- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

பெற்றோர் பேணுதல்

இன்று:

வாகாய் மலேசியாவில்
வகை வகையாய்த் தொழில் செய்த
வஹ்ஹாப் ராவுத்தர்
வாதத்தில் விழுந்துவிட்டார்!
நடக்க முடியவில்லை
நாக்கூட சுத்தமில்லை
படுத்த படுக்கைதான்
படுக்கையில் தான் எல்லாமே!
மனைவி இறந்துவிட்டாள்
மகள் தவிர யாருமில்லை!
அடுத்தவர் உதவியின்றி
அசையக் கூட முடியாது!
இயற்கை அழைப்பில்
ஈரமான துணி மாற்ற
ஈனக்குரல் கொடுத்தார்
எத்தனையோ நூறுமுறை!
யாரும் வரவில்லை
வந்தெதுவும் கேட்கவில்லை!
மெல்ல அசைந்து
மேற்பாகம் நகர்வதற்குள்
மேல்மூச்சு வாங்கியது
மேனியெல்லாம் மலம் நீர்தான்!
அந்த நேரத்தில்
வந்த மகள் பாரிஸா
“அம்மாடி! அம்மாடி!
அசிங்கத்தைப் பாருங்கடி!
இருந்தாலும் கிழவனுக்கு
இந்த வீம்பு ஆகாது!
இருந்திருந்து அல்லாஹ்வும்
எனக்கிந்த விதியை வச்சான்!
எடுத்துக்கிட்டுப் போகாம
இழுத்துக் கிட்டுக் கெடக்க வச்சான்!”
என்று பலவாறாய்
ஏசினாள்; பேசினாள்!
உள்ளே சென்றாள்
ஓரத்தில் நின்றிருந்த
செல்லாயி மகளை
சத்தமிட்டு வரவழைத்தாள்!
“அடியே அம்மனுஷன்
அசிங்கமாக் கெடக்காரு!
அள்ளிக்கிட்டுப் போயி
அசிங்கத்தச் சரிபண்ணு!”
சொல்லிவிட்டுச் சென்றாள்
சொகுசான உள்ளறைக்கு!
எந்த மகளுக்காக
இராப்பகலாய் உழைத்தாரோ
அந்த மகளின்
அலட்சியத்தைக் கண்ட வஹ்ஹாப்
கண்களில் கண்ணீர்!
கனத்தது இதயம்!
“அல்லாஹ்!…..” என்றார்
அதில் பொருள்தான் எவ்வளவோ!

அன்று

காலவோட்டம்
கதீஜாவைப் பறித்தது!
பெரிய தந்தை அபூதாலிப்
பிரிதொருநாள் பிரிந்திறந்தார்!
அண்ணல் நபிகளுக்கு
அரவணைப்புக் குறைந்தது!
மக்கத்துக் காபிர்கள்
மாநபியை வதைத்தார்கள்
ஒருநாள்…..
வேந்தர் நபியவர்கள்
வீடுநோக்கி வந்தார்கள்!
வழியில் ஒரு பழிகாரன்
வாய்த்துடுக்காய்ப் பேசினான்
மண்ணையும் புழுதியையும்
வாரி வாரிக் கொட்டினான்
அண்ணலின் திருமேனி
அழுக்கேறிப் போனது!
அதைக் கண்ட அவர்மகளார்
அருமையான பாத்திமாவும்
அழுது அரற்றினார்
ஆறுதலும் தான்சொன்னார்!
ஓடிப்போய் நீர்கொணர்ந்தார்!
உட்கார்ந்து சுத்தம் செய்தார்!
தந்தையின் நிலைக்காக
தேட்டமுடன் ‘துஆ’ கேட்டார்!
பாசமகள் பாத்திமா
பரிதவிப்பைக் கண்ட நபி
“பதறாதே அம்மா!
பொறுமைகொள்; அல்லாஹ் உன்
பிதாவைக் காப்பான்;
பேரருளாளன் அவன்!”
என்றே — நவின்றார்கள்!
என்ன ஒரு காட்சி இது!
அந்த பாத்திமாவும்
இந்த பாரிஸாவும்
சொந்த பந்தம்தான்
சோதர முஸ்லிம்கள்தான்!
என்ன செய்வது…?
சொல்லுங்கள்…
என்ன செய்வது?