Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

March 2005
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,116 முறை படிக்கப்பட்டுள்ளது!

இறைநாட்டம்

ஜனாஸாவை அடக்கி விட்டு வந்து, பள்ளியில் நின்று கடைசி துஆவும் ஓதிவிட்டார்கள். கூட்டம் கலைய ஆரம்பித்தது.

பத்துமணி தான் என்றாலும், வெய்யில் ‘சுரீர்’ என்று உறைத்தது. கிளினிக்கில் கூட்டமாக இருக்கும். சீக்கிரமாகச் சென்று, முதலில் சபுராமாவைப் பார்த்து ஆறுதல் சொல்லி விட்டு, அப்படியே கிளினிக்குச் செல்லலாம்.

கொஞ்சம் நடையை எட்டிப்போட்டேன். சபுராமாவை விசாரிக்காமல் செல்ல மனம் இடந்தரவில்லை.

சபுராமா வீட்டில் பெண்கள் கூட்டமும் குறைந்திருந்தது. என்னைப் பார்த்ததும் அந்த ஹாலில் நின்று கொண்டிருந்த சில பெண்களும் மரியாதைக்காக ஒதுங்கிக் கொண்டார்கள்.

தரையில் ஒரு ஓரத்தில் பாயில் படுத்திருந்த சபுராமாவை நோக்கிச் சென்றேன். அழுது அரற்றிக் கொண்டிருந்தார் அந்த மூதாட்டி. கண் பார்வை மோசம், இல்லையென்றால் என்னைப் பார்த்ததுமே கதற ஆரம்பித்திருப்பார்!

“பெரியம்மா! சபுர் செய்யுங்கம்மா?”

“யாரு? டாக்டரா? என் சீதேவி டாக்டரு! எம்பச்சப்புள்ளய அல்லா எடுத்துக்கிட்டானே! பாயோடு பத்திக்கெடகிற இந்தப் பாவியை எடுத்துக்கிட்டுப் போகக் கூடாது? நான் என்ன செய்வேன், டாக்டரு? அம்மாடி.. அம்மாடி”. அந்த மூதாட்டி என் கைகளைப் பற்றிக்கொண்டு பெரிதாக அழ ஆரம்பிக்கிறார். சுற்றியிருக்கும் அனைவரது கண்களும் கலங்குகின்றன. ஒரு சில பெண்கள் வாய்விட்டே கதறுகிறார்கள். நானும் உடைநது போகிறேன்.

தற்செயலாக, அந்த ஹாலின் தெற்குப் பக்கத்து வாயிற் பக்கம் என் கண்கள் செல்கின்றன. எனக்கென்னவோ அந்த இடத்தில் அலிமா – அதுதான் சபுராமாவின் மருமகள் – நின்று கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. சபுராமாவைப் பார்க்க நான் வரும் ஒவ்வாரு தடவையும் இந்த இடத்தில் நின்று கொண்டுதான் அந்தப் பெண் பதில் சொல்லும்.

ஒரு நாளா? ஒருமாதமா? எத்தனையாண்டுப் பழக்கம் அந்தக்குடும்பம் எனக்கு! சபுராமா படுக்கையில் விழுந்தே ரெண்டு மூனு வருஷமாச்சே!

நேற்றுக் கேட்டாற் போல இருக்கிறது! “ஏன் டாக்டர்! ஒன்னு செத்தம்னு இருக்கனும்! இல்லை பொளச்சம்னு இருக்கனும்? இது என்ன ஒரேயடியா இழுத்துக்கிட்டே கெடக்குது!” – துடிப்பாகக் கேட்ட அந்த இளம்பெண்ணை கோபமாகத் திரும்பிப் பார்த்தேன்.

“செரிபரல் ஸ்ட்ரோக்” வந்து, பக்கவாதத் தாக்குதலுக்குள்ளாகி நினைவிழந்து கிடக்கும் சபுராமாவைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் அந்தப் பெண் – அதுதான் அலிமா – அப்படிக் கேட்டாள். அவளை நான் பார்த்தது அது தான் முதல் முறை என்று கூடச் சொல்லலாம் – நேருக்கு நேர் அதற்கு முன் பார்த்ததில்லை.

நான் கோபத்தோடு பார்த்ததை அந்த பெண் பொருட்படுத்தவே இல்லை.

