- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

விண்வெளி மண்டலத்தில் கறுப்பு துவாரம்

[1]“வெட்டவெளிதனை மெய் என்றிருப்பாருக்கு பட்டயமேதுக்கடி குதும்பாய்” என்று குதும்பை சித்தர் வெட்டவெளி பிரபஞ்சம் பற்றி பாடி, ஆனந்தம் அடைந்தார்.

விண்வெளி பற்றி ஆராய்ந்தால் எல்லையில்லாத இன்பம் என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் கண்டறியப்படாதது எவ்வளவோ இருக்கிறது. சூரியக்
குடும்பத்திலிருந்தே இன்னும் புது புதுத் தகவல்களும் வந்து கொண்டுதானிருக்கிறது. அந்தக் காலத்தில் முன்னோர்கள் வான் மண்டலத்தைப் பற்றி பேசினாலே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு கதை வைத்திருப்பார்கள். அறிவியல் முன்னேற்றம் ஏற்பட ஏற்பட விண்வெளியில் நம் பூமி ஓர் அணுவைப் போலத்தான் என்பது தெரிய வருகிறது. பூமியைப் பற்றியே மாறுபட்ட கருத்துக்கள் பல்வேறு வானவியல் வல்லுனர்களால் கூறப்பட்டது.

சிலபேர் பூமி தட்டையானது என்றுகூட சொன்னார்கள். விஞ்ஞான முன்னேற்றம் இப்பொழுது சூரிய குடும்பத்தையையும் (Solar systems) தாண்டி அதிசயிக்கத்தக்க செய்திகளை கொண்டு வருகிறார்கள்.

பத்து ஆண்டுகளாக விண்வெளியில் கறுப்புதுவாரம் பற்றி ஒரு பொதுவான கருத்து வந்து கொண்டே உள்ளது. என்னவென்றால் வான்வெளியிலுள்ள மிகப்பெரிய வெற்றிடத்தில் எந்த ஒரு பொருளும் ஒளியும் அப்படியே விழுங்கிவிடக்கூடியது. தற்பொழுது அறிவியலஞர்கள் வான்வெளியில் உள்ள அந்த இருள் பிரதேசத்தின் மையப்பகுதியை பற்றி முதன்முதலாக தகவல்களை கண்டறிந்து வருகிறார்கள். அதாவது பால்வெளி மண்டலத்தில்  கறுப்புதுவாரம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. மிக அதிக ஈர்ப்பு சக்தி கொண்ட இந்த துவாரம் ஒரு மர்மமாகவே உள்ளது. இதன் அதிபயங்கர ஈர்ப்பு சக்திக்கு எந்த ஒரு பொருளும் தப்ப முடியாது. விஞ்ஞானிகள் வான்வெளியில் ஏற்பட்டுள்ள இந்த கறுப்புதுவாரம் உண்மையாகவே இருப்பதாக உறுதி செய்துள்ளனர்.
[2]அமெரிக்காவில் 10 ரேடியோ நுண்னோக்கிகளின் உதவியுடன் வானியல் வல்லுனர்கள் இதனைக் கண்டறிந்துள்ளனர். 2 கோடியே 60 இலட்சம் ஒளி ஆண்டுகள் அதாவது 946 கோடி கிலோமீட்டர் தொலைவு (அப்பப்பா! கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அல்லது தலைசுற்றுகிறதா?)

தூரத்தில் பால்வெளி மண்டலத்தில் உள்ள இந்த கறுப்புதுவாரம் வெற்றிடமாகவே உள்ளது. இந்த கறுப்புதுவாரத்தின் அளவைப் பற்றி கேட்டீர்களேயானால் அசந்துவிடுவீர்கள்.  40 லட்சம் சூரியனின் அளவைக் கொண்டது. சூரியனே பூமியைவிட எத்தனையோ மடங்கு என்பது நாம் அறிந்ததே. கற்பனையில்கூட நாம் இந்த அளவை அறிந்திருக்க முடியாது. இந்த கறுப்புதுவாரத்திலிருந்து எந்த ஒளியும் வரவில்லை. அதனாலேயே பார்க்க முடியாத நிலையிலேயே உள்ளது. ஏன் என்ற காரனமும் மர்ம மாகவே உள்ளது. அதிலிருந்து வெளிவரும் ரேடியோ அலைகளினாலேயே அதனை அறிய முடிகிறது.  இதன் காரணமாக அதன் வட்ட எல்லைக்குள் அகப்படும் எதுவும் தப்ப முடியாது. அப்படியே கருந்துவாரத்திற்குள் விழுங்கி விடும்.

