|
ஒரு அலசல் ரிப்போர்ட்
இனி, சச்சின் ஒரு பிஸ்கட்
பாக்கெட்டைக் கையில் எடுத்து,
'இதுதான் என் வெற்றியின் ரகசியம்'
என்றால் ரசிப்பீர்களா? தோனி, தன்
கூந்தலை வருடியபடி 'இந்த ஷாம்பு என்னை
மாதிரியே பெர்ஃபெக்ட்' என்று
சொன்னால், அந்த ஷாம்பு மேல்
வெறுப்புத்தானே தோன்றும்? டிராவிட்
அமைதியான முகத்தோடு வந்து 'ஊ.. ஆ..
இந்தியா..' என்று கத்தினால், டி.வி.யை
உடைக்க வேண்டும் என்றே தோன்றுமல்லவா?
இந்தியாவைப் பொறுத்தவரை கிரிக்கெட்
வெறும் விளையாட்டல்ல. ஒரு மதம்.
ரசிகர்களைப் பொறுத்தவரை கிரிக்கெட்
வீரர்கள், சாதாரண மனிதர்களல்ல. தங்களின்
சொந்த ஊர்களில் தெய்வங்களாகவே
கொண்டாடப்பட்டார்கள். எல்லாம் மார்ச் 23,
நள்ளிரவோடு முடிந்துவிட்டது. அன்று இந்திய
கிரிக்கெட் வீரர்கள் இலங்கையிடம் அடைந்த
தோல்வியை, யாராலும் சாதாரணமாக
எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு
இந்தியனும் அதை தேசிய அவமானமாகவே
கருதுகிறான்.
விளைவு? வீரர்களின் உருவ பொம்மைகள்
எரிப்பு, செருப்படி, பாடை கட்டி ஊர்வலம்,
கொந்தளிப்பு எஸ்.எம்.எஸ்.கள், கோபக்
குமுறல்கள், இரண்டு ரசிகர்களின் மரணம்.
என்றாலும் ரசிகர்களின் ஆத்திரம் இன்னும்
அடங்கவில்லை. அடங்குவதாகவும் இல்லை.
ஒவ்வொரு வீரரின் வீட்டுக்கும் பலத்த
போலீஸ் பாதுகாப்பு தொடரவே செய்கிறது.
மனரீதியாக இவ்வளவு பாதிப்புகள். பண
ரீதியாக? இன்னும் நிறையவே!
முக்கியமாக கிரிக்கெட்டை ஒளிபரப்பும்
டிவி நிறுவனங்களும், அதில் விளம்பரம்
செய்யும் நிறுவனங்களும் தலையில் துண்டல்ல,
துணிக்கடையையே போட்டுக் கொண்டு அழுகின்றன.
நோக்கியா, பெப்ஸி, ஹீரோ ஹோண்டா,
வீடியோகான், மாருதி சுசூகி ஆகிய
நிறுவனங்கள் மேட்ச் ஒளிபரப்பப்படும்போது
டிவியில் காட்டப்படும் விளம்பரங்களுக்காக
மட்டும் 400 கோடி ரூபாயை முதலீடு
செய்துள்ளன. மேட்ச் நடக்கும்
மைதானங்களிலும், மற்ற இடங்களிலும்
வைக்கப்படும் விளம்பர போர்டுகளுக்காக
மட்டும் 100 கோடி ரூபாய் முதலீடு
செய்துள்ளன. இந்த விளம்பரங்களின்
தயாரிப்புச் செலவு, கிரிக்கெட்
வீரர்களுக்கு ஸ்பான்சர்ஷிப் செலவு,
முக்கிய நகரங்களில், முக்கிய இடங்களில்
விளம்பரங்களை வைக்க ஆகும் செலவு,
பத்திரிகைகள், ரேடியோ, கிரிக்கெட்
ஒளிபரப்பாகாத பிற சேனல்களில் இந்த
விளம்பரங்களை வெளியிட ஆகும் செலவு,
இன்னபிற லொட்டு லொசுக்கு
செலவுகளுக்கெல்லாம் சேர்த்து 3000 கோடி
ரூபாயை முதலீடு செய்துள்ளன.
இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான
முக்கிய ஸ்பான்சரான பெப்சியின் விளம்பர
பட்ஜெட் மட்டும் 40 கோடி ரூபாய். இந்திய
வீரர்களை நம்பி எடுத்த விளம்பரங்களை
எரித்து விடலாமா என்றுகூட தற்போது
யோசித்துக் கொண்டிருக்கிறது. இதே
கவலையோடுதான் ரீபோக், விசா நிறுவனங்களும்
இருக்கின்றன.
