- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

சகோதர பாசம்

இன்று அன்று
சக்தி உள்ளவரை
சளைக்காமல் உழைத்ததனால்
சத்தார் ராவுத்தருக்கு
சொத்துக்கள் ஏராளம்!
இரண்டே பிள்ளைகள்
இருவருமே ஆண்மக்கள்!
இருவருக்கு மிடையில்
ஈராறு வருடங்கள்!
பெரியவன் அமீர்
பின்னவன் அன்வர் அலி!
மனைவி மரியம்
மௌத்தாகி விட்டதனால்
அமீரின் அரவணைப்பில்
அன்வரை விட்டுவிட்டு
அத்தா சத்தாரும்
அல்லாஹ்வின் அழைப்பேற்றார்!
அண்ணன் அமீரும்
அவன்மனைவி ஆஷிக்காவும்
சின்னவன் அன்வரை
சித்திரவதை செய்தார்கள்!
பள்ளிக்குச் சென்றுவந்த
பாலகனாம் அவனின்
படிப்பை நிறுத்தி
பலவேலையும் கொடுத்து
அடித்துக் கண்டித்து
அன்றாடம் வதைசெய்தார்!
பழுத்துக் காய்ந்த
பழமிரும்பில் சூடிட்டார்!
எழுத்தில் எழுதவொண்ணா
ஏசல்களால் அவமதித்தார்!
உடன்பிறந்த சகோதரனை
ஒரேரத்த முடையவனை
அனைத்துச் சொத்திலும்
அரைப்பங்குக் குரியவனை
அனாதை போல
அமீரும் ஆட்டி வைத்தான்!
கொடுமை தாங்காமல்
குழந்தை அன்வரும்
மனசு குழம்பினான்;
மருகினான்; கலங்கினான்!
பித்தம் சரியாக,
பேயவனை விட்டோட
ஏர்வாடி தர்ஹாவில்
இரக்கமின்றிக் கட்டிவைக்க,
அண்ணனும் அண்ணியும்
அவசரமாய்த் திட்டமிட,
அன்வரலி வீடைவிட்டு
அன்றே ஓடிப்போனான்!
மக்கத்துக் குறைஷியர்
மாபெரும் சினம்கொண்டார்!
மாநபிகள் அவர்களையும்
மாண்புமிகு தோழரையும்
எல்லா வகையிலும்
இம்சித்தார்; இழித்துரைத்தார்!
கொடுமை தாழவில்லை;
குணக்கேடர் திருந்தவில்லை!
ஏக இறைக் கொள்கையை
ஏற்றிட்ட இனியவரை
எங்கு கண்டாலும்
எட்டி உதைப்பதையே
இனியபொழுது போக்காக
ஏற்றிட்ட வேளைஅது!
வேறு வழியில்லை
வேந்தர்நபி வழிதொடர்ந்து
மதினா சென்றார்கள்
மன அமைதி தனை நாடி!
உற்றார் உறவினரை
உடன்பிறந்த சகோதரரை
சொத்து சுகங்களை
சூழ்ந்திருந்த வசதிகளை
விட்டுவிட்டு வந்த
வீரவர லாறுஇது!
அந்த முஹாஜிர்களை
அன்புடனே வரவேற்ற
அன்சாரித் தோழர்களை
அடுத்துப் பார்ப்போமே!
முன்பின் அறியாத
முஹாஜிர்ச் சகோதரனை
உடன்பிறந்த பிறப்பாக
உடனேற்ற அவர் கதை
உலகம் காணாத
ஒப்பற்ற நிலையாகும்!
வீட்டில் பாதியை
விரைந்து பகிர்ந்து
வீடில்லா முஹாஜிருக்கு
விரும்பிக் கொடுத்தார்கள்!
மொத்தச் சொத்தில்
முறையாய்ப் பாதியை
சத்த மின்றி
சமமாய் அளித்தார்கள்!
இரண்டு மனைவியரை
இல்வாழ்வில் கொண்டிருந்தோர்
ஒருத்தியை ‘தலாக்’சொல்லி
ஒருவருக்குக் கட்டிவைத்தார்!
அப்துல் ரஹ்மான்பின்
அவுஃப் என்ற முஹாஜிர்களும்
ச அத் பின் ரபீ ஆ
என்ற அன் சாரிகளும்
சரித்திரக் காட்சியிலே
சாகாத நிலைபெற்றோர்!
அந்த அன்சாரிகளும்
இந்த அமீர்களும்
சொந்த பந்தம்தான்
சோதர முஸ்லிம்கள்தான்!
என்ன செய்வது…?
சொல்லுங்கள்……..
என்ன செய்வது?