- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

பந்தா

நகர்ப்புறத்து பிரமுகர் வீட்டுத் திருமணம் – கட்டுக்கடங்காத கூட்டம்!

கார்களும் வேன்களும் பக்கத்து தெருக்களையெல்லாம் அடைத்துக் கொண்டு நின்றன.

மாப்பிள்ளை இன்னும் மேடைக்கு அழைத்துவரப்படவில்லை. அதற்குள் இவ்வளவு நெரிசல்!

குறுகிய தெருவில் மேற்பகுதியிலும் பந்தல் கனமாப் போடப்பட்டிருந்ததால் காற்றோட்டத்துக்கே வழியில்லை!

தென்னங்கீற்றின் இடைவெளியில் உட்புகுந்த ஒளிக்கீற்று உடம்பில் ஊசியாய் குத்தியது! சூடான இரும்பு நாற்காலி மேலும் புழுக்கத்தை அதிகமாக்கியது!

நாற்காலியை கொஞ்சம் நகர்த்திப் போட்டுக் கொள்ளக்கூட இடம் இல்லை – பக்கத்தில் உட்கார்ந்து இருப்பவர்களின் தோள்களோடு உரசிக்கொண்டுதான் உட்கார வேண்டியிருந்தது!

சட்டை பட்டன்களை திறந்து விட்டுக் கொண்டார் உமர்கான் ராவுத்தர்!

கையோடு கொண்டு வந்திருந்த அந்த பெரிய திருமண அழைப்பிதழ் விசிறியாக சமயத்தில் உதவியது!

தும்மைப்பூ நிறத்தில் போட்டுக் கொண்டுவந்திருந்தசலவைச் சட்டையில் ஆங்காங்கே திட்டுத்திட்டாக அழுக்குகள்! – கூட்டத்தில் முண்டியடித்து பஸ்ஸுக்குள் ஏறும் பொழுது வெற்றுடம்புடன் நுழைய முயன்ற ஒரு சக இந்தியச் சகோதரனின் உபயம் அது!

மேலே போர்த்தியிருந்த மெல்லிய வெள்ளைத்துண்டால் நாசூக்காக அந்த அழுக்கை மறைத்துக் கொண்டார்.

அப்போது, கூட்டத்தில் ஒரு சிறிய பரபரப்பு! வி.ஐ.பி. சார்ந்து உள்ள அரசியல் கட்சியின் முக்கிய பிரமுகர் – தலைவர் ஒருவர் வந்து விட்டதாக முணுமுணுப்புகள்!

ராஜபாட்டையில் நடந்துவரும் மாமன்னர் போல இருபக்கங்களிலும் நாற்காலிகளில் உட்கார்ந்து இருந்த அழைப்பாளர்களைக் கிழித்துக்கொண்டு மேடையை நோக்கி முன்னேறினார் அந்தத்தலைவர்!

அவர் பின்னே ஒரு நீண்ட எடுபிடிப் பட்டாளம்! மேடைவரை அவருடன் செல்ல முயன்ற அந்தக்கூட்டத்தை வழியிலேயே திருப்பி வேறு பக்கம் கைகாட்டினார்கள் சிலர்!

அவர்களுள் சிலர் முறைத்தனர் – சிலர் அசடுவழிந்தனர்! அதற்குள் அவர்களது தலைவர் மேடையேறி விட்டார்!

உட்காருவதற்கு அங்கு வேறு நாற்காலிகள் இல்லை என்பதைத் தெரிந்துகொண்ட அந்தப் பரிவாரம் பின்னோக்கித் திரும்பியது முணுமுணுத்துக்கொண்டே.

நடந்த அணைத்தையும் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த உமர்கான் ராவுத்தர் தனக்குள் சொல்லி கொண்டார் “ஆனானப்பட்டவனெல்லாம் அங்கங்கே அட்ரஸ் இல்லாம ஓரமா உட்கார்ந்திருக்கான் – மொட்டய போறாக மேடைக்கு – என்னமோ அவுகதேன் வி.ஐ.பி. மாதிரி! நல்லா மூக்குடைப் பட்டானுக”

அந்தப்பரிவாரம் அவமானப்பட்டதில் இவருக்கென்னவோ ஒருவகை திருப்தி- குறுகுறுப்பு!

