ஷைத்தான் எப்படியெல்லாம் மனிதர்களின் சிந்தனையில் விளையாடுகிறான்! வானம் பூமிகளைப்
படைத்த இறைவனை வணங்குவதை விட்டும் மக்களை திசை திருப்பி மரணித்தவர்களைப்
புனிதப்படுத்துவது, மண்ணைப் புனிதப்படுத்துவது அவைகளுக்கு வழிபாடுகளை செலுத்துவது
போன்ற ஷிர்கான விடயங்களில் நிலைபெற செய்துள்ளான். இந்த வழிகெட்ட விடயங்கள்
சிலவேலைகளில் எப்படி ஆரம்பிக்கின்றன, சில விஷமிகளால் திட்டமிடப்பட்டு வேண்டுமென்றே
இல்லாத கப்ருகளை இருப்பதாக மக்கள் மத்தியில் வதந்திகளைப் பரப்பி நிச்சயமாக அதை
தரிசிப்பவருக்கு அது பலன் தரும், பிரார்த்திப்பவருக்கு பரிந்துரை செய்யும் என்று
போலியான பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். இதனால் மக்களுக்கு மத்தியில்
அவர்கள் பெயரில் கராமத் -
அற்புதங்கள் நிகழ்ந்தன என்று போலியான கதைகள் பரவுகின்றன மேலும் மக்களுக்கு அவைகள்
உண்மைகளாக சித்தரிக்கப்படுகின்றன. பின்பு ஷிர்கின் வடிவங்கள் அவர்களுக்கு மத்தியில்
தலை தூக்குகின்றன. அவைகளை வலம் வருவதும், அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்திப்பது
போன்ற மூடப்பழக்கங்கள் கடந்த கால கப்ரு வணங்கிகளிடம் காணப்பட்டது போல இந்நவீன கால
கப்ரு வணங்கிகளிடமும் பரவலாக காணப்படுக்கின்றன.
கற்பனை
தர்ஹாக்கள்...
ஒரு ஷைகிடம் அருள்
வேண்டிச் சென்றவர்களில் ஒருவர் என்னிடம் சொன்ன நிகழ்ச்சி இது,
இது இரு வாலிபர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட ஒரு அனுபவமாகும். ஒருவர் ஸஈத் மற்றவர்
ஆதில் அவர்கள் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றவர்கள் ஆவர்; அவர்கள்
இருவரும் பாடசாலையில் பணிபுரிவதற்காக ஒரு கிராமத்திற்கு சென்றனர். அவ்வூரில்
கப்ருகளை புனிதப்படுத்துவது, அவைகளுக்கு வழிப்படுவது, அவைகளுக்கு நேர்ச்சை வைத்து
ஏமாறுவது போன்ற ஷிர்க்குகள் மலிந்து காணப்பட்டன. ஆதில், ஸஈதுடன் இச்செய்திகளை
பரிமாறிக் கொள்கிறார். அவர்கள் ஆசிரியராக பணிபுரியும் பாடசாலை அப்பாதையில் தான்
அமைந்திருக்கிறது.
திடீரென வயது முதிர்ந்த ஒரு யாசகன் அவர்கள் பயணம் செய்த பஸ்ஸினுல் ஏறுகிறார்.
அழுக்கடைந்த ஆடையும், துர்நாற்றம் வீசும் உடலுடனும் காணப்பட்ட அவர் நடுநடுங்கிக்
கொண்டே கைத்தடி ஒன்றை ஊன்றியவராக பஸ்ஸினுள் நுழைந்து பயணிகளை அதட்டுகிறார்.
தனக்குக் காணிக்கை செலுத்தாவிட்டால் இந்த பஸ் இடைவழியில் கவிழ்ந்து விடுவதற்கு தான்
சாபமிட்டு விடுவதாகவும் தனது பிரார்த்தனைகள் இறைவனிடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்
அவ்லியாக்களில் ஒருவர் என்றும் வாதிடுகின்றார். பயணிகளோ இவருக்குப் பயந்து பணிவுடன்
தமது காணிக்கைகளைச் செலுத்த ஆரம்பிக்கின்றனர்.
