Google Search Engine

தலைப்புகளில் தேட

தேதிவாரியாக பதிவுகள்

November 2008
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Archives

Visitors since 22-3-13

Free counters!
இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க அச்செடுக்க 4,374 முறை படிக்கப்பட்டுள்ளது!

சர்க்கரை நோய் – விழிப்புணர்வு 4

தொடர் 4 (சர்க்கரை நோய்க்கான சோதனைகள், மேலாண்மை முறைகள் மற்றும் அவசியமான குறிப்புகள்)

நீரிழிவு நோய்க்கான சிறப்பு மருத்துவ மனைக்குச் சென்றால் அங்கு தேவையான சோதனைகளைச் செய்வார்கள். அவற்றுள் சில…

இரத்தம்:

  • சர்க்கரை அளவு – ஓர் இரவு பட்டினிக்குப் பின்னும் உணவருந்திய பின்னும்.- கொழுப்பின் அளவு
  • யூரியா(உப்பு)வின் அளவு
  • ஈரலின் செயல்பாட்டை அறிந்து கொள்ள உதவும் சில சோதனைகள்

சிறுநீர்:

  • சிறுநீரில் சர்க்கரை அளவு – ஓர் இரவு பட்டினிக்குப் பின்னும் உணவருந்திய பின்னும்.
  • சிறுநீரில் புரதம், அசிடோன்
  • மேலும் சில சோதனைகள்

மேலும் ஒரு தேவையான சோதனை HbA1c எனப்படும் ஒரு குறுதிச் சோதனையாகும். இந்த சோதனை வசதி எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. சர்க்கரை நோய் சிறப்பு நிலையங்களிலோ அல்லது பெரிய இரத்தச் சோதனை நிலையங்களிலோ இருக்கும். இதன் சிறப்பு என்னவென்றால் கடந்த இரண்டு அல்லது மூன்று மாதங்களின் சர்க்கரை அளவின் சராசரியை இந்தச் சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். அவ்வப்போது செய்யப்படும் சர்க்கரைச் சோதனைகள் உணவிற்குத் தக்கவாறும் நேரத்திற்குத் தக்கவாறும் மாறுவதால் இந்த HbA1c சோதனை ஒரு சரியான அளவுகோலாகக் கருதப்படுகிறது.
என்ன. இந்த “இனிப்பு” நோயின் கசப்பான விளைவுகளை அறிந்து கொண்டதும் அச்சமாக இருக்கிறதா? இந்தக்கட்டுரையின் நோக்கம், சர்க்கரை நோயின் கொடிய விளைவுகளை அறியத்தருவதும் யாருக்கேனும் சர்க்கரை நோய் இருந்தால் அதைச் சாமர்த்தியமாகவும் எளிதாகவும் கையாண்டு மேற்சொன்ன சிக்கல்களை தவிர்க்கும் வழிகளை அறியத் தருவதுமாகும். அச்சம் தவிருங்கள் இனி ஆக வேண்டியவைகளைக் காண்போம். இந்த சர்க்கரை நோய் வந்துவிட்டால் அதை எப்படி மேலாண்மை செய்வது? எவ்வாறு மேலும் சிக்கல்கள் நேராமல் பார்த்துக் கொள்வது? கட்டுரையின் இந்த இரண்டாவது நோக்கத்தை இனிக் காண்போம்.
மூன்று தலையாய விஷயங்கள் இந்த நோயை மேலாண்மை செய்வதிலே இருக்கின்றன.

  1.  உணவுக் கட்டுப்பாடு
  2.  தேவையான மருந்துகளைத் தவறாமல் எடுத்தல்
  3.  தேவையான அளவு உடற்பயிற்சி.

