بسم الله الرحمن الرحيم

சூபித்துவத் தரீக்காக்கள்... 
அன்றும் இன்றும்

ஏ.சீ முஹம்மது ஜலீல் ( மதனீ )

Refer this Page to your friends

தப்லீக்கின் அடிப்படை அம்சங்கள் (ஆறு நம்பர்)

4- நபியவர்களிடம் நேரடியாக பேசும் பெரியார்கள்.

ஸூபிகள் மாத்திரம் தான் நபியவர்களை நேரடியாகச்சந்தித்து தமக்குத் தேவையான சட்டதிட்டங்களைப் பெற்றுக் கொள்கின்றார்கள் என எண்ணுகின்றீர்களா? அதே இஸ்லாத்துக்கு முரணான கொள்கை தப்லீக் பெரியார்களிடமும் தாராளமாக உள்ளதே! நம்பமுடிய வில்லையா? இதைப் படியுங்கள்.

ஜக்கரிய்யா மௌலானா தமது 21 ஆவது மஜ்லிஸில் கூறியதாக ஷேக் தகிய்யுத்தீன் அவர்கள் கூறுகின்றார்கள்.
'ஷேக் நிலாமுத்தீன் அவ்லியா, கத்தஸல்லாஹூ ஸிர்ரஹூல் அஸீஸ் அவர்கள் (இவர்களது தர்ஹா இன்றைய டில்லி தப்லீக் மர்க்கஸின் வளாகத்தில் உள்ளது குறிப்பித்தக்கது) இசை கேட்கும் வழக்கமுடையவராயிருந்தார்கள்.  அப்போது டில்லியின் முப்தியாக இருந்த காழி ளியாஉத்தீன் அவர்கள் இதனைக் கடுமையாகக் கண்டித்து வந்தார்கள்.  ஆனால் ஷேக் அவர்களோ எனக்கு மாத்திரம் இசை கேட்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றது.  ஏனெனில் அது சில நோய்களுக்கு நிவாரணியாகும் என்றார்கள்.  ஆனால் இதை ஏற்றுக் கொள்ளாத முப்தி அவர்கள் கடுமையாக விமர்சிக்கவே ஷேக்கவர்கள் ' நான் நபியவர்களிடம் எனக்கு இசை கேட்பது ஆகுமென அனுமதியெடுத்துத் தந்தால் ஏற்றுக் கொள்வீர்களா? என முப்தியிடம் கேட்க அவர்களும் சம்மதித்தார்கள் அன்றிரவு முப்தியவர்களின் கனவில் நபியவர்கள் தோன்றி ஷேக் நிழாமுத்தீன் அவர்கள் இசை கேட்பது ஆகும் அவர்களுக்கு சலுகையளிக்கப்பட்டுள்ளது என்றார்கள்.  அதற்கு முப்தியவர்கள் யா றஸூலல்லாஹ் மார்க்கத்தின் படி தீர்ப்பளிக்கவா? அல்லது கனவில் கண்டபடி தீர்ப்பளிக்கவா? என வினவினார்கள்.
அடுத்த நாள்க் காலை முப்தியைச் சந்தித்த ஷேக் அவர்கள் இனியாவது என்னுடைய விடயத்தில் தலையிடாமல் என்னை விட்டு விடுவீர்களல்லவா? என்றார்கள்.
 (தீன் மஜாலிஸ் எனும் நூலில்)

ஜக்கரிய்யா மௌலானாவை தரிசிக்க வந்த நபியவர்கள்.

ஜக்கரிய்யா மௌலானா அவர்கள் ஒருமுறை தம் மஜ்லிஸில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது நபியவர்கள் அவ்விடத்தில் சற்று உயர்ந்த மஜ்லிஸில் உட்காந்திருந்தார்கள்.  அவர்களுக்கு முன்னிலையில் அழகிய புத்தகங்கள் பல அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.  அவை அனைத்துக்கும் மேலே ஹஜ்ஜின் சிறப்பு என்ற தஃலீம் புத்தகம் இருந்தது. அதற்குக் கீழ் ஸலவாத்தின் சிறப்பும், அதன்கீழ் ஹயாத்துஸ் ஸஹாபா கிதாபும் இருந்தன.  அவ்வேளை அங்கே யூஸூப் பின்னூரி அவர்கள் வந்து நபியவர்களும் ஜக்கரிய்யா மௌலானாவும் பேசிக் கொண்டிருப்பதைக் செவியுற்று புன்னகைத்த வண்ணமே சென்றார்கள்.
(அறிவிப்பவர் அப்துல் ஹமீம் மௌலானா
(ஆப் பைத்தீ ப: 134)

