- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

அந்தத் தோற்றம்! உரை லாவகம்! அத்துடன் ..

1987 – ல் சுறுசுறுப்பான எழுத்துலகப் பிரவேசம் . 89 -ல் வெளியூர்களிலிருந்து விழாக்களுக்கான அழைப்புகள்! மாவட்டத்துக்குள் மட்டுமே விழாக்களில் கலந்து கொள்ள முடியும் என்ற தொழில்சார்ந்த சூழல்! ஆனால் ஓர் எல்லையில் வெளிமாவட்டங்களுக்கும் சென்றாகவேண்டிய கட்டாயம் நேர்ந்தது. காரணம், விழாவுக்கு அழைத்தவர்கள் சமுதாய முன்னோடித் தலைவர்கள் அல்லது மிக நெருக்கமான வாசகர்கள்.

சமுதாய விழாக்களில் மறக்க முடியாத அளவுக்கு மிகப் பெரிய கூட்டங்கள் கூடுவது தஞ்சை மாவட்டத்து பள்ளிவாசல் திறப்பு விழாக்களில்தான். எனக்குக் கிடைத்த அத்தகைய ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் சிந்தனைச் சித்தர் நீடூர் சயீது ஹாஜியார் அவர்கள் என்பதையும், மயிலாடுதுறை மஸ்ஜிதே மஹ்மூதியா திறப்பு விழா அது என்பதையும் ஏற்கனவே ஊற்றுக்கண்ணில் சொல்லியிருந்தேன். அந்த விழாவில் ஊர் திரும்பும்போது ஹாஜியார் மறக்காமல் சொன்ன இன்னொரு விசயம் முக்கியமானது.”அடுத்த முறை நாம் சந்திக்கும் போது உங்களை தாடியுடன் சந்திக்க வேண்டும் ” என்ற வேண்டுகோள்தான் அது.

அதற்கு முன் அது பற்றிய சிந்தனை இருந்ததில்லை என்பதே உண்மை. உண்மையில் அடர்த்தியான தாடி எனக்கில்லை. ” முடி அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும்போது எப்படி தாடி வைப்பது? ” என்று கேட்டேன். உடனே பதிலைத் தயாராய் வைத்திருந்த ஹாஜியார் “அப்படிப் பட்ட தாடியைத்தான் பெருமானார் (ஸல்) அவர்கள் மிகவும் ரசித்திருக்கிறார்கள்” என்றார். இன்ஷா அல்லாஹ்” என்று சொல்லிவிட்டு ஊர் திரும்பிவிட்டேன். ஆனால் அதற்கான ஆயத்தம் செய்யவில்லை. அன்றாடம் ஷேவிங் தொடர்ந்தது. மெல்ல மெல்ல ஹாஜியார் அவர்கள் சொன்னதும் மறந்தும் போனது எனலாம்.

தூர தொலைவில் வெளி மாவட்டத்தில் நான் ஆரம்ப காலத்தில் கலந்துகொண்ட இன்னொரு விழா கடலூர் மாவட்டம் ஆயங்குடியில் சமுதாயத்தலைவர் சிராஜுல் மில்லத் அவர்கள் தலைமையில் நடந்த மீலாது விழா! ஆயங்குடி சிறிய ஊர்தான் ; ஆனால் ஏராளமான ஆலிம்களையும் கல்லூரிப் பட்டதாரிகளையும் உருவாக்கிய ஊர். முஸ்லிம் லீகின் அரண் என்று பெயரெடுத்த ஒரு கட்டுக் கோப்பான ஊர்.

மணிச்சுடர் , முஸ்லிம் முரசு, நர்கிஸ் இதழ்கள் அங்கே அதிகம் அறிமுகம் என்பதால், அவற்றில் அடிக்கடி கட்டுரைகள் கதைகள் எழுதும் என் பெயரும் பெரிய அளவில் பரிச்சியம். குறிப்பாக மணிச்சுடரில் சமுதாயப் பிரச்சினைகள் சம்பந்தமாக வாரத்துக்கு மூன்று நான்கு கட்டுரைகள் வரும். எனக்கு நிறைய வாசகர் கடிதங்கள் அடிக்கடி அவ்வூரிலிருந்து வரும் . அவை வெறும் பாராட்டுக் கடிதங்களாக மட்டும் இல்லாமல் அறிவார்த்தமான விவாதங்களாக அமைந்திருக்கும். அவர்களில் இளைஞர்கள் சிலர்; பெரியவர்கள் சிலர்; சகோதரிகள் சிலர் என்று ஒரு கலவை. அப்போதெல்லாம் எவ்வளவு பணிகளுக்குள்ளும் அனைவருக்கும் பதில் எழுதிவிடுவேன்.

