بسم الله الرحمن الرحيم

சூபித்துவத் தரீக்காக்கள்... 
அன்றும் இன்றும்

ஏ.சீ முஹம்மது ஜலீல் ( மதனீ )

Refer this Page to your friends

தப்லீக்கின் அடிப்படை அம்சங்கள் ( ஆறு நம்பர் )

தப்லீக் ஜமாஅத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாக அவர்கள் ஆறு விடயங்களை அமைத்திருக்கின்றார்கள் . ஆறு நம்பருடைய வாழ்க்கை வாழ வேண்டும் என்ற பிரச்சாரத்தையும் முன்வைக்கின்றனர் .  இல்யாஸ் (றஹ்) அவர்களே இந்த ஆறு நம்பர்களை வகுத்து அறிமுகப்படுத்தியிருந்தாலும் கூட அவர்கள் அடிநிலை மக்கள் தெளிவு பெறுவதற்காகவே இவற்றை முன் வைத்தார்களேயன்றி இவ்வளவும் தான் இஸ்லாம் என்று ஒரு போதும் அவர்கள் கூறவில்லை . மாறாக ஏனைய மார்க்க விடயங்களையும் தெரிந்து வைத்திருக்க முயற்சிக்க வேண்டும் என்றே ஆர்வப்படுத்தியுள்ளார்கள் .  ஆனால் அதன் பின் வந்த முக்கியஸ்தர்கள் அளவுக்கு மீறிய குருபக்தி காரணமாக அந்த ஆறு விடயங்களும்தான் இஸ்லாத்தின் அடிப்படை அவையல்லாத அனைத்தும் இஸ்லாத்துக்கு அப்பாற்பட்டவை என்ற எண்ணம் ஏற்படும் அளவுக்கு ஏனைய மார்க்க விடயங்கள் அனைத்தையுமே புறக்கணித்து புறந்தள்ளிவிட்டு இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் . 

அது மட்டுமின்றி இந்த ஆறு நம்பரிலுள்ள மார்க்க அம்சங்களுக்கு விரிவுரையோ விளக்கமோ அவர்களது தஃலீம் நூல்களிலிருந்து மாத்திரம்தான் பெறப்பட வேண்டுமென்ற போதனையையும் மேல் மட்டத்திலிருந்து அடிமட்டம் வரை ஒரு வகை ரகசியம் கலந்த பிரச்சாரமாக முன்வைக்கப்படுவது மறுக்க முடியாத உண்மை யாகும் .  ஆனால் ஆரம்ப நிலை தப்லீக் சகோதரர்களுக்குப் போதனை செய்யப்படும் போது 'சில விடயங்கள் இருக்கின்றன அவற்றின் பேரில் தொடர்ந்து முயற்சி செய்தால் நாமும் முழு மனித சமூதாயமும் தீனின்படி வாழ்வது இலகுவாகி விடும் ' என்று சொல்லியே ஆரம்பிப்பார்கள் .  ஆறு நம்பர் என்பது முழுமையான தீன் அல்ல தீன் வருவதற்கான வழிதான் என்றும் சொல்லிக் கொள்வார்கள் .  ஆனால் காலப் போக்கில் 40 நாள் 4 மாதம் 1 வருடம் என்றெல்லாம் வெளிக்கிளம்பி பெரியார்களைச் சந்தித்ததன் பின்னரே - அங்கு மேற்கொள்ளப்படும் மூளைச்சலவையின் பின்னரே ஆறு நம்பரை விட்டு வெளியேறினால் தீனை விட்டே வெளியேறி விட்டதாக ஆகி விடும் என்ற முடிவுக்கு வந்து விடுகின்றார்கள் .  இதனைப் பல்வேறு நிகழ்வுகளையும் சம்பவங்களையும் மேற்கோள் காட்டிப் பின்னர் விளக்குகின்றேன் .

எனவே இந்த ஆறு நம்பருக்குள் மார்க்கத்தின் ஒரு பகுதி மாத்திரம் உள்வாங்கப்பட்டு விட்டு ஏனையவை புறக்கணிக்கப்படுகின்றன என்பது ஒரு புறமிருக்க இந்த ஆறு நம்பரிலுள்ள மார்க்க விடயங்களுக்கே இவர்கள் எப்படித் தவறான விளக்கம் கொடுக்கின்றார்கள் என்பதையும் சற்றுவிரிவாகப் பார்க்க வேண்டியுள்ளது . 

தப்லீக் ஜமாஅத்தினரின் ஆறு நம்பர் என்று சொல்லப்படும் ஆறு அடிப்படை அம்சங்களும் வருமாறு :

  • கலிமா -லாயிலாஹ இல்லல்லாஹ் .

