- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

சூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20

ஆறாம் நம்பர்: தஃவத் தப்லீக்.

தஃவத் தப்லீக் என்பது உயர்தரமான அமல். இது நபிமார்கள் செய்துவந்த வேலை என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. நபிமார்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவற்றில் எவ்வித கூட்டலோ குறைத்தலோ மாற்றமோ இன்றி மக்களை அதன்பக்கம் அழைத்தார்கள்.  அதன் பிரகாரமே இறுதி நபியான எங்கள் முஹம்மது (ஸல்) அவர்களும் இஸ்லாமியப் பணி செய்து விட்டு மரணிக்கும் போது தனது உம்மத்தான எம்மிடம் அப்பொறுப்பை ஒப்படைத்து விட்டுச் சென்றுள்ளார்கள்.  இது ஒரு அமானத்.  இதை நாம் அவர்கள் சொன்னவாறு செய்யவேண்டுமா இல்லையா? தப்லீக் அமைப்பினர் அப்படித்தான் செய்கின்றார்களா?  மேலே நான் எடுத்துக் காட்டிய மார்க்கத்துக்கு முறணான விடயங்கள் இவர்களிடம் இருக்கின்றனவா? என்று பாருங்கள்.  அதன் பின் நீங்களாகவே முடிவெடுங்கள்.

இங்கு தப்லீக் அமைப்பு பற்றி இஸ்லாமிய அறிஞர்கள் கூறிய சில தகவல்களைத் தருகின்றேன். இவை வெறும் அவர்களின் சொந்தக் கருத்துக்களல்ல.  பல்வேறு தலைசிறந்த அறிஞர்கள் தப்லீக் அமைப்பு பற்றி வெளியிட்ட கருத்துக்களைச் சேகரித்து சவூதி பத்வாக்குழு மையத்தினரே வெளியிட்ட புத்தகமொன்றிலிருந்து பெறப்பட்ட தகவல்கள். ..

இவர்களெல்லாம் ஏன் தப்லீக் அமைப்பைக் கண்டிக்கின்றார்கள் என்பதைத் தக்க காரணங்களோடு சுட்டிக் காட்டுகின்றார்கள்.  இவைகளும் உங்களுக்கு மேலதிகத் தெளிவைத் தரக்கூடும் எனும் நம்பிக்கையில் அந்த பத்வாக்களில் சிலவற்றைக் கூறுகின்றேன்.  விரிவாகப் பார்க்க விரும்புபவர்கள் சவூதியரேபிய பத்வா நிலையத்தால் வெளியிடப்பட்ட ‘ கஸ்புஸ்ஸிதார் அம்மா தஹ்மிலுஹூ பஃலுல் ஜமாஆத் மில் அக்தார்’ எனும் நூலைப் பார்க்கவும்.


தப்லீக் அமைப்பு பற்றி சில உலமாக்கள். .

1-அப்துல்லா இப்னு பாஸ்(முன்னாள் சவூதியரேபியாவின் முப்தி).

தப்லீக் அமைப்பினரைப் பொறுத்த வரைக்கும் அவர்களிடத்தில் அகீதா – இறை நம்பிக்கைக் கோற்பாடு பற்றிய நம்பிக்கையில் எவ்வித தெளிவும் இல்லை. எனவே சுன்னத் வல் ஜமாஅத்தினரின்(நபிகளாரும் ஸஹாபாக்களும் கொண்டிருந்த அகீதாவில் போதிய தெளிவில்லாத எவருமே இதில் வெளிக் கிளம்பிச் செல்வது கூடாது.  சரியான இறை நம்பிக்கைக் கோற்பாட்டை துறைபோகற் கற்றவர்கள் வேண்டுமானால் அதுபற்றி விளக்குவதற்காக,கற்றுக் கொடுப்பதற்காக அவர்களுடன் செல்லலாம். தப்லீக் அமைப்பினர் தமது பணியில் மிக உற்சாகமானவர்கள். எனினும் தவ்ஹீத் சுன்னா, பிக்ஹூ – மார்க்கச் சட்டம் போன்றவற்றில் போதிய தெளிவுள்ள உலமாக்கள் மூலம் இவர்களுக்கு நிறைய விடயங்கள் போதிக்கப்பட வேண்டியிருக்கின்றது.  இவர்களிடம் நிறைய மௌட்டீக, பித் அத்தான, ஷிர்க்கிய்யதான விடயங்கள் காணப்படுகின்றன.  எனவே இது பற்றி விளக்கும் அல்லது தடுக்கும் சக்தியுள்ளவர்களே இதில் செல்லலாம்.  அவர்களுடன் வெளிக்கிழம்பி அவர்கள் செய்வதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்க முடியும் எனும் நிலையிலுள்ளவர்கள் இதில் செல்லக் கூடாது. (மஜ்முஉல் பதாவா -இப்னு பாஸ்)

2- அல்லாமா நாஸிருத்தீன் அல்பானி அவர்கள் தப்லீக் அமைப்பு பற்றி. . (பிரபல ஹதீஸ்க்கலை மேதை)

