Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

April 2005
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,273 முறை படிக்கப்பட்டுள்ளது!

வலி

சொல்லரசு ஸுஐயு ஹஜரத் டைரியைப் புரட்டினார். அந்த மாதத்தில் மிகச்சில நாட்களே விடுபட்டிருந்தன. அனேகமாக இன்னும் இரண்டொரு நாட்களில் அவையும் நிகழ்ச்சிகளால் நிரம்பிவிடும்! இந்தப் பத்தாண்டுகளில் இப்படியொரு சூந்நிலை ஏற்பட்டதில்லை!

“கதீஜாமா! அத்தா, வாக்குத்தந்த மாதிரி உம் பொண்ணுக்கு ஒரு சங்கிலி வாங்கித் தந்துடுறேன்”!

“அடேய்! பஷீர்ப்பயலே! உன்ககு ஒரு கைக்கடிகாரந் தானேடா? வாங்கிக்கோடா!”

“இந்தா, பீவி! என்னோட இல்லத்தரசி! ஒன்னோட மூட்டு வலிக்கு ‘பட்டணத்து ஆஸ்பத்திரில போயி எலும்பு டாக்டர்கிட்ட காட்டணும்தானே கதச்சிக்கிட்டுக் கெடக்கே! செஞ்சிடுவோம் புள்ள!”.

அந்த மதார்ஸா உஸ்தாது ரொம்ப கஷ்டப்படுகிறார் – ஆஸ்த்துமா தொந்தரவு – பசங்க அவரை கண்டுக்கிடறதேயில்லே! இந்த வயசுக்கப்புறம் என்னத்துக்கு வைத்தியமுன்னு கேக்குறானுகளாம்! ஏதோ கொஞ்சம் ஆஸ்த்துமா மாத்திரை வாங்கிக் கொடுத்துடுவோம்” – ஹஜ்ரத் மனதில் ஒத்திகை பார்த்துக் கொண்டார்.

ஹஜ்ரத் ஸுஐபுக்கு உள்ளுரிலேயே பேஷ் இமாம் பணி மூன்று தலைமுறையாக பெரிய பள்ளிக்கு அவரது குடும்பத்தினர்தான் இமாம்கள்! அவரது பூட்டனார் பர்மாவில் தொழில் செய்த பணக்காரர். அல்லாஹ்வுடைய இல்மை எம்பிள்ளைகளுக்கு எத்திவைக்கனும்” என்று ஹஜரத்துடைய பாட்டனாரை வேலூருக்கு அனுப்பினார்! பாரம்பரியம் தொடர்கிறது! இப்போது ஊரிலேயே ஒரு நூறு ஆலிம்கள் வந்து விட்டார்கள்! “ஆலிம்சா வீடு” என்றால் ஸுஐபு ஆலிம் வீடு என்று தான் பொருள்!

மரியாதைக்குக் குறைச்சல் இல்லைதான்! ஆனால் ஆனால்?..

இந்த இம்மைக் கடமைகளைக் கடப்பதற்கு மரியாதை மட்டும் போதாதே?

அங்குதான் நெருடல்! ஆயிரம் ரூபாய் சம்பளம் போட்டு வாங்குவதற்கு அறுபத்தெட்டு கருணை மனக்கொடுக்க வேண்டி வந்தது!

“ஆலிம்சாவுக்குத்தேன் மேவருமானம் ஜாஸ்தியாச்சே! சம்பளத்தை வேற ஒசத்தனுமாக்கும்” என்ற சொடுக்கல்களையெல்லாம் சமாளித்து புதிதாக நாட்டாண்மைப் பொறுப்பேற்ற நசீர் தம்பி செய்த உபகாரம் அது!

“பேர்தான் பெரிசா ஆயிரம்! அரைமாசச் செலவுக்குக் கூட ஆகல” பயணக்கார்கள் தாமாக விரும்பி துணிமணிகள், அன்பளிப்புகள் எல்லாம் அனுப்புவார்கள். முதல் முட்டை, முதலில் காய்த்த தேங்காய், ‘முதல் பாட்டில்’ பிடிபட்ட மீன் என்று ஏராளமான பொருட்களும் வந்து குவியும் அத்தா அத்தத்தா காலத்தில்!

