- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

ஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….

 மேலே சுட்டெரிக்கும் வெய்யில்! ஜனத்திரளின் அடர்த்தியில் வெப்பத்தின் தகிப்பு. பின்னால் வருபவர்களீன் உந்துதலில் முன்னால் செல்பவர்களுடன் மோதிக்கொண்டு எறும்பு ஊர்வதுபோல் நடைப் பயணம். இடுப்பில் ஒரு துண்டு. தலையில் சுமார் 10 -15 கிலோ எடைகொண்ட ஒரு பை. இரு கைகளையும் உயர்த்தி பையை உறுதியாகப் பிடித்துக் கொண்டதால் தான் கீழே விழுந்து விடுவதிலிருந்து காப்பாற்ற முடியும். கீழ்த்துண்டு மெல்ல அவிழ்ந்தால்கூட அதைக் கட்டிக்கொள்ள கையும் இல்லை. அதற்கு முண்டித் தள்ளும் கூட்டம் அவகாசமும் தரா து. பத்துப் பதினைந்து கிலோ எடையை விடுங்கள்; மூன்று நான்கு கிலோ எடையைக் கூட தலையில் சுமந்து சென்ற முன் அனுபவம் அறவே இல்லை.

விழி பிதுங்கியது. வியர்வையில் உடல் குளித்துக் கொண்டிருந்தது. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க என்னைத் தொட்டபடியே உடன் நடந்து வந்துகொண்டிருந்த மனைவியைப் பார்த்தேன். அவரது தலையிலும் சுமார் ஏழு கிலோ முடிச்சு. வாய்ப் பேச்சால் ஒருவரையருவர் ஆசுவாசப் படுத்திகொள்வதற்கான வாய்ப்பில்லாத நிலையில் கண்களால் ஆதங்கங்களைப் பகிர்ந்து கொண்டே நடந்து கொண்டிருந்தோம்.

எப்போது அந்தக் குறித்த எண் கூடாரம் வரும்?

தெரியவில்லை…….
விசாரித்தவர்களுக்கு மொழி புரியவில்ல. கைகளில் கட்டியிருந்த அடையாள வவலையல்களைக் காட்டியும் – காவலர்கள் சுட்டிக் காட்டிய திசையில் நடந்தும் சோர்வின் உச்சியில்! எந்த நேரமும் மயக்கப் பட்டு விடலாம் என்ற நிலை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை மருத்துவ மூளை எச்சரித்துக் கொண்டிருந்தது.

நாங்கள் மினாவின் வீதிகளில் நடந்து கொண்டிருந்தோம். எங்களுக்கன கூடாரத்தைத் தேடிக்கொண்டிருந்தோம். எங்களுடன் வந்தவர்களில் பலரும் அவரவர்களின் லக்கேஜுடன் கிட்டத்தட்ட எங்கள் நிலையிலேயே தவியாய்த் தவித்து நடந்து கொண்டிருந்தனர்.

கொஞ்சம் புத்திசாலித்தனமாக எந்தப் பொருளையும் சுமக்காமல் வந்திருந்த ஆளூர் அப்துஷ் ஷுக்கூர் ஹஜரத் அவர்களும், தேரிழந்தூர் , நாச்சியார் கோவில் ஹழரத்மார் இருவரும் எங்கள் நிலை கண்டு இரங்கி கொஞ்சம் கை மாற்றி உதவினார்கள்.

ஏன் ? என்னாயிற்று?

முஜ்தலிபாவில் இருந்து மினாவில் கொண்டுவந்துவிட்ட பேருந்து சாலை எண் மாற்றி இறக்கிவிட்டுவிட்டது. எங்கள் பேருந்துப் பொறுப்பாளர் அடுத்த தெருதான், மெல்ல நடந்து வந்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அடுத்த தெருதானே…? என்ன பெரிய விசயம்? என்ற நினைப்பில் நடக்கத் தொடங்க…….. எல்லாத் தெருக்களுமே ஒரே மாதிரியாய்..!எல்லா வளைவுகளுமே ஒரே மாதிரியாய்!

எண்கள் மாறி மாறி எங்களைக் குழப்ப , நடக்கிறோம்… நடக்கிறோம்…..நாங்கள் தேடிய எண் தவிற வேறு எல்லா எண்களுமே வருகின்றன.!

கிட்டத் தட்ட மூன்று மணி நேரத் தேடுதலுக்குப் பிறகு, கிட்டத் தட்ட மயங்கி விழும் நிலையில்தான் கூடாரத்தை அல்லாஹ் அடையாளம் காட்டுகிறான்.

எங்களுடன் ஹஜ்ஜுக்கு வந்தவர்கள் அனைவரும் ஏற்கனவே கூடாரத்தை அடைந்து, எங்களைக் காணாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களைப் பார்த்ததில் நிம்மதிப் பெருமூச்சு!அல்ஹம்துலில்லாஹ்!

வெய்யில் படாத அறையில் நவீன வாழ்க்கை வசதிகளுடன் உல்லாசமாக வழ்க்கையைக் கழித்திருந்த நிலையில் எப்படியானதொரு அனுபவம்!

என் கிராமத்தில் அல்லது தமிழகத்தின் ஏதாவது ஒரு பகுதியில் தலையில் பையைச் சுமந்துகொண்டு நானும் என் மனைவியும் நடந்து போவது சாத்தியமா?

தான் என்ற அகந்தை அல்லது ஈகோ அதற்கு இடம் கொடுக்குமா?

இட்டதைச் செய்ய ஏழுபேர் வேலைக்கு!

தொட்டதைத் தூக்கித்தர பத்துப்பேர் உதவிக்கு!
என்ற இறுமாப்புநிலை முற்றிலுமாக அழிக்கப் பட்ட கணம் அல்லவா அந்த மினா அனுபவம்!

இப்போதுதன் நடந்தது போல் இருக்கிறது.

ஆனால் பத்தாண்டுகள் பறந்துவிட்டன.

ஹஜ்ஜை முடித்த அனுபவங்களின் அழுத்தமும் தாக்கமும் கொஞ்சம் கூட மறையவில்லை. மனதின் மேடு பள்ளங்களைச் சமன் படுத்திய அந்த மகத்தான மார்க்கக் கடமையின் மகத்துவம் இம்மிகூடக் கரைந்துவிடவில்லை!.தீர்க்கம் குறைந்துவிடவில்லை!

மனதில் நிரந்தரமாய் பசுமையாய் பாய்விரித்துப் படுத்திருக்கிறது.

இறுதிக் கடமையான ஹஜ்ஜை முடித்துவிட்டு தாயகம் திரும்பும் ஹாஜிகளின் நெஞ்சங்களில் அலாதியான ஒரு நிறைவு!

ஹஜ்ஜின் அனுபவங்கள் அலையலையாய் ஆர்ப்பரிக்க ,மக்காவிலும் மதினாவிலுமே அவர்களின் எண்ணங்களின் சஞ்சாரம்!

ஒவ்வொரு ஆண்டும் ஹாஜிகள் திரும்பி வரும்போது பத்தாண்டுகளுக்கு முன் மினாவில் பெற்ற அந்தப் படிப்பினை மீண்டும் தடம் பதித்து என்னுள் நிலைபட்டுக் கொள்கிறது.

அந்த ஊற்றுக்கண்ணின் பிரவாகமே இந்தக் கட்டுரை!