‘தப்லீக் ஜமாஅத்தைப் பொறுத்த வரைக்கும் அது அல்குர்ஆன் – நபிவழியிலோ, முன்சென்ற நல்லோர்(ஸஹாபாக்கள், தாபியீன்கள்) வழியிலோ நடக்கும் ஓர் அமைப்பல்ல.  எனவே அவர்களுடன் வெளிக்கிளம்பிச் செல்வது கூடாது.  காரணம் நமது வழி நபிவழியாகும்.  இவர்களின் வழி அதற்கு மாற்றமானதாகும். இவர்களுடன் வெளிக்கிழம்பிச் செல்பவர்களைப் பொறுத்த வரை அவர்கள் அதை விட்டு விட்டு தமது பகுதியிலுள்ள குர்ஆன் ஹதீஸின் பக்கம் அழைக்கும் உலமாக்களிடத்தில் இஸ்லாத்தைப் படிப்பது அவசியமாகும்.  அதே போல் தூய இஸ்லாத்தைப் படித்த உலமாக்கள் இவர்களை அணுகி குர்ஆன் ஹதீஸ் வழிப்படி இவர்களுக்கு இஸ்லாத்தைக் கற்றுக் கொடுப்பதும் அவசியமாகும். தப்லீக் அமைப்பினர் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலேயே தமது அழைப்புபணி அமைய வேண்டும் என்பதில் அசட்டையாக இருப்பவர்கள்.  இவ்விடயத்தில் இக்வானுல் முஸ்லிமீன் எனும் அமைப்பினரும் இவர்களும் ஒன்றே. தமது தஃவாப்பணி குர்ஆன் ஹதீஸ் வழியிலுள்ளது என வாதிடுவார்கள். ஆனால் அது வெறும் வாய்ப்பேச்சேயாகும். இவர்களிடம் எந்த அகீதாவோ, கொள்கையோ கிடையாது.  அனைவருக்கும் அங்கு இடம் கிடைக்கும்.  யார் விரும்பினாலும் அதில் இணைந்து கொள்ளலாம்.  ஒருவர் அஸ்அரி,மற்றொருவர் மாத்துரிதிய், இன்னுமொருவர் ஸூபிய் இப்படி அனைவருக்கும் அது புகலிடம் ஏனெனில் அவர்கள் ‘ வெளிக்கிளம்பிச் சென்று பின் படி ‘ என்கின்றார்கள்;.  நாம் சொல்கின்றோம் படித்துவிட்டு வெளிக்கிளம்பு என்று.  ஏனெனில் இஸ்லாத்தைச் சரிவர கற்காதவர்கள் வெளிக்கிழம்பி எதன் பக்கம் மக்களை அழைக்க முடியும்?.  எதை க்கற்றுக் கொடுக்க இயலும்.  இஸ்லாத்தின் பெயரால் தமக்குத் தெரிந்த கட்டுக்கதைகளையும் கப்ஸாக்களையுமே சொல்லிக் கொடுக்க முடியும்.  அதுதான் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றது.  சமூகத்திலுள்ள சீர்கேடுகள், மார்க்க விரோதக் கொள்கைகளை நீக்குவதிலும் இவர்கள் எவ்வித பங்களிப்பும் செய்ய மாட்டார்கள். ஏனெனில் இது அவர்களின் எண்ணப்படி பிரிவினையைத் தோற்றுவித்து விடும். ஒரு சிலர் இவர்களால் ஏற்பட்டுள்ள நன்மைகளைச் சுட்டிக்காட்டி இவர்களுடன் வெளிக் கிளம்புவதை நியாயப்படுத்துகின்றனர்.  எந்தவொரு அமைப்பாக இருப்பினும் அதற்கு ஆதரவாளர்களும் அதனால் நன்மைகள் ஏற்படுவதும் இயல்பே. . அவர்கள் எதன் பக்கம் அழைக்கின்றர்கள் என்பதே எமது கேள்வி.  இவர்கள் மக்களுக்கு அல் குர்ஆனைப் படித்துக் கொடுக்கின்றார்களா?  நபிமொழிகளை அதன் சட்டதிட்டங்களைப் படித்துக் கொடுக்கின்றார்களா?  ஸலபுகளின் அகீதாவின் பக்கம் அழைக்கின்றார்களா?  மத்ஹபு மீதான வெறியைக் களைந்து சுன்னாவின் வழிநடக்கப் பாடுபடு கின்றார்களா?  எதுவுமே இல்லை.  எனவே இவர்களிடம் இஸ்லாமிய அறிவு என்று சொல்வதற்கு எதுவுமில்லை.  எந்தெந்த இடங்களில் இருக்கின்றார்களோ, செல்கின்றார்களோ அதற்கேற்ப நடந்து கொள்வதும் தேவையேற்படின் நிறம்மாறிக் கொள்வதுமே இவர்களது வழிமுறையாகவுள்ளது. (பதாவா இமாராத்திய்யா – அல்பானி ப: 37)

3-ஷேக்அப்துர் ரஸ்ஸாக் அல் உபைபி.  (சவூதி உலமாக்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்) தப்லீக் பற்றி…

தப்லீக் அமைப்பினர் உண்மையைச் சொல்லப் போனால் பித்அத் வாதிகள். காதிரியா ஜிஸ்தியா போன்ற தரீக்காக்களைச் சார்ந்தவர்கள்.  அவர்களுடன் வெளிக்கிழம்பிச் செல்வது அல்லாஹ்வின் பாதையில் வெளிக்கிளம்புவதாக ஆகாது – இல்யாஸ் (மௌலானா) காட்டிய பாதையில் சென்றதாகவே அமையும்.  அவர்களது தஃவத் குர்ஆன் ஹதீஸின் பக்கம் உள்ளதல்ல.  அவர்களின் தவைலரான இல்யாஸ் (மௌலானா) பக்கமே உள்ளது.  அல்குர்ஆனில் சொல்லப்பட்ட ‘அல்லாஹ்வின் பால் அழைத்தல், வெளிக்கிழம்புதலென்பது’ ஜிஹாத் செய்வதையே குறிக்கும்.  தப்லீக்கில் வெளிக்கிழம்புவதற்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.  எனக்கு மிக நீண்ட காலம் தொட்டே அவர்களைப் பற்றித் தெரியும். அவர்கள் பித்அத் வாதிகள். அவர்கள் அமெரிக்கா, இஸ்ரேல் ,யகிப்து ,ஸவூதி போன்ற எங்கிருந்த போதிலும் தமது ஷேக்மார்களுடனேயே தம் முழுத் தொடர்புகளையும் வைத்திருப்பார்கள். (பதாவா அப்துர் ரஸ்ஸாக் பாகம் 1 ப: 174)

4-அஸ்ஸெய்க் ஸாலிஹ் அல் பௌஸான். (சவூதி உலமாக்கள் ஒன்றிய உறுப்பினர்.)

அல்லாஹ்வின் பாதையில் வெளியாகுதல் என்பது தப்லீக் அமைப்பினர் சொல்வதைப் போன்றதல்ல. அல்லாஹ்வின் பாதையில் வெளிக்கிழம்பல் என்பது யுத்தத்திற்காக வெளிக்கிளம்புவதையே குறிக்கும்.  இவர்கள் அப்பெயரை தமது செயலுக்குச் சூட்டிக் கொண்டது பித்அத் ஆகும்.  அதே போல் அழைப்புப்பணிக்காக செல்பவர் இஸ்லாமிய அறிவு பெற்றவராக இருப்பது அவசியம் அல்லாஹ் கூறுகின்றான். …

நபியே ‘இதுதான் எனது வழி நானும் என்னைப் பின்பற்றியவர்களும் அல்லாஹ்வின் பக்கம் தெளிவான அத்தாட்சி-அறிவின் மூலம் அழைக்கின்றோம்’ என்று சொல்லு ங்கள் என்கின்றான். (ஸூரா யூஸூப் வசனம் 108)

ஏனெனில் இஸ்லாத்தின் பக்கம் அழைப்பவர் ஷிர்க் எது பித்அத் எது? ஹராம் எது ஹலால் எது? என்பன போன்ற விடயங்களை ஆதாரத்துடன் தெரிந்து வைத்திருத்தல் அவசியம் இஸ்லாமிய அறிவு ஒவ்வொருவருக்கும் அவசியம்.  அது இல் ஹாமிய்யத்(மெஞ்ஞானம்) மூலமோ, வெறுமனே வெளிக்கிளம்பிச் செல்வதாலோ ஏற்படப்போவதில்லை.  வழிகெட்ட சூபிகளே இவ்வாறு கூறுவர்.  இல்ம் இல்லாமல் அமல் செய்வதால் வழி கேட்டுக்குச் செல்லும் அபாயம் உள்ளது.  கற்காமல் அறிவு கிடைக்கும் என நினைப்பது கிணறு தோண்டாமல் தண்ணீர்பெற நினைப்பது போல் மனப்பால் குடிப்பதற்குச் சமனாகும். (மூன்று முக்கிய உரைகள் – 155 பௌஸான்)

5-ஷேக் அப்துல் காதிர் அர்நாவூத் (பல்வேறு ஆய்வு நூல்களின் ஆசிரியரும் ஹதீஸ்கலை மேதையும்.)