உமர்கான் ராவுத்தர் பக்கத்து கிராமத்தில் ஒரு புள்ளி – ஜமாஅத முக்கியஸ்தர். அவர் ஊரில் அவர் வைத்தது தான் சட்டம் என்ற அளவில் நிலைமை!

அந்த வி.ஐ.பி. வீட்டு மேரேஜ் இன்விடேஷன் வந்தவுடன் அவருக்கு கொள்ளைப் பெருமை! சந்தோஷம் தாளவில்லை! ஊரில் ஒருவர் பாக்கியில்லாமல் வலியக் கூப்பிட்டு அழைப்பிதழைக் காட்டி இவ்வளவு பெரிய தலைவர் தன் வீட்டுக்கு அழைப்புவைக்கும் அளவுக்கு தன் அந்தஸ்து  உயர்ந்துவிட்டதைக் காட்டிக்கொண்டார். அதில் ஒரு அலாதியான திருப்தியும்கூட! திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே என்ன உடை உடுத்திச் செல்வது, எப்படி நடந்து கொள்வது என்றெல்லாம் கூட ஒத்திகை பார்த்துக் கொண்டார்!

திருமணம் 10 மணிக்குத் தான் என்றது அழைப்பிதழ்! ஆனால் அவர் எட்டு மணிக்கெல்லாம் ஆஜர்! அந்த எட்டு மணிக்கே கூட இருக்ககைகள் நிரம்பி வழிந்திருக்கும் என்பது அவர் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒன்று! அவரை யாரும் அடையாளம் கண்டு கொண்டதாகத் தெரியலில்லை – முகத்தில் ஒரு செயற்கைச் சிரிப்புடன் ஓங்கி அடிக்காத குறையாக பன்னீர்ச் செம்பை இருமுறை உதறினான் வாசலில் நின்ற ஏதோ ஒரு அனாமதேயம்!

முகத்தில் அறைந்தாற் போன்ற ஒரு அவமான உணர்ச்சி அப்போதே நெஞ்சுக்குள் இறங்கியது!

கூட்ட நாட்டத்தில் இதையெல்லாம் கண்டு கொள்ளக் கூடாது என்று தனக்குதானே சமாதானம் செய்துகொண்டார்.

கட்சித்தலைவர் பின்னால் வந்த பட்டாளதுக்கே இந்தக் கதி எனும் போது தனக்கு கிடைத்த மரியாதை சிறிது அதிகமே தான் என்று இப்போது மெலும் சமாதானப்பட்டார் அவர்!

வி.ஐ.பி. மேரேஜ் என்பதால் விசேஷமாக வி.ஐ..பி. இமாம் ஒருவரை அழைத்து வந்திருந்தார்கள் போலும்! பாம் அவ்வளவு எடுப்பான தேற்றமோ, குரலோ இல்லாத உள்ளுர் பேஷ் இமாம் ஒரு ஓரத்தில் பெயருக்கு அமர்ந்திருக்க, தொண்டையை கனைததுக் கொண்டு அக்கம்பக்கம் அலட்சியமாய் பார்வையை வீசி தன்பால் அனைவரது கவனத்தையும் திருப்பிக்கொண்டு நிக்காஹ் துஆவை ஓத ஆரம்பித்தார் இமாம்!

எண்ணம் துஆவில் இல்லாமல் இருப்பவர்களை தன்பால் இழுப்பதிலேயே இருந்ததாலோ என்னவோ இடையில் ஓரிரு வார்த்தைகள் பிசிறுதட்ட – அதை ஏதோ குரலில் ஏற்பட்டத்தடை தான் காரணமென்று மற்றவர்கள் நினைத்துக் கொள்ளுமாறு லேசாக இருமுறை இருமி – பிறகு வார்த்தைகளை நினைவுக்கு கொணர்ந்து ஒரு வகையாக ஓதி முடித்தார் அவர்!

நிக்காஹ் முடிந்து வாழ்த்துரைகள் ஆரம்பமாயின!

ஒரு பெரிய கூட்டமே கதைக்க ஆரம்பித்தது!

