- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

சூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8

ஸூபிகளின் மேலும் சில ஷிர்க்கான வழி கெட்ட கொள்கைகள்

4-பல உருவங்களில் அவதாரம் எடுக்கும் வழி கெட்ட சூபிகள் .
ஸெய்யித் முஹம்மத் குலைறி என்பவர்களும் மிகப் பெரும் சூபி மகானாகும். ஒரு முறை குத்பாப் பேருரை நிகழ்த்துமாறு மக்கள் இவரை அழைத்தனர் . உடனே இவர் மிம்பரில் ஏறி ‘ உங்களின் வணக்கத்துக்குத் தகுதியானவன் இப்லீஸைத் தவிர வேறெவருமில்லையென்று நான் சாட்சி கூறுகின்றேன’ என்றார் . இதனைக் கேட்ட மக்கள் குப்ர் .. குப்ர் .. என்று கோசமிட்டனர் உடனே இவர் கீழே இறங்கி வாளை உருவிக் கொண்டு குப்ர் என்று சொன்ன மக்களை நோக்கி ஓடி வர அவர்கள் பள்ளியை விட்டு விரண்டோடினார்கள். மீண்டும் அவர் திரும்பி வந்து தனிமையிலேயே மிம்பரில் அஸர்த் தொழுகை வரைக்கும் நின்று கொண்டிருந்தார் . பின் அவ்வூர்ப் பிரமுகர்கள் சிலர் வந்து அவரிடம் சமாதானம் பேசி வழிக்குக் கொண்டு வந்தனர். பின்னர் அக்கம்பக்க ஊர்களுக்கு இச்செய்தி பரவிய போது அவ்வூரவர்கள் மேற்படி ஷேய்க் தமது ஊரில் அதே தினம், அதே நேரத்தில் குத்பா ஓதியதாக வாதிட்டனர். இவ்வாறு கணக்கிட்ட போது முப்பது ஊர்களின் முப்பது இடங்களில் அதே நாள் அதே நேரத்தில் இவர் கொத்பா ஒதியிருந்தமை தெரிய வந்தது . ஆனால் அவர் எங்களூரில் எங்கள் கண்ணெதிரேயே மிம்பரில் இருந்து கொண்டிருக்கக் கண்டோம் . . . (ஸூபிய்யா பீ மீஸானிஸ் ஸூன்னா 20)

அல்லாஹ் தான் அனுப்பிய எந்த நபிக்குமே இவ்வாறானதொரு அதிசயத்தைக் கொடுக்க வில்லை. இது உன்மையெனில் நபியவர்களுக்கு எப்போதாவது இப்படி நிகழ்ந்துள்ளதா? சிந்தியுங்கள் அவர்களுக்கு எப்படியான இக்கட்டான நிலைகளெல்லாம் ஏற்பட்டன இப்படி உருமாறி ஒரே நேரத்தில் பல இடங்களிலும் தோன்றும் விடயம் உன்மையெனில் சாத்தியமெனில் ஒரே நேரத்தில் உலகின் பல இடங்களுக்கும் சென்று இஸ்லாத்தைப் பரப்பியிருக்க முடியுமே ? அந்த இடங்களுக்கெல்லாம் தோழர்களை அனுப்ப வேண்டியதில்லையே? .
எனவே அல்லாஹ்வால் அருளப்பட்ட பகுத்தறிவில் அணுவளவேனும் பாக்கி வைத்திருக்கக்கூடிய ஒருவன் கூட இவ்வாறான செய்திகளை உண்மைப்படுத்த மாட்டான் . வழிகெட்ட சூபிகளால் மூளைச் சலவை செய்யப்பட்டு பகுத்தறிவை மகான்களுக்குக் காணிக்கையாகச் செலுத்திவிட்ட மூளையற்றவர்கள் வேண்டுமானால் இவ்வாறான விடயங்களை உண்மைப்படுத்தலாம் இவ்விடயம் ஒன்றில் திட்டமிடப்பட்ட வெறும் ஏமாற்று வேலையாக இருக்கும் . இல்லாவிடில் சைய்த்தான்களின் உதவியுடன் செய்யப்படும் செட்டப்பாக இருக்க வேண்டும் .சூபிகள் தமது இலக்கை அடைவதற்காக செய்த்தானுக்கு சிரம் பணிந்து சாஷட்டாங்கம் செய்யவும் தயங்கமாட்டார்கள். 5-குர்ஆன் ஹதீஸ் சட்டங்களை மறுக்கும் சூபித்துவம் .

