- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

கதையெல்லாம் விக்யாதுங்க தம்பி..

எண்பதுகளின் கடைசிப் பகுதி. கதாசிரியனாகி – அங்கீகாரமும் பெற்று பரவலான வாசகப் பரப்பை எட்டியிருந்த நேரம். ஒரு நாளைக்கு நான்கு ஐந்து வாசகர் கடிதங்களாவது வரும். சில இதழ்களில் இருந்து வாசகர் கடிதங்கள் கட்டுக் கட்டாகவும் வந்து சேரும். வாசகர் கடிதங்கள் எந்த அளவுக்கு ஓர் எழுத்தாளனுக்கு உந்துவிசையாக உதவ முடியும் என்பதை அனுபவப் பூர்வமாக அறிந்து கொண்டிருந்த நேரம் அது!

ஆரம்பத்தில் கதைகளைப் பற்றி பாராட்டி எழுதிக்கொண்டிருந்த வாசகர்கள் ஒரு விசயத்தை ஒன்று சொன்னாற் போல திரும்பத் திரும்ப வலியுறுத்தத் தொடங்கினார்கள். அதுவரை இதழ்களில் வெளிவந்து பரவலான பாராட்டைப் பெற்ற கதைகளில் சிலவற்றைத் தொகுத்து நூலாக்க வேண்டும் என்ற வேண்டுகோள்தான் அது.

இது பற்றி அதிகம் எழுதியவர்களுள் கம்பம் இலக்கியச் செல்வர் அண்ணன் முகம்மது அலி அவர்கள் மிக முக்கியமானவர். ஒரு வாரத்தில் இரண்டு மூன்று கடிதங்களை அவர் எழுதுவார் – அனைத்திலும் மறக்காமல் கதைகளை நூலாக்குவது குறித்துக் குறிப்பிடுவார்.

ஓர் எழுத்தாளனுக்கு அவனது ஆக்கம் இதழில் வந்தவுடன் ஏற்படும் குறுகுறுப்பை – சந்தோஷத்தை வெறும் வார்த்தைகளால் எல்லாம் வர்ணித்துவிட முடியாது. ஒரு பத்துப் பதினைந்து நாட்களுக்காவது அந்த இதழும் அதில் வந்த அவனது ஆக்கமும் மனக் கண்ணில் பூச்சி காட்டிக் கொண்டே இருக்கும். அவற்றையெல்லாம் நூலாக்கிப் பார்ப்பது என்பது ஓர் எழுத்தாளனின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம் என்பது அப்போதுதான் மனசுக்குள் துளிர்த்து – அது செடியாகியிருந்த காலக் கட்டம்.

பதிப்புத் துறை பற்றிய எந்த அனுபவமும் இல்லாத நேரம். எந்தப் பதிப்பாளருடனும் தொடர்பும் கிடையாது. மருத்துவத் தொழிலின் உச்சத்தில் இருந்ததால், இதற்காக மெனக்கெடவும் போதிய அவகாசமும் இல்லை. ஒரு சிறிய கிராமத்தில் – அருகில் இருந்த இராமனாதபுரமும் கூட அப்போது ஒரு பெரிய கிராமம்தான் என்ற நிலை – வாழ்ந்துகொண்டு பதிப்பகம் வைத்துச் செயல்படுவதற்கெல்லாம் ஆசை இருக்கலாம்; ஆனால் நடைமுறைப் படுத்துவது அனேகமாக முடியாது என்ற முடிவுக்கு வந்திருந்த நிலையில் ஒரு நாள் ஒரு நினைப்பு வந்தது. சமுதாயத்தின் பிரபலமான பதிப்பக உரிமையாளர்களிடம் பேசிப் பார்த்தால் என்ன என்பததுதான் அந்தப் பேராசை!