  • தொழுகையை நிலை நாட்டல் .

  • இல்மு – திக்ரு .

  • இக்ராம் -(பிற சகோதரர்களைக் கண்ணியப்படுத்தல் )

  • இக்லாஸ் - ( மனத்தூய்மை )

  • தப்லீக் . - (வக்தில் வெளிக்கிளம்பிச் செல்லல் )



இந்த ஆறு விடயங்களுக்கும் நோக்கம் சிறப்பு , முயற்சி என்று சில விடயங்களை இணைத்து அலங்கரித்துள்ளனர் .  இப்போது இவை ஒவ்வொன்றையும் சற்று விரிவாக ஆராய்வோம் .


முதலாம் நம்பர் 'கலிமா'

ஆறு நம்பரில்; முதலாவது விடயம் கலிமா 'லாயிலாஹ இல்லல்லாஹ் ' இதன் நோக்கம் பற்றி இவர்கள் சொல்லும் போது. . . .  'வஸ்த்துக்களுடைய நம்பிக்கையை உள்ளத்திலிருந்து அகற்றி வஸ்த்துக்களின் இறைவனான அல்லாஹ்வின் நம்பிக்கையை இதயத்தில் பதிப்பதுதான் இதன் நோக்கம் என்கின்றனர் .  அதாவது நம்மைப் படைத்தது அவனே , நமக்கு உணவளிப்பது அவனே, செல்வத்தைத் தருவது வறுமையைத் தருவது நோயை விடுவது , குணப்படுத்துவது கஷடத்தை நீக்குவது , உயர்த் துவது தாழ்த்துவது அனைத்தும் அவன்தான் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும் என்று கலிமாவுக்கு விளக்கம் கூறுகின்றனர் . 
 

ஆனால் நபி (ஸல்) அவர்கள் குரைஷிக் காபிர்கள் மத்தியில் அன்று இந்தக் கலிமாவை முன்வைத்த போது அதன் நோக்கம் பற்றி என்ன கூறினார்கள் அதற்கு எப்படி விளக்கமளித்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது .


குரைஷிக் காபிர்கள் அன்று கல்லையும் மண்ணையும் விக்ரகங்களையும் தான் வணங்கிக் கொண்டிருந்தார்கள் .  ஆனால் அல்லாஹ்வைப் பற்றிய இறை நம்பிக்கை அவர்களிடம் எப்படி இருந்தது என்பது பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். . .


قُلْ مَنْ بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَهُوَ يُجِيرُ وَلا يُجَارُ عَلَيْهِ إِنْ كُنتُمْ تَعْلَمُونَ (88) سَيَقُولُونَ لِلَّهِ قُلْ فَأَنَّا تُسْحَرُونَ (89) بَلْ أَتَيْنَاهُمْ بِالْحَقِّ وَإِنَّهُمْ لَكَاذِبُون المؤمنون 84 . 
َ

 

நபியே பூமியும் அதிலுள்ளவைகளும் யாருக்குச்சொந்தமென்று (அவர்களிடம் கேளுங்கள்).  அல்லாஹ்வுக்குரியவையேயென்று அவர்கள் பதிலளிப்பார்கள்.  அப்படியாயின் அவர்கள் சிந்திக்க வேண்டாமா ? ஏழு வானங்களின் அதிபதியும் பிரமாண்டமான அர்ஷின் அதிபதியும் யாரெனக் கேளுங்கள் .  அல்லாஹ்தான் என அவர்கள் கூறுவார்கள் . நீங்கள்அறிவுடையோராயின் அனைத்து வஸ்த்துக்களின் ஆட்சி அதிகாரங்களையும் தன்கையில் வைத்திருக்கும் - (பிறருக்கு ) அடைக்கலம் கொடுக்கும் , எவரின் அடைக்கலமும் தேவையற்றவன் யார் என அவர்களைக் கேளுங்கள் அல்லாஹ் தானென அவர்கள் பதிலளிப்பார்கள் .( முஃமினூன் .  84 ---88 )

இந்த வானங்களையும் பூமியையும் படைத்தவன் யாரென்று அவர்களைக் ( குரைஷிக் காபிர்களைக்) கேட்டால் அல்லாஹ் தான் என்று அவர்கள் நிச்சயம் கூறுவார்கள் ( அன்கபூத் 66 வசனம் )


قل مَنْ يَرْزُقُكُمْ مِنْ السَّمَاءِ وَالأَرْضِ أَمَّنْ يَمْلِكُ السَّمْعَ وَالأَبْصَارَ وَمَنْ يُخْرِجُ الْحَيَّ مِنْ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنْ الْحَيِّ وَمَنْ يُدَبِّرُ الأَمْرَ فَسَيَقُولُونَ اللَّهُ فَقُلْ أَفَلا تَتَّقُون - يونس 31
َ
 