ஸஈதை பொறுத்தவரையில் அவன் அவ்லியாக்களின் கராமாத்களை -
அற்புதங்களை நம்பக் கூடிய ஒரு குடும்பத்தில் பிறந்தவன். எனவே அவன் மேற்படி
ஆசாமியின் அதட்டலுக்குப் பயந்து திடுக்கிடுகிறான். அச்சம் கொண்டவனாக ஆதிலிடம்,
அவனுக்கு சில திர்ஹம்கள் கொடுப்போம் எனச் சொல்கிறான். உண்மையாகவே பஸ்ஸை அந்த யாசகன்
(அப்துல் கரீம் அபூ ஷத்தா) கவிழ்த்துவிடுவதற்கு பிரார்த்திப்பானோ? ஏனெனில்; அருள்
பெற்றவர்களில் ஒருவன் பிரார்த்தித்தால் உடனே அவனது பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும்
என ஸஈத் கூறுகிறான்.
இதைக்கேட்ட ஆதில் வியப்படைந்தவனாக! உண்மையில் ஸுன்னத் வல் ஜமாஅத் என்று
சொல்லக்கூடியவர்கள் அற்புதங்களை நம்பக்கூடியவர்கள் தான், ஆனால் அது உண்மையான
நல்லடியார்கள், பயபக்தியுடையவர்கள், தனிமையில் அல்லாஹ்வை நினைத்து
அஞ்சக்கூடியவர்களுக்கு சாத்தியமே தவிர, மார்க்கத்தை விற்று வயிறு வளர்க்கக்கூடிய
இவர்களைப் போன்ற ஏமாற்று பேர்வழிகளுக்கு அல்ல என்று கூறினான்.
அதற்கு ஸஈத் அப்படிக் கூறாதே! அவர் உண்மையில் பெரியதொரு அவ்லியா என்று மக்கள்
அனைவரும் (சிறியோர் முதல் பெரியோர் வரை) அப்படித்தான் பேசுகின்றார்கள் அவரிடத்தில்
பல நூறு கராமத்துக்களும் -
அதிசயத்தக்க சம்பவங்களும் நடந்திருக்கின்றன. நீ பொறுத்திருந்து பார், அவர் இப்போது
பஸ்ஸை விட்டு இறங்கி எம்மை விட்டும் நடந்து செல்வார். ஆனால் நமது பஸ் அடுத்த ஊரை
சென்றடைவதற்குள் அவர் நடந்தே சென்று அங்கே எம்மையெல்லாம் வரவேற்கக் காத்திருப்பார்.
இவைகள் அவ்லியாக்களுக்கு நிகழும் சாதாரண அற்புதங்கள். நீ அற்புதங்களை
நிராகரிக்கின்றாயா? என்று அதட்டலுடன் கேட்டான்.
அதற்கு, ஆதில் நான் மொத்தமாக அற்புதங்களை நிராகரிக்கக்கூடியவன் அல்லன். அல்லாஹ்,
தான் நாடிய அடியார்களுக்கு அவைகளை வழங்க ஆற்றல் உடையவன். ஆனால் இன்று கராமத் என்பது
நமது உணவிலும், குடி பானங்களிலும், நாம் செல்லக்கூடிய இடங்களிலும், ஷிர்குடைய
வாயல்கள் திறக்கப்படுவதற்கு காரணமாகி விட்டன. நல்லடியார்கள், மௌத்தாக்கள் என்று
அல்லாஹ்வுடன் இணைத்து படைத்தலிலும், கருமங்களை ஆற்றுவதிலும், நிலமைகள் மாறி மாறி
வருவதிலும், நாம் அவர்களுக்கு பயப்படக் கூடியவர்களாகவும், அவர்களுடைய கோபத்துக்கு
ஆளாகிவிடக்கூடாது என்பதிலும் சிந்திக்கக்கூடியவர்களாக இருக்கிறோம் என்பது வேதனையான
விஷயமாகும்.
உடனே ஸஈத், இடைமறித்தவனாக 'அஷ்ஷைக் அஹ்மத் அபூ சர்ரூத்' எனும் ஒரு நல்லடியார்
அரபாவில் இருந்து இஸ்தான்பூல் வந்து தனது குடும்ப உறவினர்களுடன் சுட்ட கோழி
சாப்பிட்டு விட்டு அதே இரவு அரபாவுக்கு திரும்பிய கதையை நீ ஏற்றுக்
கொள்ளமாட்டாயா?
இதைக்கேட்ட ஆதில், அல்லாஹ் உனது அறிவுக்கு அருள் புரியட்டும்! நீ இவைபோன்ற
கட்டுக்கதைகளைத்தானா பல்கலைகழத்தில் கற்றுக் கொண்டாய்?