ஹஜ்ஜின் சிறப்பு, ஹயாத்துஸ் ஸஹாபா ஆகிய இரு நூல்களிலும் உள்ள கதைகள் சம்பவங்கள் அனைத்துமே நூற்றுக்கு நூறு உண்மை என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் கூட அவை புகாரி முஸ்லிம் போன்ற ஹதீஸ் நூற்களையும் தாண்டி முதலாவது இடத்தில் இருப்பதாகக் கூறி தப்லீக் நூல்களே அனைத்து கிரந்தங்களையும் விட சிறந்தது என்ற தவறான கருத்தை மறைமுகமாகச் சித்தரிக்கின்றார்களே!! பார்த்தீர்களா?.  தமது தவறான வழிகெட்ட சூபிக் கொள்கையை மக்களுக்கு வலுக்கட்டாயமாகத் திணிக்க எப்படியெல்லாம் நாடகமாடுகின்றார்கள் பாருங்கள்.



இபாதத்தின் பெயரால் அரங்கேறும் ஷிர்க்குகள்.

இப்பகுதியில் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வைப் போல் தெய்வீக தன்மை வாய்ந்தவாகளாகச் சித்தரித்து அவர்களின் பெயரால் செய்யப்படும் ஷிர்க்கான விடயங்கள் சிலவற்றைச் சுட்டிக்காட்டுகின்றேன். இவர்களது வழக்கமான வழிமுறை யாதெனில் முதலில் நபியவர்களைப் புகழ்வதாகக் காட்டிக் கொள்வார்கள் பின்னர் அவர்கள் தம்மையும் தரிசிக்க வருவதாகக் கதையளப்பார்கள், அதன்பின் நபியவர்களுக்கு தெய்வீகத் தன்மைகள் இருப்பது போன்று சித்தரிப்பார்கள், இறுதியில் தமக்கும் அவ்வாரான ஆற்றல் உள்ளதாக வாதிப்பார்கள்.  இது இவர்கள் சூபிகளிடமிருந்து தத்தெடுத்த வழிமுறை.  இங்கு அதற்கான சில ஆதாரங்களை முன் வைக்கின்றேன்.

அல்லாஹ் அல்லாதவர்களிடத்தில் பிரார்த்திப்பது, உதவி தேடுவது கொடிய ஷிர்க்காகும் என அல்லாஹ்வும் நபியவர்களும் போதித்திருக்கின்றனர்.

அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான். ..
அல்லாஹ்வை விடுத்து நீங்கள் பிரார்த்திக்கும் எவருமே அணுவளவு உதவியும் செய்ய சக்தியற்றவர்களாகும். நீங்கள் அவர்களிடம் பிரார்த்தித்தாலும் அவர்களால் அதைக் கேட்க முடியாது.  அப்படித்தான் கேட்டாலும் அதற்குப் பதிலளிக்க முடியாது.  மறுமையில் நீங்கள் ஷிர்க் வைத்ததனால் உங்களை அவர்களும் (காப்பாற்ற) மறுத்து விடுவார்கள்.  (ஸூரா பாதிர் 13-14)

மற்றுமொரு இடத்தில்..


قُلْ لا أَمْلِكُ لِنَفْسِي نَفْعاً وَلا ضَرّاً إِلاَّ مَا شَاءَ اللَّهُ وَلَوْ كُنتُ أَعْلَمُ الْغَيْبَ لاسْتَكْثَرْتُ مِنْ الْخَيْرِ وَمَا مَسَّنِي السُّوءُ إِنْ أَنَا إِلاَّ نَذِيرٌ وَبَشِيرٌ لِقَوْمٍ يُؤْمِنُون الأعراف 188  

