- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

பணியாளின் மேல் பரிவு

இன்று அன்று
முன்னறையின் உள்ளே
முஹ்ஷின் பைல் பார்த்தான்
மும்தாஜ் அவன் மனைவி
மும்முரமாய்ப் படம் பார்த்தாள்!
கண்ணைக் குளமாக்கும்
காட்சி அது! மும்தாஜும்
கலங்கினாள்; காட்சியிலே
கச்சிதமாய் ஒன்றிவிட்டாள்!
அந்த நேரத்தில்
அடுப்பங்கறை உள்ளிருந்து
வந்ததொரு வெடிச்சத்தம்
வாசலுக்கே கேட்டிருக்கும்!
முஹ்ஷின் வெளிவந்தான்;
மும்தாஜும் ஸ்தம்பித்தாள்!
என்ன நடந்ததென்று
இருவருக்கும் புரியவில்லை!
கொஞ்ச நேரம்
கூர்ந்து யோசித்ததும்
நன்கு புரிந்தது
நடந்தது என்னவென்று!
ஓடினாள் மும்தாஜ்
உடன் தொடர்ந்தான் முஹ்ஷின்!
அடுப்பங்கறையினுள்ளே
ஆரிபா நின்றிருந்தாள்!
நடுங்கும் உடல்;
நனைந்துவிட்ட கண்கள்!
தரையில் கிடந்தது
தவிடுபொடி யான ஜாடி!
“ஏண்டி மூதேவி
என்னடி செஞ்சுட்டே?
கண்ணாடி ஜாடியை
கவனமாய் எடுக்காமல்
தரையிலே போட்டுட்டயே
தறுதலை மூதேவி;
இருஇரு வாரேன்”
என்று பொரிந்துவிட்டு
எடுத்தாள் துடைப்பத்தை
இளைக்கும்வரை அடித்துதைத்தாள்!
அப்பாவி ஆரிபா
அவ்வீட்டு வேலைக்காரி
ஐம்பது ரூபாய்க்கு
அடிமையாய் இவ்வாழ்க்கை!
அடித்து முடித்தவள்
அந்குநின்ற முஹ்ஷினிடம்
“இந்தா பாருங்க!
இவளெனக்கு இனிவேண்டாம்!
உங்களோட சொந்தமுண்டு
ஊரிலிருந்து கொண்டுவந்து
எங்கழுத்தை அறுத்தது
இன்னைக்கோடு போதுமுங்க!
இவகணக்கை முடிச்சுடுங்க
இன்னைக்கே தொரத்திடுங்க!”
என்று முழக்கமிட்டாள்
எரிச்சலுடன் மும்தாஜும்!
மனைவியின் கோபம்
மகத்தான தென்றறிந்த
மணவாளன் முஹ்ஷின்
மௌனமாய்ச் சம்மதித்தான்!
ஆறாய் ஓடியது
அவ்வேழையின் கண்ணீர்!
அடக்க முடியவில்லை
அங்கிருந்து நகர்ந்தாளே!
அபுபக்கர் பெற்றெடுத்த
அருமை மகள் ஆயிஷா
அன்னலெம் பெருமானின்
அழகிய மனைவியவர்!
ஒருநாள் வீட்டை
ஒடுப்பறிக்கும் போதினிலே
பானையொன்றைப் போட்டு
படாரென்று உடைத்துவிட்டு
பிலால் நின்றார்
பீதி அவர்முகத்தில்!
ஆயிஷா பார்த்தார்;
அவர்முகத்தில் கடுங்கோபம்!
“இந்த நிமிஷமே
இவரை விலக்கனும்”
என்றே முழங்கினார்
ஏகனின் தூதரிடம்!
அண்ணல் புன்னகைத்தார்
அமைதியாய் பதில் சொன்னார்!
‘ஆயிஷாவே! விலக்குவது
அவசியம் என்று சொன்னால்,
அதுபிலாலாய் இருக்காது;
ஆயிஷாவாய்த் தானிருக்கும்!
ஏனென்றால், பிலாலவர்கள்
இன்றுதான் உடைத்து நின்றார்!
ஆனால் ஆயிஷாவோ
அனேகமுறை போட்டுடைத்தார்!”
என்ற போது,
ஆயிஷா தலை குனிந்தார்!
ஏழை பிலால் முகத்தில்
எத்தனையோ விசுவாசம்!
அந்த முகம்மத்(ஸல்)ன்
அருமை உம்மத்தென்று
சொந்தம் பாராட்டி
சீராய் முழங்குகிற
இந்த முஹ்ஷினும்
இவன் மனைவி மும்தாஜும்
சொந்தக் காரர்கள்தான்
சோதர முஸ்லிம்கள்தான்!
என்ன செய்வது?
சொல்லுங்கள் …..
என்ன செய்வது?