- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

விருந்தும் மருந்தும்

இன்று அன்று
கடன்உடன் வாங்கி
காசிம் முகம்மது
கடைசி மகளின்
கயாணம் நடத்தினார்
பதினைந் தாயிரம்
பணமாய்த் தந்து
பத்துப் பவுனும்
போடஒப் பந்தம்
அங்கும் இங்கும்
ஆளாய்ப் பறந்ததில்
அல்லாஹ் உதவினான்
அனைத்தும் சேர்ந்தது
மாப்பிள்ளைத் தோழர்
முப்பது பேருடன்
மணவிழாக் காண
மேலும் நூற்றுவர்
வருவார் என்பது
வழிமுறைப் பேச்சு
காசிம் அதற்கென
கறியும் காயும்
கச்சித மாகக்
கடையில் வாங்கினார்
வந்தது மணநாள்
வந்தனர் விருந்தினர்
அன்புடன் அவர்களை
அழைத்து வீட்டில்
உட்காரச் செய்தனர்
உணவு பரிமாறினர்
கடமை உணர்வுடன்
காசிம் தயாரித்த
உணவை உண்டனர்
உண்டனர் உண்டனர்!
இருநூறு பேருக்கு
ஏற்ற உணவினை
ஒருநூறு பேரே
உண்டு முடித்தனர்!
காசிம் பதறினார்
கையைப் பிசைந்தார்
அதுவோ கிராமம்
அடுத்தென செய்வது?
மாப்பிள்ளை வீட்டார்
மல்லுக்கு நின்றனர்
அடிதடி அங்கே
அய்யகோ- அய்யகோ!
அறிஞர் அபுல்ஹஸன்
அன்தாகி வீட்டுக்கு
முன்னறிவிப் பின்றி
முப்பது விருந்தினர்
இரவில் வந்தனர்
என்னதான் செய்வது?
இருந்த உணவோ
எல்லோர்க்கும் போதாது
மேலும் செய்யவும்
முடியாதொரு நிலை
ஹஜரத் அவர்கள்
இருந்த ரொட்டியை
பிய்த்துப் போட்டனர்
பெரிதொரு தட்டில்
விரிப்பை விரித்தனர்
விருந்தினர் நடுவில்
தட்டை வைத்தனர்
தனித்துப சரித்தனர்
இருந்த விளக்கை
அணையச் செய்தனர்
அனைவரும் அமர்ந்து
உண்ணத் தொடங்கினர்!
ஹஜரத் அவர்களும்
அவர்தம் குடும்பமும்
உண்பது போல
உணர்த்தினர் – ஆனால்
வந்தவர் உண்ண
வைத்தவர் அனைவரும்
பாசாங்கு செய்தனர்;
பசித்திருந் தனரே!
உண்டு முடித்ததும்
ஒருவர் எழுந்து
விளக்கைப் பொருத்தினர்;
வியப்போ வியப்பு!
தட்டில் வைத்த
ரொட்டித் துண்டுகள்
கொஞ்சமும் குறையா
தெஞ்சிநின் றதுவே!
அடுத்தவர் உண்ணட்டும்
எனுமோர் நினைப்பில்
அனைவரும் காட்டிய
அற்புதப் பண்பை
எப்படிப் புகழ்வது?
என்னே இங்கிதம்!
அபுல்ஹஸன் அவர்களின்
அந்த விருந்தினரும்
காசிம் இல்லம்வந்த
கயாண விருந்தினரும்
சொந்த பந்தம்தான்
சோதர முஸ்ம்கள்தான்
என்ன செய்வது?
சொல்லுங்கள்…….
என்ன செய்வது?

தொடர்புடைய ஆக்கங்கள்

  1. Mohamedia HSS – HSC 2012 Results [1]