'ப்ளீஸ்.. ஏதாவது செய்து என்னைக்
காப்பாற்றுங்களேன்' என்று நோக்கியா
நிறுவனம் சோனியிடமும் தூர்தர்ஷனிடமும்
கெஞ்சிக் கொண்டிருக்கிறது. இந்திய
வீரர்களின் முகத்தை நம்பாத நிறுவனங்களும்,
கிரிக்கெட் கான்செப்ட் இல்லாமல்
விளம்பரங்களை எடுத்துள்ள நிறுவனங்களும்
கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றன.
இருந்தாலும், இந்தியா விளையாடாத
மேட்சுகளில் விளம்பரம் கொடுத்து என்ன பயன்
என்று சீரியஸாகவே யோசித்துக்
கொண்டிருக்கிறார்கள்.
சரி, விளம்பரங்களைக் கொடுப்பவர்களுக்கே
இவ்வளவு நஷ்டம் என்றால், விளம்பரங்களை
ஒளிபரப்பும் சேனல்களுக்கு? பல மடங்கு.
சுமார் பதினைந்து வருடங்களுக்கு
முன்பு, கிரிக்கெட் மேட்சை ஒளிபரப்பும்
உரிமம் வாங்குவதற்கு, சேனல்கள் ஐந்து
ஆண்டுகளுக்கு ஐந்து கோடி ரூபாய் வரை
கொடுத்தது. ஆனால், கிரிக்கெட் மிகப் பெரிய
வர்த்தகமாக்கப்பட்ட பின்பு, அதன் விலை,
நான்கு ஆண்டுகளுக்கு 3000 கோடி ரூபாய்
என்று அசுர வளர்ச்சியடைந்துள்ளது.
அவ்வளவு விலை கொடுத்து வாங்கும்
சேனல்கள், லாபம் சம்பாதிப்பதெல்லாம்
இரண்டாம் பட்சம். போட்டதையாவது எடுக்க
வேண்டுமே. அதற்கு ஒரே வழி,
விளம்பரதாரர்கள். முன்பெல்லாம், ஒரு
விளம்பரம் என்பது முப்பது செகண்டுகள் ஓடக்
கூடியதாக இருக்கலாம் என்றிருந்தது.
இப்போது அது பத்து செகண்டுகளாகக்
குறைக்கப்பட்டுள்ளது. ஒரு ஓவருக்கும்
இன்னொரு ஓவருக்கும் இடைப்பட்ட நேரத்தில்
குறைந்தபட்சம் மூன்று விளம்பரங்கள்,
யாராவது ஒரு வீரர் குனிந்து, அவிழ்ந்த
தனது ஷ¨ லேஸைக் கட்ட ஆகும் சில நொடிகளில்
ஒரு விளம்பரம். இவை போக, பந்துக்குப்
பந்து, ஃபோர், சிக்ஸ் அடித்தால், விக்கெட்
விழுந்தால் என்று திரையை ஆக்கிரமிக்கும்
தோரண விளம்பரங்கள் என்று எங்கெல்லாம்
சைக்கிள் கேப் கிடைக்கிறதோ, அங்கெல்லாம்
கண்டெயினர் லாரியே ஓட்டினால்தான் பிழைக்க
முடியும் என்ற நிலையில்தான் சேனல்கள்
இருக்கின்றன.
இந்தியா சூப்பர் எட்டு சுற்றுக்கே
போகாத இந்நிலையில், சோனி மேக்ஸ் நிறுவனம்
விழி பிதுங்கி நிற்கிறது. சோனி, 50 முதல்
60 சதவிகிதம் வரையான விளம்பரங்களுக்கான
ஸ்லாட்டுகளை (அதாவது பத்து செகண்ட் ஓடும்
விளம்பரத்தை ஒருமுறை ஒளிபரப்ப இரண்டு
முதல் மூன்று லட்சம் வரை கட்டணம்)
விளம்பரதாரர்களிடம் விற்றிருக்கிறது.
இந்தியா அடுத்த சுற்றுக்குப் போகும்
பட்சத்தில், அதிக விலை வைத்து மீதி
ஸ்லாட்டுகளை விற்கலாம் என்ற சோனியின்
கணக்கு தப்பாகிவிட்டது. தூர்தர்ஷனின்
நிலையும் இதேதான்.