ஸூபிகள் அல்குர்ஆனைப் பொறுத்த வரைக்கும் அது அல்லாஹ்வுடையது என்று ஏற்றுக் கொண்டாலும் அதன் சட்டங்களை மறுப்பதற்கு – நடைமுறைப் படுத்தாமல் புறக்கணிக்க இரண்டு வழிகளைக் கையாள்கின்றனர் .

– குர்ஆனின் சட்ட திட்டங்கள் அனைத்துமே அடிமட்டத்திலுள்ள- அல்லாஹ்வை நன்கு அறியாத பாமர மக்களுக்காகவே சொல்லப்பட்டிருக்கின்றன. உண்மையான மெஞ்ஞான அறிவைப்பெற்ற சூபி மகான்கள் எவ்வித வணக்க வழிபாடுகளும் செய்ய வேண்டியதில்லை, அவர்கள் சரீஅத் சட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டியதுமில்லை என்பார்கள் .

இஸ்லாத்தில் ஹராமாக்கப்பட்டவைகள் அனைத்தும் இவர்களுக்கு ஹலாலாகும் . மது மாது உற்பட அனைத்துமே இவர்களைப் பொறுத்த வரைக்கும் இபாதத்கள் என்ற குப்ரான கருத்தைக் கொண்டிருக்கின்றனர் . அப்படியானால் முஹம்மத் (ஸல்) உற்பட அனைத்து நபிமார்களுமே இறுதி மூச்சு வரை தொழுது கொண்டுதானே இருந்தார்கள்? நபியவர்கள் மரணப் படுக்கையிலிருக்கும் போது கூட தமது தோழர்களின் உதவியுடன் இரு புறமும் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொள்ள பள்ளிக்குச் சென்று தொழுதார்களே அவர்களது வாழ்க்கை பற்றி அவர்களின் அன்பு மனைவி ஆயிஷா ‘நபியவர்களின் பண்புகள் அனைத்தும் குர்ஆனாகவே – குர்ஆனுக்கேற்பவே இருந்தது’ என்று கூறியுள்ளார்களே … அப்படியாயின் நபியவர்கள் அடிமட்ட பாமர மனிதரா ? அவர்களுக்கு இந்த மெஞ்ஞானம் கிடைக்கவில்லையா என்று கேட்டால் அதற்குத் தரும் பதில் குப்ரின் மேல் குப்ராகவே இருக்கின்றது . ஆம் அவர்கள் சொல்கின்றார்கள்; நபிமார்களுக்கு இந்த மெஞ்ஞானம் கொடுக்கப் படவில்லைதான். நபிமார்கள் மெஞ்ஞானம் எனும் அறிவுக் கடலின் கரையிலேயே நின்று கொண்டிருந்தார்கள். ஆனால் சூபிகளான நாங்களோ அந்த மெஞ்ஞானத்தின் ஆழ்கடல் வரைக்கும் சென்று மூழ்கியிருக்கின்றோம் என்கின்றனர். ஆதாரம் : (சூபித்துவத்தின் சுய ரூபம் 450.)

