Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

May 2005
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,009 முறை படிக்கப்பட்டுள்ளது!

கோழியும் கூவும்

ராஸிக் படுக்கையில் புரண்டான் – எழ மனசில்லை! இரவு முழுவுதும் தூக்கமில்லை என்றாலும் – அதன் அசதி உடலின் ஒவ்வொரு அணுவிலும் பிரதிபலித்தாலும், காலை ஐந்துமணிக்குப் பிறகு தூங்கிப் பழக்கமில்லாததால் விழித்துக் கொண்டே கிடந்தான்.

எழுந்து.. மம்மது கடைக்குச் சென்று ஒரு டீக்குடிக்கலாம்தான்.. ஆனால் அங்கே துக்க விசாரிப்பு ஆரம்பமாகி விடுமே! அவனில்லாமலே கூட இப்போது அவனைத் தான் போஸ்ட்மார்டம் செய்து கொண்டிருப்பார்கள்…! கடைசியாக பிடிபட்டு ஊர் திரும்பியவன் அவன் தானே?

மம்மது கடையில் காலையில் ‘பஜனை’க்கு கூடும் ஒவ்வொருவராக மனதில் வந்தார்கள். ஒரு காலத்தில் பர்மாவில் ஓகோவென்று வாழந்த உமர்கான் காக்கா! உலகப் போருக்குப் பிறகு இங்கேயே தங்கி, பூர்விகச் சொத்தை கரைத்தே வாழ்க்கையை ஓட்டியவர். பிடிப்பது பீடி என்றாலும் பென்சன் சிகரெட் என்று பீற்றுபவர் – இப்போது குடிக்கும் டீக்கு மம்மதிடம் எழுதிவைக்கச் சொல்லும் நிலையில்! “காலையில், சாவுக்கிராக்கி” என்று மம்மதின் மனசால் திட்டு வாங்குபவர்!

எருமைக்கண்டு இல்யாஸு! ஊர் எடுபிடி, வெளிநாட்டிலிருந்து ஊர் வந்திருக்கிற  ‘குடிமகன்’களுக்கெல்லாம் இந்தியக் குடிவகைகைளை அறிமுகப்படுத்தி வைத்து, அவர்கள் தயவிலேயே கறியலும், பொறியலும், கள்ளும் சாராயமும் பர்ப்பவர். “இந்தப் பையன்களோட அத்தாமாருக்கும் நான்தான் கள்ளு வாங்கிக் கொடுத்தேன். இவனகளோட புள்ளைகளுக்கும் வாங்கி கொடுத்துட்டுத்தாண்டா மண்டையைப் போடுவேன்” என்று கொள்கை முழக்கமிடும் சமுதாய நரகல்!

கடைக்கு வெளியே கிடக்கும் பெஞ்சில், கடைதிறக்குமுன்பே வந்து உட்கார்ந்து ஒரு பீடியைப் பற்றவைத்துக் கொண்டு இருமி இருமி அந்தப் பகுதியையே எழுப்பும் இபுறாஹீம்! மலேசியா சென்று, எங்கும் நிலைக்காமல், ஏதோ சபுர்வழி சென்று ஏழு முறை பெயர் பண்ணிவிட்டு இருமல் வியாதியோடு நிரந்தரமாக இறக்குமதியாகிவிட்டவர்! “என்னடா பெரிய பொழப்பு மலேசியாவுல? மம்மதப் பாருங்கடா! காலைல 5 லிட்டர் பாலுக்கு டீ அடிக்கிறான்.  ரெண்டு மூட்டை மாவுக்கு ரொட்டி போடுறான். காசக்கணக்குப் பண்ணிப் பாருங்கடா” என்று சொல்லி மம்மதின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்பவர். “இராப்பகலா நெருப்புல வெந்து – ஊர்பயலுகளுக்கெல்லாம் கடன் கொடுத்து விட்டு – பொண்டாட்டி நகையை அடமானத்துல போட்டு சரக்குவாங்கி அல்லாடிக்கிட்டிருக்கிற எம்பாடு அல்லாவுக்குத் தெரியும்டா பாவிங்களா” என்ற மம்மதின் அங்கலாய்ப்பைப் பெற்றுக் கொள்பவர்.

