- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

துபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி!

அமெரிக்காவின் லேமென் பிரதர்ஸ் மூலதன வங்கி திவாலான போது உலகம் பொருளாதார நெருக்கடியில் மூச்சுத்திணறத் தொடங்கியது. பல நாடுகள் தடுமாற்றம் கண்டன. சில நாடுகள் தொடக்க கால அதிர்ச்சியிலிருந்து படிப்படியாக மீண்டு வந்தாலும் பெரும்பாலான நாடுகள் இன்னும் மூச்சு விட சிரமப்படவே செய்கின்றன.

இந்த நேரத்தில் சென்ற மாதத்தில் துபையிலிருந்து புறப்பட்டு வந்து தாக்கிய ஓர் அதிர்ச்சியான தகவல் உலகத்தை இன்னுமொரு உலுக்கு உலுக்கிவிட்டது. துபையின் மிகப் பெரிய நிறுவனமான ‘துபை வோர்ல்ட்’ தான் வங்கிகளிடம் பெற்ற கடனைத் திருப்பித்தர அவகாசம் கோரிய செய்தியே அது! அதனை ஆய்வுப்பார்வையில் அலசுகிறார் தனியொரு கட்டுரையில், சிங்கப்பூர் வசந்தம் சென்ட்ரல் ‘எதிரொலி ‘ நிகழ்ச்சிப் பொறுப்பாளர் சகோதரர் ‘ஸதக்’.

துபை நம் சமுதாயத்தைப் பொறுத்தவரை ஏதோ ‘இன்னொரு உலகநாடு’ அல்ல. அது தமிழகத்தில் வாழ்கின்ற நமக்கு ஒரு வகையில் ஜீவாதார ஆசுவாசம் தந்த நாடு.

இந்தோனேசியா, வியட்நாம், சைகோன், லாவோஸ், பர்மா, சிலோன், மலேசியா, சிங்கப்பூர் என்ற வரிசையில் நம்மவர் கடல்கடந்து தொழில் செய்தபோது, ஒவ்வொரு நாடாக நம்மை ஒதுக்கியது. தமிழகத்தில் பல முஸ்லிம் கிராமங்களில் படித்த/ படிக்காத இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாமல் தேங்கத் தொடங்கினர்.

குறிப்பாக இந்தியாவிலேயே வேலைவாய்ப்புகள் இருந்தாலும் நம்மிடம் இயல்பாகப் படர்ந்திருந்த ‘வெளிநாட்டு வேலை’ மாயை மயக்கம் கொடுத்தது. படித்த இளைஞர்கள் கூட கிராமங்களில் முடங்கத் தொடங்கினர். சிலர் திருமணம் முடித்து குழந்தைகளைப் பெற்றுக்கொண்ட பின்னரும், பள்ளிவாசல் வரண்டாக்களிலும், தைக்காக்களிலும், குளக்கரைகளிலும், சங்கங்களிலும் அரட்டையடித்துக் கொண்டு பொழுதைக் கழிக்கும் அவலம் ஏற்பட்டது. அதனால் பல குடும்பங்களில் கண்ணீர்; பெருமூச்சு! ‘சும்மா’ இருப்பவர் (வேலையில்லாமல் இருப்பவர்)  எண்ணிக்கை பயங்கரமாக சமுதாயத்தைத் தாக்கத் தொடங்கிய போது, அல்லாஹ் பாலைச் சூடுமிக்க மேற்கிலிருந்து ஒரு வசந்தத்தை அனுப்பினான்.

துபையின் வேலை/தொழில்வாய்ப்புக்கள் படித்த/படிக்காத அத்தனை இளைஞர்களையும் வாரி அனைத்து அள்ளிக்கொண்டு போனது. குடும்பங்களின் மௌனப்பசி மறையத் தொடங்கியது. வயல்காடுகள் வீடுகளாகின.

துப்பட்டிகள் மறைந்து வண்ணவண்ண புர்காக்கள் வளம் வரத் தொடங்கின. மலேசியா/சிங்கப்பூரில் தொழில்/வேலை செய்யும் குடும்பங்களில் மட்டுமே தெரிந்த ‘பசுமைக் கோலம்’ துபைப் பயணக்காரர்கள் வீடுகளிலும் மலரத் தொடங்கியது.

பலர் கடின உழைப்பில் பாலைச் சூட்டில் வேர்வை சிந்தி சம்பாதித்த பணத்தை ஆர்ப்பாட்ட விழாக்களிலும்- தேவையற்ற சடங்குகளிலும் அழித்து வந்தாலும், மலேசியா/ சிங்கப்பூர் பயணக்காரர்களைவிடவும் துபை  பயணக்காரர்கள் சிலராவது சற்று புத்திசாதுரியத்துடன் செயல்பட்டு தங்களது சம்பாத்தியத்தில் சிறிது சேமிக்கவும்,

அதனை இந்தியாவிலேயே மூலதனமிடவும் செய்ததன் பலனாக வளமை கூடியது. சிறிய/பெரிய அளவில் தொழிலதிபர்கள் தோன்றினர். தமிழகத்தின் முஸ்லிம் கிராமங்களின் சமுதாயம் சார்ந்த களப்பணிகளில் பரவலான பங்களிப்புகள் ஏற்பட்டன. கல்வியில்லாத காரணத்தால் கடின உழைப்புக்கு ஆட்பட்டவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு
கல்வியைக் கொடுக்கத் தொடங்கினர்; அது சம்பந்தமான ஜமாஅத்துகளின் முயற்சிகளுக்கு ஆதரவுகளை வழங்கினர்.

அப்படி சுமார் 40-50 ஆண்டுகளாக ஒரு சந்ததியின் மனிதவளமேம்பாட்டுக்கு மூலகாரணமாக இருந்த துபையின் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி பல வேலை இழப்புகளை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சத்தில் நமது குடும்பங்களில் பல தவித்துக் கொண்டிருக்கின்றன.

துபையின் உதவிக்கு சில வங்கிகள் கைகொடுத்துள்ள தகவல் வந்துள்ளது. அபுதாபியும் கூட உதவி செய்யலாம் என்ற ஊகம் இருக்கிறது! என்றாலும் இப்போது பல குடும்பங்களுக்கு ஜீவஊற்றாகவும், சுவாசஆசுவாசமாகவுமிருக்கிற துபையின் உடனடி  பொருளாதார மீட்சிக்கு நாம் எல்லோரும் அல்லாஹ்விடம் கை யேந்த வேண்டிய அவசியத்தில்/அவசரத்தில் இருக்கிறோம்.

அதனை அழுத்தமாகப் பதிவு செய்வதே இந்த தலையங்கத்தின் நோக்கம்.

நன்றி: நர்கிஸ் – தலையங்கம் – ஜனவரி – 2009