முதுவை ஹிதாயத் பக்கம்

புதிய செய்திகள்
தொழில்நுட்பம் படிக்கும் சிறுபான்மை மாணவருக்கு உதவித் தொகை


தொழில்நுட்பம் படிக்கும் சிறுபான்மை மாணவருக்கு உதவித் தொகை சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தொழில் மற்றும் தொழில்நுட்ப படிப்பில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து,சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.ஜெயா விடுத்துள்ள அறிக்கை: தொழில் மற்றும் தொழில் நுட்ப படிப்பில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு உதவி தொகை வழங்கி வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ், 366 முஸ்லிம்கள், 399 கிறிஸ்தவர்கள், 1 சீக்கியர், 1 புத்தமதத்தினர் ஆகியோருக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. பெற்றோர் அல்லது பாதுகாவலர் எல்லா வழிகளிலும் ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் வருவாய் ஈட்ட வேண்டும். தொழில் படிப்புக்காக நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அல்லது பிளஸ் 2 படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இந்த கல்வி உதவித் தொகை வழங்குவதில் 30 சதவீதம் மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி, திருச்சி என்.ஐ.டி, காஞ்சிபுரம் ஐ.ஐ.ஐ.டி, ஆகிய கல்வி நிறுவனங்களில் தொழில் மற்றும் தொழில்நுட்ப பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு செலுத்திய கல்விக் கட்டணத் தொகை முழுமையாக திரும்ப வழங்கப்படும். மேலும், விடுதியில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு பராமரிப்பு படியாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

மேற்கண்ட 3 கல்வி நிறுவனங்களில் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் முதலில் வழங்கப்படும். பின்னர், மற்ற தொழில் கல்வி நிறுவனங்களில் இருந்து வரப்பெறும் கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். மற்ற தொழில் கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் சிறுபான்மையினர் விடுதியில் தங்கி படித்தால் ஆண்டு ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மற்ற மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

சிறுபான்மை மாணவர்கள் தங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் வருவாய் சான்றை நீதிமன்றம் சாரா முத்திரைத்தாளில் வழங்க வேண்டும். பெற்றோர் வேலையில் இருந்தால் அந்த நிறுவனத்தில் இருந்து வருவாய் சான்று வாங்கித்தர வேண்டும். உதவித் தொகை பெற தகுதி உள்ள மாணவர்கள் குறிப்பிட்ட சான்றுகளுடன், தங்கள் கல்வி நிறுவனம் மூலம் சிறுபான்மை நல ஆணையம் மற்றும் மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 807, அண்ணா சாலை, 5வது தளம், சென்னை 2 என்ற முகவரிக்கு நாளைக்குள் (25ம் தேதி) விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்கள் குறித்த விவரங்களை www.minorityaffairs.gov.in/newsite என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு ஆட்சியர் ஜெயா தெரிவித்துள்ளார்.
 
இருதய அறுவை சிகிச்சை: சிறுமிக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி


ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி மாணவிகள் மற்றும் சீதக்காதி தொண்டு நிறுவனம் சார்பில் சிறுமியின் இருதய அறுவை சிகிச்சைக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் வெள்ளிக்கிழமை இப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

சுலைமான் ஆலிம் அறக்கட்டளைத் தலைவர் கே.எஸ்.எம். சாகுல் ஹமீது ஆலிம் தலைமையில் நடைபெற்ற விழாவில், சீதக்காதி அறக்கட்டளைச் செயலர் காலித். ஏ.கே. புஹாரி, கீழக்கரை உஸ்வத்துன் ஹசனா முஸ்லிம் சங்கச் செயலர் அசன் தம்பி முன்னிலை வகித்தனர்.

கல்லூரி முதல்வர் சுமையா தாவூது வரவேற்றார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர். கிர்லோஷ்குமார், கூடுதல் ஆட்சியர் பூஜா குல்கர்னி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

கீழக்கரை நகர கத்தீப் அஸ்மத் ஹுசைன் மார்க்க சொற்பொழிவு ஆற்றினார்.