இப்படி ஒரு கூட்டம்! விடிவதற்கு முன்பே ஊர்உலகப் பிரச்சனைகளைக் கடித்துக் குதறவிடும் பெருமக்கள்! இந்தக் கும்பல் தன்னைப் பற்றிப் பேசுவதை தன் காதாலேயே கேட்கவேண்டாம் என்பதற்காகவே டீ குடிக்கும் ஆசையை – தேவையை ஒத்தி போட்டான் ராஸிக்!

பிழைப்புத் தேடி, நகை நட்டை அடகு போட்டு, சண்டக்கான் போன பலரும் பெரும் வசதியோடு இருப்பதைப் பார்த்து,  எறும்புச் சாரியாய் புறப்பட்டுப் போனவர்களில் அங்கேயே காலூன்ற முடிந்தவர்கள் என்னவோ சிலர்தான். பிடிபட்டு ஊர் திரும்பியவர்கள் அதிகம்! இருந்தும் ஆசை யாரை விட்டது?

குடும்பத்ின் கஷ்டத்தைப் போக்க நினைத்து  – அந்தக் குடும்பத்தின் மிச்ச மீதிச் சொத்தையும் சேதப்படுத்தி, பணம் தோது பண்ணி, தொந்தரவு பொறுக்க முடியாததால் “நீ வா ராஜா, நான் ஏற்பாடு செஞ்சு தாரேன்” என்று உறவுக்காரர்கள் ஒரு பேச்சுக்குச் சொன்னதை நம்பி, அவர்கள் முன் போய் நின்று, “என்னப்பா இப்படி திடீரென்று வந்து நிக்கறே! இப்ப இங்க ரொம்ப ொடுபிடியாயிருக்கு!  இந்தா! இதைவச்சுக்க வேறு எங்கேயாவது ஒதுக்குப்புறமான எடத்துல போயி பதுங்கிக்க” என்று பத்து வெள்ளியைக் கொடுத்து அவர்கள் உதறிவிட, பல நூறுபடிகள் இறகி, ஓரு வழியாக வயிற்றுச் சாப்பாட்டுக்கு ஒரு இடத்தை அண்டி – எந்த நேரமும் பிடிபடலாம் என்ற பீதியிலல் அன்றாடம் செத்துப் பிழைக்கும் அந்த ரகத்தினரோடு ராஸிக்கும் சேர்ந்தே தனிக்கதை!

ப்ளஸடூ முடித்துவிட்டு கல்லூரி செல்ல அவன் முயற்சி செய்து கொண்டிருந்த போது ‘காசிம் எலக்ட்ரிகல்’ காசிம் பாய் வந்து நின்றார். அத்தாவுக்கு நெருங்கிய நண்பர்! அவரது ஆசோசனை எதுவும் இல்லாமல் அத்தாவால் இயங்கவே முடியாது. அவர் வெள்ளையைக் கறுப்பென்றால் அவருக்கு அதுதான் கறுப்பு – அதை அடுத்தவர்களும் கூட நம்பவேண்டும் என்று சொல்பவர்!

“என்ன கமாலு! ராஸிக்கை காலேஜுக்கு அனுப்பப் போறதாகக் கேள்விப்பட்டேனே?” என்றார். ராஸிக்கின் அத்தா!

“அவன் அப்படித்தான் சொல்லிக்கிட்டிருக்கான் – நான் உங்ககிட்டக் கேட்காம அனுப்பிடுவேனா?’ என்றார்.

“அதுதானே பார்த்தேன்! காலேஜ்ல படிச்சவனெல்லாம் என்னத்தைக் கிழிச்சுப்புட்டான்? பேசாம அவன  எங்க கடைக்கு அனுப்பிடு – தொழில் கத்துக்கிட்ட மாதிரியும் இருக்கும் – மாசாமாசம் சம்பளமும் கிடைக்கும்” என்றார்.

“ராஸிக் அதிர்ந்தான்! அவரை அவனுக்கு எப்போதுமே பிடிக்காது. அந்தப் பகுதியில் அவருக்கு நல்ல பெயரும் இல்லை! தன் அத்தா காசிம்பாய் சொல்வதை எந்த வகையிலும் தட்டமாட்டார் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். அப்படியேதான் நடந்தது. டவுனில் இருந்த காசிம்பாயின் கடையில் அவனை சேல்ஸ் மேனாகச் சேர்த்துவிட்டு விட்டார். ராஸீக்கின் கெஞசுல் ஒரு பயனுமளிக்கவில்லை. ஒரு வருஷமா? ரெண்டுவருஷமா? ஏழுவருஷம்! முந்நூறு ரூபாய் சம்பளத்துக்கு! “பணத்தப் பாக்காதே கமாலு புள்ள பிஸினஸ் கத்துக்கறானே, அதைப் பாரு! பைய வெளயில் சுத்துனா கொட்டுப் போயிடுவானே – அப்ப எவ்வளவு நல்ல பையனா, பாதுகாப்ப எங்கிட்ட இருக்கான். நாளைக்கு லட்சம் லட்சமா, மொதலாளியாப்போயி சம்மாதிச்சுத் தருவானே, அதை நெனைச்சுப் பாரு” என்று ஆசைவார்த்தைகளால் அடக்கிப் போட்டு – ஐந்நூறும், ஆயிரமும் அட்வான்ஸ் கொடுத்து கொத்தடிமையாக்கிக் கொண்டார்.

