. ரக
நெற்பயிர் அழிப்பு
கோவை, நவ. 11: கோவை அருகே
பயிரிடப்பட்டிருந்த மரபணு மாற்றம் செய்த
பி.டி. ரக நெற் பயிர்களை அகற்றி
ஆலாந்துறையில் விவசாயிகள்
வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ரகப் பயிர்கள் விஷத் தன்மை கொண்டது
எனவும், உடல் நலத்துக்கு
கேடு விளைவுக்கும் என்றும் கூறி அவற்றை
அழித்தனர். கோவையை அடுத்த
ஆலாந்துறை அருகே உள்ள ராமநாதபுரத்தில்
தனியார் விதை நிறுவனம்
ஒன்று 20 ஏக்கர் நிலத்தில் பல்வேறு வகையான
நெல் ரகங்களை பயிரிட்டு
சோதனைக் களம் அமைத்துள்ளது. இங்கு 20
சென்ட் நிலத்தில் மரபணு
மாற்றம் செய்த பி.டி. ரக நெல்
பயிரிடப்பட்டு உள்ளது.
இவற்றை தமிழக விவசாயிகள் சங்கம், உழவர்
உழைப்பாளர் கட்சி, இயற்கை
வேளாண்மை இயக்கம் ஆகியவற்றைச் சேர்ந்த
100-க்கு மேற்பட்டோர் வயலில்
இறங்கி பி.டி. ரக நெல் பயிரை அகற்றினர்.
இதனால் அப் பகுதியில் பரபரப்பு
நிலவியது.
இதுகுறித்து உழவர் உழைப்பாளர் கட்சித்
தலைவர் கு.செல்லமுத்து
நிருபர்களிடம் கூறியது:
அதிக மகசூல் பெற முடியும் எனக் கூறி
ஆந்திரம், மகாராஷ்டிரத்தில் பி.டி. ரக
பருத்தி விதைகளை விற்பனை செய்தனர். ஆனால்,
மகசூல் இல்லாத காரணத்தால் கடன் வாங்கி பருத்தி பயிரிட்ட
ஏராளமான விவசாயிகள்
தற்கொலை செய்து கொண்டனர்.
தமிழகத்தில் பருத்தி விவசாயிகள் குறைவு
என்பதால் தற்போது நெல்
விதைகளை இங்கு விற்பனை செய்ய முடிவு
செய்துள்ளனர்.
இந்த நெல் விதைகள் ஒரு முறை மட்டுமே
முளைக்கும் தன்மை உடையது.
அறுவடை செய்யும் நெல்லை விதைக்குப்
பயன்படுத்த முடியாது. இந்த பி.டி.
ரக நெல் விதைகள் பூச்சி, நோய் தாக்காதவாறு
செறிவூட்டப்பட்டவை. இவை
மனிதர்களுக்கும்,
கால்நடைகளுக்கும் கேடு
விளைவிப்பவை. நமது பாரம்பரிய விதைகளை அழித்து பி.டி. ரக
விதைகளை பரப்பும்
முறையில் வெளிநாட்டு நிறுவனம் இந்த
முயற்சியை மேற்கொண்டுள்ளது.
பி.டி. ரக நெல் பயிரிட்டால் அந்த வய−ல்
பிற பயிர்களை சாகுபடி செய்ய
முடியாது.
பி.டி. ரகத்தில் தக்காளி, கத்தரி உள்ளிட்ட
காய்கறிகளின் விதையையும்
கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர். இவற்றை
விவசாயிகள் அனுமதிக்கக்
கூடாது. ஆலாந்துறையில் குத்தகைக்கு நிலத்தை பெற்று
தனியார் விதை நிறுவனத்தினர் பி.டி. ரக நெல்
பயிரிட்டுள்ளனர். இந்த விதையின் தன்மைகள்
குறித்து அந் நிறுவனத்தினர் நில
உரிமையாளருக்கு தெரிவிக்கவில்லை.
இந்த விதையின் பாதிப்புகள் குறித்து
வேளாண் பல்கலைக்கழகம் மற்றும்
அரசுக்குத் தெரிந்தும் இதைத் தடுக்க
நடவடிக்கை எடுக்கவில்லை எனக்
குற்றம்சாட்டினார்.
தமிழ்நாடு பசுமை இயக்கத் தலைவர்
வி.ஜீவானந்தம்: மரபணு மாற்றம் செய்த
பயிர்கள் சுற்றுச்சூழலுக்கும், பல்லுயிர்
பெருக்கத்துக்கும் எதிர்விளைவுகளை
ஏற்படுத்தும்.
அமெரிக்காவில் இவ்வகையான தானியங்களைச்
சாப்பிட்ட 1,500
பேர் ஊனமடைந்துள்ளனர். 37 பேர்
இறந்துள்ளனர்.
ஆலாந்துறையில் உள்ள சோதனைக் களத்தில் எந்த
பாதுகாப்பு வழிமுறைகளும் இல்லாமல் பயிரிடப்பட்டு
உள்ளன. பி.டி. ரக நெல் விற்பனை
செய்யப்படும்
பாக்கெட்டுகளில் விதைகள்
குறித்த விவரம் இல்லை.
தமிழகத்தில் 10 இடங்களில் பி.டி. ரக நெல்
பயிரிட்டுள்ளதாகத் தகவல்
கிடைத்துள்ளது. இதையடுத்து, அப்பகுதிகளில்
பயிரிட்டுள்ள பி.டி. ரக
பயிர்களையும் அழிப்போம் என்றார்.
நன்றி: தினமணி |