- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

ஆபத்தான முன்னுதாரணம்

உயிரைத் தந்தது இறைவன். அதை எடுத்துக் கொள்ளும் உரிமையும் அவனுக்குத்தான் இருக்கிறது. இது பரவலாக அறியப்பட்ட- ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. அதனால்தான் தற்கொலை கூட தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப் படுகிறது.

இந்த நிலையில் உயிரை அழிக்கும் உரிமை மனிதனுக்கு இருக்கிறதா? “இருக்கிறது” என்று அடித்துச் சொல்லியிருக்கிறது அமெரிக்க உச்ச நீதிமன்றம்.

டெர்ரி சியாவோ என்ற பெண்மணி 15 வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் சுய நினைவை இழந்து கோமா நிலைக்கு ஆளானார். அவருக்கு அளிக்கப் பட்ட சிகிச்சைகளினால் அவர் உயிர்மீண்டாலும் அவரது மூளை நிரந்தரமாக நினைவுகளை இழந்துவிட்டது. அவர் ஓர் ஆறறிவு அல்லாத -சுயமாக சிந்திக்க நடமாடமுடியாத- நல்லது கெட்டதை உணரமுடியாத ஆரோக்கியயமாக இயங்க முடியாத நிலைக்கு ஆளானார்.

15 வருட தொடர் சிகிச்சையினால் அவரை உயிருடன் வைத்துக்கொள்ள முடிந்ததே தவிர அவரைப் பழைய நிலைக்குக் கொன்டு வர முடியவில்லை. இதனால் அவரது கணவர் – தற்பொது வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வரும் கணவர்- “இப்படி ஒரு ஜடப் பொருளாய் தான் வாழ்வது தனக்குப் பிடிக்காது என்பதே தன் மனைவியின் கருத்து என்று” எப்போதோ அவர் சொன்ன வாக்குமூலத்தின் அடிப்படையில் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.

அதனால் அவருக்கு உணவும் தண்ணீரும் செலுத்தும் குழாய்களைத் துண்டித்துவிட வேண்டும் என்றும் வாதித்தார். நீதிமன்றம் அவரது வாதத்தை ஏற்றுக்கொண்டு குழாய்களை நீக்க டாக்டர்களுக்கு உத்தரவிட்டது. சியாவோவின் பெற்றோர் மேரி-சின்ட்லர் செய்த அப்பீல்கள் பயனற்றுப் போக, சியாவோ இரண்டு வாரங்கள் உணவ – தண்ணீர் இன்றி கைவிடப்பட்டு பரிதாபமாக இறந்து போனார். அமெரிக்க மக்கள் இதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்துவிடவில்லை. பலமான எதிர்ப்பு இருக்கவே செய்தது. இருந்தாலும் அது எடுபடவில்லை.

“மெர்ஸி கில்லிங்” (கருணைக்கொலை) என்பது உலகத்தில் பலகாலமாகப் பேசப்பட்டு வரும் விசயந்தான். திரும்பவும் முழுமையான மனிதனாக வாழ வாய்பில்லாத நோயாளிகளை மருந்திட்டுக் கொல்லுவதற்கு உரிமை வேன்டும் என்று மருத்துவ உலகில் இருந்து கூட கோரிக்கைகள் வந்துகொண்டே உள்ளன. சில தனிப்பட்ட டாக்டர்கள் தாங்களாகவே முடிவெடுத்து யாருக்கும் தெரியாமல் அத்தகைய நோயாளிகளின் உயிரைப் பறித்ததும் உலகத்தின் பார்வைக்கு வந்துள்ளது. அவர்களுள் ஒரு பிரிடிஷ் டாக்டர் அதற்காகக் கொலைக் குற்றம் சாட்டப் பட்டு தண்டனை அனுபவித்து வருவதையும் வாசகர்கள் அறிந்திருக்கலாம்.

இந்தப்பின்னனையில் தான் சியாவோவின் மரணம் சம்பவித்திருக்கிறது. அமெரிக்கக் கோர்ட்டின் தீர்ப்பை விமரிசிக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை. இப்போது இறந்துவிட்ட போப்பாண்டவர் ஜான் பால் அவர்கள் கூட சியாவோ விசயத்தில் குரல் கொடுத்தார். அவரது குரலுக்கே முக்கியத்துவம் கொடுக்காத அமெரிக்க நீதிமன்றம் வேறு யாருக்குக் காதுகொடுக்கப் போகிறது? இங்கே நாம் சிந்திக்கப்போகும் விசயங்கள் வழக்கின் தீர்ப்பில் அடங்கியுள்ள மனித உரிமை சார்ந்ததாகும்;

முஸ்லிம்கள் என்ற முறையில் ஆன்மீகப் பின்னணி சார்ந்ததாகும். இறைவன் மனிதனை, தன் ‘பிரதிநிதி’யாகப் படைத்திருக்கிறான். மனிதனாகப் படைக்கப்பட்டுள்ள ஆண் – பெண் அத்தனைபேரும் அவனுடைய அங்கீகரிக்கப்பட்ட கலீபாக்கள் – பிரதிநிதிகள்தான். இதில் புத்திசாலியான பேரறிவுடைய மனிதனும் இறைவனின் பிரதிநிதிதான்! புத்திக்கூர்மை மங்கி- வெகுளியாய்- பித்துக்குளிபோல் தோற்றம் தரும் மனிதனும் கூட அதே அளவு உரிமையுள்ள இறைவனின் பிரதிநிதிதான்! இதுதான் இஸ்லாமியப் படைப்பின் மூலமந்திரம்.