ஏன் உணவுக் கட்டுப்பாடு தேவை?
இந்தக் கட்டுரையின் துவக்கதில் கண்ட சில அடிப்படையான செய்திகளை மீண்டும் நினைவு கூர்ந்தால் உங்களுக்கு ஓர் உண்மை தெரியவரும். இரத்தத்தில் சேரும் அதிகப் படியான சர்க்கரையைச் சேமித்து வைத்துக் கொள்ள உடல் ஏதுவாக இருக்கவில்லை என்றும் அதனால்தான் மேற்கண்ட சிக்கல்கள் தோன்றுகின்றன என்றும் கண்டோமல்லவா? ஏதாவது ஒரு வழியில் அதிகப்படியான சர்க்கரையைச் சேரவிடாமல் செய்துவிட்டால்? சிக்கல்களைத் தவிர்க்கலாமல்லவா? ஆம் அதில் ஒன்றுதான் உணவுக் கட்டுப்பாடு. இந்த உணவுக் கட்டுப்பாட்டைக் கைக் கொள்ள வேண்டுமானால் முதலில்.உங்கள் உடலுக்கு எவ்வளவு கலோரி(சக்தி) தேவைப்படும் என்று அறிய வேண்டும். ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் கலோரியின் அளவு வேறுபடும். ஒருவரின் உடல் வாகு, செய்யும் வேலை, அவர் உடல் சக்தியை எவ்வளவு பயன்படுத்துகிறார் என்பன போன்றவை இதில் அடங்கும். ஒரு நல்ல ‘Dietitian”(சத்துணவு நிபுணர்) இதனை கணக்கிட்டுச் சொல்வார்கள்.

தேவையான மருந்துகளை எடுத்தல்:
மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளைத் தவறாமல் தகுந்த அளவுப்படி தகுந்த நேரங்களில் எடுக்கவேண்டும். சில மாத்திரைகள் கணையத்தைத் தூண்டி இன்சுலினை அதிகம் சுரக்கவைக்கும் வகையாக இருக்கலாம். சில, இன்சுலின் உடம்பில் தேவையான அளவு இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ள இயலாத நிலையிலிருக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பணியாற்றலாம். சிலருக்கு இன்சுலினை ஊசிமூலம் தேவைக்கேற்ற அளவு ஒரு நாளில் ஒருமுறை, இருமுறை அல்லது மும்முறை ஏற்ற வேண்டிய தேவை ஏற்படலாம். அவற்றிலும் விரைவாச் செயல்படக் கூடியது, மெல்லச் செயல் படக்கூடியது என இருக்கின்றன. அவை இரண்டும் கலந்த வகையும் கிடைக்கிறது. இதையும் சரியான நேரத்தில் சரியான அளவு எடுக்க வேண்டும்.

உடற்பயிற்சி:
உடற்பயிற்சி மிக இன்றியமையாததாகும். வயதிற்கேற்ற, அவரவர் தேவைக்கேற்ற உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டியிருக்கும். எவ்வகையானது எவருக்கு உகந்தது என்பதையும் மருத்துவர் அறிவுறுத்துவார். உடற்பயிற்சிகளில் எல்லாம் சுலபமானது, எவ்வயதினரும் செய்யக் கூடியது நடையாகும். ஒரு நாளில் குறைந்த அளவு 40 நிமிடம் 5 கிலோ மீட்டர் அளவுக்கு நடப்பது மிகத் தேவையான ஒன்றாகும்.

மேற்சொன்ன மூன்றையும் முறையாகச் செய்வோர் அச்சத்தைத் தூர வைத்துவிட்டு தன் வழக்கமான வாழ்க்கையைத் தொடரலாம்.

இறுதியாக, இந்நோயாளிகள் செய்யக் கூடியன, கூடாதன பற்றியும் மேலும் சில தகவல்களையும் காண்போம்.

“உங்களுக்கு சர்க்கரை நோயா? அரிசிச் சோறு உண்ணாதீர்கள் கோதுமை உண்ணுங்கள்” என்றும் “கேழ்வரகு இதற்கு நல்ல மருந்து” என்றும் பலர் உபதேசம் செய்யக் கேட்டிருக்கிறோம். சர்கரை நோயாளி, தான் ஏதோ ஒதுக்கி வைக்கப் பட்டவர்போல் உணரத் தொடங்கி விடுவார். சர்க்கரை நோயாளி எதைச் சாப்பிட வேண்டும் அல்லது கூடாது என்ற பத்தியமில்லை. அடிப்படையை விளங்கிக் கொண்டால் உங்கள் உணவு வகைகளை நீங்களே அமைத்துக் கொள்ளலாம்.

