- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

நெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்!

ராமநாதபுரம் பாரதி நகரின் பள்ளிவாசலுக்குப் பின் அந்த பங்களா வீடு உள்ளது.குறிப்பிட்ட அந்த நாள் முழுவதும் அந்த வீட்டைச் சுற்றி ஜனத்திரள்!

அத்தனை பேரும் அழுகையும் கண்ணீருமாய் இருள் சூழ்ந்துவிட்ட நிலையிலும் ‘ஜனாஸா’வந்து சேரவில்லை. அப்பகுதியின் அத்தனை சமுதாயப் பிரமுகர்களும் சோகமே உருவாக நின்று அளவளாவிக்கொண்டு கடைசியாக அந்த இளைஞரின் ஜனாஸாவை – திருநெல்வேலியில் இறந்து போன அந்த குலக்கொழுந்தின் மரித்த உடலைச் சுமந்துவந்த வேன் வந்து சேர்ந்தது!

ஆஜானுபாகுவான – அழகும் கம்பீரமும் – அறிவுத் தீட்சண்யமும் ஒருசேர அந்தப் பகுதியில் சுறுசுறுப்புடன் இயங்கி வந்த குடும்பத்தின் ஒரே வாரிசான அந்த 28 வயது இளைஞனின் ஜனாஸாவை வேனிலிருந்து இறக்கிய போது, அந்தப் பகுதியே அழுகைக் குரல் எழுப்பிய அந்த கணத்தை இன்று நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது! உணர்வுகள் மரத்துப் போகின்றன.

விபத்தா? கொலையா என்பதை இக்கட்டுரையைப் படித்த பிறகு வாசகர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்!

என் கிளினிக்கில் முதன் முதலாக அந்தப் பள்ளிச்சிறுவனைச் சந்தித்த நினைவு இப்போதும் பசுமையாக இருக்கிறது! அங்கு அவன் சிகிச்சைக்காக அழைத்து வரப்படவில்லை. ஒரு பிரபல ரெஸிடென்சியல் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த அவன், அங்கு தொடர்ந்து படிக்க மறுத்த போது அவனை எப்படியாவது ‘கன்வின்ஸ்’ செய்வதற்காகக் கல்விசார்ந்த களப்பணி ஊழியனான என்னிடம் அவனுடைய தாயாரால் அழைத்து வரப்பட்டிருந்தான்! அவனுடைய அழகிய தோற்றமும், துருதுரு விழிகளும், நுனிநாக்கு ஆங்கிலமும் என்னைக் கட்டிபோட்டது!

“ஏன் அந்தப் பள்ளியில் பயில விருப்பமில்லை?” என்று கேட்டேன்.
அதற்கு அவன் சொன்ன பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது!
அந்தப்பிள்ளை வளர்ந்தான்! பல பள்ளிகள், பயிற்சி கூடங்கள்! அவன் அறிவுக்கும் திறமைக்கும் சராசரித் தனமான பள்ளிச்சூழ்நிலைகள் அவனைக் கட்டிப்போட முடியாமல் கலங்கி நின்றன!

அவனுடைய வேகத்துக்கு இடம் கொடுக்க யாராலும் முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்! அவன் பெற்றோர் கலங்கினர்; கைபிசைந்து நின்றனர். பல தொழில்களில் முத்திரை பதித்தான்; வயதை மீறிய முதிர்ச்சியுடன் அவன் மேலே மேலே வந்துகொண்டிருந்தான்! இளம் தொழிலதிபர் என்று பெயர் பெற்றான்! எங்கள் சந்திப்பு குறைந்துபோனது. ஆனால் அவ்வப்போது எங்கிருந்தாவது போன் செய்வான். அவை எல்லாம் சமூகம் சார்ந்த களப்பணி சம்பந்தப் பட்டதாகவே இருக்கும்!

எனக்கு அவன் கடைசியாக போன் செய்தது அவன் மௌத்தாவதற்கு ஒரு வாரத்துக்கு முந்தி, சென்னையிலிருந்து….அடுத்து வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் நான் எங்கள் தொகுதியில் போட்டியிடவேண்டும் என்ற வேண்டுகொளுடன்!அதற்கு அவன் பல காரணங்களைச் சொன்னான்!என்னால் அது முடியாது என்பதை விளக்கிவிட்டு அவன் காட்டிய ‘அரசியல் வேகம்’ அதீதமாக இருப்பதைச் சுட்டிக் காட்டி, மிதப் படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஆலோசனை சொன்னேன்.அதை அவன் ஏற்றுக் கொள்ளவில்லை!

அடுத்த வாரமே என் முன் ஜனாஸாவாக வந்திறங்கி என்றுமே வாழ்க்கையில் மறக்க முடியாத ரணத்தை ஏற்படுத்தினான்!
கைஸர்!
அது அவன் பெயர்!

அவனது பெற்றொர் என் உற்ற நண்பர்கள்!
கற்றவர்கள்;கனிவும் சமூகத் தாக்கமும் மிக்கவர்கள்; கடமைக்காகத் தேய்ந்தவர்கள்!

தந்தை ஒரு சர்வதேச கம்பெனியின் மண்டல மேலாளராகப் பணியாற்றியவர்! தாயார் எழுத்தாளர்; சமூகச் சிந்தனையாளர்!
கைஸர் எப்படி திருநெல்வேலி போனானான்?