அம்மா, அத்தம்மா சொல்லியிருக்கிறார்கள்!

ஆனால் அந்தக் காலமெல்லாம் இப்போது மலையேறி விட்டது! அவசரமான உலகத்தில் – ஆன்மீகம் கொஞ்சம் ஒதுங்கிக் கொண்டுவிட, அடிப்படை மரியாதை மட்டும் கிடைத்தால் போதுமென்ற நிலைதான்! அதிலும் ஸுஐபு ஹஜரத் ரொம்ப சங்கோஜி! பயணத்திலிருந்து வரும் பசையான பணக்காரர் வீடுகளுக்குச் சென்று – குழைந்து – தலை சொறிந்து நின்று பணம் கறக்கும் பேலையெல்லாம் தெரியாத ஆசாமி!

அதனால் வறுமை என்று சொல்ல முடியாவிட்டாலும் பற்றாக்குறை வாழ்க்கைதான்! மேடைப் பேச்சு நன்றாகவே வரும்! சொல்ல நினைத்ததை சுருக்கமாக சொற்சுத்தத்தோடு நல்ல தமிழில் எடுத்து சொல்வதில் கெட்டிக்காரர். ஜும்ஆ பிரசங்கமே ஒரு வித்தியாசமான பாணியில இருக்கும். அதற்காகவே கூட்டம் சேரும்!

சில வருடங்களாகவே வெளியூர் அழைப்புக்கள்! மீலாத் மேடைகளில் ஹஜரத்தின் உரை பெரிய வரவேற்பைப் பெறுவதால் அடிக்கடி வெளியூர்ப் பயணங்கள் மீலாத் சீசனில்! நிர்வாகக் குழுவில் சிலர் முகம் சுளித்தார்கள்!

“என்ன அலிமசா அவர் பாட்டுக்கு ஓடி ஓடிப் போயிடராரு? ஆயிரம் ரூபா சம்பளம் வாங்கிக்கிட்டு இப்படிச் செஞ்சா என்ன அர்த்தம்?” என்ற வார்த்தைச் சாட்டைகள்!

“இந்த ஊருக்குப் பெருமை சேர்க்கிற அந்த மனுசரைப்பத்தி இப்படிலாம் பேசாதீங்க! மூனு தலைமுறையாக இந்த ஊரே கதின்ன கிடக்கிற குடும்பம்! ஒரு பெட்டிக்கடை வச்சிருந்தாகூட இனனேரம் இந்த ஊர்ல ஒரு பெரிய புள்ளியாய் போயிருக்க முடியும்! அல்லாஹ்வோட பணிக்காக இம்மைச் சுகங்களையெல்லாம் பெரிசு படுத்தாம வாழ்ந்துக்கிட்டிருக்கிற அவங்களை கொச்சைப்படுத்தாதீங்க!” என்று புதிய நாட்டாண்மை போட்ட அதட்டலில் அந்தக் குரல்கள் அடங்கிக் கிடக்கின்றன!

எப்படியும் மீலாத் சீசனில் ‘மொத்தமாக ஒரு தொகை’ மிஞ்சும் அளவுக்கு வருமானம் கிடைக்க, இப்போது மொத்தச் செலவுகள் அணனத்தையும் அந்த வருமானக் காலத்துக்கே ஒதுக்கி, அதிலும் ஒரு பற்றாக்ககுறை தலையெடுக்க, அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதில் அந்த ‘துண்டு விழுதல்’ சரி செய்யப்படும் என்ற கணக்கீட்டில் நாட்கள் நகர்கின்றன!

“சார் போஸ்ட்” போஸ்ட்மேன் செல்லையா, எழெட்டுக் கடிதங்களை ஹஜரத்தின் கைகளில் திணித்தார்!

நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருந்த ஹஜரத் அக்கடிதங்களைப் படித்து டைரியில் விடுபட்டிருந்த நாட்களை நிரப்பி தேதி கேட்டிருந்தவர்களுக்கு தெதி ஒதுக்கி பதில் எழுதிக் கொண்டிருந்தபோது, மார்புப் பகுதியில் ‘சுளீர்’ என்று ஒரு வலி!

“அல்லாஹ்” என்றவர் வலது கையால் நெஞ்சாங்குழியைத் தேய்த்து விட்டார்! வலி விடவிலலை.

வேர்த்துக் கொட்டியது – வலி நெஞ்சு முழுக்கப் பரவுவது போல இருந்தது!

‘ஒரு வேளை ஹார்ட் அட்டாக்காக இருக்குமோ? — அந்த வியாதி பற்றி படித்திருந்த – கேட்டிருந்த செய்திகள் எல்லாம் ஓரு நொடியில் மனதில் பளிச்சிட, அந்த நினைப்பே பயமறுத்த, “அம்மா! கதீஜாமா!” என்று மூத்த மகளை உதவிக்கழைத்தார்!

மகளும் மனைவியும் ஓடி வர – அவர்கள் போட்ட கூச்சலில் அக்கம் பக்கத்தினர் எட்டிப் பார்க்க – ஆளுக்கொரு ஆலோசனை சொல்ல, ஒரு வகையாக ஹஜரத்தை ஆஸ்பத்திரிககு அழைத்துச் சென்றார்கள்!

‘இது ஹார்ட் அட்டாக் தான்்! அதில் சந்தேகமில்லை! இரண்டு மூன்று மாதங்களுக்கு வீட்டை விட்டு வெளியெ செல்லக்கூடாது! பிரயாணமும் கூடாது; கூட்டங்களில் பேசவும் முடியாது!”

ஹஜரத் உள்ளுக்குள் உடைந்தார்! தன் மூத்த மகளுக்குச் சங்கிலி பண்ணிக் கேட்ட மகள் நினைவுக்கு வந்தாள்!

வாட்ச் வாங்கிக் கேட்ட பிளஸ் – டூ படிக்கும் ஒரே மகன் மனதில் சோகமாக நின்றான்!

முழுங்கால்கள் இரண்டையும் பிடித்துக் கொண்டே எழும் மனைவி! ஆஸ்த்துமாவால் அவதிப்படும் மதார்சா உஸ்தாத்!

ஹஜரத் மனதுக்குள் இறைஞ்சினார்; “அல்லாஹ் யாஅல்லாஹ் .. ரப்ப! என் திட்டங்களை நிறைவேத்திவை! ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்! என் பிள்ளைகளை ஏமாத்திடாதே!”

‘ஈஸிஜி’ யை இரு கைகளிலும் எந்திப் பிடித்து ஆழ்ந்து வாசித்த டாக்டரின் முகத்தையே எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!

அல்லாஹ்விடம் பிரச்சனையைப் போட்டுவிட்டு அமைதியாகக் கண்மூடி, திக்ரு செய்துகோண்டிருந்த ஹஜரத்தின் காதுகளில் டாக்டரின் அந்த வார்த்தைகள் விழுந்தன!

“இது இருதய வலி இல்லே! மாரடைப்பு இல்லே! சாதாரண வாய்வு வலி! ரெண்டு நாள்ல சரியாய் போயிடும்!”

“அல்ஹம்துலில்லாஹ்!” என்று ஒரே நேரத்தில் பல குரல்கள் அந்த அறையில் ஒலித்தன!.

நன்றி: மணிச்சுடர்

இல்ம் = அறிவு ஜும்ஆ= வெள்ளிக் கிழமை சிறப்புத் தொழுகை
திக்ரு = தியானம் அல்ஹம்து லில்லாஹ் = பகழனைத்தும் அல்லாஹ்வுக்கே