- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

பச்சைத் தேயிலை (Green Tea)

[1] [2]தினந்தோறும் நாம் குடிக்கும் ‘சாய்” என்ற தேனீர் பற்றி வியத்தகு விவரங்களை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

தேனீர் பற்றி பொதுவாக நாம் அறிந்திருப்பது:

புத்துணர்ச்சி அளித்து நம்மை சுறுசுறுப்பாக இருக்கப் பயன்படுவதையும்
காபியை விட இதில் காஃபின் அளவு குறைவு (மூன்றில் ஒரு பகுதி) என்பதையும் தான்.

மூன்று வகைத் தேயிலைகள்:

தேயிலையை பக்குவப்படுத்தும் முறையைப் பொறுத்து 3 வகைப்படும். பச்சை தேயிலை(Green Tea), ஊலூங் தேயிலை(Oolong Tea), மற்றும் கருப்பு தேயிலை (நாம் பயன்படுத்தும் Black Tea).

நாம் பயன்படுத்தும் தேயிலை இலையின் அளவைப் பொறுத்து அதன் தரம் பிரிக்கப்படுகிறது. பொதுவாக பெரிய இலைகள் உள்ள நல்ல தரமான தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகின்றது. தூள் தேயிலை (Dust Tea) உள்நாட்டில் விற்கப்படுகின்றது.

இந்த மூன்று வகைத் தேயிலைகளில் பச்சைத் தேயிலை (Green Tea) சிறந்ததாகும். இதன் மருத்துவக் குணம் நம்மை ஆச்சரியப்படுத்துவதாக உள்ளது.

பெயருக்கேற்றவாறு இதன் நிறம் பச்சையாக இருக்கும். இதன் நிறம் ஏன் பச்சையாக உள்ளது என்றும் மற்றவற்றை விட ஏன் சிறந்தது என்றும் நமக்கு வியப்பாக இருக்கலாம்.

இந்த இயற்கையான பச்சை தேயிலை நம் உடல் நலத்திற்கு அவசியமானவற்றைப் பெற்றுள்ளது. தலைசிறந்த பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவ மையங்களின் ஆராய்ச்சியாளர்கள் பச்சைத் தேயிலையின் மருத்துவ குணங்களை ஆதாரத்துடன் தங்களது ஆராய்ச்சி கட்டுரைகளில் எழுதி உள்ளனர்.

ஏன்டிஆக்ஸிடனின்(Antioxidant) முக்கியத்துவம் பற்றி சமீபத்தில் பல்வேறுவகையான கட்டுரைகளும் கதைகளும் வந்த வண்ணம் உள்ளன. நம் உடலின் உள்ள திசுக்கள் பல காரணங்களால் சேதம் அடைகின்றன. இந்த சேதத்தைக் கட்டுப் படுத்த நம் உடலில் இயற்கையாக ஏண்டிஆக்ஸிடண்ட் உள்ளது. ஆனால் சில சூழ்நிலைகளின் காரணமாக உடலில் உள்ள ஏண்டிஆக்ஸிடண்டின் அளவு போதுமானதாக இருப்பதில்லை. ஆனால் நாம் உண்ணும் உணவில் இயற்கையாக உள்ள வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் பீட்டாகேரோட்டின் (vitamins E and C, and the nutrient beta-carotene) போன்றன ஏண்டிஆக்ஸிடண்டின் பணியைச் செய்கின்றன. ஆக நாம் இளமையாக நோயின்றி வாழ ஏண்டிஆக்ஸிடண்ட் உள்ள உணவு மிக அவசியமானதாகும்.

கேன்ஸாஸ் பல்கலைக்கழக (University of Kansas ) ஆராய்ச்சி முடிவின்படி பச்சைத் தேயிலை புற்றுநோய் மற்றுமுள்ள நோய்களிலிருந்து நமது திசுக்களை காப்பதில் வைட்டமின் சியை(vitamins C) விட 100 மடங்கும் வைட்டமின் ஈயை(vitamins E) விட 25 மடங்கும் சிறந்ததாக உள்ளது. இந்த பச்சைத் தேயிலை இருதய நோய்களிருந்து பாதுகாக்கவும், சுகாதாரமான பற்கள் மற்றும் ஈறுகளுக்கு உறுதுணையாகவும் சீரான ஜீரனத்திற்கும் உதவுகின்றது.

மற்ற தேயிலையிலிருந்து எப்படி மாறுபடுகிறது.

[3]தேயிலையைப் பக்குவப்படுத்த பறித்த இலைகளை காய வைப்பதற்கு முன்பு ஃபெர்மெண்டேஷன்(Fermentation) செய்யப்படும். ஃபெர்மெண்டேஷன்(Fermentation) என்பது பாலிலிருந்து  தயிராக மாறுவது போன்ற ஒரு வேதிவிணையாகும். இந்த வேதிவிணையின் போது (ஃபெர்மெண்டேஷன்) தேயிலையின் பசுமைத் தன்மை மற்றும் நிறம் மாற்றமடையும். (கருப்பு நிறமாக மாறுகின்றது.) இந்த முறையில் பக்குவப்படுத்திய தேயிலை தான் நாம் சாதாரணமாக பயன்படுத்தும் கருப்புத் தேயிலையாகும்(BLACK TEA).