சர்க்கரை நோயாளிகள் உண்ணும் உணவு மெதுவாகச் செறிக்கும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். விரைவாகச் செரிக்கும் உணவு, இரத்ததின் சர்க்கரையின் அளவை விரைவாக ஏற்றிவிடும். ஆகவே நார்ப்பொருட்கள் அடங்கிய உணவு ஏற்றதாகும். கேழ்வரகு சர்க்கரை நோய்க்கு ஒன்றும் மருந்தல்ல. ஆனால் அதில் நார்ப்பொருள்(உமி) கலந்திருப்பதால் மெல்லச் சீரணம் ஆகும். எனவே அதைச் சேர்த்துக் கோள்ளலாம். மற்றப்படி அரிசி, கோதுமை இவற்றில் சம அளவே (70%) மாவுப் பொருள் இருக்கிறது. மேலும். எந்த வகை உணவு உண்கிறோம் என்பது பொருட்டல்ல் எவ்வளவு உண்கிறோம் என்பதே பொருட்டாகும். பொதுவாக கிழங்கு வகைகளைத் தவிர்ப்பது நலம். கீரை வகைகள் மிக நல்லது. ஒரு நாள் உணவை ஐந்து பாகங்களாகப் பிரித்துண்பது நல்லது. இதனால் சர்க்கரை அளவு உடனே கூடிவிடாமலும் அளவுக்குக் கீழே குறைந்து விடாமலும் பார்த்துக் கொள்ளலாம்.

மருந்துகள் முறையாக எடுப்பது அவசியம். நாம் முன்பு கண்டபடி மருத்துவர் பல வகையான மத்திரைகள் தரக்கூடும். அவற்றுள் உணவுக்கு முன், உணவுக்கு பின் என குறிப்பிடப் பட்ட வகைகள் இருக்கும். சிலர் இதைப் பொருட்படுத்துவதில்லை. எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் விழுங்குவர். இது தவறாகும். மருத்துவர் காரணமில்லாமல் அவ்வாறு எழுதித் தர மாட்டார். சில மாத்திரைகள் இன்சுலினை சுரக்கத் தூண்டுவதாக இருக்கலாம். சில உடலிலிருக்கும் இன்சுலினை பயன்படுத்திக் கொள்ள வகை செய்பவையாக இருக்கலாம். அதே போலவே, ஊசி மூலம் இன்சுலின் எடுத்துக் கொள்பவர்கள் உணவுக்கு எவ்வளவு நேரத்திற்கு முன் அதை எடுத்துக் கொள்ளவேண்டும் என மருத்துவர் பரிந்துரைத்தாரோ அவ்வாரே செய்ய வேண்டும். மருந்தோ அல்லது ஊசியோ ஒரு குறிப்பிட்ட வேளையில் எடுத்துக்கொள்ள மறந்து விட்டால், அதை இருமடங்காக அடுத்து வேளை எடுத்துக் கொள்ளக்கூடாது. மறந்து விட்டால் போகட்டும் என விட்டுவிட வேண்டும். அவ்வாறு மறந்து விட்ட வேளையின் மருந்தையும் சேர்த்து எடுத்தால் இரத்ததில் சர்க்கரையின் அளவு மிகக் குறைந்து மோசமான விளைவுகளை உண்டாக்ககூடும். 

அடுத்து உடற்பயிற்சி. பெரும்பாலும் நடையே பரிந்துரைக்கப் படுகிறது. உங்களுக்குள் ஒரு “வாக்” உறுதி(வாக்குறுதி) எடுத்துக்கொண்டு அதைத் தவறாமல் நிறைவேற்ற வேண்டும். இதுவும் மருத்துவர் குறிப்பிட்ட அளவோடுதான் இருக்க வேண்டும். தேவைக்கு அதிகமாகவும் உடற்பயிற்சி செய்யக் கூடாது. அவ்வாறு செயதால் சர்க்கரை அளவு குறைந்து போகக்கூடும். ஆக, எதுவாயினும் ஒரு வரையரைக்குட்பட்டே இருக்கவேண்டும்.