-அல்குர்ஆன் போதனைகளை மறுக்க இவர்கள் கடைப்பிடிக்கும் அடுத்த யுக்தி அல்குர்ஆனுக்கு உள் அர்த்தம் வெளி அர்த்தம் என இரண்டு வகையான அர்த்தங்கள் உள்ளன என வாதிடுகின்றனர் . சாதாரண அறிஞர்கள் இதன் உள் அர்த்தங்களை அறிந்து கொள்ள மாட்டார்கள் . சூபித்துவ மெஞ்ஞான மேதைகளுக்கே?? இதன் உண்மை அர்த்தம் புலப்படும் என்று கதையளக்கின்றனர் .
உதாரணத்திற்கு மூஸா நபிக்கு அல்லாஹ் நபித்துவத்தை வழங்கிய வேளை ‘உனது இரு காலணிகளையும் கழட்டு ஏனெனில் நீ புனிதமான ஒரு இடத்தில் இருக்கின்றாய்’ என்றான் இங்கு ‘இரண்டு காலணிகளையும் ‘ என்பதற்கு அர்த்தம் உலக ஆசை, சொர்க்கத்து ஆசை ஆகியவற்றைக் களைந்து விடு என்பதாகும் என வாதிடுகின்றனர்.

அதே போன்று நபி இப்றாஹீம் அவர்கள் பிரார்த்திக்கும் போது ‘என்னையும் என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாற்றுவாயாக என்று பிரார்த்தித்தார்கள் . அதற்கு விளக்கமளிக்கும் சூபிகள் ‘சிலைகள் என்பதன் அர்த்தம் தங்கம் வெள்ளி போன்றவற்றிலுள்ள உலக மோகம்தான், மாறாக உண்மையில் சிலை வணக்கத்தை விட்டும் அவர்கள் பாதுகாப்புத் தேடவில்லை ஏனெனில் சிலையும் அல்லாஹ்தான் என உளறுகின்றனர்.. (நூல் : சூபித்துவமும் கஸ்ஸாலியும் ப: 131 )

அல்லாஹ்வின் அன்பு மாத்திரம் தான் உள்ளத்தில் இருக்க வேண்டுமென வாதிடும் இந்தப் போக்கிரிகளின் கருத்துப்படி தங்கம் வெள்ளி உலக வஸ்த்துக்கள் கூட அல்லாஹ்தானே? பிறகு ஏன் அவற்றின் ஆசை மனதில் இருக்கக் கூடாது .? அவற்றை வெறுக்க வேண்டுமென பிரச்சாரம் எதற்கு? அல்லாஹ்வுக்கே வெளிச்சம்!! .

அவ்வாறே நபி (ஸல் ) அவர்களுடைய ஹதீஸ்களை, பொன் மொழிகளை மறுப்பதற்கு இந்தக் கயவர்கள் மற்றுமொரு யுக்தியைக் கையாள்கின்றனர் . இது பற்றி பிரபல சூபித்துவப் பித்தனும் கிறுக்கனுமாகிய இப்னு அறபி இவ்வாறு உளறுகின்றான்…….
‘எத்தனையோ ஹதீஸ்கள் அவற்றின் அறிவிப்பாளர்கள் வரிசையைப் பார்க்கும் போது அவை ஸஹீஹானதாக, ஏற்றுக்கொள்ளக் கூடிய அமைப்பில் உள்ளன. (அதன்படி மக்கள் அமல் செய்து கொண்டும் இருக்கின்றனர்.) ஆனால் துன்யா மோகம் எனும் போலித்திரைகள் நீக்கப்பட்ட சூபிகளில் ஒருவர் தனது கஷ்புடைய நிலையில் ஞானப் பார்வையால் நபியவர்களைச் சந்திப்பார் . அவர்களிடத்தில் இந்த ஹதீஸ் பற்றிக் கேட்ட போது நபியவர்கள் நான் அப்படியொரு ஹதீஸைச் சொல்லவில்லையே அப்படியொரு தீர்ப்பை வழங்க வில்லையே எனக் கூறி மறுத்து விடுவார்கள். எனவே அந்த சூபிமகான் இந்த ஹதீஸ் போலியானது, பலவீனமானது என்பதை அல்லாஹ்விடமிருந்து நபி மூலம் நேரடியாகக் கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் அறிந்து கொண்டு அதன்படி செயற்படுவதை விட்டு விடுவார் . எனினும் பாமரர்கள் (அதாவது ஹதீஸ் கலை அறிஞர்கள்) அதன் அறிவிப்பாளர் வரிசை சரியாக உள்ளதே என்பதை மாத்திரம் பார்த்துக் கொண்டு அதன்படி அமல்ச் செய்து கொண்டிருப்பார்கள். யதார்த்தத்தில் உண்மை அதுவல்ல . (நூல் : குர்ஆன் தராசில் சூபித்துவம் ப: 17)