சீதக்காதி தொண்டு நிறுவனம் மற்றும் தாசிம் பீவி கல்லூரி மாணவிகளின் சார்பில் ராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரத்தைச் சேர்ந்த கர்ணன்-திருமதி தம்பதியரின் 7 வயது மகள் மேகாவின் இருதய அறுவை சிகிச்சைக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவி செய்துள்ளனர்.

இதற்கான காசோலையை சீதக்காதி அறக்கட்டளைச் செயலர் காலித் புஹாரி மதுரை அப்பல்லோ மருத்துவமனை அறுவை சிகிச்சைப் பிரிவுத் தலைவர் டாக்டர் வி. ஸ்ரீதர், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவ துறை இயக்குநர் டாக்டர் ரோஹிணி ஸ்ரீதர் ஆகியோரிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில், கீழக்கரை நகராட்சித் தலைவர் பஷீர் அஹமது, யூசுப் சுலைஹா மருத்துவமனை இயக்குநர் செய்யது அப்துல் காதர், சீதக்காதி அறக்கட்டளை துணைப் பொது மேலாளர் சேக் தாவூது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

துபாயில் அல் அமீன் ஜமாஅத் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா


துபாயில் செயல்பட்டு வரும் அல் அமீன் ஜமாஅத் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா மற்றும் ஈகைத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 12.10.2007 வெள்ளிக்கிழமை மம்சார் பூங்காவில் நடைபெற்றது. அல் அமீன் ஜமாஅத் சங்கரன்கோவில் தாலுகாவைச் சேர்ந்த ஜமாஅத்தினர் இணைந்து அல் அமீன் ஜமாஅத்தினை ஏற்படுத்தியுள்ளனர்.

விழாவிற்கு எஸ்.நயினார் முஹம்மது தலைமை வகித்தார். துவக்கமாக பீர் அலி இறைவசனங்களை ஓதினார். மவ்லவி ஷெரீப் ஆலிம் துவக்கவுரை நிகழ்த்தினார். பொறியாளர் முஹம்மது கனி ஆண்டு அறிக்கை வாசித்தார். ஜமாஅத் வரவு செலவு அறிக்கையினை ஹஸன் சமர்ப்பித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக மதுக்கூர் பத்ரு ஸஹாபாக்கள் நிர்வாகத் தலைவர் வாவா முஹம்மது சமுதாய இளைஞர்கள் ஆர்வமுடன் பொதுச்சேவையில் ஈடுபட்டு வருவது குறித்து பாராட்டினார். ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் கே. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் கல்வியின் அவசியம் குறித்து வலியுறுத்தினார். வளர்ந்து வரும் விஞ்ஞான யுகத்தில் இணையத்தளம், மின்னஞ்சல் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்தப்பட வேண்டியது குறித்து விளக்கினார்.

அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் விபரம் வருமாறு :

தலைவர் : புளியங்குடி எம். ஷாகுல் ஹமீது
துணைத் தலைவர்கள் : ஊத்துமலை ஷேக் அப்துல் காதர்
செயலாளர் : அருளாச்சி முஹம்மது அலி ஜின்னா
துணைச் செயலாளர் : அருளாச்சி அஷரப் மில்லத், அருளாச்சி அப்துல் கரீம்
பொருளாளர் : வெள்ளானைக் கோட்டை நாகூர் மைதீன்
துணைப் பொருளாளர் : வாசுதேவநல்லூர் முஜீபுர் ரஹ்மான், அருளாச்சி ஹஸன்
செயற்குழு உறுப்பினர்கள் : வாசுதேவநல்லூர் சதக்கத்துல்லா, அருளாச்சி பாதுஷா, வெள்ளானைக் கோட்டை ஹ¤ஸைன், திவான் மைதீன்,ஊத்துமலை செல்லவாப்பா
கெளரவ ஆலோசகர்கள் : அருளாச்சி முஹம்மது மைதீன் ( ஷெரிப் ), அருளாச்சி டி.முஹம்மது மைதீன்
 

மிகச் சிறந்த வலி நிவாரணியாகும் மிளகு!


