Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

June 2005
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 3,213 முறை படிக்கப்பட்டுள்ளது!

அர்த்தமுள்ள பெருநாள்

அர்த்தமுள்ள பெருநாள்

மர்யத்தின் முகத்தில் சன்னமாய் ஒரு சோகம் படர்ந்திருந்ததை மஹ்மூதால் புரிந்துகொள்ள முடிந்திருந்தது. ஆனால் அதன் காரணத்தைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை – பழைய கலகலப்பில்லை. ஏதோ பெயருக்குச் சிரிக்கிறாள்.

பத்தாண்டு தாம்பத்தியத்தில் என்றுமே ஏற்பட்டிராத மன இடைவெளி! பரஸ்பரம் மனம் திறந்து கொட்டித் தீர்த்துவிடும் பழக்கத்தில் ஒரு மாற்றம். மூட்ம்! வெளிப்படையான விசாரிப்பிலும் கூட வெளிக்கிளம்பாத இறுக்கம். அதனால் கலக்கம்! மழுப்பலான பார்வை. ஒரு புன்னகை.

“நான் எப்போதும் போலத்தானே இருக்கேன்!” என்ற வார்த்தைகள் ‘அவள் எதையோ உள்ளத்தில் புதைத்திருக்கிறாள்’ என்ற உண்மையைத்தான் உறுதிப்படுத்துகின்றன.

வழக்கமாக பத்தாம் நோன்பிலேயே பெருநாள் துணிமணிகளுக்காக நச்சரிக்க ஆரம்பித்துவிடும் அவள், அதைப் பற்றியே இன்னும் பேச்செடுக்கக் காணோம்! அவனுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

தனக்கு இந்த முறை ‘ரெடிமேட் ஸஃபாரி செட்’ தான் வேண்டும் என்று பல மாதங்களுக்கு முன்பே அச்சாரம் போட்டிருந்த காசிம் – அவர்களது ஒரே செல்வன் கூட அம்மாவின் உணர்வுகளை புரிந்துகொண்டு விட்டதுபோல அதைப்பற்றிய பேச்சையே எடுக்காதிருந்தது அவனை மேலும் ஆச்சரியப்படுத்தியது? என்ன வந்துவிட்டது இவர்களுக்கு.

‘பெருநாள் நெருங்கிக்கிட்டே வருது. இப்ப துணியெடுத்துக் கொடுத்தாத்தானே டெய்லர் பிகு பண்ணிக்காமே தச்சுக் கொடுப்பான். இன்னிக்கு சீக்கிரமேகடையை அடைச்சிட்டு வந்துடறேன் மரியம், தயாரா இரு” என்று சொன்னான் மஹ்மூது.

“இன்னும் பதினைஞ்சு நாள் இருக்கேங்க. இப்ப என்ன அவசரம்? ரெண்டு நாள் கழிச்சுப் போவோமே?” என்ற நழுவல். அவன் குழம்ப ஆரம்பித்தான். எரிச்சலும் கூட. இந்தக் காசிம் பயல் – வாண்டு, என்ன சீரியஸாகப் பேசுகிறான்? “இந்தியா ரெடிமேட்ஸ் வாசல்ல ஏகபட்ட சபாரி சூட்டுகளை டிஸ்பிளே பண்ணியிருக்காங்க. இன்னிக்குப்போயி உனக்குப் பிடிச்ச கலர்ல எடுத்திடுவோம். என்ன?” என்றான்,

“இப்ப என்ன அவசரம், வாப்பா?” என்று பெரிய மனுஷன்போல் பேசுகிறான்.

மஹ்மூது கடையின் கல்லாவில் உட்கார்ந்திருந்தானே தவிர கவனம் முழுக்க மரியத்தின் மெளன மூட்டத்திலேயே இருந்தது.

அது ஒரு சிறிய ஃபேன்ஸி ஸ்டோர். கிரா மத்திலிருந்த பூர்விக வீட்டை வி்ற்றுவிட்டு அந்த டவுனில் ஒரு பெரிய தொகையை பகடியாகக் கொடுத்து அந்தச் சிறிய கடையை வைப்பதற்குத்தான் முடிந்தது மஹ்மூதால். அவனது குடும்பத்துக்குப் போதுமான வருமானததை அந்தக் கடை மூலம் தந்து கொண்டிருந்தான் அல்லாஹ்.