தப்லீக் ஜமாஅத்தினர் காதிரிய்யா நக்ஷபந்திய்யாத் தரீக்காக்களின் பக்கம் மறைமுகமாக அழைப்பவர்கள்.  அகீதா -இஸ்லாமிய இறைநம்பிக்கைக் கோற்பாட்டுடன் அதற்கு முரணான நம்பிக்கைகளையும் கலந்து விட்டவர்கள்.  சுன்னத்தான விடயங்களுடன் பித்அத்தானவைகளையும் கலந்து விட்டவர்கள். இஸ்லாத்தில் ஜிஹாத் பற்றிய செய்திகளை மறைத்து விட்டு மனதுடன்(ஷேத்தானுடன்)போராடுவதே ஜிஹாத் எனும் ஸூபி த்துவக் கருத்தைப் போதிப்பவர்கள்.  இஸ்லாத்தின் அடிப்படை மூலமந்திரமான அகீதாவைப் பற்றிப் பேசாது அதன் பக்கம் மக்களை அழைக்காது அதற்கடுத்துள்ள விடயங்களில் ஈடுபடுபவர்கள்.  எனவே நபியவர்கள் காட்டித்தந்த குர்ஆன் கூறிய வழியின் பக்கம் அவர்கள் மீள வேண்டியது அவசியம்.. அல்லாஹ் றஸூலிடமிருந்து தஃவத் பணியை எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டுமனக் கட்டளையிடப்பட்டதோ அந்த தவ்ஹீதிலிருந்து தஃவத்திதை மீண்டும் இவர்கள் ஆரம்பிக்க வேண்டும்.  இவற்றையெல்லாம் இவர்கள் சீர்செய்யாத நிலையில் இவர்களுடன் வெளிக்கிழம்புவது பித்அத்தாகவே, இவர்களின் அமைப்பை ஆதரிப்பதாகவே அமையும்.  இவர்கள் தம்மைத் திருத்திக் கொண்டு நபிவழிப்படி தஃவத் செய்து தூய அகீதாவை ஏற்று நல்லேராக வாழ்ந்து மரணிக்க அல்லாஹ் அருள் பாலிப்பானாக
(كشف الستار ص1 (அப்துல் காதிர் அர்நாவுத் – தமஸ்கஸ்

6-(மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழக அதிபர்) ஷேக் ஸாலிஹ் அல் அபூத் தப்லீக்கைப் பற்றி. ..

இஸ்லாம் எனும் நீதித் தராசிலே தப்லீக் ஜமாஅத் ,இக்வானுல் முஸ்லிமீன் ஆகிய இரு அமைப்புக்களையும் நிறுத்துப் பார்ப்பது நல்லதென நினைக்கின்றேன். இவ்விரு இயக்கமும் தாம் மாத்திரமே தூய இஸ்லாத்தின் பக்கம் அழைப்பதாக நினைத்துக் கொண்டு ஷிர்க்கிலும் பித்அத்திலும் மூழ்கியிருக்கும் தமது நாட்டில் தஃவாச் செய்யாது (ஆயிரக்கணக்காண உலமாக்கள் உள்ள சவூதியில் அவர்களுக்கு எவ்வித வேலையும் இல்லாதிருந்தும் இங்கு பிரவேசித்து தமது அணிக்கு ஆள்ச்சேர்ப்பு நட வடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.  தமது நாட்டில் இவர்கள் செய்ய வேண்டிய இஸ்லாமியப்பணிகள் நிறையவே இருக்க இங்கே எதற்காக இவர்கள் வரவேண்டும்?.  இவர்கள் தூய இஸ்லாத்தின் பக்கம் அழைக்கவில்லை.  முதலில் இவர்களிடமுள்ள மத்ஹபு வெறி, இயக்க வெறி,ஆணவம் போன்றவற்றை இவர்கள் களைந்து விட்டு இக்லாஸூடன் தூய இஸ்லாத்தைப் படிக்க வேண்டியுள்ளது.  (கஸ்புஸ்ஸிதார் பக்கம்: 84)

7-மதீனா ஜாமிஆ இஸ்லாமிய்யாவின் போதனாசிரியர் ஸாலிஹ் அஸ்ஸூஹைமி தப்லீக்கைப் பற்றி. ..

‘தப்லீக்கின் பெரியார்கள் ஸூபிஸ தரீக்காக்களான நக்ஷ பந்திய்யா, ஸஹ்ரவர்திய்யா, காதிரிய்யா,ஜிஸ்திய்யா போன்ற தரீக்காக்களில் பைஅத் செய்தவர்களாக அதன் பக்கம் ரகசியமாக அழைப்பவர்களாக இருக்கின்றனர்.  (முரீதுகளிடம் பைஅத் வாங்குவதற்கு இஸ்லாத்தில் என்ன ஆதாரம் இருக்கின்றது? என இவர்களின் தலைவரான இன்ஆமுல் ஹஸனிடம் கேட்டதற்கு நாங்கள் அவர்களிடம் பைஅத் பெறா விட்டால் அவர்கள் வேறு தரீக்காவின் ஷேக் மார்களிடம் சென்று பைஅத் பெற்று விடுவார்கள் என்பதனாலேயே அவ்வாறு செய்கின்றோம் என பதிலளித்தமை குறிப்பிடத்தக்கது.) மேலும் ஜிஹாத் சம்பந்தப்பட்ட வசனங்கள் ஹதீஸ்களையெல்லாம் திரிபு படுத்தி அவை தப்லீக் ஜமாஅத்தில் செல்வதைத்தான் குறிக்கி;ன்றன என்பது போன்ற பிரமையை ஏற்படுத்தி மனதைப் பக்குவப் படுத்துவதுதான் ஜிஹாத் என்ற தவறாக விளக்கத்தை இவர்கள் மக்களுக்குப் போதிக்கின்றனர்.  இஸ்லாத்தின் அடிப்படை விடயங்கள் பற்றியே தெளிவில்லாத, அகீதா பற்றி எதுவும் தெரியாத, பித்அத்திலும் மௌட்டீகத்திலும் மூழ்கியுள்ள இவர்களுடன் வெளிக்கிளம்பிச் செல்வது தடை செய்யப்பட வேண்டியதொரு விடயமாகும்.  (கஸ்புஸ்ஸிதார் பக்கம் 85)