நபியே(அவர்களிடம் ) சொல்லுங்கள் . .  உங்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார் ? உங்களது பார்வை கேள்வி (அனைத்துக்கும் ) சொந்தக்காரன் யார் . ? செத்ததிலிருந்து உயிருள்ளதையும் உயிருள்ளதிலிருந்து செத்ததையும் வெளிப்படுத்துபவன் யார் ? எனக் கேளுங்கள் அல்லாஹ்தான் என்று அவர்கள் கூறுவார்கள் அப்படியானால் அவர்கள் (அவனைப்) பயப்பட வேண்டாமா ? (ஸூரத்துல் யூனுஸ் 37ம் வசனம் )

இது போன்ற அல்குர்ஆன் வசனங்கள் பல்வேறு இடங்களில் இடம்பெற்றிருப்பதை அவதானிக்க முடிகின்றது .
எனவே இந்த வசனங்களின் படி அன்றைய குறைஷிக் காபிர்களிடம் கூட அல்லாஹ்தான் அனைத்தையும் படைத்தவன் .  ஆக்குபவன் அழிப்பவன்,காப்பவன் ,உணவளிப்பவன் , நோயைக் குணப்படுத்துபவனெல்லாம் அவன்தான் எனும் நம்பிக்கை இருக்கத தான் செய்தது . 
அல்லாஹ்கூறுகின்றான். . .


وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ نَزَّلَ مِنْ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الأَرْضَ مِنْ بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهُ قُلْ الْحَمْدُ لِلَّهِ بَلْ أَكْثَرُهُمْ لا يَعْقِلُون العنكبوت 65 . 
َ
 

அவர்கள் (காபிர்கள்) கப்பலில் ஏறினால் ( கடலில் மூழ்கி விடு வோமோ எனப் பயந்து ) அல்லாஹ்விடம் பயபக்தியுடன் பிரார்த்திப்பார்கள் .  கடலிலிருந்து அவன் அவர்களைக் காப்பாற்றியதும் அவனுக்கு இணை வைப்பார்கள் என்று கூறுகின்றான் .
(ஸூரா அன்கபூத் 65 ம் வசனம் )

அக்காலத்தில் அப்றஹா எனும் மன்னன் கஃபாவைத் தகர்ப்பதற்காக யானைப்படையுடன் வந்தான் .  இடையில் நபியவர்களின் பாட்டனாரான அப்துல் முத்தலிபின் ஒட்டகங்களைச் சுவீகரித்துக் கொண்டதும் அவனுடன் பேச அப்துல்முத்தலிப் வந்தபோது அவன் 'நான் கஃபாவை இடிக்க வந்துள்ளேன் நீயோ உன் ஒட்டகங்களைப் பற்றிப் பேசுகின்றாயே' என்றான் அதற்கு அப்துல் முத்தலிப் 'ஒட்டகத்தின் சொந்தக்காரன் நான் . அவற்றை நான் தான் பாதுகாக்க வேண்டும் .  கஃபாவின் சொந்தக் காரனோ அல்லாஹ் எனவே அதை அவன் பாதுகாத்துக் கொள்வான் என்று கூறியது அல்லாஹ்வின் மீது அவருக்கிருந்த யகீன் - அசைக்க முடியாத நம்பிக்கையைப் படம்பிடித்துக் காட்டுகின்றது.  இத்தனைக்கும் அவர் ஒரு காபிர் என்பதும் குறிப்பிடத்தக்கது .  ( ரஹீக் அல் மக்தூம் அலா ஸீரத்திர் ரஸூல் ப: 95 . )

இதிலிருந்து அல்லாஹ்தான் எமக்கு அனைத்துக்கும் பொறுப்பாளன், அவனே உணவளிப்பவன், குணமளிப்பவன் எனும் நம்பிக்கை காபிர்களிடம் இருந்ததென்பது தெளிவாகின்றது .  எனினும் இத்தகைய மக்களைத்தான் அல்லாஹ் 'குல் யா அய்யுஹல் காபிரூன் - காபிர்களே! என்று அழைக்கின்றான் .  அப்படியானால் இந்தக் கலிமாவின் நோக்கம்தான் என்ன என்ற வினாவெழுகின்றது . 
ஆம் இக்கலிமாவுக்கு கலிமத்துத் தௌஹீத் -- ஓரிறைக் கொள்கையின் வாசகம் என்று நாம் சொல்கின்றோம் .  தௌஹீத் எனும் போது மேற்சொன்னவாறு அல்லாஹ்தான் அனைத்தையும் படைத்து நிர்வகிப்பவன் என்று நம்புவதும் ஒரு பகுதிதான் .  ஆனால் அதை விட முக்கியமாக அவனை மாத்திரமே வணக்கத்துக்குரியவனாக ஆக்கி அவனல்லாத எந்த சக்திக்கும் அல்லாஹ்வின் ஆற்றலில் எவ்விதப் பங்குமில்லை என்று உறுதியாக நம்பி எந்த இபாதத் ஆகிலும் அல்லாஹ்வுக்காகவே அதைச் செய்வதுடன் அதன்படி செயற்படுவதே இந்தக்கலிமாவின் அடிப்படை நோக்கமாகும். 