எனவேதான் சூபிகள் மார்க்கம் எனும் போர்வையில் தமது நச்சுக் கருத்துக்களைப் பரப்புவதற்கு ஏதுவாக தாம் அறிவை அல்லாஹ்விடமிருந்தும் நபி (ஸல்) அவர்களிடமிருந்தும் நேரடியாக தகவல்களை எடுப்பதாக நாடகமாடுகின்றனர் . ‘ஹத்த தனீ கல்பீ அன் றப்பீ’ என்னுள்ளம் எனது இறைவன் சொன்னதாக அறிவிக்கின்றது … என்று ஆரம்பித்து தம் விசக் கருத்தை மக்கள் மத்தியில் விதைப்பார்கள் .

இது பற்றி பிரபல வழிகேடன் இப்னு அறபி பேசுகையில்..
எங்களில் சிலர் நபியவர்களின் பிரதிநிதியாவார்கள். தமக்குக் தேவையான சட்டங்களை நேரடியாக நபியவர்களைச் சந்தித்துக் கேட்டறிந்து கொள்வார்கள், அல்லது தமது சுய ஆராய்ச்சியின் மூலம் அதற்குத் தீர்வு கண்டு கொள்வார்கள்.. எங்களில் இன்னும் சிலர் நேரடியாக அல்லாஹ்விடமிருந்தே தமக்குத் தேவையான சட்டங்களை எடுத்துக் கொள்கின்றனர் .இவர்கள் உலகிலுள்ள அல்லாஹ்வின் பிரதிநிதியாவார்கள். (ஆதாரம் தபகாத்துஸ் ஷஃரானி– சூபித்துவம் குர்ஆன்தராசில் 31 )

6– உலகத்தையே ஆட்சிசெய்யும் ‘ஸூபி ராஜ்ஜியம்’.
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனையே கடித்த குள்ள நரி என்ற முதுமொழிக்கேற்ப இந்த மதி கெட்ட சூபிகள் இஸ்லாத்தின் ஒவ்வொரு தூண்களிலும் சிறிது சிறிதாகக் கை வைத்து ஆட்டங்காணச் செய்து முதற்கட்டமாக தாம் இறை நேசச்செல்வர்கள் என்று புருடா விட்டு அதற்கப்பால் தமக்குக் கராமத் இருப்பதாகக் கூறி நபிமார்களுக்கு அல்லாஹ் கொடுத்த முஃஜிஸா அற்புதங்களைத் தோற்கடிக்கும் வகையில் போலி அற்புதங்களைப் புனைந்து, அதற்கப்பால் ஒரு படி மேலே சென்று நபிமார்களை விடவும் தாம் உயர்ந்தவர்கள் என்று வாதாடி இறுதியில் அல்லாஹ்வையே நாங்கள் தோற்கடித்து விரட்டி விட்டு அவனிடமிருந்து ஆட்சிப் பொறுப்பைப் பறித்துக் கொண்டோம். என்று சொல்வதைப் போன்று அல்லாஹ்வுக்குரிய அனைத்து வல்லமைகள் அதிகாரங்கள் அனைத்தும் தமக்கும் இருப்பதாக வாதிக்கும் நிலைக்கு வந்து விட்டனர் .