காரத்திற்கு மாற்றாக வும், சுவை சேர்க்கவும் நாம் அன்றாடம் மிளகை ஏதாவது ஒரு வழியில் பயன்படுத்தி வருகிறோம். சளி, இருமலைக் குணப்படுத்தவும் இது கைவைத்தியமாகப் பயன் படுத்தப்படுகிறது. ஆனால், இது மிகச்சிறந்த உடல்வலி நிவாரணி என்று அண்மை யில் ஹார்வர்டு மருத்துவப் பள்ளி யில் நடத்தப்பட்ட ஓரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

மிளகில் உள்ள கேப்சசின் என்ற வேதிப்பொருளிலிருந்து க்யூ எக்ஸ்-314 என்ற மருந்து தயார் செய்யப்பட்டுள்ளது. பிள்ளைப்பேறு காலத்திலும், மருத்துவத் தொழிலிலும் வலியைப் போக்குவதற்கு இது மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. இதுபற்றி ஹார்வர்டு மருத்துவப் பள்ளி ஆய்வாளர் ஊல்ப் கூறியதாவது:
வலியுள்ளவர்களின் உடலில் உள்ள எந்த ஒரு நரம்புக்குக் கெடுதல் ஏற்பட்டாலும் அதை மிளகைக் கொண்டு தயாரிக்கப் பட்ட மருந்து முழுமையாகத் தீர்க்கிறது. பொதுவாக மக்கள் பயன்படுத்தும் வலி நிவாரண மாத்திரைகள் பல பக்க விளைவு களை ஏற்படுத்தும். ஆனால் இந்த மிளகு மருந்து வெகு விரைவிலேயே மக்களின் வலியைப் போக்குவது மட்டு மல்லாமல், நோயாளிக்கு முன்பு இருந்த நோய்களும் குணமடைகின்றது.

தகவல்: எம். முஹம்மது ஹுசைன் கனி

அமீரக இந்திய மாணவர்களுக்கு தேசிய விழிப்புணர்வு திட்டம்


இந்தியாவைத் தெரிந்து கொள்ளுங்கள் எனும் திட்டத்தின் கீழ் இளைய தலைமுறை சந்திப்பு நிகழ்ச்சி எதிர்வரும் டிசம்பர் மாத இறுதியில் புதுதில்லி மற்றும் தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. மேற்கண்ட தகவலை அமீரக தலைநகர் அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியை வெளிநாடு வாழ் இந்தியர் நல அமைச்சகம் மற்றும் தமிழக அரசு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்து வருகின்றன. இதன் மூலம் கலாச்சார சிறப்பு மிக்க இடங்களுக்கு செல்லுதல், தொழில்துறை மற்றும் கிராமப்பகுதிகளுக்கு செல்லுதல், கிராமப்புற சுகாதாரம் பற்றி அறிதல் உள்ளிட்டவை அடங்கும்.

மேலதிக விபரங்களுக்கு அபுதாபி இந்திய தூதரகத்தை 02 4492700 எனும் தொலைபேசி இலக்கத்திலோ அல்லது 02 4444685 எனும் தொலைநகல் மூலமோ தொடர்பு கொள்ளலாம்.

துபாய் நம்பர் 1 : ஷேக் முஹம்மது


துபாய் நம்பர் 1 ஆக இப்பிராந்தியத்தில் மட்டுமல்ல; உலகிலேயே நம்பர் 1 ஆக விரும்புவதாக ஐக்கிய அரபு அமீரக துணை அதிபர், பிரதமர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அமெரிக்க தொலைக்காட்சியான CBS க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

தான் துபாய் அனைத்திலும் நம்பர் 1 ஆக அனைத்திலும் குறிப்பாக உயர்கல்வி, மருத்துவ சேவை, வீட்டுவசதி உள்ளிட்டவற்றில் முக்கியத்துவம் கொடுக்க விரும்புவதாக ஷேக் முஹம்மத் தெர்வித்தார். அமீரகத்தில் வாழ்ந்து வரும் மக்கள் உயர்ந்த வாழ்க்கை நிலையை பெற உறுதியளிப்பதாக தெரிவித்தார்.

அமெரிக்காவை தான் நேசிப்பதாகவும் எனினும் அதன் வெளிநாட்டுக்கொள்கை குறிப்பாக ஈராக்கில் தேவையின்றி நுழைந்ததை தான் விரும்பவில்லை என தெரிவித்தார்.