கடவுள் நம்பிக்கை கொண்ட எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் யாரும் இந்த ‘இறை நியாயத்தை’ ஒப்புக் கொள்வார்கள். நாத்திக வாதம் பேசுபவர்கள் மட்டுமே ‘இறை நியதி’ என்பதை ‘இயற்கை நியதி’ என்று கொஞ்சம் மாற்றிப் பேசுவார்கள். மனிதன் நினைத்தால் அதற்காகத் தொடர்ந்து முயன்றால் இந்த இயற்கை நியதியையே மாற்றிக்கொள்ள முடியும் என்று நாத்திகர்கள் வாதிக்க, முயற்சியுடன் இறைவனிடம் கையேந்திக் கெஞ்சுவதால்- பிரார்த்தணைபலத்தால் தங்களை உயர்த்திக் கொள்வது சாத்தியமே என்று ஆத்திகர்கள் பதில் சொல்வார்கள்! சியாவோ விசயத்தில் , அவர் ஒரு கடவுள் நம்பிக்கை கொண்ட கிறித்துவராக இருந்தபோதும் கூட – அதே மதத்தைச் சேர்ந்த அவர் கணவர் விடாப்பிடியாக வழக்கு நடத்தி சியாவோவை சாக வைத்துவிட்டார். கடவுள் நம்பிக்கை இல்லாத அமெரிக்கர்கள் கூட சியாயாவோவை உணவு – தண்ணீர் இன்றிச் சாகடிப்பது கூடாது என்று போராட்டம் நடத்தியிருக்கிரர்கள்.

மனித உரிமை அடிப்படையில் அவர்கள் போராட்டம் அமைந்திருந்தது. இது இந்தப் பிரச்சினையின் ஒரு மனிதநேயம் சார்ந்த இதமான பக்கம்! பாவம், சியாவோ, வாயில்லாப் பூச்சியாய் வாடிக்கிடந்த அந்தப் பெண் வினாடிக்கு வினாடி உடல் நலிந்து -உடலின் ஒவ்வொரு செல்லும் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்து- உயிரை இழந்ததும், பால் கேட்டுக் கதரும் பேசத்தெரியாத பிஞ்சுக் குழந்தைபோல வாடிக்கிடந்த சியாவோவுக்கு, உணவு கொடுக்க வழி தெரியாமல் அவரைப் பெற்ற தாயும் தகப்பனும் அந்கும் இந்கும் ஓடி ஓடி அலைந்து திரிந்து ஒடிந்து போனதும் – அதைத் தடுக்க முடியாமல் உலகத்தில் இளமனது கொண்ட அத்தனை மனிதனேயர்களும் துடிதுடித்துக் கலங்கியதும் இந்த அதி நவீன நாகரிக உலகத்தில் நம் கண்முன் நடந்த மிகப் பெரிய கொலையாகும்; கல்மனதையும் கலங்கவைத்த கொடுஞ்செயலாகும். நம்மைப் பொருத்தவரை ‘கருக்கொலை’, ‘சிசுக்கொலை’, ‘தற்கொலை’, ‘கொலை’ அனைத்துமே இறை நியாயத்திற் கெதிரான ஒரே மாதிரியான தண்டனைகுரிய குற்றங்கள்தான்.

இறைவன் நினைத்தால் – நாடினால்- மரணப் படுக்கஈயில்(ஷக்கராத்தில்) இருக்கும் மனிதன் எழுந்து நடக்கவும் முடியும்; முழு ஆரோஒக்கியத்துடன் நடமாடிக்கொன்டு திரியும் மனிதன் ஒரே நொடியில் இறந்து விழவும் முடியும்; அது இறைவனின் ‘எல்லாம் முடிந்த சக்தி வெளிப்பாடு’ என்று நம்புவர்கள் நாம்; அழுத்தமான நம்பிக்கை – ஈமான் – தவக்கல் கொண்டிருப்பவர்கள் நாம்! அன்றாட யதார்த்தத்தில் எத்தனையோ நிகழ்வுகளைப் பார்த்து வியந்து அந்த நம்பிக்கையை – தவக்கலை வலுப்படுத்திக் கொன்டிருப்பவர்கல் நாம்! மனித உரிமை, மனித நேயம் இவறுக்கெல்லாம் உலகில் நாங்கள் மட்டும்தான் குரல் கொடுக்கத் தெரிந்தவர்கள்- தகுதி படைத்தவர்கள் என்று ஓங்கிக் குரல் எழுப்பும் அமெரிக்காவில் இது நடந்ததும் – வாய்பேசாத- ஐந்தறிவு படைத்த விலங்குகளுக்கே குரல் கொடுக்க சட்டமும் தண்டனையும் வடிவமிக்கப்பட்டுள்ள இருபத்தொன்றாம் நூற்றாண்டில் உலகத்தின் திறந்த பார்வைக்குமுன் பகிரங்கமாக நடந்த இந்தக் கொலை உலகில் பலகாலம் பேசப்டும் ஒரு விசயமாகி விட்டது. மனதைப் பதைபதைக்க வைத்த விசயமாகிவிட்டது. அதைப் பதிவுசெய்யவே இந்தத் தலையங்கம்!

தொடர்புடைய ஆக்கங்கள்

  1. மூளை – கோமா நிலையிலும்.. [1]