நபியே சொல்லுங்கள்.  நான் எவ்வித நன்மை கொடுக்கும் சக் தியையோ, (மக்களுக்குநேரும்) தீங்கைத் தடுக்கும் சக்தியோ சொந்தமாக்கியிருக்க வில்லை.  எனக்கு மறைவான விடயங்கள் பற்றிய ஞானம் இருந்திருப்பின் நல்லவற்றை மாத்திரமே அதி கமதிகம் நான் செய்திருப்பேன், அத்துடன் எனக்கு எவ்வித கெடுதி களும் ஏற்பட்டிருக்காத (வாறும் செய்திருப்பேன்.) (ஸூரத்துல் அஃராப் 188)

நபியவர்களிடத்தில் ஒருவர் மிகவும் கொடிய செயல் எது? எனக் கேட்ட போது அல்லாஹ்வே உன்னைப் படைத்திருக்கும் போது அவனுக்கு நிகராக ஒருவரை ஆக்குவதே மிகக் கொடிய பாவமாகும் என்றார்கள்.  (ஆதாரம் புகாரி 4117.)

இது இப்படியிருக்க தப்லீக் பெரியார்கள் செய்த சில காரியங்களை இந்த நபி மொழியோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

1- ஜக்கரிய்யா மௌலானா தான் ஹஜ்ஜூச் செய்த வரலாறு பற்றி எழுதுகையில் ' ஹஜ்ஜ10_க்குப் புறப்பட்டு நாற்பது தினங்கள் சென்ற பிறகு நாங்கள் நபியவர்களின் கப்ருக்கு முன்னால் வந்து நின்று நபியவர்களை நோக்கி 'நாங்கள் பிறருக்கு ஹஜ்ஜூச் செய்ய வந்துள்ளோம், எங்களுக்கு வாகன வசதி கிடைக்காவிட்டால் மிகுந்த சிரமமேற்படும் நபிகளாரே! என்று முறையிட்டோம்.  என்ன ஆச்சரியம் நாங்கள் கூட்டி வந்த காட்டறபிக்கு ஒட்டகமொன்று கிடைத்தது.  (தீஸ் மஜாலிஸ் ப: 44)

2-ஸதகாவின் சிறப்பில் வருவதாவது. .
மதீனாவை அண்மித்த பகுதியில் ஒரு ஹாஷிம் குலப் பெண் வாழ்ந்து வந்தாள்.  அங்கிருந்த சில வேலையாற்கள் அவளுக்குத் தொந்தரவு கொடுத்து வந்தனர்.  இவர்களின் தொல்லை பொறுக்க முடியாமல் அவள் நபியவர்களிடத்தில் தனக்கு அபயமளிக்குமாறு பிரார்த்தித்தாள்.  அப்போது (றவ்ழா) நபியவர்களின் கப்ரிலிருந்து என்னிடம் உனக்கு நல்வழிகாட்டல் இல்லையா? பொறுமையைக் கடைப்பிடிப்பாயாக என அசரீரி கேட்டது.  அதன் பின் விரைவிலேயே அந்த மூன்று நபர்களும் மரணித்து விட்டனர், அவர்களது தொல்லையும் முடிவுற்று விட்டது.  (ஸதகாவின் சிறப்பு 961)

நபியவர்கள் தம் கப்ரிலிந்தவாறே பணம் கொடுத்த அதிசயம்.

ஸதகாவின் சிறப்பில் வருவதாவது. ..
முஹம்மதிப்னு முன்கதிர் என்பவர் சொல்கின்றார்.  எனது தந்தையிடத்தில் ஒருவர் ஒருதொகைப் பணத்தை அமானிதமாக ஒப்படைத்து விட்டு ஜிஹாதுக்குச் சென்றார்.  உமக்குத் தேவைப்பட்டால் அதை எடுத்துச் செலவு செய்யுங்கள் பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்றும் சொல்லிச் சென்றார்.  எனது தந்தைக்கு அவசியத்தேவை ஏற்பட்டதனால் அதை எடுத்துச் செலவு செய்யும்படியாகி விட்டது.  பின்னர் அம்மனிதர் வந்து தனது பணத்தைக் கேட்ட போது (அவரிடம் பணமில்லை) அடுத்த நாள் தருகின்றேன் என்று வாக்களித்து விட்டார்கள்.  பின்பு கவலையுடன் நபியவர்களுடைய கப்றுக்குச் சென்று அங்கு தனது பிரச்சினையை நபியவர்களிடம் முறையிட்டுப் பிரார்த்தித்தார்கள்.  பின் மிம்பறுக்குப் பக்கத்திலும் சென்று பிரார்த்தித்தார்கள். ஸூபஹ் வேளை நெருங்கியிருக்கும்.  எனது தந்தை கப்ரிடத்தில் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். என்ன ஆச்சரியம் !! இருளிலே ஒரு அசரீரி. . முஹம்மதின் தந்தையே இதைப் பிடியுங்கள்! என்று ஒரு சத்தம்.  என் தந்தை கை யை நீட்டியதும் ஒரு பணப்பையை நபியவர்கள் கப்றுக்குள் இருந்தவாறே கொடுத்தார்கள்.  அதை எடுத்து தனது அமானிதத்தை தந்தை உரியவரிடம் ஒப்படைத்தார்.  (ஸதகாவின் சிறப்பு 943)

