- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

எளிதாய் ஒரு தொழில்

இன்று அன்று
வாட்ட சாட்டமுகம்
வகையான கம்பீரம்
இனிய பேச்சு
எப்போதும் புன்சிரிப்பு
தூய வெண்ணுடை
தீட்சண்யமிகு பார்வை
கறுப்புத் தாடி
காய்த்துப் போனநெற்றி
பார்ப்போரை ஈர்க்கும்
பக்திப் பரவசமே!
பலவாறாய் சிரமப்
பட்டநம்ம முத்தலிபு
சில வருஷ மாக
சிரமமின்றி வாழ்கிறார்!
வீட்டைப் புதுப்பித்தார்
வயலிரண்டை வாங்கிப் போட்டார்.
வங்கியில் பணம் சேர்த்தார்
வாகனமும் வாங்கிவிட்டார்
என்ன தொழிலென்று
யாருக்கும் தெரியாது
எப்படி வசதி என்று
யூகிக்கவும் முடியாது
எளிதான தொழிலொன்று
இருக்கிறது என்றஉண்மை
இவருக்கே தெரியாது!
அதுஒரு தனிக்கதைதான்!
ஒருநாள் அவர் நண்பர்
உமருடன் இருக்கையிலே
பெரியார் ஒருவர்
பணிவாய் வந்துநின்றார்!
கையில் ஒருநோட்டு
கறுப்புநிற சூட்கேஸ¤
நேயமுடன் நோக்கினார்
நோட்டை நீட்டினார்.
வாங்கிப் படித்தஉமர்
வீட்டுக்குள் சென்றுவந்தார்
பத்து ரூபாயை
பரிவுடனே கொடுத்திட்டார்!
பெரிதாய் சலாம்சொல்லி
பெரியவரும் சென்றுவிட்டார்.
“பாவம்டா குமராளி
பத்து ரூபாய் குறைச்சல்தான்
ஆயிரம் இருந்தாஇப்ப
அள்ளிக் கொடுத்திடுவேன்”
என்றார் உமர்கான்
ஏக்கம் அவர் முகத்தில்!
முத்தலிபின் மூளையில்
முகிழ்த்ததொரு புதுத்திட்டம்!
மூலதனம் இல்லையென்று
முடங்கியது முட்டாள்தனம்
‘என்னவென்று விசாரிக்க
எள்ளளவும் துணியாது
எடுத்துக் கொடுக்குமிந்த
ஏமாளித் தனத்தை விட
என்னவொரு மூலதனம்
இருந்திட முடியுமென
எண்ணிய முத்தலிபு
இறங்கி விட்டார் காரியத்தில்!
இல்லாத ஊருக்கு
இவரொரு இமாமானார்
இரண்டுமுன்று குமர்களுக்கு
‘இல்லாத தந்தையனார்!
யத்தீம் கானாவுக்கு
இவர் ஒரு ‘சபீர்’ ஆனார்!
இரண்டு ரசீது புக்கு
இணையான ரப்பர்ஸ்டாம்ப்பு!
தேவை அவ்வளவே
தேடி வந்தது காசுபணம்!
சுதந்திரப் போரட்டம்
சூடு பிடித்தநிலை
சுண்டுவாடா சிறையில்
சிறையிருந்த மௌலானா
முஹம்மதலி ஜவ்ஹர்
மூன்றாண்டு அங்கிருந்தார்!
விடுதலை யாகி
வீடுவந்த நேரத்தில்
வீட்டில் வறுமை
வீராப்பே மூலதனம்!
சூழ்நிலை தெரிந்தார்கள்
சுற்றத்தார்; நண்பர்கள்!
பதினேழு ஆயிரத்தை
பண்போடு கொடுத்தார்கள்
அப்பணம் முழுவதையும்
அந்தக் கணத்திலேயே
போராட்ட நிதியினிலே
போட்டுவிட்டார் மௌலானா!
வீட்டுக்கு வந்துவிட்ட
வெளிநண்பர் ஒருவருக்கு
டீ கொடுக்க வக்கில்லை;
டாம்பீகம் காட்டவில்லை1
வீட்டின் வறுமையை
வெட்கமின்றிச் சொல்லிவிட்டார்.
நண்பர் நெகிழ்ந்தார்
நழுவினார் அங்கிருந்து
அவர் சென்ற பிறகுதான்
அங்கிருந்த நூறுரூபாய்
அவர்விட்டுச் சென்றதென்று
அவர்களுக்கு விளங்கியது!
அந்த நேரத்தில்
அவசரத் தேவைக்காய்
அங்கு வந்த பெண்ணிக்கு
அந்தரூபாய் தனைக்கொடுத்து
அகமகிழ்ந்தார் மௌலான;!
அதுவன்றோ இஸ்லாமியம்!
அந்த’நம்ம மௌலானா’வும்
இந்த ‘நம்ம முத்தலிபு’ம்
சொந்த பந்தம்தான்
சோதர முஸ்லிம்கள்தான்
என்ன செய்வது?
சொல்லுங்கள்………
என்ன செய்வது?