ஆனால் பச்சைத் தேயிலை ஃபெர்மெண்டேஷன் செய்யாமல்  காய வைக்கப்படுகின்றது. இதனால் தேயிலையின் இயற்கையான தன்மை மற்றும் நிறம் பாதுகாக்கப்படுகின்றது. இதனுடைய ருசியும் மணமும் மற்றவற்றைவிட சிறப்பாகவும் இருக்கும்.

ஊலூங் தேயிலை(OOLONG) குறைந்த நேரம் பெர்மெண்ட்டேஷன் செய்வதால் தன்மை மற்றும் நிறம் சிறதளவு மாற்றமடையும். இதன் நிறம் சிவப்பாக இருக்கும்.

மருத்துவ பலன்கள்:

இதில் உள்ள ஏன்டிஆக்ஸிடன்ட் வாய், இரைப்பை, கணையம், நுரையீரல், குடல், தொண்டை மற்றும் மார்பு புற்று நோயிலிருந்து பாதுகப்பளிக்கின்றது.

ஹார்வேர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியின்படி தேநீர் அருந்துபவர்கள் தேநீர் அருந்தாதவர்களை விட 40 சதம் வீதம் குறைவாகவே ‘மாரடைப்பு நோயால்'(Heart Attack) பாதிக்கப்படுகின்றனர்.

பற்சிதைவை ஏற்படுத்தும் பாக்டீரியாவை கட்டுப்படுத்த இதில் இயற்கையாக உள்ள ஃபுளோரைடு பயன்படுகிறது.

எலும்புவளர்ச்சிக்கு அவசியமான மேங்கனீஸும் இருதய துடிப்பை கட்டுப்படுத்தும் போட்டாஷியமும் இதில் அபரிதமாக உள்ளது.

பச்சைத் தேயிலையில் பி1,பி2,பி6, ஃபோளிக் அமிலம் மற்றும் கால்சியம் (B1,B2,B3,Folic Acid and Calcium) போன்றனவும் அடங்கியுள்ளன.

ஓஹியோவில் உள்ள  வெஸ்ட்டர்ன் ரிசர்வ் யுனிவர்சிடியின்(Case Western Reserve University,Cleveland) சமீப ஆராய்ச்சியின்படி மூட்டு வலி (ஆர்டரிடிஸ்) நோயின் தன்மையை பச்சைத் தேயிலையில் உள்ள பாலிபினால்(polyphenols) குறைக்கின்றது.

பச்சைத் தேயிலை உள்ள கேட்ஷின்(catechin) கீழ்கண்ட மருத்துவப் பண்புகளைப் பெற்றுள்ளது.

எவ்வாறு அடையாளம் காண்பது:

தற்போது இந்த தேயிலையின் முக்கியத்தும் பரவியுள்ளதால் பெரிய கடைகளில் சாதாரணமாக கிடைக்கின்றது. இந்த தேயிலை கரும்பச்சையாக சுருண்டு நீளமாக காணப்படும். தண்ணீரில் போடப்பட்டபின் இதன் அளவு பெரிதாகி நிறம் பச்சையாக மாறும். மற்ற தேயிலைகளை விட இந்த தேயிலையின் விலை சற்று அதிகம். பல நாடுகளில் தயாரிக்கப்பட்டாலும் சீனாவின் பச்சைத் தேயிலை தான் சிறந்ததாகும்.

பச்சைத் தேயிலையிலிருந்து தேனீர் தயாரித்தல்:

மற்ற தேயிலை போன்று இதை கொதிக்க வைக்கக்கூடாது. தேனீர் தயாரிக்க 70 – 85 டிகிரி வெப்பம் போதுமானது. தண்ணீரை கொதிக்க வைத்து – இரண்டு நிமிடங்கள் அப்படியே வைத்தால் சரியான வெப்பநிலைக்கு வந்து விடும்.

பின் தேவையான பச்சைத் தேயிலையை ஒரு குவளையில்(glass) போட்டு (ஒரு கிளாசுக்கு 2 கிராம் = ஒரு டீஸ்பூன்) சிறிது வெந்நீரை  தேயிலையை மூடும் அளவிற்கு ஊற்றி உடனே தண்ணீரை கீழே கொட்டி விட வேண்டும். இதனால் தேயிலை கழுவப்படுவது மட்டுமன்றி அதில் உள்ள காஃபீனும் ஓரளவு அகற்றப்படும். அதன் பின் தேவையான அளவு வெந்நீரை ஊற்றி ஒன்று அல்லது இரண்டு நிமிடம் ஊற வைக்கவும். இதில் பயன்படுத்தப் பட்ட இலையை இன்னும் சில முறைகள் வெந்நீர் விட்டு அருந்தலாம். கண்டிப்பாக பால் இதனுடன் சேர்க்கக்கூடாது. சர்க்கரையை தவிர்ப்பது நலம். சுவையை மேலும் அதிகரிக்க “தோலுடன் நறுக்கிய எலுமிச்சை பழத்தின”் சிறிய துண்டை தேனீரில் போட்டும் குடிக்கலாம்.

பச்சைத் தேயிலையை கொதிக்க வைப்பதால் இதன் தன்மை மாறிவிடும். எனவே மேலே கூறிய முறைப்படி தயாரித்து மணம் – சுவை – மருத்துவ குணமுடைய தேனீரை அருந்தி நமது உடல்நலத்தைப் பாதுகாப்போமாக!