தீன் என்பது அல்லாஹ்வுடைய கட்டளையும் நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை வழிமுறையும் என்று கூறிக் கொள்ளும் இவர்கள் அல்லாஹ்வும் நபியவர்களும் தடுத்த ,நபியவர்கள் தமது வாழ்நாள் அனைத்தையும் எதை ஒழித்துக்கட்டப் பாடுபட்டார்களோ அந்த ஷிர்க்கையும் தர்ஹா வழிபாட்டையும் இபாதத் எனும் பேரில் பாவமறியா பாமர வெள்ளை உள்ளம் கொண்ட மக்களிடம் விதைக்கும் இந்த நிலையை யாரிடம் முறையிடுவது? அல்லாஹ்தான் நேர்வழி காட்ட வேண்டும்.  இவ்வாறான விடயங்கள் தீனுடையவை என்பதை இவர்களுக்கு அல்லாஹ் சொன்னானா? நபியவர்கள் சொன்னார்களா? இவையெல்லாம் பச்சை ஷிர்க் என்று அல்லாஹ்வும் றஸூலும் சொல்லவில்லையா? அப்படியிருக்க குர்ஆன் ஹதீஸில் தடுக்கப்பட்டவைகளையெல்லாம் இபாதத் என அறிமுகப்படுத்தும் இவர்கள் தீன் என்பது அல்லாஹ்வின் கட்டளையும் நபியுடைய வழியும் என்று சொல்லி அழைப்பது எவ்வளவு பெரிய மோசடி!

இந்த பச்சை ஷிர்க்கான தர்ஹா வழிபாடும் கப்ரில் மரணித்தவர்களிடம் பிரார்த்திப்பதும் இவர்களைப் பொறுத்தவரை இபாதத்களாகக் கருதப்படுவதால்தானோ என்னவோ தப்லீக்கின் கேந்திர ஸ்த்தலமாகி;ய டில்லி மர்க்கஸின் முன் இருக்கும் தர்ஹாவில் நடக்கும் அத்தனை அனாச்சாரங்களையும் வேடிக் கை பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள்.  டில்லி மர்கஸ் பள்ளிவளாகத்திலும் மூன்று கப்ருகள் இன்று வரைக்கும் அகற் றப்படாமல் உள்ளன.  இவர்களைப் பொறுத்த வரைக்கும் கப்ர் வணக்கமெல்லாம் இபாதத்களல்லவா? அவற்றை எப்படி அகற்ற முடியும்?.
 

  • இது போல ஹஜ்ஜூக்குச் சென்ற ஒருவர் பசியேற்பட்ட போது நபியவர்களிடம் நான் உங்கள் விருந்தாளி என்று கப்ரில் சொல்லி விட்டு உட்காந்திருக்க கப்ரிலிருந்து நபியவர்களின் கைவெளிப்பட்டு ஒரு பண முடிப்பைக் கொடுத்தாகவும் அதிலுள்ள பணத்தின் பரக்கத் காரணமாக நீண்ட நாட்களுக்கு அதை செலவுசெய்த கதையைப் பாருங்கள் (பளாயிலுல் ஹஜ் 925)

  • நபியவர்கள் கப்ரிலிருந்தவாறே ஒருவருக்குப் போர்வை கொடுத்த கதை பார்க்க: ஹஜ்ஜின் சிறப்பு 944.

