بسم الله الرحمن الرحيم

"உண்மை நிலை"

Refer this Page to your friends

ஆம் அவர்கள் லாத், உஸ்ஸா போன்ற சிலைகளை வணங்கக் கூடியவர்களாக இருந்தார்கள். எனினும் அவையெல்லாம் மகத்தான இறைவன் அல்லாஹ்வின் பால் நெருக்கி வைக்கக்கூடிய உப தெய்வங்களாகவே அவைகளை நம்பி வந்தனர். அல்லாஹ்விடத்தில் இவைகள் பரிந்து பேசும் என்ற நம்பிக்கையில் பல விதமான வணக்க வழிபாடுகளை அவைகளுக்குச் செய்து வந்தனர். அல்லாஹத்தஆலா இவர்களது கூற்றை அல்குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்...

'இவைகள் நம்மை அல்லாஹ்வின் பால் நெருக்கி வைக்கும் என்பதற்காகவே அன்றி நாம் வணங்கவில்லை". (ஸமர் 39:3)

அல்லாஹ் தான் படைப்பவன், உணவளிப்பவன், உயிர் கொடுப்பவன், மரணிக்கச் செய்பவன் என்பதையெல்லாம் உறுதியாக அவர்கள் நம்பினர்.

'மேலும் வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவன் யார்? என்று நபியே நீர் அவர்களை கேட்பீராயின் அ(தற்க)வர்கள் அல்லாஹ் என்று நிச்சயமாக கூறுவார்கள் (அது பற்றி) புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே என்று கூறுவீராக எனினும் அவர்களில் பெரும்பாலானோர் (இரட்சகனை இவ்வாறு புகழ்ந்து துதி செய்ய) அறிய மாட்டார்கள்" (லுக்மான் 31:25)


அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்; குதிரைப் படையை நஜ்த் பக்கம் அதன் நிலவரங்களை அறிந்து வர அனுப்பி வைத்தார்கள். அவர்கள் தமது வாகனங்களில் சுற்றி வந்து கொண்டிருந்த வேலையில் இஹ்ராம் உடை அணிந்து வாளைத் தொங்க விட்ட ஒரு மனிதரைக் கண்டார்கள். அவர் உம்ராச் செய்யப் புறப்பட்டு தல்பியாக்கூறிய வண்ணம் இருந்தார். அவர் தல்பியா சொன்ன விதம் வித்தியாசமாக இருந்தது.
'லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் லா ஷரீக லக இல்லா ஷரீகன் ஹுவலக தம்லிகுஹு வமாமலக்". இல்லா ஷரீகன் ஹுவ லக தம்லிகுஹு வமா மலக்,
என்பதை திரும்ப திரும்ப சொன்ன வண்ணம் இருக்கிறார். அதன் கருத்தாவது... நான் உன் சமூகம் வந்து விட்டேன் நாயனே! நான் உன் சமூகம் வந்து விட்டேன்! உனக்கு எந்த ஒரு இணையும் இல்லை. ஒரேயொருவரைத் தவிர அவர் மாத்திரம் உனக்கு நிகரானவர் என்று கூறிக் கொண்டிருக்கக் கண்டனர்.

நபித்தோழர்கள் அவனை நெருங்கி 'எங்கு செல்கின்றாய்" என்று கேட்டனர். அவன் புனித மக்காவுக்கு செல்வதாகக் கூறினான். மேலும் அவனை விசாரித்தபோது அந்தப்பபகுதியில் தன்னை நபியாக வாதிட்டுக் கொண்டிருக்கக்கூடிய பொய்யன் முஸைலமாவின் ஊர்ப் பக்கமிருந்து அவன் வந்ததாகக் கூறினான். உடனே நபித் தோழர்கள் அவனைக் கைதியாகப் பிடித்து ஒரு கயிற்றால் கட்டி மதீனாவுக்கு கொண்டு வந்தனர். அவனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் அவன் விடயத்தில் தீர்ப்பளிப்பதற்காகக் கொண்டு போய் நிறுத்தினர்;.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவனை பார்த்த போது நபித்தோழர்களிடம் நீங்கள் சிறை பிடித்து வந்த இவன் யார் என நீங்கள் அறிவீரா? இவன்தான் 'ஸுமாமதிப்னு அஸால்" ஹனீபா கோத்தினரின் தலைவன். எனக்கூறினார்கள். பின் அவனை மஸ்ஜிதின் ஒரு தூனில் கட்டுமாறும் அவனை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளுமாறும் பணித்தார்கள். அவனுக்குரிய உரிமைகள் பேணப்பட்டன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது வீட்டிற்குச் சென்று தன்னிடமுள்ள உணவில் அவனுக்கும் அனுப்பி வைத்தார்கள். ஸுமாமா ஏறி வந்த குதிரையினையும் நல்ல முறையில் கவனித்து புல் மேய விடுமாறும், தினமும் காலையிலும் மாலையிலும் அதை அவனுக்கு முன்னால் கொண்டு வந்து காட்டுமாறும் கட்டளையிட்டார்கள். அதையும் மஸ்ஜிதின் தூண்களில் ஒன்றில் கட்டப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் ஸுமாமாவே. எப்படி நிலவரங்கள்? என அவருக்கு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் எண்ணம் யாதாவது உள்ளதா? என அறியும் எண்ணத்தில் கேட்கிறார்கள்.

