- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

கரைசேர்த்த மறை வசனம்

மார்ச் மாதம் 2000 – ஆம் வருடம்!
கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் ‘இமிக்ரேஷன் கவுன்டரில் நானும் மனைவியும்!

எங்கள் இருவரின் தற்காலிக பாஸ்போர்டைத் திரும்பத் திரும்பப் புரட்டிப் பார்த்த இமிக்ரேஷன் ஆபீஸர் பெண்மணி, ஆங்கிலத்தில் “உங்கள் பாஸ்போர்ட் எப்போது தொலைந்தது?” என்று கேட்கிறார்.

“டிஸம்பர் 24 1999” என்கிறேன்.

“ஸ்பெசல் பாஸில் இங்கு தங்கி இருக்கிறீர்கள், அப்படித்தானே?”

“ஆமாம்”

“ஸ்பெசல் பாஸ் ஒரு மாதத்துக்குத்தான் செல்லுபடியாகும்; இப்போது மூன்று மாதங்கள் முடிந்துவிட்டது…. எப்படித் தங்கி இருக்க முடியும்?”

“எக்ஸ்டன்சன்” வாங்கித் தங்கினோம்”

“அது சாத்தியமில்லையே?”

“முறையாக மேலதிகாரிகளைப் பார்த்து – ஆகப் பெரிய ஆபீஸர்கள் வரை சென்று, இரு முறை நீட்சி பெற்றுத்தான் தங்கினோம் – இதில் பாருங்கள் – மூன்று உச்சகட்ட அதிகாரிகளின் கையெழுத்துக்களும் ஸீல்களும் உள்ளன”

பாஸ்போர்ட்களையும் கம்ப்யூட்டர் திரையையும் மாறி மாறிப் பார்த்த அப்பெண்மணி குழம்பிப் போகிறார்.தலையை அசைத்துத் தன் நம்ப முடியாமையை வெளிப்படுத்துகிறார்!

பிறகு ஆவணங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு மேலதிகாரிகளிடம் ஓடுகிறார்.!

திரும்பி வந்து தன் இருக்கையில் உட்கார்ந்தவர் எங்கள் இருவரையும் கூர்ந்து பார்க்கிறார். ஊடுருவும் பார்வை!

நான் சாதாரண சட்டை, கைலி, தொப்பி சகிதம்!
மனைவி புர்காவில்!
இந்தச் சாதரண மனிதனுக்கு என்ன அப்படி ஒரு சிறப்பு அந்தஸ்து?
மூன்று முறை ஸ்பெஸல் பாஸ்?

அவரது வியப்பும் குழப்பமும் அப்படியே முகத்தில் பிரதிபளிப்பதை உணரமுடிந்தது!
இறுதியாக ஸீல் வைத்து எங்களது ஆவணங்களைத் தந்தார்.

நாங்கள் கவுன்டரை விட்டு நகரும் சமயம் “எக்ஸ்கியூஸ் மீ”… என்றார்.

நான் திரும்பி வந்து “எஸ் மேடம்” என்றேன்.

“அஸ்ஸலாமு அலைக்கும்” என்றார்.

“வ அலைக்குமுஸ்ஸலாம் ” என்றேன் நான், புன்னகையுடன்!

அந்த ஆண்டு ரமளான் பிற்பகுதி! – மலேசியாவில் மகளுக்கு பிரசவம்!

நானும் மனைவியும் கடைசி மகனும் சிங்கப்பூர் வழியாக ஏர் இந்தியா விமானத்தில் கோலாலம்பூர் போய்ச்சேர்ந்தோம்.
மூன்று நாட்கள் பஸ் பயணம்!
இரவுத் தூக்கம் இல்லை!
ரமளானின் இயல்பான சோர்வு!

இயன்ற விரைவில் வீடு சென்று விடும் எண்ணத்துடன் விமான நிலையத்திலிருந்து வெளியே வர, கட்டிபிடித்து அழுது, பரஸ்பர குசல விசாரிப்பின் இறுதியில் இடியாய் ஒரு இழப்பின் வெளிப்பாடு!

“எங்கே பாஸ்போர்ட் கைப்பை?”
பரபரப்பு!…. தேடுதல்!
இல்லை! எங்கும் காணோம்!
மூன்று பேரின் பாஸ்போர்ட்!
மூவாயிரம் அமெரிக்க டாலர்!
மூன்று பேரின் டிக்கட்!
சுமார் 2000 நண்பர்களின் முகவரிகள் அடங்கிய கேஸியோ ஆர்கனைஸர்!
மலேசிய சிங்கப்பூர் நண்பர்களின் விசிட்டிங்க் கார்டுகள்!….
என்று பயணத்தின் ஜீவனே அந்தப் பையில்தான்!