சிலருக்கு ஓர் ஐயம் எழலாம். சர்க்கரை குறைவதற்குத்தானே இவ்வளவும் செய்கிறோம். குறைவதற்காக ஏன் அச்சப் படவேண்டும்? உங்களுக்குத் தெரியுமா? சர்க்கரை கூடியிருப்பதைவிட வேண்டிய அளவில் மிகக் குறைந்திருப்பது அபாயகரமானதாகும். மயக்கம் வரலாம். இந்நிலை அதிக நேரம் தொடர்ந்தால் “கோமா”(Coma) நிலைக்குக் கூட போகலாம்.

சர்க்கரை நோயாளிகள் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டியவை:

  •  
    • உங்கள் சிறுநீரை அடிக்கடி (குறைந்தது வாரத்தில் மும்முறை) சோதித்துக் கொள்ளவேண்டும். இதற்காக Glucotest (strips) போன்ற உடனடியாகக் காட்டும் சோதனைக் குச்சிகளை உபயோகிக்கலாம்.
    • வாரத்திற்கொருமுறை இரத்த சோதனை செய்து கொள்ள வேண்டும். இதற்காகக “One touch”, “Gluco meter” போன்ற கையடக்க உபகரணங்களை வாங்கி வீட்டிலேயே சோதனை செய்து கொள்ளலாம். சர்க்கரையின் அளவு காலை உணவுக்குப்பின் 160 mg/dL அளவுக்குக் கீழே இருக்க வேண்டும்.
  • HbA1c குறுதிச் சோதனையை மூன்று மாததிற்கொருமுறை செய்து கொள்ள வேண்டும். அது உங்களின் இரண்டு அல்லது மூன்று மாதங்களின் சராசரியைக் காட்டும். அதை கீழுள்ள அட்டவணையோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்:
    • 5.6%  க்குக் கீழே – நோயில்லா ஒரு மனிதருக்கு இருப்பது
    • 5.6% to 7% – சர்க்கரையின் அளவு நல்ல கட்டுப் பாட்டிற்குள் இருக்கிறதென்று பொருள்
    • 7% to 8% – ஒரளவு கட்டுப்பாடு
    •  8% to 10%- சரியான கட்டுப் பாட்டில் இல்லை
    • + 10% க்கு மேல் – கட்டுப்பாடு மிக மோசம்

நீங்கள் பின்பற்ற வேண்டிய சில குறிப்புக்கள்:

உங்களுடன் மிட்டாய் போன்ற சில இனிப்புப் பொருட்களை வைத்துக் கொள்ளுங்கள். திடீரெனெ உங்கள் சர்க்கரை அளவு குறையலாம். அப்போது இது கை கொடுக்கும்.
உங்களுடன் இருப்பவர்களிடம் (அலுவலகத்தில் நெருங்கிய நண்பரிடம்) உங்களுக்கு சர்க்கரை திடீரெனெக் குறைந்து மயக்கம்போல் வந்தால் உங்களுக்கு என்ன தரவேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லித் தாருங்கள்.
உங்கள் பாதங்களை அடிக்கடி கவனித்து வாருங்கள். நீங்கள் அணியும் செருப்பை காலை நெருக்காத அளவுக்குத் தேர்ந்தெடுங்கள். கால் பகுதியில் தோல் கடினமாகி இருக்கிறதா என்று கவனியுங்கள்.

கையிலோ அல்லது காலிலோ சூடு தெரியாமலோ அல்லது வலிதெரியாமலோ இருந்தால் மருத்துவரை உடனே அணுகுங்கள்.
இரத்த அழுத்தை அடிக்கடி சரி பார்த்து கொள்ளுங்கள்.
வருடத்திற்கு ஒரு முறையாவது முழு உடற் சோதனை செய்து கொள்ளுங்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக மனம் துவண்டு போகாதீகள்.

உங்கள் உடம்பை நீங்கள் ஆளக்கற்றுக் கொள்ளுங்கள் இனிமையான வாழ்வை இன்ஷா அல்லாஹ் எதிர் கொள்வீர்கள்!
 முற்றும் 

எம். முஹம்மது ஹுசைன் கனி