இனி, கிரிக்கெட் பார்க்கும்
ரசிகர்களின் எண்ணிக்கை பாதியாகக்
குறைந்துவிடும். மீதி ஸ்லாட்டுகளை யாரும்
வாங்கப் போவதே இல்லை. அடிமாட்டு ரேட்
கூறினாலும் விலை போவது கடினமே. ஏற்கெனவே,
விளம்பர ஒப்பந்தம் செய்திருக்கும்
நிறுவனங்களும் தொகையைப் பலமடங்கு
குறைக்கச் சொல்லி (பத்து செகண்டுக்கு 40
முதல் 50 ஆயிரம் வரை கட்டணம்) நெருக்கடி
கொடுத்து வருகின்றன. 'மேட்ச் நேரத்தில்
ஒளிபரப்பாமல், எங்களின் ப்ரைம் டைம்
நிகழ்ச்சிகளின்போது, உங்கள் விளம்பரங்களை
ஒளிபரப்புகிறோம்' என்று சோனி சமாதானம்
பேசிக் கொண்டிருக்கிறது.
இந்தக் கொடுமைகள் எல்லாம் நடப்பதற்கு
முன்பே, சோனி நிறுவனம் இனி கிரிக்கெட்டைத்
தலைமுழுகி விடலாம் என்ற முடிவுக்கு
வந்துவிட்டது. அடுத்த எட்டு ஆண்டுகளுக்கான
கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமையை
இ.எஸ்.பி.என்., ஸ்டார் ஸ்போர்ட்ஸ்தான்
வாங்கியுள்ளது. அதற்காக கொடுக்கப்பட்ட
விலை, அமெரிக்க டாலர்களில் 1.1 பில்லியன்.
உலகக் கோப்பைக்குப் பின் அடுத்து இந்தியா
ஆடப்போகும் மேட்சுகளுக்கு விளம்பரதாரர்கள்
கிடைக்காமல், இ.எஸ்.பி.என்., ஸ்டார்
ஸ்போர்ட்ஸ் திண்டாட வேண்டிய நிலை வரலாம்.
இந்தியாவின் தோல்வியால்
விளம்பரதாரர்களுக்கும் சேனல்களுக்கும்தான்
நஷ்டமே தவிர, ஐ.சி.சி.க்கோ, இந்திய
கிரிக்கெட் போர்டுக்கோ எந்தவித நஷ்டமும்
கிடையாது. ஏனென்றால், அவை சேனல்களோடு
செய்யும் ஒப்பந்தங்கள் எல்லாம் நான்கு
வருடங்கள், எட்டு வருடங்கள் என்ற
கணக்கில்தான்.
சரி, இந்திய வீரர்களுக்கு இதனால் என்ன
நஷ்டம்? புதிய விளம்பரங்கள் கிடைக்காது.
பழைய விளம்பரங்கள் கை நழுவிப் போகும்.
(ஏற்கெனவே எம்.ஆர்.எஃப், தன் ஆஸ்தான வீரர்
சச்சினைக் கைகழுவி விட்டது.) இனியும்
டீமில் இருந்தால், மேட்ச் ஆடி கிடைக்கும்
சம்பளம் மட்டுமே. அதுவும் குறைக்கப்படலாம்
என்ற நிலைதான். ஏற்கெனவே
கிரிக்கெட்டுக்குள் ஏகத்துக்கும் புகுந்து
விளையாடிக் கொண்டிருக்கும் அரசியல்
இப்போது தவிர்க்கப்பட்டால், இந்திய
அணியில் களையெடுக்கப்படலாம். புதிய ரத்தம்
பாய்ச்சப்படலாம். ஓரிரு ஆண்டுகளிலேயே
வலிமை வாய்ந்த 'டீம் இந்தியா'வை
உருவாக்கலாம்.
'சேப்பலைத் தூக்கிவிட்டு அந்த
இடத்தில், லாலு பிரசாத் யாதவை கோச்சாக
நியமிக்கலாம். இந்திய ரயில்வேயை பெண்டு
நிமிர்த்திய லாலு, இந்திய அணியையும்
உருப்படியாக்கிவிடுவார்' என்று சேனல்
ஒன்றில் ரசிகர் ஒருவர் சிரித்துக்கொண்டே
சொன்னார். இப்போதிருக்கும் சூழ்நிலையில்,
இதையும் சீரியஸாகவே சிந்திக்கத்
தோன்றுகிறது.
நன்றி: குமுதம் ரிப்போர்டர்
|