- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

குரோதம்

இன்று அன்று
ஊரில் பங்களா
ஊரைச்சுற்றி நிலபுலங்கள்!
டவுனில் கமிஷன்மண்டி
டஜன்டஜனாய் வாகனங்கள்!
பேங்கு லாக்கரில்
பேல்பேலாய் நகைநட்டு!
அந்தக் காலத்தில்
அரசாண்ட மன்னருக்கு
ஒப்பான சொத்துக்கள்
‘ஓடையடி சுலைமானுக்கு!
அந்தச் செல்வந்தரின்
அழகான பங்களா
சோகத்தில் மூழ்கி
சோர்ந்து கிடந்தது!
மகன் மஹ்மூது
மலைத்துபோய் நின்றான்!
மக்கள்; பேரன்கள்
மாடிவீட்டு உறவினர்கள்
மண்டிக் கிடந்தார்கள்!
மவுனமாய் அழுதார்கள்!
எல்லா டாக்டர்களும்
‘இறைவன் விட்ட வழியென்று’
இங்கிதமாய்ச் சொல்லி
இங்கனுப்பி விட்டார்கள்!
‘நேர எதிர்பார்ப்பில்’
நேரம் கழிகிறது!
அந்த நேரத்தில்
அத்தாவின் முகத்தில்
ஏதோ சமிக்ஞை;
எழுந்தான் மஹ்மூத்!
அருகில் சென்றவுடன்
அவன்காதில் முணுமுணுத்தார்!
“பிழைக்க மாட்டேன்;
பிரிவுபற்றி வருந்தாதே!
பக்கத்துத் தோப்புக்கார
பக்கீர் மைதீனுக்கு
பரிவு கட்டாதே;
பாதை கொடுக்காதே!
அந்த ராஸ்கல்
அபுபக்கர் நைனாவுக்கு
எல்லா வகையிலும்
இடைஞ்சல்செய்; அப்பத்தான்
என்னோட ஆத்மா
எளிதில் சாந்திபெறும்!”
என்றார் சுலைமான்
இருட்டுமுன்னே மௌத்தானார்!
சொந்தக் குரோதத்தை
சாகும்வரை கொண்டுபோன
இந்த சுலைமானின்
இம்மைநிலை, ஐயகோ!
சிலுவைப் போர்ச்சிற்பி
சுல்தான் சலாஹுத்தீன்!
இங்கிலாந்துப் படையை
எதிர்கொண்ட பேரரசர்!
உலகத்து அரசரெல்லாம்
உவந்து போற்றிவந்த
ஒப்பற்ற வீரர்;
ஒழுக்கத்தின் சிகரம்!
ஜெருஸலம் வென்ற
செழுதகையாளர்; மகான்!
அந்திமக் காலம்
அவரருகில் வந்தது!
படுத்த படுக்கை;
பலகீனம்; அதிசோர்வு!
செல்வமகன் ஸாகிரை
சீக்கிரம் அழைத்தார்!
“அன்பு மகனே!
ஆண்டவனே மாபெரியோன்!
அவனருள் தன்னில்
அடைக்கல மாகிவிடு!
இறைபக்தி யொன்றே
இவ்வாழ்வின் ஆணிவேர்!
அரசும் அதிகாரமும்
அனைவர்க்கும் தொண்டுசெய்ய!
ஏழை எளியவர்க்கு
என்னாளும் அன்புகாட்ட!
ஊழியரை மதித்திடு
உண்மைக்கு மதிப்புக்கொடு!
எனக்கு வந்தபுகழ்
என்னன்பால் வந்ததுதான்!
அதிகாரம் தந்ததல்ல;
அதை உணர்; பணிவுகொள்!
எந்தக் காலத்திலும்
இரத்தம் சிந்துதற்கு
நீமுதற்காரணமாய்
நிற்காதே என்மகனே!”
என்ற சலாஹுத்தீன்
ஏகயிறை யிடம்மீண்டார்!
அந்த சலாஹுத்தீனும்
இந்த சுலைமானும்
சொந்த பந்தம்தான்..
சோதர முஸ்லிம்கள்தான்!
என்ன செய்வது?
சொல்லுங்கள்…
என்ன செய்வது?