இதனை சிலர் நம்பாமல் இருக்கலாம் . ஏற்க மறுக்கலாம். அதற்காகத்தான் அவர்கள் கூறும் சில அதிசய நிகழ்வுகளை மாத்திரம் தொட்டுக் காட்டுகின்றேன் . புட்டுக் காட்டுவதானால் அதற்கே தனியாக பெரியதொரு புத்தகம் எழுத வேண்டியிருக்கும் . இச்சம்பவங்களை சில சூபித்துவ பக்தர்கள் ஆதார மற்றவை, மகான்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்டவை என்று கூடக் கூறலாம் . ஆனால் இச்சம்பவங்கள் உண்மையா? என்று ஆராய்ந்தறிவதில் அர்த்தமில்லை. காரணம் இவற்றில் அனேக சம்பவங்களில் இடம்பெறும் பாத்திரங்களுக்கு முகவரியேயில்லை. என்றாலும் இச்சம்பவங்கள் அவர்களது புத்தகங்களில் உள்ளன. அவர்களால் போதிக்கப்படுகின்றன. அதற்கும் மேலாக அவர்களிடம் இந்த நம்பிக்கை புரையோடிப்போய் அவர்களின் இதயங்களில் சங்கமித்து நிற்கின்றன . அவற்றை இவர்கள் வெளிப்படையாகவே பேசுகின்றனர், பிரச்சாரம் செய்கின்றனர் . எனவே அல்லாஹ்வின் சக்திகள் அனைத்தும் தமக்கும் இருப்பதாக சூபிகள் வாதிக்கின்றனர் என்பதை நிரூபிக்கவே பின்வரும் நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றேன் …

1- இப்படியும் பிள்ளை வரம்.

ஞான வழி நடந்த இறைநேசச் செல்வர்களில் ஒருவரிடத்தில் ஒருவர் வந்து தனக்காக ஒரு ஆண் குழந்தை கிடைக்க இறைவனிடம் துஆச் செய்யுமாறு வேண்டினார் . அதற்கு ஷேக் அவர்கள் ‘அதற்காக பெருந்தொகைப் பணம் செலவாகுமே ஒரு தொகைத் தங்கக் காசுகள் ஸதகாச் செய்வதற்காக எனக்குத் தர வேண்டும் என்றார். அதற்குச் சம்மதித்த அவர் சொன்னபடி பணமுடிச்சைக் கொண்டு வந்து கொடுத்தார் . அதன் பின் ஆண் குழந்தை கிடைப்பதற்காக துஆச் செய்தார் . ஆனால் அவருக்குப் பெண்குழந்தையே பிறந்தது . இதனால் ஆச்சரியப்பட்ட அவர் ஷேக் அவர்களே!! ஆண்குழந்தை கிடைக்குமென்றீர்களே பெண் குழந்தை தானே பிறந்துள்ளது என்றார் . இதைக் கேட்ட ஷேக் ‘நீ தரவேண்டிய பணத்தில் குறைபாடு செய்து விட்டாய் , அதனால் உனக்குக் கிடைத்த குழந்தையிலும் குறை ஏற்பட்டு விட்டது’ என்றார் . அதனால் கைசேதப்பட்ட அந்த நபர் ஷேக் அவர்களே உண்மை தான் . அதற்கு ஏதேனும் பரிகாரமுண்டா ? என வினவ ஆம் உண்டு. மிகுதிப்பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்றார் . உடனே அந்த மனிதர் மிகுதிப் பணத்தைத் திருப்பிக் கொடுத்ததும் ஆம் இப்போது வீட்டுக்குச் சென்று பார் என்றார். என்ன ஆச்சரியம்!! வீட்டுக்குச் சென்று பார்த்ததும் அதே பெண் குழந்தை ஆண் குழந்தையாக மாறியிருந்தது . (கஸ்பு ஸூபிய்யா 444)