இதைத்தான் குரைஷிக் காபிர்கள் செய்யத் தவறினார்கள் .  வெறுமனே அல்லாஹ்வை நம்பி விட்டு பின்னர் அல்லாஹ்வுக்கு இருக்கும் சக்தி வேறு சிலருக்கும் இருக்கின்றதென்ற நம்பிக்கையிலோ அல்லது அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தத்தைப் பெற்றுத்தர இவர்கள் வல்லவர்கள் என்ற நோக்கிலோ வேறு சில விக்ரகங்களுக்கும்; கடவுள்த் தன்மைகளைக் கற்பித்தார்கள்.  இதனைத்தான் நபியவர்கள் கண்டித்தார்கள்.  விமர்சித்தார்கள், எதிர்த்தார்கள்.  இதனாலேயே யுத்தமெல்லாம் கூட மூண்டன .  எனவே வெறுமனே கலிமாச் சொல்லிவிட்டு அதன்படி செயற்படா விட்டாலும் அந்த நம்பிக்கை போலியானது என்றே அர்த்தமாகும் .  எனவே லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவின் அர்த்தமே பக்தி எனும் பேரில் தப்லீக் முக்கியஸ்த்தர்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு கட்டுப்படல் ,அவர்களின் வார்த்தைகளை வேத வாக்காக மதித்தல், அவர்களுக்கு மாறுசெய்தால் சாபம் ஏற்பட்டுவிடுடென எண்ணல், அவர்களது ஆசியால் நமக்கு பாக்கத் ஏற்படுமென நம்புதல், அவர்களுக்கு வேறுபல சக்திகள் இருப்பதாகக் கூட நம்புதல் போன்ற தப்லீக் கார்க்கூன்களிடம் காணப்படும் மூட நம்பிக்கைகள் அனைத்துக்கும் வேட்டு வைக்கின்றது .


அதேபோல் அல்லாஹ் தனது பெயர்நாமங்கள் தன்மைகள் பண்புகள் பற்றி அல்குர்ஆனிலும் ஹதீஸிலும் எவ்வாறு சொல்லியிருகின்றானோ அதே போன்று எவ்வித கூட்டல் குறைத்தலின்றி மாற்றல் மறைத்தலின்றி , திரிபு படுத்தல் இருட்டப்புச் செய்தலின்றி அப்படியே நம்பியாக வேண்டும் .  இந்த மூன்று விடயங்களையும் இந்த சிறிய கலிமா தன்னகத்தே உள்ளடக்கி யிருக்கின்றது .  இதனையே . .


1- அத்தௌஹீத் அர் ருபூபிய்யா .
2- அத்தௌஹீத் அல் உலூஹிய்யா .
3- தௌஹீதுல் அஸ்மாயி வஸ்ஸிபாத் .

என மூன்று தனித்தனிப் பெயர்கள் கொண்டு அழைக்கின்றோம் .

ஆனால் தப்லீக் ஜமாஅத் அமைப்பைப் பொறுத்த வரைக்கும் இந்த கலிமாவின் ஒரு பகுதியான அல்லாஹ்தான் அனைத்தையும் படைத்தான் , அவன்தான் அனைத்தையும் இயக்குகின்றான் என்ற கோணத்தில் மாத்திரம்தான் விளக்கம் கொடுக்கப்படுகின்றதேயன்றி அல்லாஹ்வைத்தவிர வேறு எவருக்கும் வணக்கத்தில் எவ்வித பங்கும் கொடுத்துவிடக் கூடாது .  அவனது குர்ஆனிலிருந்தும் நபியவர்களின் ஹதீஸிலிருந்தும் மாத்திரமே இஸ்லாம் அமைக்கபட்டுள்ளது அதிலே எவருக்கும் கையாடல் செய்ய அனுமதியில்லை .  மீறினால் அது ஷிர்க்கான , பித் அத்தாக – மௌட்டீகமாக ஆகிவிடும் என்பது பற்றியோ , ஷிர்க் பித்அத்தின் விபரீதங்களை விளக்குவது பற்றியோ எவ்விதக் கரிசனையும் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