(குர்ஆன் ஹதீஸின் பக்கம் அழைக்கும் ஏனைய உலமாக்கள் இஸ்லாமிய அழைப்புக்காக செய்யும் சேவைகள் தியாகங்கள் அதற்காகச் செலவு செய்யும் பொருளாதாரங்கள் புத்தக வினியோகம், ஆடியோ – வீடியோ காஸட், இன்டர்நெட் மூலமான தஃவாப்பணி, முஸ்லிமல்லாதோரின் சந்தேகத்துக்குரிய பதில்கள் ,இவர்களினால் முஸ்லிமானோரின், திருந்தியோரின் விபரங்கள் எதையுமே மக்களுக்குக் கூறாது இருட்டடிப்புச் செய்து விட்டு முழு உலகிலும் இஸ்லாம் வளர்வதற்குத் தாமே முழுக்காரணம் எனப் பொய் கூறித் தம்பட்டம் அடிக்கின்றனர் இவர்கள்.  ஒவ்வொரு அறபு அரசுகளும் தனது செலவால் ஜரோப்பிய ஆபிரிக்க ஆசிய நாடுகளில் லட்சக்கணக்கான பள்ளிகளைக் கட்டியிருக்க, இஸ்லாமிய வளர்ச்சிக்காக கோடிக்கணக்கில் செலவு செய்திருக்க, இவர்களது செலவால், முயற்சியால் லட்சக்கணக்காணோர் இஸ்லாத்தைத் தழுவியிருக்க இவர்களோ தப்லீக்கின் முயற்சியால் பிரான்ஸில் ஆயிரம் பள்ளிகள, அமெரிக்காவில் பல்லாயிரம் பள்ளிகள் ஜேர்மனியில் பல்லாயிரம் பள்ளிகள் உருவாகியிருக்கின்றன, இந்த வேலையின் உழைப்பால் அங்கெல்லாம் லட்சக் கணக்கில் மக்கள் இஸ்லாத்தில் இணைந்திருக்கின்றனர் எனக் கதையளந்து எவனோ செய்த வேலையைக் காட்டித் தமக்குப் புகழ்தேட முயல்கின்றனர்)

8- ஷேக் ஸாலிஹ் பௌஸான் அவர்கள் தப்லீக் பற்றி…

‘தப்லீக் அமைப்பானது அகீதா விடயத்திலும், தஃவா அணுகு முறையிலும் தவறான கருத்தில் இருக்கும் ஒரு இயக்கமாகும்.  எத்தனையோ இஸ்லாமிய அறிஞர்கள் இதன் தவறான– இஸ்லாத்திற்கு மாற்றமான கொள்கைகள் பற்றி எடுத்துரைத்து இதில் வெளிக்கிழம்பிச் செல்வதோ, அதற்கு உதவி செய்வதோ கூடாதென்று விளக்கியிருக்கின்றார்கள்.  எனவே ஒவ்வொரு முஸ்லிமும் இவ்விடயத்தில் எச்சரிக்கையாக இருப்பதுடன் பிறரையும் எச்சரிக்க வேண்டும். இந்த தப்லீக் முக்கியஸ்த்தர்களுக்கு நான் கூற விரும்புவது என்னவென்றால் இவர்கள் தமது தவறான கொள்கைகளை விட்டு விலகித் தவ்பாச் செய்து தூய இஸ்லாத்தை குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் மக்களுக்கு எத்திவைக்க வேண்டும்.  சுன்னத் வல் ஜமாஅத்தினரின் (ஸஹாபாக்கள் தாபியீன்களின்) கொள்கைக்கேற்ப தமது தஃவத்தை மாற்றியமைத்து தவ்ஹீதிலிருந்து ஆரம்பித்து தமது நாட்டில் இருக்கும் ஷிர்க் பித்அத்தை அகற்ற முதலில் உழைப்புச் செய்ய வேண்டும்.  அதே போன்று தவ்ஹீத் -அகீதா விடயத்தில் அதிக கவனம் செலுத்தி இது பற்றிய தெளிவை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.  ஏனெனில் அதுவே அடிப்படை, அதையே நமது நபியவர்களும் ஏனைய அனைத்து நபிமார்களும் ஆரம்பமாகப் போதனை செய்தார்கள்.  தவ்ஹீதை அடிப்படையாகக் கொள்ளாத எந்த தஃவா அமைப்பும் இறுதியில் தோல்வியைத் தழுவுவது நிச்சயம்.  (ஏனெனில் அது நபியவர்களின் தஃவத் முறைக்கு மாற்றமானது) இந்த அறிவுரைகளைத் தப்லீக் முக்கியஸ்த் தர்கள் ஏற்றுக் கொண்டால் சரி.  இல்லாவிட்டால் ஏனைய அப்பாவி பாமர முஸ்லிம் சகோதரர்கள் இவர்களுடன் வெளிக் கிளம்பி தமது அகீதாவையும் பாழ்படுத்தி விடக் கூடாதென்று எச்சரிக்கின்றேன். (ஹிஜ்ரி1422ல் வெளியிட்ட பத்வா கஸ்புஸ்ஸிதார் 72)

9-ஷேக் ஸாலிஹ் இப்னு உதைமீன் (பிரபல மார்க்க மேதை) தப்லீக் பற்றி…

‘தப்லீக் அமைப்பினர் தமது ஆறு நம்பருக்குப் பதிலாக நபியவர்கள் கற்றுத்தந்த இஸ்லாத்தின் ஐந்து கடமைகள், ஈமானின் ஆறு விடயங்கள், இக்லாஸ் ஆகியவற்றை தமது அடிப்படை விதிமுறைகளாக ஆக்கியிருக்க வேண்டும். ஆனால் எனக்குத் தெரிந்த வரை தப்லீக் பெரியார்கள் எவருமே இந்த ஹதீஸின் விளக்கம் பற்றிப் போதிப்பது கிடையாது.  ஒரு முறை றியாத்திலுள்ள ஒரு மஸ்ஜிதில் தவ்ஹீத் – ஷிர்க் பற்றிப் பேசியபோது இவர்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றமை எனக்குத் தெரியும்.  இதைவிட மோசமான விடயம் இவர்கள் தவ்ஹீத் பற்றிப் பேசுபவர்களையும், அது சம்பந்தப்பட்ட புத்தகங்களையும் தரக்குறைவாகப் பேசி அவற்றை வாசிக்கக் கூடாது எனத் தடுத்த சம்பவங்களும் எனக்குத் தெரியும்.

லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவுக்கு இவர்கள் வஸ்த்துக்களால் ஆகும் என்ற தீய எண்ணத்தை உள்ளத்திலிருந்து அகற்றி அல்லாஹ்வால்தான் அனைத்தும் ஆகும் அவனே அனைத்தையும் படைத்தவன், உணவளிப்பவன், காப்பவன் என்ற நம்பிக்கையைக் கொண்டு வருவதே நோக்கம் என்று விளக்கம் கொடுக்கின்றனர்.  இந்த விளக்கம் குறையுள்ளதாகும்.  அல்லாஹ்வால்தான் அனைத்தும் ஆகும் என நம்புவதால் மாத்திரம் ஒருவனிடத்தில் ஈமான் வந்து விட மாட்டாது. அல்லாஹ்வை மாத்திரமே வணங்க வேண்டும்.  இபாதத் விடயத்தில் யாருக்கும் எந்தப் பங்கும் கொடுத்தால் அது ஷிர்க்காகும். நபிவழிக்கு மாற்றமாக நடந்தால் அது பித்அத் வழிகேடாகும் என்ற விடயத்தையும் நம்பி நடக்கும் போதே அவன் முஃமினாக முடியும் (பதாவா உதைமீன் -கஸ்ப் பக்கம் 125)