2- சொர்க்கத்தை விற்பனை செய்யும் சூபிகள்.
ஷேக் மத்யன் அஹ்மத் அவர்களும் பிரபல சூபி மகானாவார்கள் . ஒருமுறை அவரிடத்தில் ஒரு பெண் வந்து முப்பது பொற்காசுகளைக் கொடுத்து எனக்கு மறுமையில் சொர்க்கம் வேண்டும் என்றாள் .அதற்கவர் இத்தொகை போதாது என்றார் .இதைத் தவிர வேறெதுவும் தன்னிடம் இல்லையென்று அவள் கூறியதும் சிறிது யோசித்து விட்டு பின்னர் அவள் சுவர்க்கம் செல்வதற்குத் தான் பொறுப்பென ஒப்புக் கொண்டார் . பின்னர் அப்பெண் இறந்ததும் அவளின் உறவினர்கள் இவ்வொப்பந்தம் செல்லாது என்று கூறி அப்பணத்தைக் கேட்டு ஷேக்கிடம் வந்தார்கள் . அன்றிரவு அப்பெண் அவர்களின் கனவில் வந்து ‘ஷேக் அவர்கள் வாக்குறுதியளித்தவாறு எனக்கு சொர்க்கத்தைத் தந்து விட்டார்கள் .எனவே அவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்’ என்றாள் .
(தபகாத்துஷ;ஷஃரானி 2-102 )

3-சூபிகளின் ராஜ்ஜியமா ? கேடிகளின் அராஜகமா?
லவ்ஹூல் மஹ்பூளில் உள்ளதை அறியும் ஸூபிகள் .
செய்யத் முஹம்மத் ஸூவைமிய் அவர்களும் பிரபல சூபித்துவ மகானாவார்கள் . அவர்களுக்கு மரண வேளை நெருங்கிய போது மலக்குல் மௌத்தானவர் அவர்களிடம் உயிரைக் கைப்பற்ற வந்தார்கள் . அதற்கு ஷேக்கவர்கள் நீர் தவறான தகவலினடிப்படையில் என்னிடம் வந்திருக்கின்றீர். எனக்கு இன்னும் அஜல் இருக்கின்றது இப்போது சென்று லவ்ஹூல் மஹ்பூள் பலகையைப்பார் என்றார். இதற்கேற்ப அவர் சென்று பார்த்தபோது இன்னும் பத்து வருடங்களுக்கு அவரது வாழ்நாள் நீடிக்கப்பட்டிருந்தது . பின் அவர்களுக்கு மரணவேளை நெருங்கிய போது தனதுமனைவியிடம் ‘தனக்குப்பின் நீ எவரையும் மணக்கக் கூடாது’ என்று கட்டளையிட்டார்கள் .

(அவரின் மனைவியுடன் அவர் ஒரு போதும் உடலுறவு கொள்ளாததால்) மனைவி கன்னிப் பெண்ணாகவே இருந்தார். இது பற்றி அப்பெண் உலமாக்களிடம் கேட்ட போது இச்சட்டம் நபியவர்களுக்கு மாத்திரமுள்ளது. எனவே நீ தாராளமாக மறுமணம் செய்யலாம் என்றார்கள் . இதன்படி அப்பெண் மறுமணம் செய்த போது முதலிரவில் கணவனுடன் இருந்த வேளை அந்த ஷேக் அங்கு தோன்றி அவளின் கணவனை ஈட்டியால் குத்திக் கொலை செய்துவிட்டார். அதன் பின் அப்பெண் மரணிக்கும் வரைக்கும் கன்னியாகவிருந்தே இருந்து இறந்தார். (தபகாத்துஷ்ஷஃரானி 2-103)

4-கர்ப்பத்திலுள்ளதையும், லவ்ஹூல் மஹ்பூளையும் அறிந்த சூபிமகான்.