ஸஈத்: நாம் இகழ்ச்சியான முறையில் பேச ஆரம்பித்து விட்டோம், என
எண்ணுகின்றேன்.
அதற்கு ஆதில், அவ்வாறு நான் உன்னை இகழவில்லை. எனினும் பாமரர்கள் போல, அவர்களது மூட
நம்பிக்கைகளின் தரத்தில் இருந்து நீ பேசுவதையும், அவர்கள் பேசும் பேச்சுக்களையும்,
கட்டுக் கதைகளையும் ஆராயாது அவை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என நீ
வாதிடுவதைத்தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை என்பதனை கவலை கலந்த ஆத்திரத்துடன்
கூறினான்.
அதற்கு ஸஈத்: இந்த அற்புதங்களை சாதாரண பாமரர்கள் மாத்திரம் சொல்லவில்லை.
மாறாக நமது ஷைகுமார்கள் கூட இப்படியான அற்புதக்கதைகளை, தர்ஹாக்களில்
அடக்கப்பட்டவர்களுடைய செய்திகளைச் சொல்கின்றனர்.
ஆதில்: அப்படியானால் நான் உனக்கு நடைமுறையில் இந்த தர்ஹாக்களில், கப்ருகளில்
உள்ளவர்களுடன் தொடர்புடைய கற்பனை கதைகள் அனைத்தும் எந்த அடிப்படையும் இல்லாதவைகள்,
பெரும்பாலான தர்ஹாக்களுக்கு எந்த உண்மையான வரலாறும் கிடையாது, அங்கு கப்ருகளே இல்லை
என்பதும், அங்கு யாரும் அடக்கப்படவே இல்லை, அங்கு எந்த நல்லடியாரும் இல்லை. இவைகள்
மக்களுக்கு மத்தியில் பரப்பப்பட்ட வெறும் கற்பனைக் கதைகள் தான். மக்கள் அவைகளை
நம்பவைக்கப்படும் அளவுக்கு அவை பரப்பப்பட்டுள்ளன என்பதை நிரூபித்துக்
காட்டுகின்றேன் என்று சவால் விட்டான்.
இதைகேட்ட ஸஈதிடம் ஒருவகையான பதட்டம் நிலவுகின்றது. அல்லாஹ்விடம் பாதுகாவல்
தேடுகிறேன், அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன் எனப் பலமுறை கூறினான். பின்பு
இருவருக்கும் மத்தியில் சிறிது நேரம் மௌனம் நிலவுகிறது. அவர்கள் பயணம் செய்த பஸ்,
அவர்கள் சேர வேண்டிய ஊரை அடைவதற்கு முன் ஒரு வளைவை கடக்க நேரிடுகின்றது. ஆதில்
ஸஈதிடம் அந்த இடத்தைச் சுட்டிக் காட்டி இந்த இடத்திலும் ஏதாவது நல்லடியார்கள்
அடக்கப்பட்ட கப்ருகள், தர்ஹாக்கள் இருக்குமா எனக் கிண்டலாகக் கேட்கின்றான்?
ஸஈத்: இல்லை - பாதை ஓரங்களிலும், வளைவுகளிலும் நல்லடியார்களின் கப்ருகள்
அமைக்கப்பட்டிருக்குமா? என்ன மக்களுக்கு அவ்வளவுக்கு புத்தி கிடையாதா? இவ்வூர்
மக்களைப் பற்றி நீ மிக மட்டமாகக் கணக்குப் போட்டிருக்கின்றாய் என்று ஸயீத் சற்று
ஆத்திரத்துடன் பதிலளிக்கின்றான்.
ஆதில்: இந்தச் வளைவில், கடந்த காலங்களில் ஒரு நல்லடியாரின் கப்ரு இருந்ததாக
நாம் ஒரு கதையை பரப்பி அற்புதமான கராமத்கள் நடப்பதாகவும் கதைகளைப் புணைந்து,
பிரார்த்தனைகள் ஏற்கப்படக்கூடிய இடமாக இருந்தது என ஒரு வதந்தியை பரப்பி விட்டால்
மக்கள் நம்புவார்களா? இல்லையா? நான் உறுதியாக நம்புகிறேன் மக்கள் அந்தச் செய்திகளை
ஏற்றுக் கொள்வார்கள். சில வேளை, எதிர் வரக்கூடிய வருடத்தில் இந்த ஷைகுக்கு ஒரு
தர்ஹாவையும் கட்டி அல்லாஹ்வை விட்டு விட்டு அவரிடம் பிரார்த்திக்கவும் தயாராகி
விடுவார்கள். ஆனால் அது ஒரு வெறும் மண் நிறைந்த இடமாக மாத்திரமே இருக்கும். அவர்கள்
தோண்டினால் பூமியின் கீழ் பகுதிக்கு செல்லும் வரை மண்ணைத் தவிர வேறு எதையும்
அவர்கள் பெற்றுக் கொள்ள மாட்டார்கள், என்று ஆதில் கூறினான்.