இதன் பிரதிபலிப்பும் விபரீதமும் அவர்களது அன்றாட நடவடிக்கைகளில் தெட்டத் தெளிவாகத் தெரிய வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது நபியவர்கள் தமது பிரச்சாரத்தில் ஷிர்க் பித்அத்துக்களை ஒழிப்பதில் அதன் வாடையையே வேரடி மண்ணோடு பிடுங்கி எறிவதற்காகத்தான் இவ்வளவு பாடுபட்டார்கள் இன்னல்களைச் சகித்தார்கள் .  யுத்தங்கள் புரிந்தார்கள் .  ஆனால் இவ்விடயங்கள் பற்றி தப்லீக்கில் எவ்வித முக்கியத்துவமும் கொடுப்பதில்லை என்பதை அடித்துச் சொல்லலாம் .  சமூகத்தில் நிலவக்கூடிய ஷிர்க்கான – பித்அத்தான அனுஷட்டானங்களைப் பற்றி எங்காவது இவர்கள்பேசியதுண்டா ? சமூகச் சீர்கேடுகள் , பிரச்சினைகள் அதற்காகன தீர்வுகள் பற்றி யெல்லாம் எங்கேனும் இவர்களது இஜ்திமாக்களில் பேசப் பட்டதுண்டா ? கேட்டால் அதெல்லாம் துன்யாவுடைய விடயங்கள் என்று நழுவுவார்கள்; .  பகிரங்க ஷிர்க்கை எதிர்த்துப் பேசுவது துன்யாவுடைய விடயம் , இஸ்லாமிய லேபலை வைத்துக் கொண்டவர்கள் அதன் பெயரால் சமூகத்தில் நடத்தும் பித்அத்தான மௌட்டீகங்களைச் சுட்டிக்காட்டுவது துன்யாவுடைய விடயம் . முஸ்லிம்களுக்கெதிரான எதிரிகளின் சதிகளைப் பற்றிப் பேசுவது துன்யாவுடைய விடயம் , 3 நாள் அவர்களுடன் புறப்பட்டு விட்டால் மட்டும் அது தீனுடைய விடயமாகி விடும் . 

இதன் காரணமாகத்தான் ஒன்றுமறியா புதிய அப்பாவி தப்லீக் சகோதரர்கள் உற்பட அனைத்து தப்லீக் தொண்டர்களும் தமது பகுதி பள்ளிவாயல்கள் , அப்பகுதி தர்ஹாக்களில் இடம்பெறும் கந்தூரி , பாத்திஹா ,கொடியேற்றம் , மௌலீது மஜ்லிஸ் போன்றவற்றை எதிர்ப்பதிலோ அதை நிறுத்தும் முயற்சியிலோ ஈடுபடாதிருப்பதையும் அதை எதிர்ப்பவர்களைக் குழப்பவாதிகள் என்று எண்ணுவதையும் , இன்னும் சிலரோ இவை போன்ற சுப வைபவங்களில் தாராளமாகக் கலந்து கொண்டு சிறப்பித்து நார்ஸா- அன்னதானம் பெற்றுச் செல்வதையும் சர்வ சாதாரணமாகக் காண முடிகின்றது. 

இதைவிடப் பேராச்சரியத்துக்குரிய கவலைதரும் விடயம் யாதெனில் இந்த தப்லீக்கின் வேராகத் திகழும் பல உலமாக்களே ஒவ்வொரு பகுதிகளிலும் இவ்வாறான பித்அத்தான அனாச்சார நிகழ்வுகளுக்குத் தலைமை தாங்கி பள்ளிகள் தோறும் அரங்கேற்றி வைத்து சிறப்பிப்பதைக் காணும் போது ?? நெஞ்சமே பற்றியெரிகின்றது . உங்களில் சிலருக்கு இது ஆச்சரியத்தைத் தரலாம் .  ஆனால் என்னிடம் அதற்கு நிறைய ஆதாரங்கள் உண்டு அவ்வாறான நூற்றுக் கணக்கான உலமாக்களின் பெயர்ப்பட்டடியல் என்னிடமுண்டு .  அணுகினால் அள்ளித்தர நான் தயார் .