அனுபவம் கிடைக்கத்தான் செய்தது. எப்படி தரக்குறைவான சரக்குகளை வாங்கி, வாயினிக்கப்பேசி, வாடிக்கையாளர்கள் தலையில் கட்டுவதென்ற அனுபவம் – தில்லு முல்லு! திருகுதாளம்! ஏனென்றால் காசிம்பாயின் வியாபார தர்மமே அதுதான்.

ராஸிக் மனதுக்குள் அழுதான் – கதவு திறப்பதறக்காக் காத்திருக்கும் கூண்டுப் பறைவைபோல சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்!

பேரையூர் பீர் முகம்மது அந்தக் கடையின் ஒரு வாடிக்கையாளர்! ராஸிக்கின் மீது அவருக்கு ஒரு கண். சண்டக்கானில் தன் தொழில்களுக்கு மேற்பார்வை செய்ய அவனைப் போல ஒரு ஆள் கிடைத்தால் தேவலாம் என்று எண்ணியிருந்தார். ராஸிக்கிடமும் கேட்டார். பாஸ்போர்ட் எடுத்துக் கொண்டு வந்துவிட்டால், வேலை தருவதாக  உத்தரவாதம் கொடுத்தார்.

வீட்டில் அதைச் சொன்னபோது கமால் குதி குதியென்று குதித்தார். ராஸிக்கின் அம்மா உதவிக்கு வந்தாள். ஒரு வகையாக அத்தாவைச் சம்மதிக்க வைத்து விட்டு முதலாளி முன் போய் நின்றான் ராஸிக்.

ஒரு வினாடி வியப்பின் ரேகை! எதிர்பாராத முகபாவம்! அடுத்த வினாடி முகமெல்லாம் மலர “அப்பிடியா ராஸிக்கு?  ரொம்ப சந்தோஷம். எங்கிட்டே வேல பாத்த புள்ள வாழ்க்கையில் முன்னேறுனா அது எனக்குத் தானே பெருமை? போ! போ! நல்லாயிரு” என்று அகமகிழ வாழ்த்தினார். ராஸிக் உண்மையில் அவரிமிருந்து அப்படியொரு அனுமதியை  – வாழத்தை எதிர்பார்க்கவேயில்லை.

புறப்படும்போது கமால் சொன்னார். “பாத்தியாடா சாகிம்பாயோட பெருந்தன்மைய? யார் யார் பேச்சையோ கேட்டுக்கிட்டு என்னென்னமோ பேசினியே? அவரைப் புரிஞ்சுக்க உனக்கு வயசு பத்தாதுடா!” என்றார். பதில் சொல்ல வார்த்தையில்லாமல் நின்றான் ராஸிக்.

சண்டக்கான் வந்த ராஸிக் சுதந்திரக் காற்றைச் சுவாசித்தான். பீர் முகம்மது நேர் எதிரானவராக இருந்தார். பணியாட்களிடம் பரிவும் அன்பும் கொண்டவர். அவனுக்கு மிக எளிதான வேலை! கைநிறையச் சம்பளம். அது இந்தியப் பணமாக கமால் கையேறியபோது நம்ப முடியாத அதிர்ச்சி! மகிழ்ச்சி!

ஆனால் … ஆனால் இரண்டு மாதங்கள் கடநத பிறகு ஒருநாள்! எமிக்ரேஷன் போலீஸ் கடைவாசலில் ” யாரு இங்கே ராஸிக்?” என்று விசாரித்துக் கொண்டு! சட்டவிரோதமாகத் தங்கியிருந்த அவன் பிடிபட, அவனை வைத்திருந்ததற்காக பீர்முகம்மதுக்கும் பெரிய தொகை அபராதம்! சிறையில் போலீஸ் சித்ரவதையில் வீங்கிப் போன மூக்கையும், தாடையையும் தடவிக்கொண்டு, ராஸிக், இதோ, இப்போது கட்டிலில்!