ஸஈத்: இதை விட்டு விடு! மனிதர்கள் இந்த அளவுக்கு மடையர்கள் என்று நீ
நினைக்கின்றாயா?
ஆதில்: நல்லது நீ என்னோடு ஒத்துழைத்தால் என்ன நஷ்டம் ஏற்படும்? நீ எனது
கருத்துக்களுக்கு உடன் பட்டு விட்டால் ஏதாவது விபரீதமான முடிவுகள் வருமென்று
பயப்படுகிறாயா?
ஸஈத்: எனக்கு அதை பற்றியெல்லாம் பயம் கிடையாது எனினும் இவைகளை நான் ஏற்றுக்
கொள்ளக்கூடியவனாக இல்லை.
ஆதில்: நீ வர்ணித்த 'ஷைக் பரகாதின்' கப்ரின்
பக்கம் செல்வோம். உனது கருத்து என்ன?
ஸஈத்: உனது விருப்படியே செய்! ?
ஆதிலும் ஸஈதும் ஒரு மென்னைமயான போக்கைக் கையாண்டு இவர்கள் கற்பனையில் உருவாக்கிக்
கொண்ட இந்த 'பரகாத் அவ்லியா' பற்றிய செய்தியை
பாடசாலையிலுள்ள சக ஆசிரியர்களிடம் தோழர்களிடம் கொண்டு சென்று அவிழ்த்து விட
ஆரம்பித்தார்கள். முடி திருத்தும் (சலூன்) கடைகள் இன்றைய காலகட்டத்தில் செய்திப்
பரிவர்த்தனைக்கும், உடனுக்குடன் அன்றாட நிகழ்வுகளைப் பரப்புவதற்கும் ஒரு முக்கிய
ஊடகமாக இருப்பதால் விஷேசமாக அங்கேயும் இந்த கற்பனை
அவ்லியாவின் கராமத்துகள் சிலதை கட்டவிழ்த்து விட்டனர்.
பின்னர் அடுத்த நாள், அவர்கள் இருவரும் அவ்வூரை அடைந்தனர். பஸ்ஸில் இருந்து இறங்கி
ஸலிம் எனும் பெயருடைய ஒரு கிராமவாசி நடத்தி வரும் சலூனுக்குச் சென்றனர், அவரிடம்
அவ்லியாக்களின் அற்புதங்களைப் பற்றிக் கொஞ்சம் பேசினர். மேலும் இந்த ஊரிலும் ஒரு
அவ்லியா அடங்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் பல வருடங்களுக்கு முன் இங்கு
அடக்கப்பட்டவர் தான். அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் உயரிய அந்தஸ்து இருக்கிறது,
அவர்களைக் கொண்டு உதவி தேடுபவர்கள் இப்போது மிகவும் குறைவு என்றும் கூறினர்.
உடனே அந்தத் சலூன் கடைக்காரன் ஆவல் மேலீட்டுடன் அவர்களின் கப்ரு இருக்கும் இடம்
உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டான். ஊருக்குள் நுழையும் போது இருக்கக்கூடிய
வளைவில் தான் இருக்கிறது எனச் சொன்னார்கள். உடனே அவன் மகிழ்ச்சிப் பெருக்குடன் நம்
ஊரை ஒரு நல்லடியாரைக் கொண்டு அருள் பெறச் செய்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.
நீண்ட நாட்களாக நான் இவ்வாறான ஒரு நல்லடியாரின் கப்ரொன்று நமது ஊரிலும் இருக்க
வேண்டுமென்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்தேன். என்ன நியாயம் ... பக்கத்தில் இருக்கும்
'உம்மு கூசா' எனும் ஊரில் பத்துப் பனிரெண்டு அவ்லியாக்களின் தர்ஹாக்கள்
இருக்கின்றன. நமது ஊரில் ஒரு அவ்லியாவின் தர்ஹா கூட இருக்கக் கூடாதா? என்று அவன்
ஆதங்கத்துடன் கூறினான்!