மேலும் இந்த தப்லீக் பெரியார்கள் கலிமத்துத் தௌஹீத் லாயிலாஹ இல்லல்லாஹ் விடயத்தில் தங்கள் மத்ஹபான மாத்துருதிய்யா ,அஷ்அரிய்யா போன்ற மத்ஹபுவாதிகளின் கருத்தையே கொண்டிருக்கின்றனர் .  இந்தப் பிரிவினரிடம் குர்ஆன் ஹதீஸூக்கு முற்றிலும் மாறுபட்ட கோற்பாடுகள் நிறையவே இருக்கின்றன .  உதாரணத்திற்கு அஷ்அரிய்யா எனும் பிரிவினர் அல்லாஹ் தனக்கு இருப்பதாகச் சொன்ன பண்புகளில் ஏழே ஏழு பண்புகளை மாத்திரம் ஏற்றுக் கொண்டு ஏனையவற்றை மறுக்கின்றனர்.  உதாரணத்திற்கு அல்லாஹ் அர்ஷிலே நிலை கொண்டிருப்பதாக குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் இருக்க இவர்கள் அல்லாஹ் உலகெங்கும் இருக்கின்றான் என்கின்றனர் .  வேறு சில தப்லீக் மேதாவிகளோ அல்லாஹ் எங்கிருந்தாலும் நமக்கென்ன ? அதுவா முக்கியம் வக்தில் வெளிக்கிளம்புவது தானே முக்கியம் என்கின்றனர் அப்படியானால் முக்கியமற்ற ஒரு விடயத்தை அல்லாஹ் ஏன் குர்ஆனில் 20க்கும் மேற்பட்ட இடங்களிலும் நபியவர்கள் நூற்றுக்கணக்கான இடங்களிலும் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டும் சிந்திப்போமாக .  இப்படி கலிமா லாயிலாஹ இல்லல்லாஹ்வோடு சம்பந்தப்பட்ட எவ்வளவோ விடயங்கள் ஒவ்வொரு முஸ்லிமும் வழிதவறி விடாமலிக்க அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விடயங்கள் தப்லீக்கில் சொல்லப்படாமல் மூடி மறைக்கப்படுகின்றன கலிமாவுக்கு நபியவர்கள் சொல்லித்தந்த அர்த்தத்தில் மூன்றில் ஒன்றை மாத்திரம் எடுத்துக் கொண்டு மீதி இரண்டு பகுதிகளும் குழி தோண்டிப் புதைக்கப்படுகின்றன . 

இது ஒரு புறமிருக்க கலிமாவுக்குச் சொல்லப்படும் மூன்றிலொரு பகுதி விளக்கத்தையாவது அதே தூய்மையுடன் விட்டு வைக்கின்றார்களா என்றால் அதுவும் இல்லை .  வஸ்த்துக்களுக்கு எவ்வித சக்தியுமில்லை.  அல்லாஹ்வுக்குக்தான் அனைத்து சக்திகளும் உண்டு என்று சொல்லப்படும் தத்துவம் காலப் போக்கில் சிதைய ஆரம்பித்து 4 மாதம் 1 வருடம் என்றெல்லாம் சென்று வந்தவுடன் தாங்கள் பின்பற்றும் தப்லீக் பெரியார்களுக்கும் ஆத்மீக சக்திகளுண்டு .  அவர்களால் உயிரோடும் மரணித்த பின்பும் கூட உலகில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை- நச்சுக் கருத்து தப்லீக் பெரியார்களாலேயே அவர்களுக்கு ஊட்டப்பட்டு விடுகின்றது .  எப்படி ஸூபித்துவ வாதிகள் அன்று இஸ்லாத்தின்-- ஷரீஆ எனும் பெயரை வைத்து மக்களைத் தம்பக்கம் அழைத்து பின்னர் தரீக்கா எனும் பேரில் அவர்களது இறை நம்பிக்கையைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி தமக்கும் கடவுளின் சக்திகள் இருப்பதாக நம்பவைத்து தாம் கூறுபவை அனைத்தையும் எவ்வித சிந்தனையுமின்றி யோசிக்காமல் இஸ்லாம் என்பதாக ஏற்கும் தலையாட்டி பொம்மைகளாக மூளைச் சலவை செய்து விடுகின்றார்களோ அதே நிலைதான் இங்கு தப்லீக் பெரியார்களிடமும் காணப்படுகின்றது . 


இதனை வெறும் அனுமானமாகவோ அல்லது காழ்ப்புணர்ச்சியிலோ சொல்ல வில்லை .  ஆதாரத்துடன்தான் சொல்கின்றேன்.  அதுவும் அவர்களது புத்தகத்திலிருந்தே. .  இதைத் தொடர்ந்து படியுங்கள்