  • நபியவர்கள் கப்ரிலிருந்தவாறே ரொட்டி கொடுத்த சம்பவம் பார்க்க வேண்டுமா? பாருங்கள் ஹஜ்ஜின் சிறப்பு பக்கம் 797

  • மற்றுமொருவர் நபியவர்களிடம் பசிக்கு உணவளிக்குமாறு பிரார்த்தித்ததும் கிச்சடியும் குழம்பும் கொடுத்த நிகழ்ச்சியைப் பார்க்க விரும்பின் புரட்டுங்கள் ஹஜ்ஜின் சிறப்பு பக்கம் 945

  • ஹ் வலிய்யுல்லாஹ் ஒருமுறை நபியவர்களிடம் உணவு கேட்டு முறையிட்ட போது நபியவர்கள் கனவில் சுவையான சோறும் நெய்யும் அடங்கிய மரவையைக் கொடுத்தாகவும் பின்னர் நீர் புகட்டியதாகவும் விழித்துப் பார்த்த போது கையில் உணவின் நெய்மணம் வீசியதாகவுமுள்ள சம்பவத்தைப் பார்க்க ஸதகாவின் சிறப்பு பக்கம் 799

நபியவர்கள் தமது தோழர்களுக்குப் போதனை செய்த போது நீ எதைக் கேட்டாலும் அல்லாஹ்விடமே கேள் எவ்வித உதவி தேடுவதாயினும் அல்லாஹ்விடமே தேடு என்று போதித்தார்களல்லவா? அவர்களின் கப்ரின் முன்னாலேயே அவர்களது பெயரிலேயே இத்தனை அனாச்சாரங்களும்; அரங்கேற்றப்படுகின்றன. இத்தனைக்கும் வஸ்த்துக்களால் எதுவும் ஆவதில்லை. அல்லாஹ்வினால்தான் அனைத்துமே ஆகின்றன என்றும் சொல்லிக் கொள்வார்கள். அப்படியானால் நபிகளார் உட்பட கப்ரில் அடக்கப்பட்டிருக்கும் அனைவருமே அல்லாஹ்தானோ? நஊது பில்லாஹ்.

கப்ர் வணக்கம் கூடுமா? கப்ரிடம் பரக்கத் தேடலாமா? கப்ராளிகளுக்கு நல்லமல்கள் செய்து அனுப்பலாமா? அவர்களுக்கு நடப்பவை எமக்குத் தெரியுமா? எமக்கு நடப்பவை அவர்களுக்குத் தெரியுமா?

ஆம் என்பதே தப்லீக் நூல்களிலிருந்தும் அதன் பெரியார்களின் வழிகாட்டல்களிலிருந்தும் எமக்குக் கிடைக்கும் பதிலாகும். அதற்கு முன் இதைப் பற்றி நபியவர்கள் என்ன சொல்லியிருக்கின்றார்கள் ?

நபியவர்கள் சொல்லியுள்ளார்கள். .
எனது கப்ரை விழா எடுக்கப்படும் இடமாக்கி விடாதீர்கள். யூத கிறிஷதவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்.  ஏனெனில் அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரை அடக்கி விட்டு (அதில் கட்டடம் கட்டி) அதனை வணங்குமிடமாக்கிக் கொள்வார்கள்.  இவர்கள்தான் படைப் பினங்களிலேயே மிகக் கெட்டவர்கள் என்றார்கள்.  (ஆதாரம் புகாரி 480) .

அதே போன்றே கப்ரை வலம் வரல், கப்ரின் மண்ணை எடுத்து பரக்கத்துப் பெறல், அதன் பெயரில் நேர்ச்சை செய்தல், கப்ராளிகளுக்கு நன்மைகளைச் செய்து ஹதிய்யாச் செய்தல் அனைத்துமே இஸ்லாம் தடை செய்த பித்அத்தான ஷிர்க்கான விடயங்களாகும். 

இந்த அனைத்து விடயங்களும் தப்லீக் பெரியார்களால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் ஏன்? அவர்களே முன்னின்று இந்த விடயங்களைச் செய்ததற்காக ஆதாரங்களைக் காணும் போது தான் ஆச்சரியங்கலந்த வேதனையாகவிருக்கின்றது.