ஆதில்: 'ஷைக் பரகாத்' என்பவர் பெரும்
நல்லடியார்களில் ஒருவர் அவருக்கு அல்லாஹ்விடத்தில் மிக உயர்வு இருக்கிறது என்று
கூறினான். அதற்கு அந்த சவரத்தொழிலாளி அல்லாஹ் அவர்களைத் தூய்மைப்படுத்தட்டும்! அந்த
நல்லடியாரைப் பற்றி அறிந்து வைத்துக் கொண்டு நீர் ஏன் மௌனமாக இருக்கிறீர்!!!
அனைத்து மக்களுக்கும் இந்த நற்செய்தியைப் பரப்ப வேண்டாமா? என்று தனது கவலையை
வெளிப்படுத்தினார். பிறகு இந்த செய்தி ஊர் முழுக்க காட்டுத்தீ போல் பரவியது. மக்கள்
மத்தியில்; அவரைப் பற்றிய செய்திகள் அதிகமாக பேசப்பட்டது. சிலர் கனவில் கூட
தங்களுக்கு அந்த மகான் காட்சி தந்ததாகக் கூறத்தொடங்கினர். சிலர் அவர்களுடைய ஓய்வு
நேரங்களிலும், சபைகளிலும் அவரது அற்புதங்களாக, அவருடைய உயர்வு, அவரது தலைப்பாகையின்
நீளம், அவர் நிகழ்த்திக் காட்டிய கணக்கிட முடியாத அற்புதங்கள், பாங்கு
சொல்வதற்குரிய நேரம் வந்து விட்டால் பாங்குமேடையே அவரை நோக்கி நகர்ந்து வந்த
பேரதிசயம் இப்படி இதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தனர்.
பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களுக்கு மத்தியிலும் இதே பேச்சாக இருந்தது. விசயம்
அளவு கடந்து சென்ற போது 'ஸஈதால்' பொறுமையாக இருக்க முடியவில்லை, அவன்
உரத்தக்குரலில் ஏ புத்தியுடையவர்களே! இந்த மூடக்கதைகளை விட்டு விடுங்கள் என்று
சத்தமிட்டான். அதை கேட்ட அவர்கள் ஒரே குரலில் இது மௌட்டீகமா? 'ஷைக் பரகாத்' அங்கு
இல்லையா? என்று விழி பிதுங்கக் கேட்டனர்.
ஸஈத்: ஆம்! அங்கு அப்படியொருவர் இல்லை மேலும் அப்படியொரு உண்மையான கப்ரும் இல்லை,
அது ஒரு கட்டுக் கதை, அந்த வளைவில்; மண்ணுக்குள் மண் தான் இருக்கிறது. அங்கு ஒரு
ஷைகும் இல்லை வலியும் இல்லை அப்படி ஒரு இடமும் இல்லை. நாங்கள் தான் இப்படி
கற்பனையில் ஒரு 'வலியை' உருவாக்கி அதன் கதையை மக்கள் மத்தியில் பரப்பி விட்டோம்
என்று கூறினான்.
ஆசிரியர்கள் வியப்புற்று பார்க்கின்றனர் நீ என்ன சொல்கிறாய்! 'ஷைக்
பரகாத்'தைப் பற்றி எப்படி நீ அபாண்டமாகச் சொல்லத் துணிந்தாய்? 'ஷைக் பரகாத்'
தான் இந்த ஊரின் மேற்கு பகுதியில் தண்ணீர் ஊற்றுக் கண்களை பீறிட்டு வரச் செய்தார்,
அவர்தான் அதைச் செய்தார், இதைச் செய்தார் என்று அடுக்கிக் கொண்டே சென்றனர்.
அவர்களின் வார்த்தைகளால் ஸஈத் வாயடைத்துப் போய் விட்டான்.
எனினும் ஸஈத் சொன்னான்: உங்கள் புத்திகளை பிறரிடம் அடகு வைத்து விடாதீர்கள்.
