- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

விரயம்

இன்று:

கமிட்டிக் கூட்டத்தில்
காரசார விவாதங்கள்
கனல்பறக்கும் கூச்சல்கள்
கறாரான பேச்சுக்கள்!
“இந்த ஆலிம்ஸா
இவ்வூருக்கினி வேண்டாம்;
கணக்கை முடித்துக்
கடாசுங்கள்” என்றார்கள்!
“நல்ல மனிதர்தான்
நாவோட்டம் மிக்கவர்தான்!
ஆனாலும் இங்கிதம்
அணுவளவு வேண்டாமா?
இந்த ஊரின்
இணையில்லாப் பெருமகனை
ஏகப்பட்ட சொத்துப்பத்தின்
ஏகப்பிரதி நிதியை
என்னவொரு தைரியத்தில்
இவர்வாயால் இகழ்ந்துவிட்டார்!
பொல்லாத புகாரி
பொறுப்பாரா? உதைப்பாரே!
எல்லோர்க்கும் அல்லவா
இழுக்கும் இம்சைகளும்!
அந்தப் பணக்காரர்
அவர்காசு பணத்தைவைத்து
அழகிய பங்களா
ஆர்ப்பாட்ட மாய்க்கட்டி
ஆயிர மாயிரமாய்
அலங்காரங்கள் செய்து
வீடு குடியேறும்
விழாவொன்று எடுத்தாரே!
தஞ்சாவூர்ப் பண்டாரி
தயாரித்த பிரியாணி
வட்டாரம் முழுக்க
வாசனை பரப்பியதே!
வந்தவர்கள் எல்லாம்
வாயாரப் புகழ்ந்தார்கள்!
வயிறுமுட்ட உண்டார்கள்;
வாழ்த்திவிட்டுச் சென்றார்கள்!
இந்த ஆலிம்ஸா
இவர்பாட்டுக் கிருக்காமல்
எதற்காக ஜும் ஆவில்
இளக்காரமாய்ச் சொன்னார்?
“வீண்விரயம் ஆகாதாம்!
வீண்பெருமை பாவமாம்!”
வினயம் இல்லாமல்
வீணாகப் பேசப்போய்
வம்பில் மாட்டிவிட்டார்;
வகையாகச் சிக்கிவிட்டார்!
பணக்கார புகாரியின்
பணத்தைச் சுற்றியே
ஊர்க்கார ரெல்லாம்
ஊமைகளாய் நிற்கையில்
வெளியூர்க் காரரிவர்
வேறு வழி செல்லலாமோ?
“பொதுவாக மார்க்கத்தைப்
புரியும்படி சொன்னேன்” என
வாதித்த ஆலிம்ஸாவின்
வாதம் எடுபடுமா?
வைத்தார்கள் வேட்டு! – அவர்
வேலைபோய் வீடுசென்றார்!

அன்று

நபிகள் பெருமானார்
நகர்வலம் சென்றார்கள்!
நாயகத் தோழர்களும்
நபிகளுடன் சென்றார்கள்!
ஓரிடத்தில் நின்றார்கள்;
வியப்போடு பார்த்தார்கள்!
அங்கே ஒரு பங்களா
அழகாக நின்றதுவே!
“யாருடைய வீடு அது?”
யாரஸூல் கேட்டார்கள்
சொன்னார்கள் ஸஹாபாக்கள்!
சொந்தக்கா ரர்பெயரை!
மௌனமாய் நகர்ந்தார்கள்
மாநபிகள் பெருமானார்!
அன்று பள்ளியில்
அவ்வீட்டின் அதிபதி
அண்ணல் நபிகளுக்கு
அடக்கமாய் ஸலாம்சொன்னார்!
அதற்கு பதில்சொல்ல
அவர்கள் மறுத்ததனால்,
என்னவோ? ஏதோ?வென
ஏகமாய்த் துடிதுடித்தார்!
அருகிருந்த நண்பரிடம்
அவசரமாய் விசாரித்தார்!
அன்று நகர்வலத்தில்
அண்ணலின் விசாரிப்பை
அவரிடம் சொன்னார்கள்;
அமைதியாய் அவர்சென்றார்!
பின்னர் ஒருநாளில்
பெருமானார் அவ்வழியில்
சென்ற போது
ஸ்தம்பித்து நின்றார்கள்!
ஒய்யார மாக
ஓங்கி நின்றிருந்த
சிங்கார பங்களாவின்
சுவடே தெரியவில்லை!
அண்ணலெம் பெருமானின்
ஆசிபெறா அவ்வீட்டை
அந்த நொடியிலேயே
அவரிடித்துப் போட்டகதை
சொன்னார்கள் ஸஹாபாக்கள்!
சோதரரே பார்த்தீரா?
அந்த ஸஹாபாவும்
இந்த புகாரியும்
சொந்த பந்தம்தான்
சோதர முஸ்லிம்கள்தான்!
என்ன செய்வது?…..
சொல்லுங்கள்…
என்ன செய்வது?