மௌலானா ஜக்கரிய்யா சொல்கின்றார்கள். ..
'கப்றிலுள்ள பெரியார்களுக்கு நல்லமல்களைச் செய்து அனுப்புவதில் அதிக கவனஞ் செலுத்துங்கள்.  ஏனெனில் நீங்கள் இப்படிச் செய்யும் போது கப்ராளிகளுடைய றூஹூகள் உங்களின் பக்கம் திரும்பும் அவற்றிலிருந்து பல பரக்கத்துக்களும் உதவிகளும் உங்களுக்கு உண்டாகும்.  (தீஸ் மஜாலிஸ் 211)

மேற்படி செய்த அல்லாஹ்வின் கட்டளையா? நபியின் வழிமுறையா?,

மற்றுமொரு இடத்தில். .. அவ்லியாக்களுடைய கப்ருகளைத் தரிசித்து அதன் மூலம் ஏதேனும் உதவிகளை ஒருவர் பெற்றால் அது தான் பைஅத் செய்திருக்கும் குருநாதர் - ஷேக்கிடமிருந்தே உண்டானது என எண்ண வேண்டும்.  ஏனெனில் அந்த அவ்லியாவின் கப்ரிலிருந்து கிடைத்த பரக்கத் இந்த ஷேய்க்கின் ஊடாகவே கிடைத்திருக்கின்றது.  (ஸக்காலத்துல் குலூப் 137)

ஸவானிஹூ முஹம்மத் எனும் தப்லீக் பெரியாரின் நூலொன்றில் உள்ளதாவது. ..
'ஜக்கரிய்யா மௌலானா அவர்களது சீடர்களில் ஒருவர் ஷேய்க் கன்கோயி அவர்களின் கப்ரைத் தரிசித்தார்.  அப்போது ஷேக் அவர்கள் கப்ரினுள் 'கவ்கப் துர்ரிய'; எனும் கிதாபை வாசித்துக் கொண்டிருக்கக் கண்டார்.  அதே போல் கன்கோயி அவர்கள் மரணித்த வேளை செய்யித் முஹம்மத் என்பவர் அவர்களது கப்ருக்கு அருகிலேயே முறாக்கபாவில் இருந்து கொண்டிருந்தார்கள்.  (ஸவானிவ் முஹம்மது யூஸூப் 135)

ஷேய்க் சர்தார் முஹம்மது பாக்கிஸ்த்தானி அவர்கள் கூறுகின்றார்கள் மதீனாவிலுள்ள மஸ்ஜிதுன் நபவியின் அல் மஜீத் கதவுக்குட்பட்ட இடம் பத்து வருடங்களாக தப்லீக் ஜமா அத்தினரின் கேந்திர ஸ்த்தலமாக இருந்து வந்தது. அப்போது தப்லீக்கின் அமீராக இருந்த முஹம்மது யூஸூப் திஹ்லவி அவர்களுடன் டில்லியில் நிலாமுத்தீன் பகுதியில் இருந்த இல்யாஸ் (றஹ்) அவர்களின் கப்றுக்கு நள்ளிரவில் செல்வோம் அங்கு கப்ரைச் சுற்றி நீண்ட நேரம் தலைகளைத் தாழ்த்தியவர்களாக முறாக்கபா எனும் சிந்தனையில் இருப்போம்.  அப்போது(ஹயாத்துஸ் ஸஹாபா) எனும் நூலை எழுதிய யூஸூப் (றஹ்); சொல்வார்கள் 'நிச்சயமாக இந்தக் கப்றிலிருக்கும் மௌலானா இல்யாஸ் (றஹ்) அவர்கள் தனக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறங்கும் ஒளியினைத் தமது சீடர்களுக்கு அவரவர் தரீக்காவின் மீது கொண்ட பற்று நம்பிக்கைக் கேற்ப பங்கு வைத்துக் கொடுப்பார்கள்' என்று கூறினார்கள்.  (தப்லீக் ஜமாஅத் எனும் நூல் 63-65)


மறைவான ஞானத்தை மனிதனும் அறியலாமா ?