அஷ்ரப் அலி தானவி அவர்கள் தப்லீக்கின் பிரபல பெரியார்களில் ஒருவர்.  . இவர்களிடம் நிறைய சிஷ்யர்கள் பைஅத் ( ஞான தீட்சை) பெற்றிருந்தனர் .  ஒருமுறை அவரின் சிஷ்யர்களில் ஒருவர் ஒரு கனவு கண்டார் . கனவில் அவருக்கு சக்ராத் - இறுதி நேரம் நெருங்கி மரணத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார் .  அவ்வேளை கலிமாவை மொழிவதற்காக லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் றஸூலுல்லாஹ் என்று சொல்ல முயற்சிக்கின்றார் .  ஆனால் அதற்குப் பதிலாக அவரின் வாயிலிருந்து லாயிலாஹ இல்லல்லாஹ் அஷ்ரப்அலி தானவி ரஸூலுல்லாஹ் என்றுதான் வருகின்றது.  இதனால் திடுக்கிட்டு விழித்த அவர் இது ஷிர்க்கான விடயமாயிற்றே என்று பதை பதைத்து மீண்டும் தூங்கியதும் மீண்டும் அதே கனவு .  இப்படியே மூன்று தடவைகள் அதே கனவைக் கண்டதும் அச்சத்தினால் மறுதினம் விழித்ததும் நபியவர்களுக்கு ஸலவாத் சொல்ல முயற்சித்தார் .  அதற்கும் அல்லாஹூம்ம ஸல்லி அலா நபிய்யினா அஷ்ரப்அலிதானவி றஸூலுல்லாஹ் என்றுதான் நாவிலிருந்து வெளிப்பட்டது .  உடனே அச்சத்துடன் பெரியார் அவர்களிடம் வந்து இக்கனவைத் தெரிவித்தார்கள் .  அதற்கு அஷ்ரப் அலி தானவி அவர்கள் 'இது பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை .  அது நல்ல கனவுதான் ஏனெனில் நானும் நபி அவர்களுடைய அந்தஸ்த்தில் உள்ளவன்தான் நீங்கள் அஷ்ரப்அலி தானவி றஸூலுல்லாஹ் என்று சொன்னால் அதுவும் சரிதான் அதனால் பயப்படத் தேவையில்லை என்று சொன்னார்கள் . 

இந்த விடயம் அன்றைய உலமாக்களுக்கிடையில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது .  மேற்படி பத்வா மார்க்கத்துக்கு முரணானது, குப்ரை ஏற்படுத்தக் கூடியது எனவே உடனடியாக அதனை வாபஸ் வாங்க வேண்டுமென அன்றைய அகில இந்திய உலமாக்கள் அமைப்பு கோரிக்கை விடுத்தது .  இதற்கு மறுப்பளித்து தப்லீக் ஜமாஅத்தின் மீதான குற்றச்சாட்டுகளும் பதில்களும் எனும் நூலில் மேற்படி அஷ்ரப் அலி தஹானவியின் பத்வா சரியானதே என நியாயப் படுத்தி எழுதியுள்ளார்கள் ஷேகுல் ஹதீஸ் ஜக்கரிய்யா மௌலானா அவர்கள் .  ( ஆதாரம் .  தப்லீக் ஜமாஅத்தின் மீதான குற்றச்சாட்டுகளும் பதில்களும் . ப: 144-145 )
( அதாவது அஷ்ரப் அலி தானவியும் அவர்கள் அளவுக்குள்ள மவ்லானா மார்களும் நபிமார்களின் அந்தஸ்துக்குச் சமமா னவர்கள் .  எனவே அவர்கள் சொல்வதை யெல்லாம் வேதவாக்காக ஏற்று கண்ணை மூடிக்கொண்டே பின்பற்றலாம் என்பதே இதன் உள் அர்த்தம் . )

பாருங்கள் இதுதான் வஸ்துக்களின் பக்கம் இருக்கும் நம்பிக்கையை நீக்கி அல்லாஹ்வின் பக்கம் நம்பிக்கையை ஏற்படுத்தும் இலச்சனம்?? கலிமாவுக்கு அவர்கள் வழங்கும் வெளிப்படையான வியாக்கியானம் எப்படி ? இந்த ரசசிய வியாக்கினம் எப்படி ?
வஸ்த்துக்களுக்கு எவ்வித சக்தியுமில்லை அல்லாஹ்வுக்கு மாத்திரம் தான் எல்லா சக்தியுமுள்ளது என்பதை எப்படி நிரூபிக்கின்றார்கள் என்று பாருங்கள் .


ஹஜ்ஜின் சிறப்பு எனும் தப்லீக் நூலில்; வந்துள்ளதாவது . . . 