ஏர் இந்தியா - இந்தியன் இணைப்பு பயணிகளுக்கு பெரும் பயனளிக்கும்

துபாய் : ஏர் இந்தியா மற்றும் இந்தியன் விமான நிறுவனங்கள் இணைப்பு பயணிகளுக்கு பெரும் பயனளிக்கும் என ஏர் இந்தியா நிறுவன கார்பரேட் கம்யூனிகேஷன் எக்ஸிகியூடிவ் டைரக்டர் ஜிதேந்திரா பார்கவா அமீரக ஆங்கில நாளிதழ் கலீஜ் டைம்ஸ¤க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

நிர்வாக அளவிலான இணைப்புகள் ஏற்கனவே முடிந்துவிட்டன. பிற இணைப்புகள் நடந்த வண்ணம் உள்ளன. விரைவில் அவையும் முடிந்துவிடும்.

ஏர் இந்தியா நிறுவனம் வளர்ந்து வரும் விமான போக்குவரத்தை சமாளிக்க 111 புதிய விமானங்கள் வாங்க பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 16 விமானங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டன. மீதமுள்ளவை 2011 க்குள் கிடைத்துவிடும்.

விமான தளத்தை கையாளும் பணிகள், பொறியியல் உள்ளிட்ட பிறதுறைகளை ஏர் இந்தியா நிறுவனமே கையாளும். இந்திய விமான தளங்களைப் பயன்படுத்தும் பிற விமான நிறுவனங்களுக்கும் இச்சேவை படிப்படியாக விரிவு படுத்தப்படும்.

ஏர் இந்தியா ஏற்கனவே பல்வேறு புதிய மார்க்கங்களில் விமானங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இணைப்புக்குப் பின்னர் மேலும் பல்வேறு புதிய மார்க்கங்கள் அறிமுகப்படுத்தப்படும். சமீபத்தில் நாக்பூர் மற்றும் துபாய் இடையேயான விமான சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் அக்டோபர் 28 ந் தேதி முதல் துபாய் மற்றும் ஜெய்ப்பூர் இடையே விமானசேவை துவக்கப்பட இருக்கிறது. விரைவில் துபாய் மற்றும் கோவா இடையேயான நேரடி சேவை துவங்கப்படும் திட்டமும் உள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் விமானப்போக்குவரத்துத் துறையில் பெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது. உலகில் இந்தியாவும் மிகப்பெரும் சந்தையாக உருவெடுத்துள்ளது. இந்த இணைப்பு புதிய சவால்களைச் சந்திக்க ஏதுவாக இருக்கும் என்றார்.

விமான தாமதம் குறித்து பயணிகளின் குறைகள் குறித்து கூறும் போது அனைத்து விமானஙகளிலும் இது நடைபெறுகிறது. இணைப்பு ஏற்பட்டால் பயணிகள் காக்க வைக்கப்படாமல் வேறு விமானத்தில் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.
 
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நவம்பர் 2007 முதல் வாரத்தில் தொடங்குகிறது!

Source: http://gulftamilmuslims.blogspot.com/

கோவை, அக்.14- வாக்காளர் பட்டியல் திருத்தும்பணி நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் வசிக்கும் முஸ்லிம்கள்; தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பெயர்கள் விடுபட்டோ அல்லது மாற்றப்பட்டோ இருந்தால் இணையத்தில் உள்ள வாக்காளர் பட்டியல் மூலம் சரி பார்த்து சம்பந்தப்பட்வர்களுக்கு தெரியப்படுத்தி தவறுகளை திருத்துவதற்கு உதவிடுமாறு வெளிநாடு வாழ் முஸ்லிம்களை கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் முஸ்லிம்களின் வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பை தனியாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் எடுக்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களின் பெயர்கள்கள் திட்டமிட்டே வாக்காளர்பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் முஸ்லிம்கள் மத்தியில் பரவலாக உள்ளது.