முஹம்மதே! நீங்கள் ஒன்று என்னைக் கொன்று விட முடியும். அப்படிச் செய்தால் என் கோத்திரத்தினர் அதற்காக நிச்சயம் உம்மைப் பழி வாங்குவார்கள், நீர் எனக்கு கருணை காட்டி மன்னித்து விட்டால் நான் அதற்கு நன்றி தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன், அல்லது நீர் என்னிடம் பணத்தை எதிர்பார்ப்பவராக இருந்தால் விரும்பியதைக் கேட்கலாம் தருகின்றேன் என்று கூறினார். நபியவர்கள் மறு நாள் வரை அவனை விட்டு விட்டார்கள் பின்பு மறுதினம் அவனிடம் ஸுமாமாவே உனது நிலமை என்ன? என்று வினவினார்கள். அதற்கவன் முஹம்மதே! நீங்கள் ஒன்று என்னைக் கொன்று விட முடியும். அப்படிச் செய்தால் என் கோத்திரத்தினர் அதற்காக நிச்சயம் உம்மைப் பழி வாங்குவார்கள், நீர் எனக்கு கருணை காட்டி மன்னித்து விட்டால் நான் அதற்கு நன்றி தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன், அல்லது நீர் என்னிடம் பணத்தை எதிர்பார்ப்பவராக இருந்தால் விரும்பியதைக் கேட்கலாம். தருகின்றேன் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் மறுநாள் வரை அவனை விட்டு விட்டார்கள்.

அடுத்த நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸுமாமாவே என்ன நிலமை என்று கேட்கிறார்கள். நான் சொன்னதைத் தான் இப்போதும் சொல்கிறேன் என அவன் பதிலளித்தான். தினமும் அவன் முஸ்லிம்களின் தொழுகையைப் பார்க்கிறான், உரைகளைக் கேட்கிறான், முஸ்லிம்களில் உபசரிப்பைக் காண்கிறான். இவற்றையெல்லாம் கண்ணுற்றும் கூட அவனது உள்ளத்தில் இஸ்லாத்தைப் பற்றிய நல்லெண்ணம் வராததை அறிந்த நபியவர்கள் அவனை அவிழ்த்து விடுமாறு கட்டளையிடுகிறார்கள்.


அவன் அவிழ்த்து விடப்படுகிறான், அவனது வாகனம் அவனிடம் ஒப்படைக்கப்படுகிறது. உடனே ஸுமாமா மஸ்ஜிதின் அன்மையில் இருந்த ஒரு கிணற்றிக்குச் சென்று குளிக்கிறான் பின் மஸ்ஜிதுக்குள் நுழைந்து 'அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ்" வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்.

முஹம்மதே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்த பூமியில் எனக்கு மிக வெறுப்பான ஒரு முகம் இருந்ததென்றால் அது உம்முடைய முகமாகத்தான் இருந்தது, இப்பொழுது எனக்கு மிக விருப்பமான முகம் ஒன்று இருக்குமானால் அது உம்முடைய முகம் தான். அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த பூமியில் எனக்கு ஒரு வெறுப்பான மார்க்கம் இருந்ததென்றால் அது உம்முடைய மார்க்கம் தான் ஆனால் அது இப்பொழுது எனக்கு மிகப் பிரியமான மார்க்கமாக மாறிவிட்டது. அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்தப் பூமியில் எனக்கு ஒரு வெறுப்பான ஊர் இருந்ததென்றால் அது உங்கள் ஊர் மதீனாதான் ஆனால் அது இப்பொழுது எனக்கு மிக விருப்பமான ஊராக மாறிவிட்டது என்று கூறினார்.

