- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

பொறுமையின் எல்லை

இன்று:

அஷ்ரப் ராவுத்தர்
அவ்வூரின் தனவந்தர்
ஆறேழு தொழிலுக்கு
அதிபதி – அவருக்கு
பதினேழு வயதில்
பருவமகள்;பார்ப்பதற்கு
அழகான பெண்தான்
ஆனாலும் படிப்பில்லை!
பெண்கேட்டு வந்தோர்
பட்டியலைப் பார்வையிட்டால்
தன்னிலை மறந்திடுவர்;
தடுமாறிமயங்கிடுவர்!
அவ்வளவு போட்டி!
அனைவருமே வியந்துநின்றார்!
இருந்தாலும் ராவுத்தர்
இன்னும்பிடி கொடுக்கவில்லை!
தன்னுடைய மருமகனாய்
தன்வீட்டில் நுழைவதற்கு
எண்ணிய எல்லோரையும்
ஏளனமா கப்பார்த்தார்!
அவர்வைத்த அளவை
அடைவதற்கு முயன்றவர்கள்
அத்தனை பேர்களுமே
அரியபணக் காரர்களே!
இருந்தாலும் அன்வருக்கு
இருப்புக் கொள்ளவில்லை!
தன்னுடைய மாமாவின்
தவப்புதல்வி தனக்கென்று
மனதில் வரித்திருந்தான்;
முயற்சிசெய்ய முடிவெடுத்தான்!
எம்.ஏ.படித்திருந்தான்;
எம்.பில்லும் முடித்திருந்தான்!
அடுத்த சில மாதங்களில்
ஆய்வுப்பட்டம்(பி.எச்.டி)
அவன் முன்னே!
வேலை கிடைத்துவிடும்
வீட்டின் வறுமையெல்லாம்
விரைவில் நீங்கிவிடும்!
வெளிச்சம் கிட்டிவிடும்!
என்ற நம்பிக்கை
இளைஞன் அவன்மனதில்!
அம்மா தடுத்தாள்;
அவசரம் வேண்டாமென்றாள்!
அன்வர் கேட்கவில்லை
அன்றே அவன் போனான்!
விஸ்தார மான
வெளி ஹாலில் அமர்ந்திருந்த
அஷ்ரப் ராவுத்தர்
அவனை எதிர்பார்க்கவில்லை!
“என்ன?” என்றார்
எரிச்சல் அவர் குரலில்!
மச்சியை மணக்க
மனங்கொண்ட விசயத்தை
மாமாவின் முன்னே
முறையாக முன்வைத்தான்!
குதித்தார் ராவுத்தர்!
கோபத்தில் கிடுகிடுத்தார்!
சொல்லொனா வார்த்தைகளால்
சுட்டெரித்தார்; சூளுரைத்தார்!
“வெளியே பிடித்திவனை
விரட்டுங்கடா” என்றவரும்
உத்தரவு கள்போட்டார்;
உடல்பதறி நின்றாரே!
அன்று

இமாம் அபுஹனிபா
இந்நிலத்தின் பெருமேதை
மர்க்க ஞானி!
மாபெரிய ஆய்வாளர்!
ஒருநாள், ஒருவன்
அவர்முன்னே வந்து நின்றான்!
“உங்கள் தந்தையார்
உயிரோடு இல்லையன்றோ?”
என்றான் – இமாமவர்கள்
“ஆம்” என்று பதில் சொன்னார்!
“உங்கள் அம்மாவை
உரிமையுடன் மணமுடித்தல்
என்னுடைய விருப்பம்”
என்றவனும் சொன்னானே!
ஒருநிமிடம் இமாமவர்கள்
ஸ்தம்பித்து நின்றார்கள்!
மகன் என்ற முறையினிலே
மனதில் பெருங்கோபம்தான்!
இருந்தாலும் மார்க்கம்
இட்டிருந்த கட்டளைக்கு
இணங்க முடிவெடுத்தார்
இதமாய்ப் பதிலிறுத்தார்!
“அம்மாவின் விருப்பத்தை
அறிந்துமக்குச் சொல்லுகிறேன்”
என்றார்கள் இமாமும்
என்னவொரு பெருந்தன்மை!
அம்மாவைப் பெண்கேட்ட
அந்தவொரு மனிதனையும்
அடக்கத்துடன் எதிர்கொண்ட
அருமை அபூஹனிபாவும்
சொந்தத் தங்கைமகன்
சூழ்நிலையால் வறியவனாய்
நின்ற காரனத்தால்
சுட்டெரித்த அஷ்ரபும்
சொந்த பந்தம்தான்..
சோதர முஸ்லிம்கள்தான்….
என்ன செய்வது?
சொல்லுங்கள்….
என்ன செய்வது?