- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

ஊடல்

இன்று

அன்று

பஹ்ருதீன் அலிக்கு
பாரிக்கத்து ஒரே மகள்!
பணக்கார இடத்தில்
பக்குவமாய்க் கொடுத்திருந்தார்!
பாரூக் அவன் பெயர்;
படித்தவன்; பண்பாளன்!
எடுத்தெரிந்து பேசுதலை
எப்போதும் அறியாதவன்!
தானுண்டு தொழிலுண்டு
தன்கடமை உண்டென்று
தயங்காது நடப்பவன்
தளராத உழைப்பாளன்!
ஆனால் பாரிக்கத்து
அவனுக்கு நேரெதிர்
நடையுடை பாவனை
நாகரிகத்தின் உச்சம்!
யாரையும் மதிக்காத
ஆர்ப்பாட நடைமுறைகள்!
பேச்சில் ஆணவம்
பிறரை மதிக்காமை!
பிறந்த வீட்டின்
பெருமை பேசுதலில்
நிரந்தரத் தீவிரம்
நீக்குப்போக்க கில்லாமை!
பாரூக் பக்குவமாய்ப்
பலமுறை கண்டித்தான்!
பண்பாட்டு நெறிகளை
பரிவுடன் போதித்தான்!
இல்லத் தலைவன்
எதுவொன்றைச் சொன்னாலும்
எடுத்தெறிந்து பேசுதலை
இயல்பாகக் கொண்டிருந்த
பாரிக்கத்து பாரூக்கை
பலமுறை அலைக்கழித்தாள்!
அழுதாள்; ஆர்ப்பரித்தாள்!
அன்றாடம் சண்டையிட்டாள்!
அவனை மதிக்காது
ஆணவமாய்ப் பேசினாள்!
மனைவியைத் திருத்தும்
மருந்தென்று நினைத்து
மௌன மானான்
மணவாளன் பாரூக்கும்!
இரண்டு நாட்கள்
இல்லம் செல்லாமல்
ஏற்றுமதி கோடவுனில்
இரவுகளில் தங்கலானான்!
பாரிக்கத்து பார்த்தாள்
படுகோபம் தானடைந்தாள்!
அத்தாவிடம் சொன்னாள்
அவரும் உடன்எழுந்தார்!
“ஏண்டா நீயும்
என்னடா நெனச்சிருக்கே?
எம்மக அங்கே
ஏங்கித் தவிச்சிருக்க
இங்கே வந்து
என்னடா செய்யிறேநீ?
பல்ல ஒடச்சிடுவேன்
படுவாநீ , என்னப்பத்தி
என்னடா நெனச்சிருக்கே?
என்கோபம் பொல்லாது”
என்று எகிறினார்
எரிச்சலில் நிலையிழந்தார்!
அண்ணலெம் பெருமானின்
அருமைமகள் பாத்திமா
அவரது கணவர்
அருமைஅலி ரலியவர்கள்!
ஒருநாள் இருவருக்கும்
ஊடல்; இல்வாழ்வில்
இதுவொன்றும் புதுமைஇல்லை!
இயல்புதான் எங்கனுமே!
அலிக்கு வருத்தம்
அங்கிருந்து நகர்ந்தாரே!
மஸ்ஜிதுன் நபவியின்
மணற்பரப்பில் படுத்தஅலி
மன அமைதிக்காக
மறுகணமே தூங்கிவிட்டார்!
அண்ணல் பெருமானார்
அருமைமகள் இல்லம்
வந்த போது
வாடிய முகம்கண்டார்!
ஊடல் நிலையை
விசாரித்து அறிந்தாரே!
மகளைக் கண்டித்தார்!
மறுகணமே மஸ்ஜிதின்
மணற்பரப்பில் கிடந்த
மருமகனார் அலிதம்மை
தட்டி எழுப்பினரே
தம்கையால் அவருடலில்
ஒட்டி யிருந்த
மண்நீக்கி மகிழ்ந்தனரே!
தமக்கும் மனைவிக்கும்
தராறுஎனும் விசயம்
அண்ணலார்க்குத் தெரிந்ததனால்
அப்போதே அதைவிட்டார்!
இல்லம் சென்றார்
இதுவன்றோ இன்காட்சி !
சின்னஞ் சிறுசுகள்
சீறிச் சினந்தாலும்
வீட்டுப் பெரியவர்க்கு
வேண்டுமன்றோ பொறுமைக்குணம்?
அந்த முஹம்மதரும்
அவருடைய திருமகளாம்
அருமை பாத்திமாவும்
அவர்கணவர் அலிரலியும்
இந்த பஹ்ருதீனும்
இவருடைய செல்லமகள்
பாரிக்கத்து பேகமும்
பண்பாளன் பாரூக்கும்
சொந்தபந்தம்தான்
சோதர முஸ்லிம்கள்தான்!
என்ன செய்வது?
சொல்லுங்கள்…….
என்ன செய்வது?