பின்பு அல்லாஹ்வின் தூதரே எனது குதிரையில் நான் உம்ராவை நிறைவேற்ற செல்ல விரும்பியே புறப்பட்டு வந்தேன். இது வியத்தில் உங்கள் அபிப்பிராயம் என்ன? என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதி வழங்கி வாழ்த்தி வழி அனுப்பினார்கள். தல்பியாவைச் சொன்னவராக மக்காவை நோக்கி தனது பிரயாணத்தை ஆரம்பிக்கிறார் ஸுமாமா... இப்பொழுது அவரது தல்பியாவில் ஏகத்துவம்-ஓரிறைக் கொள்கை எதிரொலிக்கின்றது. அல்லாஹ்வே! உனது சமூகம் வந்து விட்டேன்! உனக்கு எந்த இணையும் இல்லை உனது சமூகம் வந்து விட்டேன்! உனக்கு எந்த இணையுமில்லை. அல்லாஹ்வுடன் இணைத்து வணங்கப்பப்படுவதற்கு, சிரம்பணிவதற்கு, தொழுவதற்கு எந்த சமாதியுமில்லை எந்தச் சிலையுமில்லை என்று வீரத்துடன் முழங்கிச் செல்கின்றார்.

ஸுமாமாா (ரலி) மக்காவிற்குள் நுழைந்ததும் குரைஷித் தலைவர்கள் அவரது வருகையைக் கேள்விப்பட்டு அவரைச் சந்திக்க வருகின்றனர். ஆனால் அவர் முழங்கும் தல்பியாவைச் செவிமடுக்கின்றனர் 'யா அல்லாஹ் உனது சமூகம் வந்து விட்டேன் உனக்கு எந்த இணையுமில்லை யா அல்லாஹ் உனது சமூகம் வந்து விட்டேன் உனக்கு எந்த இணையுமில்லை" என்று கூறக் கேட்டு ஆத்திரமும் ஆச்சரியமுமடைகின்றனர்.

அவரிடம் ஒருவன் என்ன சிறுபிள்ளையைப் போன்று (பைத்தியகாரத்தனமாக) உளறுகிறாய்? என்று அதட்டுகின்றான். அதற்கவர் இல்லை முஹம்மத் (ஸல்) அவர்களிடம் சென்று இஸ்லாத்தைத் தழுவி விட்டேன் என உறுதியுடன் கூறுகின்றார். இதனைக் கேட்ட அவர்கள் அவரைத் துன்புறுத்துவதற்கு முற்பட்ட பொழுது அவர் உரத்தக் குரலில் சொல்கிறார், அல்லாஹ்வின் மீது ஆணையாக என்னை நீங்கள் அடித்துத் தாக்கினால் அதற்குப் பின்னர் யமாமா பிரதேசத்தில் இருந்து ஒரு வித்து தானியத்தைக் கூட உங்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உத்தரவின்றி இங்கு நீங்கள் கொண்டு வர முடியாது என்று கூறி அவர்களை ஸுமாமா எச்சரித்ததும் அவரை ஒன்றும் செய்யாது விட்டு விட்டனர். அவர் பாதுகாப்பாக ஊர் வந்து சேர்ந்தார்.


அக்கால குறைஷிக் காபிர்களை எடுத்துக் கொண்டால் கூட அவர்கள் பல்வேறு கடவுள்களை வழிபடுபவர்களாக இருந்தாலும்கூட அந்த அனைத்து சிலைகளை விட அல்லாஹ்வை மகத்துவப் படுத்தக்கூடியவர்களாக இருந்தனர். அப்படியாயின் இக்கால மக்கள் செய்யும் இந்த ஷிர்க்குக்கும் அபூ ஜஹ்ல், அபூலஹப் போன்றோர் செய்த ஷிர்க்கும் மத்தியிலும் என்ன வித்தியாசம் வேறுபாடு இருக்கின்றது. இக்கால கப்ர் வணங்கிகள் அவைகளிடம் தமது தேவைகளை கேட்கின்றனர், அவரது துன்பங்கள் நீங்க பிரார்த்திக்கின்றனர், கப்ரில் அடக்கப்பட்டுள்ள அவ்லியாவின் பெயரால் அறுத்துப் பலியிடுகின்றனர். அவரது கப்ரின் மீது விழுந்து கும்பிடுகின்றனர், துன்பங்கள் நீங்கினால் அவரது கப்ரைச் சுற்றி வருவதாக நேர்ச்சை செய்து சுற்றியும் வருகின்றனர். அவ்லியாவின் கப்றுக்கு முன்னால் பயபக்தியுடனும் உள்ளச்சத்துடனும் மனமுருகி நின்று தமது கோரிக்கைகளை முன் வைக்கின்றனர். அத்துடன் நாங்கள் அல்லாஹ்வையே நம்புகின்றோம் என்றும் கூறுகின்றனர்.