“ரெண்டு மூனு நாளாகுமா?”

“எதற்கும்மா?”

“இல்லை, ரெண்டு மூனு நாளைக்கு தாங்குமான்னு கேக்குறேன். சாமான்லாம் வாங்கி வச்சுக்கிடலாமுல்ல”

பிடறியில் அடித்தாற்போலிருந்தது எனக்கு!

என்ன இரும்பு மனசு இந்தப் பெண்ணுக்கு! கோபம் ‘ஜிவ்வென்று ஏறியது எனக்கு!

“யார் கண்டாங்கம்மா! ரெண்டு நாளும் தாங்கலாம் – ரெண்டு வருஷமும் ஆகலாம் – அவங்களுக்கு முன்னாலே நாம் கூட மெளத்தாகிடலாம்” பொசுக்கென்ற வார்த்தைகளைக் கொட்டினேன்.

“என்ன டாக்டர், நீங்க இப்படிப் பேசுறீங்க?”

“வேற என்னம்மா சொல்லச்சொல்றே? எங்களைப் பொறுத்து, நடமாடிக் கொண்டிருக்கிற நம்ம உயிரும் உயிர் தான் – “சக்கராத்து” வருத்தத்துல கெடக்குற இந்த பெரியம்மா உயிரும் உயிர்தான்! யாரு உயிரு முதல்ல போகும்னு சொல்ல யாராலும் முடியாது. அதைச் சொல்றதுக்கு எந்த டாக்டருக்கும் உரிமை இல்லை.”

“நீ மொதல்ல மங்களகரமா பேசக் கத்துக்க. வாழ வேண்டிய வயசுப் பொண்ணு நீ! இப்படி அமங்கலமாய்ப் பேசக் கூடாது! ஒங்க மாமியாருக்கு வைத்தியம் செய்யக் கூப்பிட்டீங்க – வந்து வைத்தியம் செய்யிறேன். இவங்களுக்கு குணமாகி வரக்கூடிய வாய்ப்புத் தெரியுது. ஆனா பொறுமை வேணும். நீ நினைக்கிற மாதிரி ஒரு நாள் ரெண்டு நாளைக்குள்ள முடிவு சொல்ல முடியாது. உனக்குப் பொறுமை இருந்தா வைத்தியம் பாரு! விருப்பம் இல்லேன்னா அப்படியே விட்டுடு! கொஞ்ச நாள்ல நீ நினைக்கிற மாதிரி ஒரு முடிவு தெரிஞ்சிரும்” படபடவென்று பொரிந்து தள்ளினேன், நான்!

அருகிலிருந்த மற்ற பெண்களும் என் பேச்சிலுள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டு அந்தப்பெண்ணை “பிலு பிலு” வென்று பிடித்துக் கொண்டார்கள்.

சே! என்ன நேரத்தில் அப்படிச் சொன்னேனோ? பாவம்! அந்தப் பெண் தன் மாமியாருக்கு முந்தி போயே போய் விட்டாள். என் உள்மனதில் ஆழமான உறுத்தல்!

அந்த நிகழ்ச்சி நடந்து அடுத்த இரண்டு நாட்கள் சபுரம்மா வீட்டிலிருந்து அழைப்பு இல்லை. கிளினிக் அருகிலுள்ள வீடுதான். என்ன ஆயிற்று என்று அறிய ஆவல் தான். இருந்தாலும் தொழில் மரியாதை இருக்கிறதே!

கிராமத்தில் தொழில் செய்வதால் எல்லாவற்றையும் “காம்பரமைஸ்” செய்து கொள் முடியாதே!

இன்னும் சில நாட்கள் தொடர்ந்து சிகிச்சையளித்தால் நினைவு திரும்பி விடும் சூசகம் தெரிந்தது. அதுக்கப்புறம் “ஃபிஸியோதெரபி” பயிற்சி கொடுத்து ஓரளவு சகஜ நிலைக்குத் திருப்பி விட முடியும். அனால் அந்த அளவுக்குப் பொறுமை இல்லையே, அந்தப் பெண்ணுக்கு? இப்பவே ஜனஸாவுக்கு வேண்டிய சாமான்களைத் தோது செய்து வைத்துக் கொள்ள நினைக்கிற அந்தப்பொண்ணு எப்படி பொறுமையா சிகிச்சையளிப்பா?