இரண்டு மூன்று பேருடன் பேசிப் பார்த்தபோது, அவர்களில் பலருக்கு என்னை -என்பெயரை பத்திரிக்கைகளில் பார்த்த விசயம் தவிர வேறு எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆர்வத்துடன் என் சிறுகதைகளை நூலாக்குவது பற்றிப் பேசியதுமே போனைத் துண்டிப்பதில்தான் அக்கறை கட்டினார்கள். அவர்கள் அனைவரும் ஒரு விசயத்தை மட்டும் மறக்காமல் அடித்துச் சொன்னார்கள். “கதையெல்லாம் விக்யாது தம்பி..’ என்ற வார்த்தைகள் தான் அது. அன்றாடம் வந்து கொண்டிருக்கும் வாசகர் கடிதங்கள் பற்றிச் சொன்னதும் அவர்கள் ” தம்பி அவங்க பாட்டுக்குக் கடிதம் எழுதிவிட்டுச் சும்மா இருந்துடுவாங்க… ஒருத்தரும் காசு கொடுத்து வாங்கிக்ப் படிகமாட்டாங்க ” என்றும் அறிவுறுத்தினார்கள். ஒரு சிலர் விற்காமல் கிடக்கும் நூல்களைப் பற்றியும் சொல்லி விரக்திக்குத் தள்ளினார்கள். அந்த நினைப்பே அதன் பிறகு மனதின் ஒரு மூலைக்குள் பதுங்கிக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும்!

இந்த நிலையில்தான் தொடந்து வலியுறுத்தி வந்த முகம்மது அலி அண்ணன் ஊருக்கு வந்து என்னை சந்தித்தார். அவரிடம் பதிப்பாளர்களுடன் பேசிய அனுபவத்தப் பகிர்ந்து கொண்டேன்.

அவர் அப்போது கேட்ட கேள்விதான் இன்று மல்லாரி பதிப்பகம் சுமார் 35 நூல்களை வெளிட்டு, சமுதாயப் பதிப்புத் துறையில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்து நிற்கும் யதார்த்தத்தின் திருப்புமுனைச் சரிதமாகும்.

அவர் கேட்டார், ‘யாரிடமும் நீங்கள் ஏன் கெஞ்ச வேண்டும்? நீங்களே ஒரு பதிப்பகத்தைத் தொடங்கிவிட வேண்டியது தானே? ”

அது முதலில் என்னைக் கேலி செய்வது போல்தான் பட்டது.
அவர் விளக்கினார்.

” தம்பி .. இது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. பரந்த என் பார்வையில் உங்கள் எழுத்துக்கு சமுதாயத்தில் ஒரு மரியாதை இருக்கிறது என்பதை என்னால் அறிய முடிகிறது. ஒரு ஆறாயிரம் – ஏழாயிரம் மூலதனமிடுங்கள். ஒரு தொகுதியை வெளியிடுங்கள்…. அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாமே? ”

” வெறும் ஆறாயிரத்தில் ஒரு நூலை வெளியிட்டுவிட முடியுமா என்ன?” – நான் ஆச்சரியத்துடன் கேட்டேன்.

” வேறு எப்படி நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? ”

இப்படித் தொடர்ந்த எங்களது உரையாடல் எனது முதல் நூலாகவும் ‘ மல்லாரி பதிப்பக’ த்தின் தலைச்சான் குழந்தையாகவும் வெளிவந்த ” விருந்து ” சிறுகதைத் தொகுதி !

விருந்து வெளியீட்டு விழாவிலேயே 300 பிரதிகள் விற்றது.
மூன்று நான்கு மாதங்களீல் ஆயிரம் பிரதிகளும் விற்றன.

1990 ஜனவரியில் விருந்து வந்தது. அவ்வாண்டின் இறுதியில் கீழக்கரையில் நடந்த ‘உலக இசுலாமியத் தமிழிலிலக்கிய மாநாட்டில் ” ருசி ” எங்களது அந்த ஆண்டின் 6 -வது நூலாக வந்தது.

இலங்கை ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளது போல, 1950 – -க்கும் 1990- க்கும் இடையில் வந்த இசுலாமிய சிறுகதைத் தொகுதிகளின் எண்ணிக்கையையும் 1990- க்குப் பிறகு – விருந்து வெளியான பிறகு வந்த தொகுதிகளின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தால், விருந்து ஒரு திருப்பு முனையைத் தந்த நூல் என்பது தெரியவரும்.

இதன் மூலம் நான் சொல்ல வருவது – குறிப்பாக இளையர்களுக்கு – தைரியமாக சொந்தமாகவே உங்கள் நூலை வெளியிடுங்கள். என்னைப் போல பலர் சொந்த பலத்தில் தான் இன்று பதிப்புத் துறையில் காலூன்றி நிற்கின்றனர்.