எப்படி இருந்திருக்கும்?
ஒரு வாரத்தில் மகள் பிரசவம்!
என்ன செய்வது?
எப்படிச் சமாளிப்பது?
மூளை உடனடியாக இயங்க மறுத்தது!
மலேசியாவில் பணியில் சேர்ந்திருந்த மூத்த மகன் இயங்கினார்.

ஒரு மணி நேரம் ஸ்தம்பித்து நின்ற பிறகு மனதில் ஒரு தெளிவு!
அடிக்கடி – நெருக்கடியில் இருக்கும் போது, குறிப்பாக ஓதிக்கொள்ள வெண்டும் என்று ஒரு நூலில் படித்த அந்த குர்ஆன் வாசகம் மனதில் வந்து நின்றது!

“வம(ன்)ய்யத்தகில்லாஹ ….. ” என்று தொடங்கும் ஸூரா அத்தலாக்கின் வசனங்கள் அவை(65:2,3 )!

நான், மனைவி, மூத்த மகன், மகள், மருமகன், இளைய மகன் இத்தனை உறவு வட்டமும் உடனே அதைத் திரும்பத் திரும்ப ஓத ஆரம்பித்தோம்!
தவக்கலுடன் ஓத… ஓத…..

இரும்புக்கதவுகள் திறக்கத் தொடங்கின!
இருள் மறையத் தொடங்கியது!
நினையாப் புரத்திலிருந்து உதவிகள் வந்து குவியத் தொடங்கின!

அல்லாஹ் டத்தோ ஹாஜி முஹம்மது இக்பால் அவர்கள் வழியாக கற்பனையால் கூட நினைக்க முடியாத காரியங்களை நிகழ்வித்துக் காட்டினான்!

இந்திய ஹைகமிஷனர் சந்திப்பு!
தற்காலிக இந்திய பாஸ்போர்ட்! உடனே! வழக்கமாக இதற்கு ஒரு மாதம் ஆகுமாம்!
மலேசிய இமிக்ரேஷன் ஆபீஸர் சந்திப்பு! உடனே ஒரு மாத ஸ்பெஷல் பாஸ்(விஸா)!

மகளுக்கு சுகப்பிரசவம், இறையருளால்!
பேத்தியின் இன்ப தரிசனம்!
பச்சை உடம்பு மகளோடு இன்னும் கொஞ்ச நாட்கள் இருக்க ஆசை!
மறுபடியும் இமிக்ரேஷன் ஆபிஸர் சந்திப்பு!
டத்தோ உடன் வருகிறார்!
முன்பு நீட்சி தந்த அதிகாரிக்கு ஒரு மாதமே அதிகாரம்!
அதற்கு மேலான அதிகாரி வழி மீண்டும் ஒரு மாதம்!
அதற்கும் மேலதிகாரி மூலம் இன்னும் ஒரு மாதம்!
ஆக மொத்தம் மூன்று மாதங்கள்!
“இன்னும் தங்க விரும்பினாலும் ஆவண செய்யலாம்” என்ற ஆசுவாசம் வேறு!
அல்ஹம்துலில்லாஹ்!

அந்த மூன்று மாதங்களில் எங்களது ஒவ்வொரு மூச்சுக்கும் அந்த இறை வசனம்தான் பிராண வாயு ஏற்றியது!

தன்னையே சரணடைந்த அடியானுக்கு நினையாப்புறத்திலிருந்து வழி காட்டுவேன் என்று வல்ல அல்லாஹ் தந்த வாக்குறுதியை மெய்ப்படுத்திய அந்த வசனங்கள் எங்களைக் கரைசேர்த்த அந்த அனுபவம் இதோ ஊற்றுகண்ணாய்ப் பீரிட்டுப் பிரவாகிக்கிறது!

கண்களை ஈரப்படுத்துகிறது!
நெஞ்சை நெகிழ்விக்கிறது!
இப்போது இந்த வசனம் எங்கள் குடும்பத்தின் சுவாசமாகிவிட்டது!

இதுவரை இதைத்தெரியாதவர்கள் உடனே ஓதத் தொடங்குங்கள்!
ஓதி வருபவர்கள் மேலும் தீவிர தவக்கலுடன் தொடருங்கள்!
ஓதிப் பயன் பட்டவர்கள் உலகெங்கும் பறை சாற்றுங்கள்!
அல்லாஹ் பெரியவன்!
அவனுக்கே புகழனைத்தும்!