10- ஷேக் ஸஃத் அல் ஹூஸைன். (மார்க்க சட்ட ஆலோசகரும் முன்னாள் தப்லீக் ஆதரவாளரும்) தப்லீக்கைப் பற்றி…

நான் சுமார் எட்டு வருடங்களாக தப்லீக் அமைப்பில் பங்குபற்றுபவனாக இருந்தேன்.  நான் அவதானித்த வரை அவ்வமைப்பு தனது தஃவத் முறையிலோ, அதில் போதிக்கப்படும் விடயங்களிலோ மார்க்கத்திற்கு ஒத்ததாக இல்லை. டில்லியிலுள்ள நிழாமுத்தீன் பகுதியில் ஏராளமான தர்ஹாக்களில் பல்வேறு இணைவைப்புக்கள் இடம்பெற்றும் இந்த 40வருட காலமாக அதை ஒழிக்க எவ்வித முயற்சியும் அவர்களால் எடுக்கப்பட வில்லை.  அதிலுள்ள பெரியார்கள் சூபிகளாதலால் அதை மறைமுகமாக ஆதரிக்கின்றார்கள்.  ஏனெனில் கப்ர் வணக்கத்ததை ஆதரித்து இப்பெரியார்கள் தமது உரைகளிலும் ஆங்காங்கே சொல்வதுண்டு.  இவர்களது பயான் நிகழ்ச்சியெல்லாம் கதைகள், சம்பவங்களை மையமாக வைத்தே பெரும் பாலும் நிகழ்த்தப்படுகின்றன.  இவர்கள் கப்ர் வணக்கத்தை ஆதரிக்கின்றார்கள் என்பதற்கு டில்லி தப்லீக் மர்க்கஸிலும், பாக்கிஸ்த்தான் ட்ரைவிந் மர்க்கஸிலும் சூடான் தப்லீக் மர்க்கஸிலுமுள்ள தர்ஹாக்கள் இத்தனை வருட காலமாக அகற்றப்படாமலிருப்பதே – அங்கு நடக்கும் அனாச்சாரங்கள் பற்றி இவர்கள் கண்டு கொள்ளாமலிருப்பதே மிகப்பெரிய ஆதாரமாகும்.

இதற்கு நிறைய ஆதாரவாளர்கள் இருக்கின்றார்கள் என்பதால் இது சரீஅத் அங்கீகாரம் பெற்றதென்று ஒரு போதும் சொல்லி விட முடியாது. ஏனெனில் அல்லாஹ் ஒரு வசனத்தில்…

وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُمْ بِاللَّهِ إِلاَّ وَهُمْ مُشْرِكُون َ

‘அவர்களில் அதிகம் பேர் அல்லாஹ்வுக்கு இணை வைத்த நிலையிலேயே அவனை விசுவாசித்திருக்கின்றனர். (ஸூரா யூஸூப் பக்கம் 106) என்கின்றான்.

நாளை மறுமையில் ஒவ்வொரு நபியும் தமது உம்மத்துடன் வரும் வேளை சில நபியுடன் இரு மனிதர்கள் சிலருடன் ஒரே ஒருவர் மாத்திமே வருவர்.  நூஹ் நபி 950 வருடங்கள் தஃவத் செய்தும் ஒரு சிலரையே தம்முடன் சேர்க்க முடிந்தது. எனவே அதிக ஆதரவாளர்கள் இருந்தால் அவ்வமைப்பு சரியான தென்றோ குறைந்த ஆதரவாளர் உள்ள அமைப்பு போலியானதென்றோ ஒரு போதும் முடிவெடுக்க முடியாது.

அதேபோன்று அதிக மக்கள் திருந்தி வாழ்வதற்கும் இபாதத் செய்பவர்களாக மாறியதற்கும் இந்த அமைப்பு காரணமாகும் என்பதாலும் இதை அப்படியே நியாயப்படுத்தி விட முடியாது. ஏனெனில் ஒரு காலத்தில் நமது முஸ்லிம் சமூகத்தின் பெரும் பகுதியினர் இஸ்லாத்துக்குப் புறம்பான பாவச்செயல்களில் தாராளமாக மூழ்கிய நிலையிலேயே இருந்தனர்.  வணக்க வழி பாடுகள் எதிலும் அக்கறை கிடையாது. இவ்வாறான ஒரு நிலையில் இந்த தப்லீக் அமைப்பு தாம் தொழுகைக்கு மக்களை அழைக்கும் அமைப்பு எனும் பெயரில் மக்கள் மத்தியில் அறி முகமாகியதால் தக்வா பயபக்தி, அல்லாஹ்வின் அச்சம் உள்ள இபாதத்களில் ஆர்வம் கொண்ட பாமர மக்கள் இதன் ஆழ அகலங்களைச் சரிவர ஆராயாமலேயே இதற்கு பேராதரவு வழங்க முற்பட்டனர்.  அதே போல் இம்மக்களிடம் வெறும் மார்க்கப்பற்றும், இறையச்சமும் இருந்ததேயன்றி இவ்வமைப்பின் கொள்கை கோட்பாடுகள் சரியானது தானா? என இஸ்லாமிய ஒளியில் உரசிப்பார்த்து ஆராயுமளவுக்கு அவர்களுக்குப் போதிய இஸ்லாமிய அறிவும் இருக்கவில்லை.  அதே போல் அன்றைய கால கட்டத்தில் இஸ்லாத்தின் பக்கம் அழைக்க இதைத் தவிர வேறு அமைப்புக்களும் பெரிதாக இருக்கவில்லை.  அதனால் காலத் தால் முந்திய தப்லீக் அமைப்பு மாத்திரமே இஸ்லாமிய தஃவத் செய்யும் ஒரே அமைப்பு எனும் நிலையே அன்று நிலவியது. இன்றும் கூட இந்த நிலமைகள் முழுமையாக மாற்றமடையவில்லை. அனேக முஸ்லிம்களுக்கு போதிய மார்க்க அறிவு இல்லை.  உலக விடயத்தில் இவர்கள் முன்னேறிய அளவில் பத்திலொரு பகுதியேனும் மார்க்க அறிவு விடயத்தில் இவர்கள் கவனம் செலுத்துவதில்லை. எனவே தங்கத்தை இனம்காணத் தெரியாதவன் ‘மின்னுவதெல்லாம் பொன்’ என்று சொல்வதைப் போல இவர்களும் தப்லீக் அமைப்பின் வெளிச் செயல்ப்பாடுகளை மாத்திரம் அவதானித்து விட்டு போதிய மார்க்க விளக்கமின்மையால் இதுதான் சரியான இஸ்லாமிய அமைப்பு எனத் தமக்குத் தாமே தீர்ப்பளித்துக் கொள்கின்றனர்.  போதாக்குறைக்கு இவர்களின் தலைமைகள் இவர்களுக்குப் போதிப்பவைகளும் தூய குர்ஆன் ஹதீஸ் போதனைகளில்லை.  இவர்கள் இஸ்லாமிய ஆர்வம் கொண்ட பாமர மக்கள். இவர்களை நாம் குற்றம் கூற முடியாது இவர்களையும் வழிகெடுத்த முழுக்குற்றத்தையும் நாளை மறுமையில் தப்லீக்கின் டில்லி, ட்ரைவிந் பெரியார்களே சுமக்க
வேண்டியேற்படும்.