கோவை உள்ளிட்ட மேற்கு மண்டல மாவட்டங்களில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் பணி தீவிரப்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அதில் நரேஷ்குப்தா தலைமை தாங்கினார். இதில், 5 மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்குப்பின் நரேஷ்குப்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

2008-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி 18 வயது பூர்த்தி அடைபவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதற்காக வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நவம்பர் முதல் வாரத்தில் தொடங்குகிறது.
இது 2008 ஜனவரி 10-ஆம் தேதி நிறைவு பெறும். வாக்காளர்களில் பலர் இன்னும் புகைப்படம் கொடுக்காமல் இருக்கின்றனர். அதனால் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியில் 100 சதவீத இலக்கை எட்ட முடியவில்லை.

தமிழகம் முழுவதும் சரா சரியாக 95 சதவீதம் புகைப் படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 93 சதவீத வாக் காளர் அடையாள அட்டை கள் வழங்கப்பட்டு விட்டன.

மீதமுள்ளவர்கள் அந்தந்த தாசில்தார் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் பெற்றுக் கொள்ளலாம். முகவரி மாறி இருந்தால் விண்ணப்பம் 8 (ஏ) பூர்த்தி செய்து கொடுக்கலாம். ஒரே நபர் இரு முகவரியில் வாக் காளர் அட்டையாள அட்டை வைத்திருந்தால் அவை பறிமுதல் செய்யப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தெரிவித்துள்ளார்.

தகவல்: எம். முஹம்மது ஹுசைன் கனி

கிரெடிட் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்த சில ஆலோசனைகள்...


நன்றி மக்கள் சட்டம்

அன்பார்ந்த நண்பர்களே. ரமலான் மற்றும் தீபாவளிப் பண்டிகை நெருங்கிவிட்டது. ஒருநாள் கொண்டாட்டத்திற்காக கிரெடிட் கார்டை கவனமில்லாமல் கையாண்டால் அது பல நாட்களுக்கு பிரசினைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, கிரெடிட் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்த சில ஆலோசனைகள்...


1. கிரெடிட் கார்டு என்பது உங்கள் பர்சை உடனடியாக காலி செய்யாவிட்டாலும், உரியகாலத்தில் அளவுக்கதிகமான கட்டணத்தோடு காலி செய்யும். எனவே உங்கள் கிரெடிட் கார்டை கவனமாக பாதுகாக்க/கையாள வேண்டும்.


2. கிரெடிட் கார்டுக்கான விண்ணப்பத்தை நிரப்பும்போது, அதை நீங்களே நிரப்புங்கள். தேவையானபோது மட்டும் விற்பனை பிரதிநிதியின் உதவியை நாடுங்கள். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதைத்தொடர்ந்து கிரெடிட் கார்டுக்காக தனியே ஒருஃபைல் போட்டு கிரெடிட் கார்டு தொடர்பாக பில்கள் உட்பட அனைத்து கடிதத்தொடர்புகளையும், நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் பெற்ற பொருள் மற்றும் சேவை குறித்து அஞ்சல் மூலம் வரும் விளம்பரங்களையும் சேமித்து வையுங்கள்.


3. கிரெடிட் கார்டு விண்ணப்பத்தின் பின்புறத்தில் அச்சிடப்பட்டுள்ள மற்றும் கிரெடிட் கார்டுடன் வழங்கப்படும் விதிமுறைகளை பொறுமையுடன், முழுமையாக படியுங்கள். விளக்கம் தேவைப்பட்டால் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி விளக்கம் பெற தயங்காதீர்கள்.


4. புதிய கிரெடிட் கார்டு வாங்கும்போது இயன்றவரை புகைப்பட கிரெடிட் கார்டை வாங்குங்கள். இதற்காக கூடுதலாக மிகச்சொற்பமான தொகையே வசூலிக்கப்படுகிறது. கிரெடிட் கார்டை பெற்றுக்கொண்ட உடனே மறக்காமல் பின்புறத்தில் கையெழுத்திட வேண்டும். இவை, உங்கள் கார்டை மற்றவர்கள் உபயோகிப்பதை (ஓரளவு) தடுக்கும்.