ஆச்சரியமாக இருக்கிறது! இவர்களுக்கும் அக்கால குரைஷிக் காபிர்களுக்குமிடையில் என்ன வித்தியாசம் இருக்கின்றது.


அல்லாஹ் கேட்கிறான்: 'அல்லாஹ்வை விட்டு விட்டு நீங்கள் அழைக்கக்கூடியவர்கள் உங்களைப் போன்றவர்களே.. நீங்கள் அவர்களை அழையுங்கள் நீங்கள் (உங்கள் செயலில்)உண்மையாளர்களாக இருந்தால் அவைகள் உங்களுக்கு பதிலளிக்கட்டும்". (அல்அஃராப் 7:194).


சமாதிகளுக்காக தர்காக்களுக்காக அறுத்துப் பலியிடுவது, அதன் நெருக்கத்தை தேடுவது, அவைகளை வலம் வருவது பெரும் ஷிர்க்காகும் மிகப் பெரும் பாவமாகும் விபச்சாரத்தை விடக் கொடியதாகும், மது அருந்துவதை விட, கொலையை விட, பெற்றோர்களை நோவினை செய்வதை விடப் பெரும் குற்றமாகும்.

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்: 'நிச்சயமாக அல்லாஹ் ஷிர்க் என்ற கொடிய பாவத்தை மன்னிக்க மாட்டான் அதல்லாத ஏனைய பாவங்களை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்". (அந்நிஸா 4:116)
அல்லாஹ் கொலை, விபச்சாரம் போன்ற பெரும் பாவங்களையே தான் நாடியவர்களுக்கு மன்னிப்பதாக வாக்களிக்கிறான். ஆனால் ஷிர்க் என்ற கொடிய பாவத்தை மன்னிக்க மாட்டேன் என சொல்கிறான்.


நபியவர்கள் கூறினார்கள்...'பனீ இஸ்ரவேலர்களில் தவறான நடத்தை உள்ள விபச்சாரம் புரியும் ஒரு பெண் பாலைவனத்தில் நடந்து செல்கிறாள். அப்போது அங்கே ஒரு நாயைக் காண்கிறாள். அந்நாய் அருகிலிருந்த கிணறில் சுற்றி வருவதும் அதில் ஏறுவதுமாக இருந்தது. தாகத்தின் கடுமையால் நாவைக் கீழே தொங்கப் போட்ட வண்ணம் இருக்கிறது. தாக மேலீட்டால் உயிரை விடக் கூடிய நிலையில் இருக்கிறது. தவறான நடத்தையுள்ளவள், அவளது இறைவனுக்கு மாறு செய்து கொண்டிருந்தவள், பிறரை வழி கெடுத்தவள், பாவங்களில் மூழ்கி இருந்தவள், தவறான முறையில் உழைத்துச் சாப்பிட்டவள் அந்த நாயின் பரிதாப நிலையைப் பார்த்து இரங்குகின்றாள். தனது பாதணியைக் கழட்டி தன் முகத்தை மூடும் துப்பட்டியால் அதனைக் கட்டி அதனைக் கிணற்றிணுள் விட்டு நீரினை அள்ளி அந்த நாய்க்கு நீர் புகட்டுகின்றாள். அல்லாஹ், அவளின் இந்தச் செயலுக்காக அவளை மன்னித்து விட்டான். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)


அல்லாஹ் எதற்காக அவளை மன்னித்தான்? அவள் இரவு முழுவதும் நின்று வணங்கினாளா? அல்லது பகல் முழுவதும் நோன்பு நோற்றாளா? அல்லாஹ்வின் பாதையில் போராடிக் கொலை செய்யப்பட்டாளா? அவள் செய்ததெல்லாம் தாகத்தோடு இருந்த ஒரு நாய்க்குத் தண்ணீர் புகட்டியது தான் அல்லாஹ் அவளை மன்னித்து விட்டான் அவள் பாவங்களில் மூழ்கி இருந்தாள் ஆனால், அவள் அல்லாஹ்விற்கு ஷிர்க் செய்யக்கூடியவளாக இருக்கவில்லை கப்றுக்கு, அவ்லியாக்களுக்கு வழிப்படவில்லை அவள் கல்லையோ மனிதனையோ புனிதப் படுத்த வில்லை அதனால் அவளுக்கு மன்னிப்பின் வாயில்கள் திறக்கப்பட்டன அல்லாஹ்வின் மன்னிப்பு பாவிகளுக்கும் கூட மிக நெருக்கமானது தான் ஆனால் இணைவைப்பாளர்களை விட்டும் மிக மிகத் தூரமானது.


இன்ஷா அல்லாஹ் தொடரும்...

 அலை மோதும் கடல்

 

Refer this Page to your friends