அதே போல் சவூதியிலும் ஏனைய அறபு நாடுகளிலுமுள்ள பல மார்க்க அறிஞர்கள் இதன் உண்மை நிலையை விளங்கி இதற்கு ஆதரவு வழங்குவதாகக் கூறி இவர்கள் இவ்வமைப்புக்குப் பலம் சேர்க்கின்றனர்.  எனக்குத் தெரிந்த வரை சவூதியிலுள்ள எந்த மார்க்க அறிஞரும் இதில் வெளிக்கிளம்பிச் சென்று அதிலுள்ளவற்றைப் பார்த்துவிட்டு இன்றும் அதற்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கவில்லை.  ஒரு சிலர் இதில் வெளிக் கிழம்பிச் செல்லாமல், அதில்நடக்கும் நிகழ்வுகளை நோக்காமல் ஆராயாமல் அதற்கு ஆதரவாகப் பேசியிருக்கலாம். அது தவிர இதிலே வெளிக்கிளம்பிச் சென்ற உலமாக்கள் எவரும் இதிலுள்ள மார்க்க முறண்பாடுகளைக் கண்ணால்க் கண்டு விட்டு அதை விட்டும் தம் தொடர்பைத் துண்டிக்காமல் இருந்ததில்லை.  இதற்குச் சான்றுகள் ஏராளம் ஏராளம்.  இதில் இன்றும் வெளிக் கிழம்புபவர்கள் போதிய மார்க்க அறிவற்ற பாமர அரபிகள் சிலரே. அவர்கள் இதன் ஆழம் அகலம் பற்றித் தெரியாதவர்கள் அவர்களது செயற்பாடு எப்படி ஆதாரமாக முடியும்.  ஒரு மனிதனுக்கு நோயில்லையென அவனது நன்பன் சொல்ல, இல்லை இவன் நோயாளியென அவனைச் சோதித்த வைத்தியர் சொல்கின்றார். இந்நிலையில் யார் பேச்சை உண்மைப்படுத்துவது. ?

அப்துர்ரஸ்ஸாக், ஸாலிஹ் லுஹய்தான், பௌஸான், ஸாலிஹ் கதயான்,போன்ற எத்தனையோ பேரறிஞர்கள் இதில் வெளிக்கிளம்பிச்சென்றுவிட்டு பின்னர் இதன் மறுபக்கத்தை, சுய ரூபத்தை அறிந்ததன் பின் அதை அறபு உலகுக்குத் தோலுரித்துக் காட்டினர். அவர்களின் ரகசிய ஸூபிச அழைப்பு பற்றியும் ரகசிய பைஅத் பற்றியும் அதிலுல்ல எண்ணிலடங்காத ஷிர்க்கான பித்அத்தான விடயங்கள் பற்றியும் மக்களுக்கு விளக்கியிருக்கின்றனர்.  ஏன்? நானும் முன்பு தப்லீக் அமைப்புக்கு அதரவு நல்கிக் கொண்டு அதில் செல்ல மக்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தேன்.  தப்லீக்கில் உள்ள அந்த மார்க்க முரணான விடயங்கள் தெளிவாகியதன் பின்னர் இந்த ஜமாஅத்தை விட்டும் விலகிக் கொண்டேன். (-இவண் ஸஃது அல்ஹூஸைன் நூல்: கஷ;புஸ்ஸிதார்)

மேற்படி உலமாக்களின் கருத்துக்களையும், வாக்கு மூலங்களையும் அவர்கள் தப்லீக்குக்கு ஆதரவளிக்காததன் காரணங்களையும் பார்த்தோம்;. இவர்கள் சாதாரண உலமாக்களல்ல.  மாபெரும் மேதைகள்.  சவுதியிலுள்ள இஸ்லாமியக் கல்வியைத் துறை போகக் கற்றறிந்த இலச்சக்கணக்கான உலமாக்களில் நுண்ணறிவும் அனுபவமும் நிறையப் பெற்ற ஒருசிலரை மாத்திரம் தெரிவு செய்து உருவாக்கப்பட்டதுதான் இந்த உலமாக்கள் ஒன்றியம்.  இதில் அங்கத்துவம் பெறும் அனைவருமே இந்த தப்லீக் அமைப்புப் பற்றி இப்படிச் சொல்லியிருக்கின்றார்கள்.  தமது கூற்றை குர்ஆன் ஹதீஸ், மற்றும் நடை முறை உண்மைகளைக் கொண்டு நிரூபித்தும் காட்டியிருக்கின்றார்கள். நடுநிலையாகச் சிந்திப்போருக்கு இப்போது தெளிவு கிடைத்திருக்கும் என நம்புகின்றேன்.

இருப்பினும் தப்லீக் முக்கியஸ்தர்களும் மேலிடங்களும் இப்படிக் கூறலாமல்லவா?..
அதாவது அறபு உலமாக்கள் அனைவருமே வஹ்ஹாபிகள்.  அவர்கள் மத்ஹபுகளைப் பின்பற்றக் கூடாது என்பவர்கள்.  நாமோ ஹனபிகள் ,ஷாபிகள் நாம் இந்த விடயத்தில் அவர்கள் பேச்சைக் கேட்கக் கூடாது என்று கூறிப் பாமர மக்களைத் திசை திருப்ப முயற்சிக்கலாமல்லவா?  ஆதலால் இலங்கை இந்தியாவில் இருக்கும் ஆரம்ப கால தப்லீக் தீவிர ஆதரவாளர்களாயிருந்து தற்போது அதிலுள்ள ரகசியங்களை அறிந்ததன் பின்னர் அதை விட்டு வெளியேறி குர்ஆன் ஹதீஸின் பக்கம் மக்களை அழைத்துக் கொண்டிருக்கும் உலமாக்கள் இந்த தப்லீக் பற்றிக் கூறியுள்ள சில கருத்துக்களையும் தருகின்றேன்.