அது ஒரு வரலாற்றுக் கொடூரம்!
தமிழகத்தை – ஏன்? இந்தியாவையே உலுக்கிய கொடூர தாண்டவம்! தமிழகக் காவல் துறையின் கறை படிந்த பக்கங்களை நிரப்பிய அவலம்!

டாக்டர் கிருஷ்ணசாமி மாஞ்சோலையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்காக ஒரு போராட்டம் நடத்தினாரே, நினைவிருக்கிறதா? அதற்கு ஆதரவு தர பல இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் அங்கே வரவழைக்கப் பட்டிருந்தனர்.
அப்படி ஒரு முஸ்லிம் அமைப்பின் தொண்டனாக அங்கே சென்ற கைஸர், பாலத்தின் இருபுறமும் தடை போட்டு காவலர்கள் கொலைவெறித் தாக்குதல்(தடியடி) நடத்திய போது நட்ட நடுவில் மாட்டிக் கொண்டான்! வக்கிர எண்ணம் கொண்ட அந்தக் காவலர்களின் கொலைவெறித் தாக்குதலிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் ஆற்றில் குதித்தானா? அல்லது அடியில் மயங்கி விழுந்த அப்பாவியை அங்கிருந்த காவல் மிருகங்கள் ஆற்றில் வீசினவா? எனத் தெரியவில்லை.

அல்லாஹ்வே அறிவான்!
அங்கு சென்று பார்த்தபோது, அவன் ஆற்றில் மிதந்து கொண்டிருந்திருக்கிறான்!
ஜனாஸா அடக்கத்தின் போது அவனுடைய தந்தை என் கைகளைப் பிடித்துக்கொண்டு, “மை சன் கேஸ் டைட் பார் நத்திங்க், டாக்டர்” என்று திரும்பத் திரும்பச் சொல்லி அரற்றிக்கொண்டிருந்தது நெஞ்சை இன்னும் உலுக்கிக்கொண்டே இருக்கிறது!

விசாரணைக் கமிஷன் போட்டார்கள்!
பத்திரிக்கைகளும் அரசியல் வாதிகளும் வானத்துக்கும் பூமிக்கும் குதி குதியெனக் குதித்தனர்!
போராட்டத்துக்கு அழைப்புவிட்டவர்கள் சகல சௌபாக்கியங்களுடன் சர்வ சாதாரணமாக நம் முன்னே வலம் வருகிறார்கள்!

கைஸர் தன் திருமணத்துக்காகக் கட்டிய அந்த மாளிகை வீடு- கண்ணாடியால் இழைத்த வீடு அவன் திருமணத்தைப் பார்க்கவில்லை; அது அதற்குக் கொடுத்து வைக்கவில்லை!
இந்த மாதம் கைஸரின் பெற்றோரை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் சந்தித்தேன். அரைநாள் அவர்களுடன் இருந்தேன். அவர்களுடைய குடும்பம் இந்த இடைக் காலத்தில் சந்தித்த பிரச்சினைகள் கொஞ்ச நஞ்சமல்ல!
தாயார் மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டிருக்கிறார்!
மார்க்க ஞானம் அவர்களைக் காப்பாற்றியிருக்கிறது!
தவக்கலின் உறுதிப் பாட்டில் அவர்கள் கரை சேர்ந்திருக்கிறார்கள்!
கிட்டத்தட்ட 10 – 12 மணி நேரத்தில் நாங்கள் கைஸரைப் பற்றி எதுவுமே பேசிக்கொள்ளவில்லை!
சமுதாயத்தின் இளந்தலைமுறையின் எதிர்காலம் பற்றித்தான் பேசினோம்!அந்த அளவுக்கு முதிர்ச்சி அந்த உயர்ந்த பெற்றோருக்கு!

அதே போராட்டத்தில் இன்னும் ஒரு முஸ்லிம் இளைஞனும் மரித்தான்.பலர் காயமுற்றனர்.அவர்களின் குடும்பம் பற்றி எனக்குத் தெரியவில்லை.அந்தக் காயத்தால் அவர்களும் துவண்டு போய்த்தான் இருப்பார்கள்!

நம் சமுதாயத்துக்கு அல்லாஹ் நிறைய உணர்ச்சிமிகு இளைஞர்களைத் தந்திருக்கிறான். புனிதமான அவர்களின் உணர்ச்சிகளுக்கு ஆக்கப் பூர்வமான வடிகால் அமைத்துக் கொடுப்பதற்கு பெரும்பாலான சமுதாயத் தலைமைகள் தவறி விட்டன. அதன் காரணமாக கைஸர்கள் தங்களுக்கும் பிரயோஜனப் படாமல், தங்கல் குடும்பங்களுக்கும் ஒன்றும் செய்ய முடியாமல், சமுதாயத்தையும் கைவிட்டுவிட்டுப் போக நேரிடுகிறது!அல்லது சிறைகளில் வாட நேரிடுகிறது.
சமுதாயம் இப்போது மாஞ்சோலை சம்பவத்தை முற்றிலுமாக மறந்துவிட்டது!

ஆனால் அது மறக்கக்கூடாத சம்பவம் என்பதால் ஊற்றுக்கண்ணாய்ப் பிரசவித்திருக்கிறது!

ராமநாதபுரத்துக்கு நான் செல்லும் ஒவ்வொரு முறையும் கைஸர் அடங்கியிருக்கும் அந்த கபுருஸ்தான் பக்கமே காரை ஓட்டுமாறு டிரைவரைப் பணிக்கிறேன். கைஸரின் நினைவில் அமிழ்ந்துபோகிறேன்.