இது இருப்பதற்கான முதல் அறிகுறி 1974ம் ஆண்டு பிப்ரவரி மாதம் புரூஸ் பாலிக் மற்றும் ராபர்ட் ப்ரவுண்  என்ற 2 அமெரிக்க வானியல் வல்லுனர்களால் கண்டறியப்பட்டது. சக்திவாய்ந்த ரேடியோ லைக்கதிர்கள் பால்வெளி மண்டலத்தில் அதனுடைய மையப்பகுதியிலிருந்து வெளிவருவதைக் கண்டறிந்த தன் மூலம் பால்வெளி மண்டலத்தில் கறுப்புதுவாரம் அதனுடைய மையப்பகுதியில் இருப்பதாக சந்தேகம் அடைந்தார்கள். இதன் காரணமாக அவர்கள் இதனுடைய முதல் புகைப்படங்களை பெற முயற்சித்தார்கள். இவர்கள் கண்டறிந்த இந்த கறுப்புதுவாரம் A-Star என்றழைக்கப்பட்டது.

[3]1974-ம் ஆண்டு ஜான் மைக்கேல் என்ற வல்லுனர் கூறுகையில், “சில நட்சத்திரங்கள் அளவில் பெரியதாக இருக்கும். இதன் காரணமாக இதன் ஈர்ப்பு சக்தியும் மிக அதிக அளவில் இருப்பதாலும்., மிக கடினமானதாக இருப்பதாலும் இதிலிருந்து ஒளி வெளிவருவது தடுக்கப்படுகிறது. சில நட்சத்திரங்கள் சூரியனைவிட 500 மடங்கு பெரியதாகக்கூட இருக்கும்” என்றார். ரிவ் மைக்கேல் என்பவர் கூறுகையில், “அதிலிருந்து வெளிப்படும் ஒளி அதனுடைய ஈர்ப்பு சக்தியாலேயே திரும்ப உள்வாங்கப்படுகிறது” என்று புத்தகத்தில் எழுதியுள்ளார்.

“இந்த கறுப்பு துவாரத்தைப் போலவே மேலும் பல சூரியனை விட 10 பில்லியன் மடங்கு (1000 கோடி மடங்கு) ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் இருப்பதாக பல்வேறு வானவியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள்” என்று Universe Next Door என்ற புத்தகத்தின் ஆசிரியரும் வானவியல் வல்லுனரும் மார்கஸ்சவுன் கூறுகிறார். “அது எப்படி உருவாகிறது என்றும், அது ஏன் பிரபஞ்சத்தின் மத்தியப் பகுதியில் உருவாகிறது என்றும் யாருக்கும் இதுவரை தெரியவில்லை. இதுவே பால்வெளி மண்ட லத்தைப்போல பிரபஞ்சம் உருவாக சாத்தியமாக இருக்கலாம்” என்று மேலும் கூறுகிறார்.

1971-ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட உகுரு (UHURU) விண்கலம் கறுப்புதுவாரத்தைப் பற்றிய சில தகவல் களைக்கொண்டு வந்தது. இத்தகவலின் படி, சூரியனைவிட 5 மடங்கு பெரிய நட் சத்திரத்திலிருந்து வெளிவரும் எக்ஸ்ரே கதிர்கள் மற்றும் கண்ணுக்குத் தெரியாத விண் பொருட்கள் என்கிறது.
அமெரிக்காவிலுள்ள US National Radio Astronomy Observatory என்ற ஆராய்ச்சிக் கழகத்திலுள்ள நுண்ணோக்கியின் மூலம் எடுக்கப்பட்ட தெளிவான படங்களின் மூலம் கறுப்புதுவாரத்தை சுற்றி ஒரு நிழல் வளையம் தென்படுவது தெரிந்தது. அதனுடைய இயக்குனர் ப்ரட் லோ கூறுகையில், “நிழல் வளையம் கறுப்புதுவாரத்திலிருந்து அதிகசக்தி வாய்ந்த ஒளிக் கதிர்கள் மற்றும் ஈர்ப்பு சக்தியின் காரணமாக ஒரு பிரகாசமான வளையமாக இருக்கும்” என்கிறார்.

[4]வெட்டவெளியின் நூதனங்கள், புதுமைகள் ஆராய்ச்சி செய்ய வந்து கொண்டேதான் இருக்கும். மனிதனுடைய சிந்தனை சக்தியும், அறிவுமே அதனை உணர முடியும் என்றாலும் அந்த இடங்களுக்கு நம்மால் சென்றடைய முடியுமா? என்பது கேள்விக்குறி என்றாலும் வருங்காலம் இதற்கு எல்லாம் ஏன் வழி வகுக்காது என்ற நம்பிக்கை ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே வருகிறது. 

எம்.ஜே.எம்.இக்பால், துபாய்.