கிளினிக்குக்கு வந்த மற்றவர்களிடம் விசாரித்துத் தெரிந்து கொண்டேன். அலிமா, சபுரமாவின் ஒரே மருமகள். அவளது கணவன் மலேசியாவில் இருந்தான். கல்யாணம் முடிந்து சில மாதங்களுக்கு இருந்து விட்டுச் சென்றவன் தான். காசு பணம் ஓன்றுமில்லை. எந்த ஊரில் இருக்கிறான் என்று கூடத் தெரியாது என்று பேசிக் கொண்டார்கள். தாயின் வீட்டிலும் பொருளாதார வசதிக் குறையென்பதால், சபுரமா தான் அந்தப் பெண்ணின் வாழ்வுக்கே ஆதாரதம்! அந்த அம்மா சேர்த்து வைத்திருந்த பழைய நகைகளில் ஒவ்வொன்றாக விற்றுத்தான் ஜீவனம் என்று சொன்னார்கள்.

பொருளாதார நிலை காரணமாக தொடர்ந்து சிகிச்சையளிக்க முடியாமல் போகலாம். ஆனால் வாயளவில் அன்பு காட்டக் கூடவா இல்லாமல் போய் விட்டது? அந்தப் பெண்ணின் மீது எனக்கு ஏக வெறுப்பு!

இரண்டு நாட்கள் கழிந்து அந்தப் பெண் கிளினிக்குக்கு வந்தாள். “எங்க மாமியை வந்து பாருங்க, டாக்டர்! இன்னும் அப்படித்தான்கெடக்குறாக! ஊர்ல உள்ளவங்க எல்லாரும் என்னைப் போட்டுத் திட்டுறாங்க!”

எனக்கு கோபத்தோடு சிரிப்பும் வந்தது! இப்போது கூட ஊர்ல உள்ளவங்க திட்டுறாங்கன்னு தான் இந்த பெண் வைத்தியம் பார்க்க விரும்புகிறாள். தன் மாமியாரைக் காப்பாற்ற வேண்டுமே என்ற கடமை உணர்வு கொஞ்சம் கூட இல்லையே? சே! என்ன பெண் இவள்?

‘சரி! இவளுக்குச் சொலலிப் புரிய வைக்க முடியாது! திருந்த முடியாத ஜன்மம். அங்கே உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிற அந்த ஜீவனைக் காப்பாற்ற வேண்டும்’ – நான் சபுராமாவைப் பார்க்கச் சென்றேன்.

ஒரு வார கால போராட்டத்துக்குப் பிறகு சபுராமா ஓரளவு தெளிவு பெற்றார். படிப்படியான சீரான முன்னேற்றம். கொஞ்ச கொஞ்சமாக நன்கு பேச முடிந்தது. கெட்டி உணவுகள் உண்ண ஆரம்பித்தார்.

இடைப்பட்ட காலத்தில், ஒரு பக்கவாத நோயாளிக்குச் செய்ய வேண்டிய கண்காணிப்புகளைப் பக்கத்து வீட்டுக்காரர்கள் தான் செய்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மருமகளின் பங்கு மிக மிகக் குறைவு. ஏதோ ஒப்புக்கு ஒரு கை கொடுப்பதுபோலத் தான் நடந்து கொண்டாள். பல சந்தர்ப்பங்களில் நான் சிகிச்சையளிக்கச் செல்லும் போது சபுராமா தனியாகவே கிடப்பார். பையனை அனுப்பி, அடுத்த வீட்டு மரியம்மாவை அழைத்துவர வேண்டியிருக்கும்.

எப்படியோ, சபுராமா பக்கவாதத்தின் கோரப்பிடியிலிருந்து மீண்டு விட்டார். அவசர நிலை முற்றிலும் மாறி விட்டது. அக்கம் பக்கத்து வீட்டார்களும் விலகிச் சென்று விட்டார்கள், தங்கள்கடமை முடிந்து விட்டதாக நினைத்து.