பீர் முகம்மது அவனை கோர்ட்டிலிருந்து மீட்டு ஊருக்கு அனுப்பும் போது அவன் அழுதே விட்டான்! “எனக்கு உதவப்போயி உங்களுக்கு நஷ்டம். கெட்ட பேரு!” என்றான் தழுதழுத்த குரலில்!

“அப்பத்திப் பரவாயிலலே ராஸிக்கு! ஆனா உன்னைப் பத்தி இவ்வளவு தெளிவா எந்த ராஸகல் மொட்டை மனுப்போட்டான் தெரியலியே?” என்றார்.

யார்… ? யார் மனுப்போட்டிருக்க முடியும்? அத்தாவுக்கு எழுதிய கடிதத்தில் அவன் முகவரியை யாருக்கும் கொடுக்கக் கூடாதென்று சொல்லியிருந்தான் எப்படி…? எப்படி இது நடந்தது.

ஊருக்கு வந்தவுடன் அத்தாவிடம் முதலில் அதைத் தான் விசாரித்தான்! ‘யாருகிட்டேயும் என்னோட அட்ரஸைக் காட்டுனீங்களா?’

“நான் காட்லியே!”

“நெசமாச் சொல்லுங்க காசிம் பாய்கிட்ட காட்டல?”

“அவருகிட்ட காட்டாம இருக்க முடியுமா? அவரு யாரு அன்னியனா? உன்னோட குருநாதர்டா அவரு! எவ்வளவு துஆக் கேட்டு அவர் உன்ன அனுப்பிச்சாரு தெரியுமா,?”

ஆமா! பொல்லாத குருநாதர்! சிரிச்சுச் சிரிச்சே நம்ம கழுத்த அறுத்துட்டாருத்தா அவரு!” என்றான் கோபத்தோடு.

கமால் திரும்பக் கத்தினார். “அவர்மேல் பழிபோடாதடா டவா – உன்வாயி அழுகிப்போகும்”

– அந்த அப்பாவி அத்தாவை அவன் பரிதாமாகப் பார்த்தான்! அதைவிடப் பெரிய சோதனை – ரோதனை அடுத்து நிகழ்ந்தது.

அடுத்த நாளே காசிம்பாய் கடைக்குப் போகவேண்டும் என்றார். இப்போது ஐநூறு ரூபாய் சம்பளமாம் “காசக்கறியாக்கினது போதும்த்தா. இனிமே வெளிநாடுண்ட பேச்சே கெடையாது. வர்ர வருமானம் வந்துட்டுப் போகுது! காசிம்பாய் என்ன சொல்றாரோ அதச் செய்தாப்போதும்” என்று படுகறாராய்ச் சொல்லிவிட்டார். அந்த வெகுளி அத்தா. அவராக காசிம்பாய் பற்றிப் புரியும்வரை தன்னால் வேறு எதுவும் செய்ய முடியாதென்பதைப் புரிந்துகொண்டான் ராஸிக். மறுப்புச் சொல்லவில்லை.

குளித்துவிட்டுக் காத்திருந்தபோது காசிம்பாயின் வேன் வீட்டு வாசலில் வந்து நின்றது. கமாலையும், ராஸிக்கையும் ஏற்றிக்கொண்டு விரைந்தது!

கடைவாசலுக்கே வந்து வரவேற்றார் காசிம்பாய்! “வா ராஸிக்கு! வா நீ இல்லாம கடையே வெறிச்சுப் போச்சு! வர்ர கஸ்டமருங்கல்லாம் ராஸீக் எங்கே ராஸீக் எங்கேன்னு பிச்சுத் தின்னுட்டாங்க போ! ராஸிக் வெளி நாட்ல பெரிய சம்பாத்தியம் சம்பாதிக்கப் போயிட்டானு அவங்ககிட்ட நான் எவ்வளவு மகிழ்ச்சியா சொல்லிக்கிட்டிருந்தேன் தெரியுமா? பரவாயில்லே! அந்த வேலை போனா என்ன? இது உங்கடை! போ போ போய் வேலையைப்பாரு” என்றார்.