அது ஒரு திருமண விழா என்பதே மறக்கப்பட்டு – ஒரு அரசியல் கூட்டமாகவே நடத்தப்பட்டது.

கடைசியாக தலைவர் பேசி – பேசி முடித்த கையோடு தொண்டர்கள் புடைசூழ கிளம்பியும் விட்டார். அனைவரும் விருந்துண்டு விட்டே செல்லவேணடும் என்ற அன்பழைப்பைத் தொடர்ந்து அனைவரும் எழுந்து சென்றனர்!

அன்று ரிலீஸ் ஆன சினிமா முடிந்து கலைந்து செல்லும் கூட்டம் போல ஒரு நெரிசல்!

மெல்ல நகர்ந்து போனார் ராவுத்தர்!

ஊரில் ஒரு முறைக்கு நான்கு முறை விசேஷமாக வந்து அழைத்தாலே கூட அல்லத்தட்டி விருந்துண்ணப் போகும் பந்தாரகம் அவர்!

இந்தக்கூட்டத்தில் இடுக்கி முடுக்கி அழையா விருந்தாளியாக எப்படிபோய் சாப்பிடுவது?

ஆனால் யோசிக்க நேரமில்லை. அவர் விரும்பினாரோ இல்லையோ அவரையும் சேர்த்து நகர்த்திக்கொண்டு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்த இடத்தை நோக்கி முன்னேறியது கூட்டம்!

ஆயிற்று! பந்தலை நெருங்கியாகிவிட்டது! அப்போது வாசலில் நின்ற ஒருவர் கததினார்,போதும் போதும்! இடம் முடிஞ்சிப் போச்சு! மத்தவங்க அடுத்த பந்தியிலே சாப்பிடுங்க”.

ஆனால் அவரது கத்தலை யாரும் காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை!

கூட்டம் நுழைய முற்பட – அங்கிருந்த பொறுப்பாளர் மேலும் உரத்தகுரலில் “என்னங்க! காதுல விழலையா? அறிவுகெட்டதனமா இடிச்சுக்கிட்டு வர்ரீங்களே!” என்று வசைபாட ஆரம்பித்தார்!

மிகவும் பிரயாசைப்பட்டு தன்னைத்தானே சற்று வெளியே இழுத்துச் கொண்டார் உமர்கான் ராவுத்தர்!

இப்படியும் சாப்பிட்டுதான் ஆக வேண்டுமா?’ என்று உள்மனம் இடித்துக்கோண்டே இருந்தது.

உள்ளேயும் செல்ல முடியாமல், வெளியேயும் வரமுடியாமல் ஒரு அவஸ்தை! ஒரு வழியாக அடுத்த பந்தியில் இடம் கிடைத்தது. உட்கார்ந்தார், இலைமுன்!

ஏதோ, கடமையைக் கழித்துவிட்டு ஓடிப்போய் விடலாம் என்ற அளவில் பரிமாறுபவர்களுக்காகக் காத்திருந்த போது ஒலித்தது ஒரு கர்ண கரூரமான குரல்!

“எவன்டா அவன் இவனுகளயெல்லாம் உள்ளே விட்டது? தொறந்த வூட்டுக்குள்ளே நாயி புகுந்த மாதிரில்ல இருக்கு?”

பதறிப்போன உமர்கான் அக்கம் பக்கம் பார்த்தார். ஒரு முகங்கூட அறிமுகமில்லை! எல்லோருமே அழையா விருந்தாளிகள்! முகத்தில் அறைந்தது போலிருந்தது! வாழ்க்கையில் என்றைக்குமே ஏற்பட்டிராத அவமானம்! அழும் நிலையில் ராவுத்தர்!

என்ன செய்வதென்று புரியாமல் பேந்தப் பேந்த விழித்து கொண்டிருந்த அந்த நேரத்தில் ஒரு பரிச்சயமான குரல்! “என்ன மாமு, நீங்க இந்தக் கூட்டத்துக்குள்ளே வந்து மாட்டிகிட்டீங்களே மாமு! இவனுக சரியான காட்டு மிராண்டிகளாச்சே? சரி! சரி! வாங்க எங்கூட” என்று அவரது கையைப்பிடித்து இழுத்துச் சென்றான் இஸ்தீன்!