இந்த வகை நோயாளிகளுக் ‘ஃபிஸியோதெரபி’ – உடற்பயிற்சிகள் மிகமிக முக்கியமானது. அதற்காக முழுக்க முழுக்க மருமகளையே நம்பியிருக்க வேண்டிய நிலை சபுராமாவுக்கு ஏற்பட்டது. அவளது புறக்கணிப்பால், பாதிக்கபட்ட காலும் கையும மறுபடியும் சூம்பிப் போக ஆரம்பிக்க, படுக்கையிலே கிடக்க வேண்டியதாகி விட்டது. வாரம் ஒரு முறை வீட்டுக்குச் சென்று சிகிச்சைளிப்பதோடு சரி! மனிதாபிமான முறையில் அதற்கு மேல் என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லை. எனக்கு வியப்பளித்த விஷயம் என்னவென்றால், சபுராமா மறந்தும் கூட தன் மருமகளைப் பற்றி குறைசொல்லாதது தான். “அது சின்னப்பொண்ணு டாக்டரு! அந்தப்பாவிப் பயல நம்பி இந்தப்புள்ளய கட்டிவச்சுட்டேன். போனவன் போனவன்தான்! அதெ நெனக்கையிலதான் என்நெஞ்சு கெடந்து துடிக்கிது! அத ஒன்னும் சொல்லாதீங்க!” என்று சொல்லிவிடுவார்.

“அலிமா தன் கணவன் பாராமுகமாக நடந்து கொள்வதால் அவன் மீது காட்ட வேண்டிய ஆத்திரத்தை அவன் தாய் மீது காட்டுகிறாள். அல்லது தன் எதிர்காலத்தைப் பற்றிய குழப்பத்தில் விரக்தியாக அப்படி நடந்து கொள்கிறாள்” என்று எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டேன்.

ஒரு நாள் சிகிச்சைக்காக வீட்டுக்குச் சென்றிருந்தேன். “டாக்டரு! எம்மருமக ரெண்டு நாளா காச்சலாக் கெடக்குது! அதுக்கு மொதல்ல ஊசி போடுங்க – லே! அம்மா எந்திச்சுவாளா”! என்றார் சபுராமா.

முக்கி முனங்கியபடி எழுந்து வந்தாள் அலிமா! முகம் வெளுத்து ஏதோ பல நாட்கள் நோயாய்க் கிடந்தது போலத் தோற்றம்! உட்காரச் சொல்லி சோதனையிட ஆரம்பித்த போது என் கண்களை உறுத்தியது, கழுத்துக்குப் பக்கத்தில் இருந்த அந்த ‘கட்டி’!

“இந்தக்கட்டி எத்தனை நாளம்மா இருக்கு?”

“அது ஒன்னு இல்ல டாக்டரு! சும்மா கழலை! ரெண்டு மூனு நாளா காச்சலும் குளிருமாயிருக்கு! வாந்தியும் வருது!”

அவள் அதை தட்டிக்கழித்தாள். ஆனால் என் தொழிற்கண்களுக்கு அது சாதாரணக் கட்டியாகத் தெரியவில்லை. மனதில் அதிர்ச்சியுடனேயே அதை மேலும சோதித்துப் பார்த்தேன். என் யூகம் சரியானதாகவே பட்டது! அது ‘ஹாட்ஜ்கின்ஸ்’ கட்டி – ஒருவகை கேன்ஸரின் வெளிப்பாடு போலத்தான் இருந்தது.

அப்பெண்ணின் மறுதலிப்பையும் பொருட்படுத்தாது, டவுனிலுள்ள என் ‘ஸ்பெஷலிஸ்ட்’ நண்பரிடம் அழைத்துச் சென்று அனைத்துச் சோதனைகளும் செய்ததில், அது ஹாட்ஜ்கின்ஸ் வியாதி தான் என்று உறுதிசெய்யப்பட்டது.

அது மிக மோசமான கேனஸர் வகையைச் சேர்ந்தது. என்னதான் நவீன சிகிச்சையளித்தாலும் சில மாதங்களில் உயிரைப்பறித்துவிடும். பெரும்பாலும் இளவயதினரையே தாக்கும் வியாதி அது!

இந்தச் செய்தியை எப்படித் தெரிவிப்பது? வேறு வழியில்லை. தெரிவித்தே ஆகவேண்டிய கட்டாயம்.