ஜாக்கீர்கர்த்தீ என்பவர் பிரபல சூபியாவார்கள். இவர் ஒருமுறை வீதியால் செல்லும் போது பெண்கள் கூட்டமாகச் செல்வதைக் காண நேர்ந்தது . உடனே ஷேக் அவர்கள் ஒரு பெண்ணைச் சுட்டிக்காட்டி இப்பெண் காளை மாட்டின் மூலம் கர்ப்ப முற்றிருக்கின்றாள். அதன் நிறம் சிவப்பு அதன் வடிவம் இன்னது என்று சொன்னார் . பின்னர் அப்பெண் பிரசவித்த பின் காளை மாட்டின் குழந்தையை அறுக்க நேர்ச்சை செய்து அதற்கென ஒரு நபரையும் நியமித்தார் . மற்றுமொருவர் அவரிடம் வந்து தான் கடற்பயணம் செய்ய விருப்பதாகக் கூறினார் .அதற்கு அந்த மகான் கடலில் உனக்கு ஏதேனும் இன்னல்கள் ஏற்பட்டால் உடனே என் பெயரைக் கூறி அழைத்து அபயம் தேடு. நான் அபயமளிப்பேன் என்றார் . அதன் பின் ஷேக் கூறினார் . நான் ஒருவரைப் பாதுகாப்பதாக வாக்குறுதியளிப்பதென்றால் அவரின் பெயரையும் அவர் பற்றிய தகவல்களையும் லவ்ஹூல் மஹ்பூள் எனும் ஏட்டைப் பார்த்து அறிந்து கொண்டதன் பின்னரே வாக்குறுதியளிக்கின்றேன் என்றார், (தபகாத்துஷ்ஷஃரானி 2-106 )

5 -மாண்டோரை மீட்டு உயிர் கொடுக்கும் சூபி.

ஷேக் அதிய் அவர்களிடம் நான் ஒரு முறை சென்றிருந்தேன் . அப்போது வெளியூரிலிருந்து ஹூஸைன் என்பவரின் தலைமையில் ஒரு கூட்டத்தினர் அவரைச் சந்திக்க வந்திருந்தனர். அப்போது ஷேக்கவர்கள் வாருங்கள் இந்தத் தோட்டத்தைச் சுற்றி சுவரமைப்போம் என்றார் . உடனே அனைவரும் அவருடன் சென்று மலையைப் பெயர்த்துக் கற்களை எடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு பாறாங்கல் ஒருவர் மீது விழ அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்து அவரது உடல் சின்னாபின்னமாகி விட்டது . இதனை மக்கள் ஷேக் அவர்களிடத்தில் முறையிட்ட போது ஷேக் வானத்தின் பக்கம் கையை உயர்த்தினார். உடனே அம்மனிதர் எவ்வித மாற்றமுமின்றி முன்பிருந்தது போல் உயிர் பெற்றெழுந்தார். (ஜாமிஉன் நப்பஹானி 2- 297 )

பார்த்தீர்களா? … இந்தச் சூபியாக்கள் எவ்வளவு தந்திரமாக பாமர மக்களின் ஈமானுடன் விளையாடியிருக்கின்றார்கள். அல்லாஹ்வின் தனிப்பட்ட வல்லமைகளில் எதையுமே விட்டு வைக்காது ஆக்கல், அழித்தல் ,காத்தல், உயிர் கொடுத்தல், பிள்ளை கொடுத்தல் உலகில் அதிகாரம் செலுத்தல் போன்ற அல்லாஹ்வின் தனிப்பட்ட வல்லமைகள் அனைத்தையும் தமக்கு இருப்பதாக வாதிக்கும் இப்போலிச் சாமியார்களை ஓட ஓட விரட்டிக் கொல்ல வேண்டும்.
இவர்களால் எத்தனை லட்சோபலட்சம் மக்கள் ஈமானை இழந்து இவர்கள் காலடியில் தவம் கிடந்து நரகச்சீட்டைப் பெற்றுக் கொள்கின்றார்கள்.

கராமத் காட்டுகின்றார்களாம் !!
முதலில் கராமத் எல்லாம் இப்படி இறைவனை மறுத்து நான் தான் அல்லாஹ் என்பதாக வாதிடும் ஷைத்தான்களுக்கு ஏற்படுமா? அப்படியே நடந்தாலும் அது கராமத் அல்ல, ஷைத்தானின் சூழ்ச்சி !!. இது போன்ற சூழ்ச்சிகளை இவர்களென்ன சிலை வைத்து வணங்கும் இந்துசாமிகளும், மடாதிபதிகளும் சன்னியாசிகளும் கூடச் செய்கின்றார்கள் தானே ! அப்படியெனில் அவர்களும் இறைநேசச் செல்வர்களோ?

