- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

உடையில் ஒழுக்கம்

இன்று:

பளிங்குபோல் மின்னும்
பளபளப்பு சன்மைக்கா
ஆளுயரக் கண்ணாடி
அதைச்சுற்றிப் பூவேலை
பக்குவமாய் இழைத்த
பகட்டான டிரெஸ்ஸிங் டேபிள்
மேஜையின் மேலே
மேனாட்டு சென்ட்வகைகள்
மேனி எழில்கூட்டும்
மேக்கப் சாதனங்கள்
பாரின் ஸார்ஜெட்டில்
பளபளத்தாள் பாக்கிரா!
ஏற்கனவே தங்கநிறம்
எழுமிச்சை தோற்றுவிடும்!
இருந்தாலும்…..,
பேர் அன்ட் லவ்லி என்று
பேன் ஸி கிரீம் வகைகள்!
பான்ட்ஸ் பேஸ்பவுடர்
பாரின் லிப்ஸ்டிக்கு
கைக்குப் பத்தாக
கனத்த வலையல்கள்
கழுத்துக் கொள்ளளவும்
கச்சிதமாய்ச் சங்கிலிகள்
எடுத்து அணிந்தாள் – தன்
எழில்கண்டு பூரித்தாள்
அறைக்குள் நுழைந்த
அவள் அம்மா ஆயிஷா
“எதுக்கும்மா, இவ்வளவு?
ஏற்பாடு? நல்லதில்லே!
வீட்டு ஆம்பிள்ளைங்க
வெளிநாட்டில் இருக்கயிலே
அலங்காரம் கூடாது!
அதுநம்ம வழக்கமில்லே!”
சொல்லி முடிக்கவில்லை
சோகம் மகள் முகத்தில்!
“அம்மாடி!அம்மாடி!
அம்மாவா, நீஎனக்கு?
வந்து வாச்சியே
வாயாடி நாத்துனாவா!
ஒவ்வொருத்தி தம்புள்ள
உடுத்தி கழிக்கனும்னு
ஓயாம துஆகேட்டு
ஓஞ்சிங்கே போறாக!
என்னயக் கரிச்சுக்கொட்ட
இங்கேயே ஒருசனியன்!’
ஒப்பாரி வைத்தாள்
ஓடிவந்தார் அவள் அத்தா!
“ஏண்டி, அறிவிருக்கா?
என்னடி சொன்னே நீ?
சின்னஞ்சிறிசுகள
சீண்டுறத விடுவேண்டி
இந்த வயசுலயும்
அனுபவிக்க உடாட்டா
எப்பத்தான் செய்யிறது?
இழுத்து மூடு உன்வாயை!
அவர்போட்ட சத்தத்தில்
அடங்கினாள் ஆயிஷா!
அதுகண்ட பாக்கிரா
அகமகிழ்ந்து துள்ளினாள்!
“அத்தான்டா அத்தாதான்!
அவருக்கிணை அவரேதான்”
அலங்காரப் பையெடுத்து
அன்ன நடை நடந்து
அடுத்த தெரு விசேசத்துக்கு
அப்போதே புறப்பட்டாள்!
அழகுத் தேரொன்று
அசைந்து நகருவதை
அத்தெருவின் கண்களெல்லாம்
ஆசையுடன் வெறித்தனவே!

அன்று:
நாயகத்திருமேனி(ஸல்)
நடுவில் வீற்றிருக்க
நாயகத் தோழர்கள்
நயமுடன் சூழ்ந்திருந்தார்
வாழ்க்கை நடைமுறையில்
வரும் சந்தே கம்களைய
வள்ளள் பெருமானார்
விளக்கம் தந்தார்கள்
அப்போதோர் மூதாட்டி
அவ்வழியே சென்றார்கள்
அண்ணலெம் பெருமானின்
அவ்வீட்டுள் நுழைந்தார்கள்!
யாரவர் என்பதனை
நாயகமும் அறியவில்லை
யாறென்று விசாரிக்க
எண்ணமும் கொண்டார்கள்
வீட்டுக்குள் நுழைந்தார்கள்
வெளியாட்கள் யாருமில்லை!
“அம்மா பாத்திமா!
அருமைச் செல்வமே
நம்வீட்டுள் சற்றுமுன்
நுழைந்த அம் மூதாட்டி
யாரம்மா? என்றார்கள்
நபிமகளார் சிரித்தார்கள்!
“நாந்தான் வாப்பா!
நானன்றி யாருமல்ல!
வெட்ட வெளியில்
வீதியில் நடக்கயிலே
வீணாக அழகை
விற்பது தவறன்றோ?
ஆகையினால் நானும்
அழகை மறைத்துவிட்டு
மூதாட்டி போல
வேஷமிட்டேன்” என்றார்கள்!
அந்த பதிலில்
அகமகிழ்ந்த நபியவர்கள்
“அம்மா செல்வமே
அறிவின் பிரகாசமே
அகிலத்துப் பெண்டிற்கு
அழகிய முன்மாதிரி நீ”
என்றார்கள்; நெகிழ்ந்தார்கள்
என்னவொரு காட்சி இது!
அந்த பாத்திமாவும்..
இந்த பாக்கிராவும்…
சொந்த பந்தம்தான்..
சோதர முஸ்லிம்கள்தான்!
என்ன செய்வது?
சொல்லுங்கள் …..
என்ன செய்வது?