அதைக்கேட்டு சபுராமா துடித்த துடிப்பு! தன்னிடம் மீந்திருந்த நகையையெல்லாம் அள்ளிப்போட்டு எப்படியாவது எம் மருமகள காப்பாத்துங்க, டாக்டர்!’ என்று அலறிய அலறல்! “நீ இருந்து வாழ்வாயினுநம்பித்தானே வீட்டை ஒம்பேருக்கு எழுதினேன்! எங்கேயிருந்து வந்துச்சம்மா, இந்த வியாதி?” என்று கதறியபோது கல்லும் கரைவதாய் இருந்தது.

மதுரையில் எல்லா நவீன சிகிச்சகைகள் கொடுத்தும் வியாதியின் தீவரத் தன்மையால் இரண்டொரு மாதத்தில் படுக்கையில் விழுந்துவிட்டாள், அலிமா!

அந்த ஹாலில் ஆளுக்கொரு மூலையில் அந்த இருவரும் முடங்கிக்கொண்டார்கள். அலிமாவின் வயோதிகத் தாயும், அடுத்த வீடடு மரியம்மாவும் தான் அவர்களைக் கண்காணித்துக் கொண்டனர்.

ஒவ்வொரு நாளும் அவர்களைச் சென்று பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன்.

இந்தப்பக்கம் அழுது, அரற்றிக் கொண்டிருக்கும் சபுரமா! அந்தப்பக்கம் முகத்தில் உணர்ச்சியையே காட்டிக் கொள்ளாமல் துவண்டுபோய்க் கிடக்கும் அலிமா! இந்த இறுக்கமான சூழ்நிலையில் ரொம்பநேரம் இருக்க முடியாமல் ஓரிரு ஆறுதல் வார்த்தைகள் சொல்லிவிட்டுத் திரும்பிவிடுவேன்.

நேற்று பிற்பகல் அலிமா நினைவிழந்து விட்டாள். முந்தாநாள் காலை நான் அங்கு சென்றபோது, தன் மாமியார் பக்கம் முகத்தை வைத்துக்கொண்டு, அவரையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் அலிமா! கண்ணில் தாரை தாரையாயக் கண்ணீர்! அருகில் சென்ற என்னிடம சைகை காட்டினாள். தன் மாமியார் அருகில் செல்ல நினைக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு அங்கிருந்த அனைவருமாக அலாக்காத் தூக்கி அருகில் வைத்தோம்.

தன் மாமியாரின் இரண்டு கைகளையும் எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டு அந்தப்பெண் அழுத அழுகை! மெல்லிய குரலில் என்னிடம முணுமுணுத்தாள்!

“எங்க மாமியாரை நல்லா கவனிச்சுக்குங்க டாக்டர்! எப்போதும் போல!” கண்ணீரோடு தலையசைத்தேன். பழைய நினைவுகள் நெஞ்சில் அலைமோதின.

எல்லாம் முடிந்து விட்டது! அலிமா போய் விட்டாள்! யாரையும் கவனிக்கவில்லை என்று இனி அவளை யாரும் குறை சொல்ல முடியது! இத்தகைய மரணங்களை மற்றவர் “பூர்வ ஜன்ம பலன்’ என்று ஒதுக்கி விடுகிறார்கள். நம்மால் அப்படிச் சொல்ல முடியாது.

“நான் நாடியவர்களை வாழவைக்கிறேன். நான் நாடியவர்களை என்னளவில் அழைத்துக் கொள்கிறேன்” என்று அல்லாஹ் அறைந்து சொல்கிறான்.

“இறைநாட்டம்” என்று சபூர் செய்துகொள்ள வேண்டியதுதான்! இருந்தாலும், சலனமிக்க மனித உள்ளம் துவண்டு போகத்தான் செய்கிறது!

மெலிந்து, வளைந்து, அந்தப்பாயில் சுருண்டு கிடக்கும் சபுராமாவின் தோற்றம், அவரது எதிர்காலத்தைப் போலவே கேள்விக்குறியாகத் தோன்றுகிறது, எனக்கு! இறுக்கமான மனதுடன் எழுந்து நடக்கிறேன். சபுராமாவின் அழுகைக் குரல் என்னைத் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.

நன்றி: நர்கிஸ்
——————————————————————————–
ஜனாஸா = இறந்த உடல் சபூர் = பொறுமை
மெளத்து = மரணம் சக்கராத்து = மரணநேரம்