கமால், “எவ்வளவு பெரிய மனசு பார்த்தியாடா? வேலையை திடீர்னு விட்டு விடடுப் போனவன் மத்தெந்த முதலாளியாச்சும் இப்படி வரவேத்து வேலை தருவானாடா? போ! போய் விசுவாசமா நடந்துக்க” என்ற அறிவுரையுடன அனுப்பினார்.

ராஸிக் பதில் சொல்லாமல் கடைக்குள் சென்றான்.

“அப்ப நான் வாரேன் காசிம்பாய்! ராஸிக் உங்க பிள்ளை” என்று சொல்லிவிட்டு கமால் நகர்ந்தார்.

“மருவா என்ன? ராஸிக் எம்புள்ளயில்லாம வேறென்ன? நீ பாட்டுக்கு போ கமாலு!” என்று சொல்லி அவரை அனுப்பி விட்டு உள்ளே வந்தார் காசிம்பாய்!

புதிதாக வந்திருந்த சாண்டலியார் ஃபிட்டிங்குகளைச் சரிபார்த்து துடைத்து வைத்துக் கொண்டிருந்தான் ராஸிக்!

அவனருகில் நின்ற வேறொரு பணியாளை வேறு வேலை ஏவி அங்கிருந்து அனுப்பினார்! ராஸிக்கின் அருகில் வந்தார். அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னார். “வெளிநாட்ல போயி சம்பாதிக்கவா போனிய? டேய்! சேவல் கூவித்தான்டா பொழுது விடியும்! கோழி, முக்கி முக்கிக் கத்தினாலும் ஒன்னும் பிரயோஜுனப்படாதுடா” என்றார். ராஸிக் அவர் முகத்தை அழுத்தமாகப் பார்த்தான். கொக்கரிப்புச் சிரிப்பும் ஏகத்தாளமான முகபாவமும்! அவனுள் சாந்தமாய் உறங்கிக் கொண்டிருந்த சாது இப்போது மிரண்டான்.

கையில் வைத்திருந்த பெரிய சாண்டலியர் ஃபிட்டிங்கையும், அவரது முகததையு மாறி மாறிப் பார்த்தான்.

“சரி சரி வேலையைக் கவனி” என்று சொல்லிவிட்டு காசிம் நகர்ந்தார்.

பத்தடி கூடப் போயிருக்க மாட்டார்! “படார்” என்ற ஓசை! கண்ணடிச் சிதறலில் கடையே நடுநடுங்கியது! ஒரே களேபரம்!

சிப்பந்திகள் எல்லோரும் ஓடிவந்தார்கள்! ராஸிக் கையில் வைத்திருந்த ரெண்டாயிரம் ரூபாய் பெறுமானமுள்ள சாண்டலியர் ஃபிட்டிங் தூள் தூளாய் மொசைக் தரையில்!

“கைதவறி விழுந்திடுச்சு மாமு!” – பணிவோடு – மிக மிகப் பணிவோடு சொன்னான் ராஸிக்! கனலாய்க் கனன்ற முகத்தோடு அவனை நெருங்கிய காசிமை அந்தப் பணிவு தற்காலிதமாக அணைத்தது! சிப்பந்திகள் குழப்பத்தோடு நிற்பதைப் பார்த்து – கோபம் அவர்கள் மீது பாய்ந்தது! “என்னடா வேடிக்கை பார்த்துக்கிட்டு நிககறீங்க – முட்டாப்பசங்களா! சுத்தம் பண்ணுங்கடா!” என்று கத்தினார்.

அங்கேயே நின்றார்! பணியாட்கள் சுத்தம் பண்ணி விட்டு நகர்ந்த பின் அவனருகில் சென்றார்.

ராஸிக்கின் முகம் இப்போது தீர்க்கமானது! அவருக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னான்! ” சில சமயங்கல்ல கோழியும் கூவும் மாமு! அதுலயும் இந்தக் கோழி இனி அடிக்கடி கூவும்! அதக் கூவாம நிறுத்தறதுக்கு என்ன வழின்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்னு நெனக்கிறேன்” என்றான்!

இருண்டிருந்த சாகிம்பாயின் முகத்தில் இப்போது மிரட்சி! ஏனோ, அவர் கண்ணாடிப் பெட்டிகளில் அடுக்கடுக்காய் வைக்கப்பட்டிருந்த காஸ்ட்லியான கண்ணாடி ஃபிட்டிங்ககளைப் பார்த்துக் கொண்டே கல்லாவை நோக்கி நகர்ந்தார்!

நன்றி: மணிச்சுடர்