1- ஷேக் இஹ்திஸாம் ஹஸன் காந்திஹ்லவி தேவ்பந்தி அவர்கள் தப்லீக்கைப் பற்றி…
இவர் இல்யாஸ் மௌலானாவின் சகோதரியின் கணவராவார். மிக நீண்ட காலத்தைத் தப்லீக்கில் கழித்த இவர் அக்காலத்தில் இல்யாஸ் மௌலானாவின் வலது கையாக இருந்தவர்.  இவர் சொல்கின்றார்.  டில்லி நிழாமுத்தீன் மஸ்ஜிதில் செயற்படும் தப்லீக் ஜமாஅத் எனது அறிவுக்கும் ஆய்வுக்கும் எட்டியவரை குர் ஆன் ஹதீஸின் படியோ ஷாஹ் வலிய்யுள்ளாஹ் திஹ்லவி,மற்றும் ஏனைய உலமாக்கள் சுட்டிக்காட்டியது போலோ நடக்கும் ஒரு அமைப்பல்ல.  எனவே இதில் ஈடுபடும் உலமாக்கள் முதல்வேலையாக இதனை குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் – ஸலபுஸ்ஸாலி ஹீன்களின் வழிமுறையில் ஆக்கியாக வேண்டும்.  முஹம்மது இல்யாஸ் மௌலானா காலத்தில் வகுக்கப்பட்ட விதிமுறைகள் ஒழுங்குகளின் படியே இது இன்றும் செயற்படுகின்றது.  சுன்னா வின் அடிப்படையிலல்ல.  அத்துடன் அன்று இல்லாதிருந்த எத்தனையோ மறுக்கப்பட வேண்டிய பித்அத்தான விடயங்களும் இன்று இதனுடன் சேர்ந்து வில் எது நாண் எது எனத் தெரியாதளவுக்கு இரண்டறக் கலந்து விட்டது.  இதைச் சுட்டிக்காட்டுவது என் கடமை.  அதற்காகவே இதைச் சொல்கின்றேன்.  (அவரது ‘ஸன்தகி கேஸிராத் முஸ்தகீம்’ எனும்நூலிலிருந்து’)

2- ஷேக் அப்துர்ரஹீம் ஷாஹ் தேவ்பந்தி அவர்கள் தப்லீக்கைப் பற்றி…
இவர்களும் நீண்ட காலம் இல்யாஸ் மௌலானா, அவரது புதல்வர் மற்றும் யூஸூப் மௌலானா ஆகியோருடன் தப்லீகில் ஈடுப ட்டவர்கள். இவர்கள் சொல்கின்றார்கள். .
‘தப்லீக்கைப் பற்றி அதிலுள்ள முறண்பாடுகள் பற்றிச் சொல்ல வேண்டியது என் கடமை என்பதால் சொல்கின்றேன்.. தாயிகளுக்கு இருக்க வேண்டிய மார்க்க அறிவு எதுவுமே இல்லாதவர்களெல்லாம் மக்கள் மத்தியில் பகிரங்க பயானில் இந்த தப்லீக்கின் சிறப்புப் பற்றி எல்லை கடந்து புகழ்ந்து பேசுவதும், ஏனைய மார்க்கச் சேவையில் ஈடுபடுவோரையெல்லாம் குறைபட்டு கேலி செய்யும் போக்கையும் இவர்களிடம் நான் அவதானித்தேன். இது பற்றி நான் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர்கள் கேட்டபாடில்லை.  ஒருவர் வைத்தியராகவோ வைத்தியத் தாதியாகவோ கூடப் பணி புரிவதாயின் அவரிடம் அதற்குரிய தகுதி தகைமைச் சான்றிதழ் போன்றவை இருக்கின்றனவா? எனக் கூர்ந்து அவதானிக்கும் சமூகம் மார்க்க விடயத்தில் மாத்திரம் இப்படிப் பேசா மடந்தையாக இருக்கின்றது.  யார் எதைச் சொன்னாலும் எதிர்க்கேள்வி கேட்காது ஏற்றுக் கொள்ளும் மக்களின் பலவீனமே இவர்களை இந்த அளவுக்கெல்லாம் பேச வைத்துள்ளது.  ஓரிரு தடவைகள் தப்லீக்கில் நீண்ட வக்தில் சென்று விட்டால் தாம் தீனைப் பற்றி எல்லாம் தெரிந்து விட்டோம் எனும் எண்ணம் இவர்களுக்கு ஏற்பட்டு தப்லீக்கை முறையாக விமர்சிப்பவர்களையெல்லாம் தகாத வார்த்தைகளால் தூற்றி தீனை விட்டும் தூரமானவர்கள் – வெளியேறியவர்கள் என்றெல்லாம் பத்வாக் கொடுக்கும் நிலைக்கு வந்து விடுகின்றார்கள்.  இந்த அமைப்பு முழுக்க முழுக்க சுன்னாவின் அடிப்படையில்தான் இயங்குகின்றதென்றால் அதைத்தக்க ஆதாரங்களைக் கொண்டு நிரூபித்துக் காட்டுங்களேன்.! இந்த அமைப்பு மாத்திரம் தான் நபி வழி அமைப்பு என்றால் ஸஹாபாக்களின் காலம் தொட்டு இல்யாஸ் மௌலானாவின் காலம் வரை தீனுடைய வேலை உலகில் நடைபெறவில்லை என்றல்லவா கூறவேண்டியேற்படும்?  ஏனெனில்; ஸஹாபாக்களும் இந்த அமைப்பில் தஃவாச் செய்ய வில்லையே !!. இவர்கள் வகுத்த விதிமுறைகளுக்கேற்ப நடக்க வில்லையே! (உஸூலு தஃவத்கே தப்லீக் ப :61)

3-ஷேக் சைபுர்ரஹ்மான் ஹிந்தி அவர்கள் தப்லீக் பற்றி…

இந்த உம்மத்தின் யஹூதிகள் ஷிஆக்களாவார்கள், சுன்னத் வல் ஜமாஅத்தினரின் விரோதிகளான. இவர்கள் குறுட்டுத் தனமாக தமது மத்ஹபுகளைப் பின்பற்றுபவர்கள். ஆனால் தப்லீக் அமைப்பினரும் குறுட்டுத்தனமாக ஏன் எதற்க்கென்றில்லாமல் தமது பெரியார்களையும், பெரியார்கள் குறுட்டுத்தனமாக ஹனபி மத்ஹபையும், பல்வேறு தரீக்காக்களையும் பின்பற்றுபவர்களாகவே இருக்கின்றார்கள்.

இவ்வாறே தப்லீக் கார்க்கூன்களிடத்திலும் இந்த நிலை ஏற்பட ஆரம்பித்து அவர்களும் தப்லீக் பெரியார்களை ஒரு வகை தெய்வீக பக்தியுடன் கண்ணியம் கொடுக்க ஆரம்பித்து அவர்கள் சொல்வதையெல்லாம் வேதவாக்கு என நம்ப ஆரம்பித்து அவர்கள் போதிக்கும் பித்அத்துக்களையும் ஷிர்க்கான விடயங்களையும் மார்க்கம் எனும் பெயரில் மக்கள் மத்தியில் அவிழ்த்து விட்டு மக்கள் இதில் வெளிக்கிளம்புவது கட்டாயம் என்று அல்லாஹ் கடமையாக்காதவற்றை இவர்களாகவே மக்களுக்குக் கடமையாக்கி அதற்கு ஆதரவளிக்காதவர்களையெல்லாம் வசை பாட ஆரம்பித்து விடுகின்றனர். எனவே இவர்கள் தமது பித்அத்தை விட்டு விலக வேண்டும். இவர்கள் இவற்றைப் புரிந்து கொள்வானாக. (நள்ரா ஆபிரா எனும் நூல் ப: 57)

தப்லீக் அமைப்பினரிடத்தில் இருக்கும் சிறப்பம்சங்கள்.