ஷேக் அபூ ஜஃபர் என்று ஒரு பெரியார் மதீனாவில் இருந்தார் அவர் ஒருமுறை மக்காவுக்குச் செல்லத் தயாரானார் .  அப்பொழுது அவரது சீடர்களில் ஒருவர் நானும் தங்களுடன் வருகின்றேன் என்று கேட்டுக்கொள்ள அதற்கு அப்பெரியார்
( ஹிள்று (அலை) மூஸா நபிக்குச் சொன்ன பாணியில்; ) அதற்கு நீ சக்தி பெற மாட்டாய் என்றார் அதனைக் கேட்காது சீடர் அடம்பிடிக்கவே பெரியார் அவர்கள் சரி அப்படியென்றால் நான் எடுத்து வைக்கும் காலடிச் சுவட்டின் மீதே நீயும் காலெடுத்து வைக்க வேண்டும் என்று நிபந்தனையிட அதற்குச் சம்மதித்து இருவரும் பயணத்தைத் தொடர்ந்தனர் .  இஷாத் தொழுகையின் பின் பயணத்தைக் கால்நடையாகத்தான் மேற்கொண்டனர் .  அந்தச் சீடர் சொல்கின்றார். . .  .  இரவில் கொஞ்ச நேரந்தான் நடந்திருப்போம்.  தூரத்தில் விளக்குகள் தெரிய ஆரம்பித்தன .  அருகே நெருங்கிக் சென்றபோது மக்கா மஸ்ஜிதே ஆயிஷாவின்; விளக்குகளே அவை .  நேரம் அப்போது தான் தஹஜ்ஜத்துடைய வேளை .  இவ்வளவு குறுகிய நேரத்துக்குள் மதீனாவிலிருந்து மக்கா வந்து சேர்ந்தமை பற்றி எனக்கு ஆச்சரியம் . ஷேக் அவர்களின் வல்லமை ஒருசில மணிநேரத்துக்குள் கால்நடையாக மக்காவுக்கு வந்து விட்டார்கள் .  ( நபியவர்களுக்கே மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொள்ள ஒரு வாரம் எடுத்தமை குறிப்பிடத்தக்கது . ) ஸூபஹூத் தொழுகையை முடித்ததும் அங்குள்ள சிலசகோதரர்களைச் சந்தித்தேன் எங்கிருந்து வந்ததாக அவர்கள் வினவினார்கள் . நான் மதீனாவிலிருந்து . .  என்றேன் .  எப்போது புறப்பட்டீர்கள் என்றதும் இரவு இஷாவுக்குப் பின்  என்றேன் .  எப்போது வந்து சேர்ந்தீர்கள் என்றதும் தஹஜ்ஜூத் நேரத்தில் என்றேன் .  அதைக் கேட்ட அவர்கள் ஆச்சரிய மேலீட்டால் யாருடன் வந்தீர்கள் என்றதும் நான் ஷேக்கின் பெயரைச் சொன்னேன் அதற்கு அவர்கள் ஆச்சரியத்துடன் இல்லை . .  எப்படி இது ?? ஷேக் அவர்கள் நேற்றிரவு இஷாவுக்குப் பின்னிருந்து தஹஜ்ஜூத் வரைக்கும் இங்கு மஸ்ஜிதுல் ஹராமில் எங்களுக்குப் பாடம் நடாத்திக் கொண்டிருந் தார்களே . .  என்று ஆச்சரியப்பட்டார்கள் . . . . . அதற்கு மற்றும் சிலர் அந்த ஷேக்கைப் பொறுத்த வரைக்கும் இதுவெல்லாம் சாதாரண விடயம் என்று கூறினர் .


வஸ்த்துக்களால் எதுவும் ஆவதில்லை என்பது தப்லீக் போதனை ஆனால் இந்தப் பெரியார்களால் அல்லாஹ்வால் முடியுமான அனைத்தும் செய்யமுடியும் .  அவர்கள் நினைத்தால் கணப் பொழுதில் உலகை வலம் வரலாம் .  ஒரே நேரத்தில் ஒருவர் பல இடங்களில் தரிசனத்தந்து – பல அவதாரமெடுத்து சாகசச் செயல்கள் செய்யலாம்.  இவையெல்லாம் இஸ்லாத்தின் கொள்கையா ? சூபிஸத்தின் கொள்கையா , தப்லீக் அமைப்பு இஸ்லாத்தை வளர்க்கின்றதா ஸூபிஸத்தை வளர்க்கின்றதா ? நீங்களே சொல்லுங்கள் .  இந்தக் கொள்கை - ஒரே நேரத்தில் பல இடங்களில் பல உருவமெடுக்கும் கொள்கை சூபிகளின் கொள்கையா இல்லையா ? அப்படியானால் தப்லீக்கும் சூபித்துவத்துக்கும் தொடர்பு இருக்கின்றதா இல்லையா ? சொல்லுங்கள் .
வஸ்த்துக்களால் எதுவும் ஆவதில்லை.  அல்லாஹ்வால்தான் அனைத்தும் ஆகின்றன என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு ??
 

உங்கள் கருத்துக்கள் - விமாசணங்களை எழுத

தலைப்புப் பக்கம்

Refer this Page to your friends