அல்லாஹ்கூறுகின்றான்...
நபியே சொல்லுங்கள்.  அல்லாஹ்வைத்தவிர வானத்திலோ பூமியிலோ உள்ள எவருமே மறைவான விடயங்களை அறிய மாட் டார்கள்.  (அந் நம்ல் 65)


நபியே கூறுங்கள்.. எனக்கு மறைவான விடயங்கள் தெரியுமென்றிருந்தால் எனக்கு நன்மை பயப்பவைகளை மாத்திமே செய்து கொண்டிருந்திருப்பேன். எவ்வித தீங்குகளும் எனக்கு ஏற்பட்டிருக்காது. . (அல் அன்பால் 188)

இவற்றைக் கவனத்தில் வைத்துக் கொண்டு பின்வரும் பெரியார்கள் பற்றிய திகிலூட்டும் சம்பவங்களையும் வாசியுங்கள்.

1-தான் மரணிக்கும் நேரத்தை முன்கூட்டியே சொன்ன பெரியார்கள்.
யஃகூப் அஸ்ஸனூஸிய் சொன்னதாக ஜக்கரியா மௌலானா சொல்கின்றார்கள். .
'எனது சீடர்களில் ஒருவர் என்னிடத்தில் வந்து நான் நாளை ளுஹருக்குப் பின் மரணிப்பேன் என்றார். மறுநாள் ளுஹர் நேர மானதும் சென்று கஃபாவைத் தவாபு செய்தார். அதன் பின் சொன்னது போன்றே மரணித்து விட்டார்.  நானே அவரைக் குளிப்பாட்டி கபனும் செய்தேன்.  கப்றுக்குள் அவரை வைத்த போது கண்களைத் திறந்து விட்டார்.  நானோ ஆச்சரியத்துடன் மரணித்ததன் பின் எப்படி உயிர் பெற்றாய்? என்றதும் ஆம் நான் உயிருடன் தான் இருக்கின்றேன் அல்லாஹ்வின் மீது காதல் வைத்திருக்கும் எவரும் மரணிப்பதில்லை என்றார். (ஸதக்காவின் சிறப்பு 657)

இதில் எத்தனை அபத்தங்கள் என்பதைப் பார்ப்போம்.

  • ஷேக்குக்கே தெரியாத ஞானம் சிஷயனுக்குத் தெரிந்திருக்கின்றது.  இவ்வகையில் இவர் குருவைமிஞ்சிய சீடன்.

  • இவர் மரணமடைந்த நேரம் நாள் போன்றவற்றைத் துல்லியமாக அறிந்து வைத்திருந்திருக்கின்றார்.  அப்படியானால் அல்லாஹ் குர்ஆனில் கூறும் பின்வரும் வசனம்? பற்றி
    எந்தவொரு ஆத்மாவும் நாளைக்கு என்ன நடக்குமென அறியாது. எந்த ஆத்மாவும் எவ்விடத்தில் மரணிக்குமென்றும் அறியாது அல்லாஹ்தான் நிச்சயமாக அனைத்தையும் அறிந் தவனும் ஞானமுள்ளவனுமாகும். (ஸூரா 34)
    என்று சொல்வது பொய்யோ? எதை நம்புவது ??

  • இவர் உயிரோடு இருந்திருப்பின் தன்னைப் பிறர் குளிப்பாட்டி தனது மறைவிடங்களைப் பார்க்க அனுமதித்திருக்கின்றாரே! இவருக்கு வெட்கம் சூடு சொறணை எதுவுமில்லையா? வெட்கம் ஈமானின் ஒரு பகுதியென நபியவர்கள் சொல்லியிருக்கின்றார்களே அப்படியாயின் ஈமான் முழுமையற்ற இவர் எப்படி இறை நேசராக முடிந்தது.?

  • இவர் உயிரோடிருக்கின்றார் என்று அறிந்து கொண்டே இவரது குரு இவரைப் புதைத்திருக்கின்றார்.  இது பாரதூர மானதொரு கொலைக்குற்றமாகும். இஸ்லாமியச் சட்டத்தின் படி இவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமே?