பிக்கல் பிடுங்கல் இல்லாத அமைதியான வாழ்க்கை. குடியிருந்த போர்ஷனைக் கூட பத்தாயிரத்துக்கு ஒத்திக்குப் பிடித்திருந்தான். இன்னும் ஓரிரு வருஷங்களுக்குள் சொந்தத்துக்குக் கிரயப்படுத்திக் கொள்ளவும் முடியுமென்ற நம்பிக்கை வந்திருந்தது.

மரியம் மூன்று பெண்களைக் கொண்ட ஒரு பெரிய ஆனால் வறிய குடும்பத்தில் இரண்டாவது பெண். அவள் கரையேற அவளது தந்தையின் ஆஸ்தியைவிட மஹ்மூதின் பெருந்தன்மையும், மதச்சட்டப்படி மஹர் கொடுத்து கல்யாணம் பண்ண வேண்டுமென்ற மன வளமும்தான் காரணமாக இருந்தன,  என்பது ஊரறிந்த விஷயம். சரளமான அந்த வாழ்க்கையோட்டத்தில், என்ன நெருடல்? இறுக்கத்திற்கு என்ன பின்னணி?

மஹ்மூது மண்டையைக் குடைந்துகொண்டான், இந்தப் பத்தாண்டு காலத்தில் அவன் அவளைக் கடிந்து கொண்டதுகூடக் கிடையாது. அண்டை வீட்டுத் தொந்தரவுகள்கூட மரியத்துக்கு இல்லை. கண்ணுக்கு கண்ணான கணவனிடமே சொல்லமடீயாத அளவுக்கு ஏனிந்த கலக்கம். தயக்கம்?

இனியும் பொறுத்துக் கொள்ள அவன் தயாராக இல்லை. இன்று உறுதியாக ஒரு முடிவெடுத்தான்.

“இன்னிக்கு மத்தியானமே கடையை அடைச்சிட்டு வந்துடறேன் மரியம். மூனு மணிக்குப் போனா நோன்பு திறக்கிறதுக்கு வீட்டுக்கு வந்துடலாம்”. என்றான் உறுதியான தொனியில்.

ஏதோ பதில் சொல்லவாயெடுத்த மரியம், கணவனின் கண்டிப்பான வார்த்தைகளின் கனத்தைப் புரிந்துகொண்டு “சரி” என்றாள். அவளது முகம் மேலும் இறுக்கமானதை மஹ்மூதால் புரிந்துகொள்ள முடிந்தது.

காசிமைப் பள்ளியிலிருந்து அழைத்துககொண்டு சரியாக மூன்று மணிக்கு வந்துவிட்டான். கடைகளில் “ஜே ஜே என்று கூட்டம். கடைகளின் கல்லவில் உட்கார்ந்தவர்களின் முகங்களிலெல்லாம் களிப்பு. கம்பீரம். கடைச்சிப்பந்திகள் துருதுருவென்றிருந்தார்கள். ரிக்ஷாவிலிருந்து இறங்கியவுடன் ஸவுளிக்கடைக்குள் நுழைந்தனர்.

இரண்டு பெருநாள்களுக்கும் என்ன பாடுபட்டாவது மரியத்துக்கு பட்டு எடுத்துவிடுவான் மஹ்மூது. நேராக பட்டுத்துணிகள் விற்பனைக் கொளண்டருக்குச் சென்றனர்.

“என்னங்க” எனறாள் மரியம். மஹ்மூது திரும்பினான். “இந்த வருஷமும் பட்டு வாங்த்தான் வேணுமா? சாதாரண சேலை போதுங்க!” என்றாள். முகம் மாறிப் போனது மஹ்மூதுக்கு.

“ஏய்! உனக்கு என்ன ஆச்சு? நீ பாட்டுக்கு சும்மா இரு. எப்போதும் போல பட்டுத்தான் எடுக்கணும்” என்றான் கடுகடுப்புடன், ஆயிரத்து இருநூறு ரூபாயில் ஒரு பட்டை செலக்ட் செய்தான். மரியத்தின் ஒப்புதலைக்கூடப் பெறவில்லை அவன்.

அடுத்து ரெடிமேட் கெளண்டருக்கு நகர்ந்தனர். வழக்கமாக கண்களை அங்குமிங்கும் அலைபாய விட்டு ‘அது வேண்டும் இது வேண்டும்’ என்று துளைத்தெடுக்கும் காசிம் கொஞ்சமும் சுரத்தில்லாமல் நின்றுகொண்டிருந்தான். புதிய புதிய சபாரி செட் ரகங்கள் அவர்கள் முன் குவிக்கப்பட்டன. கொள்ளை அழகு. அவற்றைப் பார்த்துங் கூட காசிமின் முகத்தில் மலர்ச்சியில்லை.