எதையும் கண் மூடித்தனமாக ஏற்று பின்பற்றாதீர்கள்! நீங்கள் அறிவுஜீவிகள்,
ஆசிரியர்கள், நீங்கள் புகழக் கூடிய அப்படியொரு கப்ரோ தர்ஹாவோ அங்கு இல்லை. நீங்கள்
உறக்கத்தில் இருக்கும் போது ஷைத்தான் உங்கள் சிந்தனைகளில் விளையாடி விட்டான்,
நீங்கள் இப்போது அதை உண்மைப் படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள் என்று கூறினான்.
அப்போது பாடசாலையின் முதல்வர் அங்கு வந்து அவர்களுக்கு மத்தியில் நடந்த உரையாடலில்
கலந்து கொள்கிறார். அப்படியொரு 'ஷைகு' இருப்பது பற்றிய அந்த செய்திகள் அனைத்தும்
உறுதியாகி விட்டது, நேற்று இரவு வெளியான பத்திரிகையை நீங்கள் படிக்கவில்லையா? என்று
ஒரு போடு போடுகின்றார். ஸஈத் வியப்படைகிறான்
பத்திரிகைகளும் இச்செய்தியை விட்டு வைக்கவில்லையா? என்று ஆச்சரியப் பட்டபோது
அதிபர் சொல்கிறார்: பத்திரிகையில் 'ஷைக் பரகாத்' அவருடைய அடக்கஸ்தலம் அண்மையில்
கண்டு பிடிக்கப்பட்டுள்ளது எனும் தலைப்பிட்டு செய்தி வெளியாகி உள்ளது, அதில் உள்ளதை
முதல்வர் உரத்து வாசிக்க ஆரம்பித்தார், 'ஷைக் பரகாத்', அல்லாஹ் அவரை
பரிசுத்தமாக்கட்டும்! ஹிஜ்ரி 1100ம் வருடம் பிறந்தார்கள். இவர்கள் 'ஹாலித் இப்னு
வலீத'; (ரலி) என்ற ஸஹாபியின் வழித்தோன்றலில் உதித்தவர். இவர் பல தலை சிறந்த
அறிஞர்களிடம் அறிவுஞானத்தைக் கற்றார், கிறிஸ்தவர்களுக்கும் துருக்கிப்
படையினருக்கும் மத்தியில் நடந்த ஒரு போரில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக போராடினார்.
போர் உக்கிரமம் அடைந்த போது 'ஷைகின் கராமத்' வெளிப்படத் துவங்கியது அவர்கள் தனது
திருவாயினால் கோபத்துடன் எதிரிப்படையை நோக்கி ஊதினார்கள். என்ன ஆச்சரியம! வாயில்
இருந்து ஒரு புயற்காற்று வெளியானது, அது ஏற்படுத்திய தாக்கத்தால் எதிரிப்படையினர்
ஒட்டுமொத்தமாகத் தூக்கி வீசப்பட்டு, நூறு மீட்டர் தூரத்துக்கு அப்பால் காற்றில்
பறந்து பிணங்களாக, இரத்தம் பீறிட்ட நிலையில் விழுந்தனர்.' என்று அதில்
எழுதப்பட்டிருந்தது .
ஸஈத் வியப்படைந்தவனாக மாஷாஅல்லாஹ்! பத்திரிகையாளர் 'ஷைக் பரகாத்' பற்றி இப்படி
துல்லியமான செய்திகளை எங்கிருந்து பெற்றார்கள்? என்று வினவினார், அதற்கு முதல்வர்,
இவை அனைத்தும் உண்மைகளே, அந்நிருபர் தனது வாப்பா வீட்டில் இருந்து இத்தகவல்களைக்
கொண்டு வந்தார் என்று நீர் எண்ணுகின்றீரா? இது உண்மையான வரலாறு என்று வாதிட்டார்.
ஸஈத், எனினும் முன்வைக்கப்படும் தகவல்களுக்கு உறுதியான ஆதாரங்கள் தேவை. அதைச்
சொல்பவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் இருக்க வேண்டும், நானாக இருந்தாலும் நீங்களாக
இருந்தாலும் சொல்லப்படும் செய்திகளில் ஆதாரங்கள் இருக்கும் போது தான் ஏற்றுக்
கொள்வோம். அப்படியில்லை என்கின்ற போது ஒவ்வொருவனும் அவனுக்கு விருப்பமானதைச்; சொல்ல
ஆரம்பித்து விடுவான் என்று கூறினார். கப்றுகள் என்றும் அவ்லியாக்கள் என்றும்
அற்புதங்கள் என்றும் ஒவ்வொருவரும் தாம் விரும்பியதைச் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்
என்று கூறினார்...