5. கிரெடிட் கார்டு தொலைந்துபோனால் புகார் கொடுக்க வேண்டிய வங்கியின் புகார் பிரிவு எண்ணை எப்போதும் கையில் (தனியே) வைத்திருக்க மறந்து விடாதீர்கள். அதோடு கிரெடிட் கார்டின் எண்ணையும் குறித்து வைத்திருங்கள். கிரெடிட் கார்டு தொலைந்து விட்டதாக தோன்றினால் உடனடியாக வங்கிக்கு புகார் செய்யுங்கள். மேலும் தொலைபேசி மூலம் புகார் தெரிவித்ததற்கான பதிவெண் வழங்கப்பட்டால் அதையும் குறிப்பிட்டு எழுத்து மூலமான புகாரையும் பதிவு செய்யுங்கள். அதற்கான நகல்களையும் அத்தாட்சிகளையும் ஃபைலில் சேர்க்கவும்.


6. கிரெடிட் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும்போது அவசியம் தேவையான பொருட்களை மட்டுமே வாங்குங்கள். சபலங்களுக்கு இடம் கொடுத்து தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்காதீர்கள். ஏனெனில் அதற்கும் நீங்கள்தான் (மிகக்கூடுதலான வட்டியுடன்) பணம் செலுத்த வேண்டும்.


7. ஒவ்வொரு பில்லையும் முழுமையாக சோதனை செய்யுங்கள். நீங்கள் பயன்படுத்திய தொகை மட்டும்தான் பில்லில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை கவனமாக கண்காணியுங்கள்.? தவறுகள் இருந்தால் வங்கி நிர்வாகத்திற்கு உடனடியாக புகார் செய்யுங்கள்.


8. தவறான பில் குறித்து உரிய காலத்தில் தெரிவித்தால் மட்டுமே வங்கிகள், அந்த தவறுகளை களைகின்றன. காலம் தாழ்த்தி செய்யப்படும் புகார்களை வங்கிகள் ஏற்க மறுக்கின்றன.


9. புதிதாக பொருள் வாங்கியிருந்தால், அதற்கான தொகை மட்டுமே அதற்கடுத்த மாத பில்லில் இடம் பெற வேண்டும். அதற்கான வட்டி முதல் மாதத்தில் கணக்கிடக்கூடாது. அவ்வாறு வட்டி முதல் மாதத்திலேயே சேர்க்கப் பட்டிருந்தால் உடனடியாக வங்கி நிர்வாகத்திற்கு புகார் செய்யுங்கள்.


10. உங்கள் அனுமதியின்றியே பலவகையான இன்சூரன்ஸ் திட்டங்களை வாடிக்கையாளர் தலையில் கட்டுவதை வங்கிகள் வழக்கமாக்கி வருகின்றன. எனவே நீங்கள் அனுமதிக்காத எந்த தொகையையும், அது எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் உடனடியாக வங்கிக்கு தொடர்பு கொண்டு தெளிவு பெறுங்கள். தேவையற்ற கட்டணங்களை தவிருங்கள்.


11. மாதாந்திர பில் தொகையை செலுத்தும்போது இயன்றவரை முழு தொகையையும் செலுத்துங்கள். முடியாவிட்டால் கூடியவரை அதிகபட்ச தொகையை செலுத்துங்கள்.


12. குறைந்தபட்ச தவணைத்தொகை என்ற வலையில் சிக்குவதை தவிர்த்திடுங்கள். அவ்வாறு கட்டும் தொகையின் பெரும்பகுதி வட்டி மற்றும் இதர கட்டணங்களுக்கே நேர் செய்யப்படுவதால் கடன்தொகை குறைவதில்லை என்பதை உணருங்கள்.


13. எந்த பிரசினை தொடர்பாகவும் வங்கி அதிகாரிகளிடம் தொலைபேசி மூலமாக மட்டும் புகார் செய்தால் போதாது. ஏனெனில் யாரிடம் புகார் செய்தீர்கள் என்பதையோ, புகாரை பதிவு செய்தவர் அதன்மீது என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதையோ கண்டுபிடிக்க முடியாது. எனவே வங்கிக்கு எழுத்து மூலமான புகாரை பதிவு அஞ்சலில் அனுப்புங்கள். அஞ்சல் பெட்டி எண் கொண்ட முகவரிக்கு பதிவு அஞ்சலோ, கூரியர் மூலமான தபாலோ அனுப்ப முடியாது. எனவே கிரெடிட் கார்டு வாங்கும்போதே சரியான, முழுமையான முகவரியை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.