யோசிக்க நேரமில்லை – ஆட்டுக்குட்டிபோல அவன் பின்னாலே ஓடினார்!

பொந்து போல இருந்த அந்தக் கட்டடத்துக்குள் நுழைந்து அவரை கொல்லைப் புறத்துக்கு கூட்டி வந்தான். ஸ்டோர் ரூமில் உட்கார வைத்து சாப்பாடு போட்டான்!

சாப்பிட்டு முடித்த ராவுத்தர் எழுந்து இஸ்தீனின் கைகளைப் பிடித்துக் கொண்டார். கண்கள் பனித்தன. வார்த்தைகள் வெளிவராமல் நாக்கு துவண்டது.

இஸ்தீன் பதறினான் “என்ன மாமு கலங்குறீங்க?”

“முந்தாநாள் நான் உனக்கு செஞ்ச அவமரியாதையைக் கண்டுக்காம ரொம்பப் பெரிய மனுஷனா நடந்து என்ன கலங்கடிச்சிட்டியேப்பா” என்றார், நாத்தழுதழுக்க! “அட நீங்க ஒன்னு இதப்போயி பெரிசா எடுத்துக்கிடடு? வாங்க கொல்லை கதவைத் திறந்துவிடுறேன். நேராப் போனா நிஜாம் பஸ்ஸைப் புடிச்சு ஊருக்கு போயிடலாம்” என்றான்.

வெளியே வந்த ராவுத்தருக்குள் அன்றைய நிகழ்ச்சி நினைவில் ஆடியது!.

இஸ்தீன் அவரது தூரத்து உறவு! சமையற்கூலி. பெரிய பணடாரிகளுக்கு கையாள்! அவரது வீட்டுக்கு நான்கு வீடு தள்ளித்தான் அவனது குடிசை! முந்தாநாள் அவனது அம்மாவிற்கு 40ஆம் நாள் கத்தம் வைத்திருந்தனர்.

பொதுவாக லுஹர் தொழுது முடிந்தவுடன் ஆலிம் மோதினாருடன் அழைக்கப்பட்டவர்கள் போய்விடுவார்கள். ஆனால் உமர்கான் ராவுத்தர் நேரே வட்டுக்குப் போய் விடுவார். மறுபடியும் யாராவது வந்து அழைத்துச் சொல்ல வேண்டும்.

இஸ்தீனில் மகன் வந்து அழைத்தான்! வந்ததே கோபம் ராவுத்தருக்கு! “ஏண்டா! உங்கப்பன் அவ்வளவு பெரிய மனுஷனா போய்ட்டானோ? நேரே வந்து கூப்பிட மாட்டானோ? போங்கடா மரியாதை தெரியாத பசங்களா நீங்களும் ஒங்க விருந்தும்” என்று கடாசிவிட்டார்.

ஓடிப்போன பையன் அத்தாவை அழைத்து வந்தான்.

காலில் விழாத குறையாக கெஞ்சினான் இஸ்தீன். “இடவசதி பத்தாதுனால வந்திருதவங்கல உக்கார வைக்க பெஞ் தூக்கப் போயிட்டேன் மாமு! சீதேவியலா! பெரியமனசுபண்ணி வாங்கமாமு” என்று மன்றாடினான்.

ஊஹும், அசைந்து கொடுக்கவில்லை ராவுத்தர்! அவர் என்ன அப்படி மலிந்து போனவரா?

அந்த இஸ்தீன், இன்று தான்பட்ட அவமானங்களை நேரில் பார்த்து ரசித்திருக்க வேண்டும்! சந்தோஷப்பட்டிருக்க வேண்டும் – ஒரு சராசரிமனிதன் அப்படித்தான் நடந்து கொண்டிருப்பான்! ஆனால் இவன்… இவன்…? “சே! நானும் என் பந்தாவும்!” தனக்குள் முனகிக் கொண்டே வெள்ளை ஜிப்பாவில் படிந்திருந்த அழுக்ககைக் கூட துணியால் மறைக்கத் தோன்றாமல் நடந்து கொண்டிநருந்தார் உமர்கான் ராவுத்தர்.

 நன்றி: இதய வாசல்.