மஹ்மூதுதான் ஒரு செட்டை செலக்ட் செய்தான். “இது பிடிச்சிருக்கா காசிம். உனக்கு ரொம்ப மேச்சாயிருக்கும். ஏன்?” என்றான்.

“நல்லாத்தான் இருக்கு, ஆனா நாம வேற ஒன்னு எடுப்போமா?” என்றான்.

“ஏன் கண்ணு?” என்றான் வியப்போடு.

“அது முந்நூறு ரூபாய்னு போட்டிருக்கே?” – காசிம்.

“அதைப்பத்தி உனக்கென்ன? உனக்குப் பிடிச்சத எடுத்துக்க வேண்டியதுதானே?”

“முந்நூறு ரூபாய்க்கு மூணு சாதாரண சபாரி வாங்கிடலாமே, வாப்பா?” என்றான் காசிம்.

“உனக்கு மூணு வேணுண்டா எங்கிட்ட கேக்க வேண்டியதுதானே? விலையைப்பத்தின கவலை உனக்கு ஏன்?” என்றான் மஹ்மூது.

“இல்ல வாப்பா.. நூறு ரூபாய் விலையில மூணு சபாரி எடுத்து, ஒன்ன எனக்கு வச்சுக்கிட்டு, மத்த ரெண்டையும் ஊருல இருக்கிற ரபீக் தம்பிக்கும், ஜலால் தம்பிக்கும் அனுப்பலாம்ல?” என்றான் காசிம்.

ஒரு நிமிஷம் ஸ்தம்பித்துப் போனான் மஹ்மூது.

ரபீக்கும் ஜலாலும் அவனது மைத்துனி – மரியத்தின் அக்கா பாத்திமாவின் பையன்கள். பத்து மாதங்களுக்கு முன்புதான் அவள் கணவன் ஒரு விபத்தில் இறந்துபோயிருந்தான். அன்றாடத் தேவைகளுக்கு மட்டுமே சம்பாதித்துப் போட்டு, எதிர்கால செலவுகளுக்கு லாட்டரி டிக்கெட் மீதே நம்பிக்கை வைத்துக் கிடந்து மாண்டுபோனவன் அவன். புதிர் அவிழ்ந்து போனது மாதிரி இருந்தது மஹ்மூதுக்கு. மூட்ட நாடகத்தின் முழுப் பரிமானமும் தெரிந்து போனது.

அக்காவின் அவல நிலைக்காக மரியம் மருகி நிற்கிறாள்.

காசிமுக்கு பதில் சொல்ல மறந்தவனாய் மரியத்தைப் பார்த்தான் மஹ்மூது. அவள் உடைந்துவிடும் நிலையிலிருப்பதை அவனால் யூகிக்க முடிந்தது. அருகில் சென்று அவள் கரத்தைப் பற்றினான்.

“எங்கிட்டே சொல்லியிருக்கக் கூடாதா மரியம்?” என்றான்.

“அப்படியில்லீங்க நம்ம வருமானம் நமக்குத்தான் சரியாயிருக்கு, எப்படிச் சொல்லி சங்கடப்படுததுறதுன்னு தான் மலைச்சேன். என்ன மன்னிச்சிடங்க” என்றாள்.

“நல்லவேளை! நம் பையன் மூலமா அல்லா ஒரு தார்மிகக் கடமையிலிருந்து தவறுவதைத் தவிர்க்க வச்சான்” என்றாவன் காசிமின் பக்கம் திரும்பினான்.

பெற்றோரின் முகக் குறிப்பிலும் பேச்சிலும் காரியத்தைச் சாதித்துவிட்டோம் என்ற திருப்தி மிளிர கண்கலங்கி நின்று கொண்டிருந்தது அந்த பிஞ்சு.

பத்தோடு பதினொன்றாகப் போயிருக்கும் அந்த ஈகைப் பெருநாளை, அர்த்தமுள்ளதாக்கி வைத்த தன் அன்பு மகனை அணைத்து உச்சிமோந்தான் மஹ்மூது!

நன்றி: தினமணி, நர்கீஸ்