14. ஏற்கனவே உள்ள கிரெடிட் கார்டின் அடிப்படையில், வேறு வங்கியில் புதிய கார்டு பெற முயற்சிப்பவர்கள், பழைய கார்டின் முதல் பக்க நகலை மட்டும் கொடுத்தால் போதுமானது. இரு பக்க நகலையும் கொடுத்தால் அவற்றில் உள்ள கார்டு எண் மற்றும் பாதுகாப்பு எண்ணை பயன்படுத்தி, பழைய கார்டில் உள்ள கடன் அனுமதி தொகையை (available balance) வேறு யாரேனும், இணையம் மூலமாகவோ அல்லது வேறு முறைகளிலோ முறைகேடாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது.


15. புதிய கார்டு வாங்கும்போது உண்மையான ஆவணங்களை கொடுத்து கிரெடிட் கார்டு வாங்குங்கள். விற்பனை பிரதிநிதிகளை முழுமையாக நம்பாதீர்கள். அவர்கள் கூடுதலான கிரெடிட் கார்டை விற்று அதிக ஊக்கத்தொகை பெறுவதற்காக போலியான ஆவணங்கள் மூலம் கிரெடிட் கார்டை பெற்றுத்தரக்கூடும். பிரசினை வந்தால் அவர்கள் தப்பிவிடுவார்கள். போலி ஆவணம் கொடுத்து வங்கியை ஏமாற்றியதற்காக சட்டரீதியான நடவடிக்கையை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்.


16. உங்கள் சம்பளம் ஏதேனும் வங்கி மூலம் வழங்கப்பட்டால், அந்த வங்கியின் கிரெடிட் கார்டு வாங்குவதை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் உங்களுக்கும், வங்கிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், (தவறு வங்கியின் பக்கம் இருந்தாலும்கூட) உங்கள் சம்மதம் இன்றியே, உங்கள் சம்பள பணத்தை வங்கிகள் "ஸ்வாகா" செய்து விடும் அபாயம் உள்ளது.


17. தவிர்க்கமுடியாத காரணங்களால் கிரெடிட் கார்டு கடன் தவணை கட்டத்தவறும்போது வசூல் குண்டர்கள் உங்களை மிரட்டினால் காவல் நிலையத்தையோ, வழக்கறிஞரையோ அணுகுங்கள்.


18. கிரெடிட் கார்டு நிறுவனங்களுக்கு எதிரான உங்கள் உரிமைகளை பாதுகாக்க இந்த விவகாரங்களை கையாளும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளை கண்டறிந்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இந்த அமைப்புகளை அறிமுகப்படுத்துங்கள்.


19. கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய நெறிமுறைகள் குறித்து மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகிய அமைப்புகள் திட்டவட்டமான விதிமுறைகளை வகுத்துள்ளன. அவற்றில் கூறப்பட்டுள்ளபடி உங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


20. உங்கள் உரிமைகள் மீறப்பட்டால் உடனடியாக வங்கிக்கும், இந்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள வங்கி குறைதீர்ப்பு அதிகாரிக்கும் புகார் செய்யுங்கள். அதோடு உங்கள் குறைகளை இந்த வலைப்பூவிலோ அல்லது www.creditcardwatch.org என்ற இணைய தளத்திலோ பதிவு செய்யுங்கள். அது தவறிழைக்கும் வங்கிகளை அம்பலப்படுத்துவதற்கும் மற்ற வாடிக்கையாளர்கள் விழிப்படைவதற்கும் உதவும்.


(கிரெடிட் கார்டு குறித்த நுகர்வோர் தரப்பு தகவல்களுக்கும், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கும் www.creditcardwatch.org என்ற இணையதளத்தை பார்க்கவும்)
-மக்கள் சட்டம் குழு  
தகவல்: எம். முஹம்மது ஹுசைன் கனி

முந்தைய பகுதிகள்


தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )

 Refer to your friends / Relatives

www.Chittarkottai.com