அவர்களது அன்பிணைப்பின் வழியாக அவ்விழாவுக்கு அழைக்கப் பட்டிருந்தேன். அதிலும் தலைவர் தலைமையில் சமுதாயக் கல்விப் பிரச்சினை – குறிப்பாக பெண்கல்வி சம்பந்தமான தலைப்பு. அவ்விழாவில் நான் பேசும் முன்பு மேடையில் உட்கார்ந்திருந்தபோது மேடையில் அமர்ந்திருந்தவர்கள் ஒவ்வொருவரையும் உற்று நோக்கினேன். லால்பேட்டை மதரஸா முதல்வர் ஜக்கரியா ஹஜரத் அவர்கள் … சிராஜுல் மில்லத் முஸ்லிம் லீக் பிரமுகர்கள் … என்று அத்தனை பேர் முகத்திலும் சங்கையான தாடி! நான் மட்டும் தாடி இல்லாமல்!

இவ்வளவுக்கும் என் தந்தையார் தமது திருமணத்தின் போதே தாடியுடன் இருந்தார்கள் என்பதும் அவர்கள் அறுபது வயதில் அல்லாஹ்விடம் மீண்டது வரை அது இருந்தது என்பதும் எனக்குத் தெரிந்தே இருந்தது! உடனே சயீது ஹாஜியார் அவர்கள் சொன்ன விசயம் நினைவுக்கு வந்ததோடல்லாமல் என்னை வதை செய்யவும் தொடங்கியது; ஒரு குற்ற உணர்வு மனதில் உறுத்திக் கொண்டிருக்க உரை முடித்து ஊர் திரும்பிய சில நாட்களில் ஆயங்குடியிலிருந்து அந்தக் கடிதம் வந்தது!

அவ்விழாவில் நான் ஆற்றிய கல்வி சம்பந்தமான அவ்வுரைக்கு விரிவான விமரிசனம் செய்துவிட்டு அக்கடிதத்தை எழுதிய வாசக அன்பர் இறுதி வரிகளாக எழுதியிருந்த வரிகள்தான் மேலே தலைப்பாகக் குறிப்பிட்டுள்ளவை!

“அந்தத் தோற்றம்….! உரை லாவகம் ….. ! அந்த கம்பீரம் …….! அத்துடன் தாடியும் இருந்துவிட்டால்…? “

எனக்குப் பொட்டில் அடித்த மாதிரி இருந்தது!

எந்த நேரத்தில் ஆயங்குடியில் எனக்குள் ஒரு குற்ற உணர்வு ஏற்பட்டு நான் மருகிக் கொண்டிருந்தேனோ அந்த நேரத்தில் அந்த வாசகர் மனதுக்குள் இப்படி நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார்..!

அந்த வரிகளைப் படித்த போது ஏற்பட்ட உணர்வுகளை விளக்க எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை!

ஆனால் அதன் பிறகு நான் தாடியுடன்தான் அடுத்த சமுதாய மேடையில் ஏறினேன்!

அந்த மறக்க முடியாத வாசகர் …. இன்றும் சுறுசுறுப்புடன் சமுதாய இதழ்களை வரி விடாமல் வாசித்து தம் மனதில் பட்டதை கொஞ்சமும் மறைக்காமல் தாட்சண்யமின்றி வெளிப் படுத்திவரும் எழுத்தாளர் –  சிந்தனை வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான ஓய்வுபெற்ற ஆசிரியர் கண்ணியத்துக்குரிய முஹம்மது இப்ராஹிம் அவர்கள்தான்!

nandri -sinthanaissaram -march -2006

சிந்தனைச் சரத்துக்கு அனுப்ப :

முகவரி:
பி 8/40 , மல்லிகை குடியிருப்பு,
இரண்டாவது மாடி, கே.கே.நகர், மதுரை -625020