எனவே கராமத் என்பது அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்து நடக்கும் நல்லடியார்களில் சிலருக்கு அல்லாஹ் தன் புறத்திலிருந்து அம்மனிதனின் எவ்வித விருப்பு வெறுப்பின்றி அவரிடம் வெளிப்படுத்தும் சிலவற்றைக் குறிக்கும் . இவ்வாறு கராமத் ஏற்படாதவர்கள் கராமத் உள்ளவர்களை விட அல்லாஹ்விடம் நெருங்கியவர்களாகவும் இருக்கலாம் . ஏனெனில் நபியவர்களுக்கடுத்து அல்லாஹ்வின் அன்புக்குரியவர்கள் ஸஹாபாக்கள். இவர்களில் அதிகம் பேருக்கு எவ்விதமான கராமத்துகளும் இடம்பெற வில்லை. ஒரு முஃமின் தனக்கு சில வேளை கராமத் நடந்தாலும் கூட அதை மறைத்து மக்கள் பார்த்து விடக் கூடாதேஎனப் பயந்து – ஒரு வேளை ஷைத்தானின் சூழ்ச்சியாக இருக்குமோ, அல்லது அல்லாஹ்வின் சோதனையாகவிருககுமோ என அஞ்சி அடக்கத்துடன் இருப்பான் இப்படித்தான் உண்மையிலேயே கராமத் கொடுக்கப்பட்ட சில நல்லடியார்கள் கூட வாழ்ந்திருக்கின்றார்கள் . இவர்கள் ஒரு வேளை அல்லாஹ் நம்மைச் சோதிப்பதற்காகத்தான் இப்படித் தந்திருக்கின்றானோ என அஞ்சி நடுங்குவார்கள். மற்றவர்கள் அதைப் பார்த்து விட்டால் பிரபலப்படுத்தி விடுவார்களேயென்று பயப்படுவார்கள் .

நபி ஸூலைமான் (அலை) அவர்களுக்கு உலகின் அனைத்தையும் வசப்படுத்தி நினைத்ததை நடத்திக் காட்டும் அற்புதத்தை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்திருந்தான் . பல்கீஸ் ராணியின் சிம்மாசனம் ஒரு நொடிப்பொழுதில் தன்னிடத்தில் இருக்கக் கண்ட அவர்கள் என்ன சொன்னார்கள் …

‘அவர் சிம்மாசனம் தன் முன்னால் இருப்பதைக் கண்டதும் நிச்சயமாக இது அல்லாஹ் எனக்கருளிய அருளாகும் .நான் அவனுக்கு நன்றி செலுத்துகின்றேனா ? அல்லது மாறுசெய்கின்றேனா ? என என்னைச் சோதிப்பதற்காகவே எனக்கு இதைத் தந்துள்ளான்’ என்றார்கள் . (ஸூரா அந் நம்ல் 40 ம் வசனம் .)

எனவே அல்லாஹ்வுக்கு அடிபணிந்து நடக்காத – அவனுடைய வல்லமையுடன் போட்டிபோடும் இச் சூபிகளிடம் வெளிப்படுவது உண்மையில் ஷைத்தானிய சேஷ்டைகளே ! என்பது தெளிவாகின்றது . எனவே இவர்களின் சதி வலையில் வீழ்ந்து ஈமானை இழந்து விடாமல் குர்ஆன். ஹதீஸின் பக்கம் திரும்பி ஸஹாபாக்களின் வாழ்வு வாழ்ந்து இறை நேசர்களாக மரணிப்போமாக . . ஆமீன் …

தொடரும்

சூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 7 [1] சூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 9