பின்பு ஸஈத் உரத்தக்குரலில் அனைவரையும் அழைத்து, 'ஷைக் பரகாத்'துடைய இடம் அங்கு
அமைந்திருப்பதென்பது ஒரு பொய்யான செய்தியாகும். தவறான போலிப்பிரச்சாரமாகும். இது
நானும் ஆசிரியர் ஆதிலும் சேர்ந்து புனைந்த ஒரு பொய்யான கட்டுக் கதையாகும். மக்களின்
அறியாமையையும் ஏமாறும் தன்மையையும் உறுதிப் படுத்துவதற்காக நாங்கள் இருவரும் போட்ட
திட்டமாகும். மக்கள் எந்தத் தகவலையும் உறுதி செய்து ஏற்றுக் கொள்வதில்லை என்பதனைப்
பரிசோதிப்பதற்காக நாங்கள் செய்ததாகும். 'ஆதில்' உங்களுக்கு முன்னால் தான்
இருக்கிறார், நீங்கள் விரும்பினால் அவரிடம் கேளுங்கள் என்று ஸஈத் கூறினார்.
'ஆதிலின்' பக்கம் அனைவரும் திரும்பினர், எனினும் அவர்கள் 'ஆசிரியர் ஆதிலும்'
உம்மைப் போன்று தர்க்கிப்பதை விரும்பக்கூடியவரும்
ஒவ்வொன்றுக்கும் ஆதாரங்களைக் கேட்கக்கூடியவரும், அவ்லியாக்களை-நல்லடியார்களை
மதிக்காதவர் தான். நீரும், 'ஆதிலும்' என்ன கூறினாலும் சரி 'ஷைக் பரகாத்' என்று
ஒருவர் நமது மூதாதையர் காலத்தில் வாழ்ந்துள்ளார். அல்லாஹ் அவரைப்
பரிசுத்தப்படுத்தட்டும்! உலகம் என்பது அவ்லியாக்கள்-
நல்லடியார்கள் அடக்கப்பட்ட இடங்களை விட்டும் ஒரு போதும் காலியானதாக இருந்ததில்லை.
நீங்கள் கூறும் வழி கேட்டை விட்டும் நாங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறோம்
என்று அவர்கள் ஒருமித்த குரலில் கூறினார்கள்.
ஆதிலும்,ஸஈதும் மௌனமானார்கள். அவர்களால் படித்தும் மூடர்களாக இருக்கும் இவர்களிடம்
இதற்கு மேல் புரிய வைக்க முடிய வில்லை. மணி அடித்ததும் வகுப்புக்கள் ஆரம்பமாகியது,
ஆசிரியர்கள் களைப்புடன் வெளியேறிச் சென்றனர். ஆசிரியர் ஸஈதுக்கும் இந்த படித்த
மூடர் கூட்டத்தின் பேச்சுக்களால் ஒரு வித தடுமாற்றம் ஏற்பட்டது. உண்மையில் 'அஷ்ஷைக்
பரகாத்' என்று ஒருவர் உள்ளாரோ? பேசப்படும் அற்புதங்கள் ஒருவேளை உண்மையானதோ? 'ஆதில்'
ஏற்கெனவே இந்த 'வலீ' சம்பந்தமாக அறிந்து வைத்துக்கொண்டு எம்மை ஏமாற்றி எம்மிடத்தில்
அவ்லியாக்களை நம்பும் கொள்கையை அகற்றி வழிகெடுக்க வேண்டும் எனும் நோக்கத்தில் கூட
இப்படிச் செய்திருப்பாரோ? என்று பல கேள்விகளை தன்னுள்ளே கேட்க ஆரம்பித்து விட்டார்.
இவர்கள் அனைவரும் ஒருமித்துத் தவறாகச் சொல்வார்களா? பத்திரிகை நிருபர் எழுதியது
பொய்யா? இப்படி அவனுள்ளே பல கேள்விகள்.