இது போன்றே ஜக்கரிய்யா மௌலானாவின் தாயும் சிறிய தந்தையும் தாம் மரணிக்கும் நேரத்தைத் துல்லியமாகக் குறித்துக் கூறியதாகவும் அதே நேரத்தில் சொன்னபடி மரணமடைந்ததாகவும் சொல்லும் அதிசய நிகழ்ச்சி. பார்க்க : (வழாயிபு றமழான் 22)

மௌலானா யூஸூபுக்கும் இன்ஆமுல் ஹஸன் இருவருக்குமிடையில் நடந்த உரையாடல். .
யூஸூப் : நான் என் கடமையைச் செய்து முடித்து விட்டேன் இனி நான் உலகிலிருக்க வேண்டிய அவசியமில்லை. 
இன்ஆம் : அப்படியல்ல.  நீங்கள் செய்ய வேண்டிய நிறைய வேலைகள் பாக்கியிருக்கின்றனவே.
யூஸூப் : எனக்கு எத்தனை வயது தெரியுமா?
இன்ஆம் : நாப்பத்தியெட்டு வயது.
யூஸூப் : இந்த வயது போதும்.
இன்ஆம் : இல்லையில்லை. உலகிக்கு நீர் செய்ய வேண்டிய சேவைகள் நிறையவே இருக்கின்றன.
யூஸூப் : 48 வருடங்கள் சேவை செய்தது போதாதா?. 
இன்ஆம் : எதற்காக இப்படிப் பேசுகின்றீர்கள்.  மரணம் என்பது எப்போதும் வரக் கூடியதே, அதை விட்டும் யாரும் தப்பிக்க முடியாது.  ஆனால் நீங்கள் இன்னும் நிறைய செய்ய வேண்டிய விசயங்கள் இருக்கின்றனவே.
யூஸூப் : நல்லது நீங்கள் உங்களுக்குள் மஸூராச் செய்து நான் எவ்வளவு காலம் இருந்து எனது பணிகளைச் செய்து முடிக்க வேண்டுமென்று சொல்லுங்கள் என்றதும் இதில் மஸூராப் பண்ண என்ன தேவையிருக்கின்றது.  அஜல் முடிந்தால் மறுமைக்குக் செல்ல வேண்டியதுதான் என்றார்.
யூஸூப் : அப்படியாயின் எனக்கு 48 வயது போதும் நான் எனது திட்டத்தை முடித்து விட்டேன்.  மீதமுள்ளதை இருப்பவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.  நான் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.

உண்மைதான் அன்றைக்கு அடுத்த நாளே அவர்கள் இறையடி யெய்தி விட்டார்கள்.  இன்னா லில்லாஹி
இப்படி தான் மரணிக்கும் தருணம் ஒருவருக்குத் தெரிந்திருந்தால் மறைவான ஞானம் அல்லாஹ்வுக்கு மாத்திரமே இருக்கின்றது என்பதில் என்ன அர்த்தம் இருக்கின்றது.  இப்படி அறிய முடியுமாயின் காலம் முழுதும் ஒருவன் பாவஞ் செய்து விட்டு இறுதியில் தான் மரணிக்க முன் தவ்பாச் செய்து கொண்டால் போதுமென ஒவ்வொருவரும் நினைத்தால் இந்த சரீஅத் சட்டங்களின் நிலை என்னவோ?. இவ்வாறெல்லாம் இவர்கள் கூறுவதன் உள் நோக்கம் யாதெனில் தம்மை சாதாரண மக்களை விட ஒரு படி உயர்த்தி யாருக்கும் தெரியாத சில விடயங்கள் தமக்குத் தெரியும் என்பதாக பாமரர்களை நம்பவைத்து ஒருவித குருபக்தியை உருவாக்குவதேயன்றி வேறென்னஇருக்கமுடியும் ?.


தப்லீக் பெரியார்களின் மற்றும் சில மார்க்க விரோதக் கருத்துக்கள்.

1- கஃபாவைப் பற்றி. ..
2- மரணித்தவர்கள் பற்றி....
3- தரீக்காக்கள் பற்றி...
4- பைஅத் செய்வது பற்றி. .
5- ஜிஹாத் செய்வது பற்றி. ...
இவ்வாறு எத்தனையோ விடயங்களில் தப்லீக் பெரியார்கள் சரீஆவுக்கு முரண்படும் விடயங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.  முடிந்தளவு அவை பற்றி விளக்க முயற்சிக்கின்றேன்.

 

உங்கள் கருத்துக்கள் - விமாசணங்களை எழுத

தலைப்புப் பக்கம்

Refer this Page to your friends