நேற்று ஷைக்மார்கள் அனைவரும் ஒன்றுகூடி 'பரகாத்து' அவ்லியாவுக்காக அந்த வளைவு
அமைந்திருக்கும் இடத்தில் 'ஹல்ரா' நடத்தி விழா எடுத்தனர். எனினும் 'ஷைக் பரகாத்'
என்பவர் ஆதிலின் கற்பனையில் உருவானவர், அப்படியானால் அனைவரும் எப்படி இக்
கருத்துக்கு பலியானார்கள் இது முடியாத காரியம் இது ஆதிலின் கற்பனை அல்ல. ஸஈதுடைய
சிந்தனையில் ஒரு புதிய கருத்து உதித்தது, ஒரு வேளை 'ஷைக் பரகாத்' என்பவர் உண்மையில்
இருந்திருக்கலாம் ஆதில் இதை முன்பே அறிந்து வைத்திருக்கலாம். அதனால் தான் அவர்
'ஷைக் பரகாத்' என்று ஒருவர் இருப்பதாக சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பார். ஆசிரியர்
ஸஈத் இதைப் பற்றி சிந்தித்த வண்ணமாகவே இருந்தார். ஷைத்தானியத்தான இந்த சிந்தனைகளில்
இருந்து விடுபடுவதற்கு பாதுகாப்பு தேடிக்கொண்டார், எனினும் இது வெற்றியளிக்கவில்லை.
இரண்டாவது நாளும் இந்த விசயம் தொடர்பாகவே பள்ளிக்கூடத்தில் கதைகள் ஆரம்பித்தன.
அந்த வருடத்தின் பாடங்கள் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டதால் கோடைக்கால
விடுமுறையில் அனைத்து ஆசிரியர்களும் தமது ஊர்களுக்குச் சென்றதால் அதைப் பற்றிய
கதையும் நின்று விட்டது.
அதைத் தொடர்ந்து புதிய கல்வியாண்டு ஆரம்பமாகி விட்டது. ஆதிலும் ஸஈதும் பஸ் ஏறி தாம்
பணிபுரியும் பாடசாலை அமைந்திருக்கக்கூடிய ஊருக்கு வருகின்றனர். ஆசிரயர் ஆதில் 'ஷைக்
பரகாத்'துடைய விடயத்தை முழுமையாக மறந்துவிட்டார். எனினும் அந்த பொய்யான கதையை முழு
கிராமத்திலும் பரவுவதற்குக் காரணமாக இருந்தவர். எனினும் ஸஈத் இந்த விசயத்தில்
நிதானமாக இருந்தார். அந்த ஊருடைய வளைவு நெருங்கி வர வர, அவர் தனது வாயினுல் ஏதோ
பிரார்த்தனைகளையும், திக்ருகளையும் முணு முணுக்க ஆரம்பித்து விட்டார்.
இந்த வளைவை நெருங்கியவுடன் ஆச்சரியமான ஒரு விசயம் காத்திருந்தது. 'ஷைக்
பரகாத்'தின் பெயரில் அழகான ஒரு (தர்ஹாவை) கட்டிடத்தை எழுப்பப்பட்டிருந்தது. அது
வளைவுக்கு மேல் உயர்ந்து விளங்கியது. அதற்குப் பக்கத்தில் ஆடம்பரமான தோற்றத்தில்
ஒரு மஸ்ஜித் துருக்கியின் கட்டிடக் கலையின் அனைத்து வேலைப்பாடுகளுடனும்
அவ்விடத்தில் இலங்கிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்து, 'ஆசிரியர் ஆதில்'
ஆச்சரியத்துடன் சிரித்துக் கொள்கிறார், பாமர மக்களின் அறியாமையை புரிந்துக்
கொள்கிறார் நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கு மத்தியில் ஷிர்க்கை பரப்புவதில்
வெற்றிகொண்டு விட்டான். ஸஈதுடன் சேர்ந்து சிரிக்கலாம் என ஸஈதை பார்க்கிறார் ஸஈத்
பிறார்த்தனைகளில் ஈடுபடுவதைக் கண்டு வியப்பில் ஆழ்ந்து விட்டார், ஸஈத் உரத்த
குரலில் பஸ் ஓட்டுனருக்கு பஸ்ஸை சிறிது நேரத்திற்கு நிறுத்துமாறு சொல்கிறார் பின்பு
கைகளை உயர்த்தி ஷைகு 'பரகாத்து'க்காக பாதிஹா ஓதுகிறார். ஷைத்தான் எப்படி மனித
மூளைகளில் விளையாடுகிறான் பார்த்தீர்களா? (அல்-பயான்
சஞ்சிகையில் இருந்து)
இன்ஷா அல்லாஹ் தொடரும்... |