தப்லீக் அமைப்பிலே தம்மை ஈடுபடுத்திக் கொண்ட நம் சகோதரர்களிடத்தில் நபியவர்கள் கற்றுத்தந்த, ஸஹாபாக்களிடம் காணப்பட்ட பல அருங்குணங்களும் நிறையவே இருக்கின்றன.  அவற்றில் சிலவற்றையும் இங்கு சொல்ல வேண்டுமென என் மனம் விரும்புகின்றது.  எனவே சுருக்கமாசச் சொன்னால்…

1-மஸூராவின் அடிப்படையில் செயற்படுதல். 
மஸூராவின்(ஆலோசனை) அவசியத்தை வலியுறுத்தி அல்குர் ஆனும் அல்ஹதீஸூம் பல்வேறு இடங்களில் போதிக்கின்றன.  இவ்விடயத்துக்கு ஏனைய எவரையும் விட தப்லீக் அமைப்பினரிடமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.  மஸூராவில் முடிவெடுக்கப்பட்டால் தனக்கு விருப்பமில்லாவிடினும் அதற்குக் கட்டுப் படல், அதை அமுல்ப்படுத்த அயராது பாடுபடல் போன்றவற்றைக் கூறலாம்.

2- அமீருக்குக் கட்டுப்பட்டு நடக்கும் மனப்பாங்கு :.
நபியவர்கள் போதித்த மற்றுமொரு வழிமுறைதான் இது.  தனக்கு விருப்பமில்லாத ஒரு விடயத்தில் அமீர் ஈடுபடும் போது கூட அதற்காக அவரை எதிர்த்து ஒற்றுமையைக் குலைத்து விடாமல் — ஹராமான ஒன்றைச் செய்யுமாறு நம்மை வற்புறுத்தாத வரைக்கும் அவருக்குக் கட்டுப்பட்டு வாழுமாறு நபியவர்கள் போதித்துள்ளார்கள் அமீறுக்குக் கட்டுப்பட்டு நடப்பதில் இவர்களிடம் சில நேரங்களில் ஷரீஅத்தின் வரையறையை மீறும் நிலை நிலவினும் பொதுவாக இவர்களது மேலிட அமீர்களுக்கு இவர்கள் கட்டுப்பட்டமைதான் இவ்வமைப்பின் அபார தீவிர வளர்ச்சிக்கு மற்றுமொரு காரணமாகும் மேலிட அமீர்மார் இவர்களுக்குச் சரியான குர்ஆன் ஹதீஸ் வழி காட்டல்களை வழங்க வில்லையென்பது தனி விடயம். ஏனைய அமைப்பினர் இவ்விடயத்தில் நபியவர்களின் ஸூன்னாவைக் கடைப்பிடிக்காமையே பல்வேறு சில்லறைப் பிரச்சினைகள் ஏற்பட சில இடங்களில் வழி வகுக்கின்றன.

3-சுறுசுறுப்பான செயற்பாடும் விடா முயற்சியும்.

இந்தப் பண்புதான் இவர்களது அமைப்பு மூலை முடுக்கெல்லாம் பட்டி தொடியெல்லாம் பரவுவதற்குக் காரணமாகும்.  ஒருவரைச் சந்தித்து அவர் 3 நாள் வெளிக்கிழம்பப் பெயர் தந்து விட்டால் மறுபடி சளைக்காமல் பல தடவைகள் அவரைச் சந்தித்து இவர்களது தொல்லை தாளாமல் 3 நாள் சென்று வந்தவர்களும் இருக்கின்றார்கள்.  அந்தளவுக்கு இவர்களிடம் இருக்கும் அயராத உழைப்பு விடா முயற்சி போன்றன பாராட்டத் தக்கவையாகும்.

4-தம் சொந்த பொருளை நேரத்தை செலவு செய்தல்.
ஒருவரைத் தஷக்கீல் பண்ணுவதற்காக தமது பணம் வாகனம் ஆகியவற்றைச் செலவு செய்து தமது வேலை வெட்டிகளைக் கூட ஒதுக்கி விட்டு இவர்கள் பாடுபடுவது பாராட்டத்தக்க தொன்றாகும். இது நபியவர்களின் வழிமுறையாகும்.

5-தமது தப்லீக் பணியின் போது ஏற்படும் கஷடங்களைச் சகிக்கும் மன நிலை.

தப்லீக்கில் செல்வோர் சில வேளை பெரிய செல்வந்தராக, பட்டதாரியாக, அதிகாரியாக இருக்கலாம் இருப்பினும் அவரும் வேறுபாடின்றி தமது அந்தஸ்த்து கௌரவத்தை ஒதுக்கி வைத்து விட்டு சாதாரண மனிதரிடம் செல்லல், அவர் ஏசினாலும் கூட சகித்துக் கொள்ளல் போன்றனவும் பாராட்டத்தக்க விடயங் களாகும்.

6-வீடுவீடாகத் தேடிச்சென்று அலைந்து தப்லீக் மேற்கொள்ளல்.

இதுவும் நபியவர்கள் கடைப்பிடித்த தஃவா முறையாகும். தஃவாப் பணியின் அழைப்பு முறை விசாலமானது. இதைப்புத்தகம் வானொலி, தொலைக்காட்சி என விரிந்து பரவலாகச் செய்ய அனுமதியிருப்பினும் வீடு வீடாகத் தேடிச்சென்று தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசுவதில் அதிக நன்மைகளும் அணு கூலங்களும் உள்ளன.  இது இன்று ஏனைய அமைப்பினரால் கைவிடப்பட்டதன் விளைவு குர்ஆன் ஸூன்னாவின் பக்கம் அழைக்கும் தஃவாப்பணியின் அபார வளர்ச்சி தடைப் பட்டுள்ளதென்றே கூற வேண்டும்.

7-பள்ளிவாயலை மையமாகக் கொண்ட தஃவா நிகழ்சிகள்.

தப்லீக் சகோதரர்கள் தமது நிகழ்சிகளை நடத்த பள்ளிவாயல்களைக் கேந்திரஸ்தலமாகப் பயன்படுத்துவது அவர்களது தப்லீக்கின் வளர்ச்சிக்குரிய மற்றுமொரு காரணமாகும்.  பள்ளி வாயல்களில் மக்களை ஒன்று சேர்ப்பதால் பல்வேறு விதமாக சாதகமான அணுகூலங்கள் உள்ளன.  நபியவர்களின் காலத்தில் கூட பள்ளி வாயல்கள் தொழும் இடமாக மாத்திரமல்லாது கல்விக் கூடங்களாகவும் ஆலோசனை பீடமாகவும், போர்ப்பயிற்சி முகாமாகவும் இன்னும் பல்வேறு தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டமை ஆதாரப்பூர்வமான உண்மை யாகும்.  குர்ஆன் ஹதீஸ் போதனையின் பக்கம் அழைக்கும் சகோதரர்கள் இவ்விடயத்தில் கவனயீனமாக இருப்பதும் அவர்களின் தஃவா முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கின்றது.  பள்ளிவாயல் என்பது பொது இடம். முஸ்லிம்கள் அனை வருக்கும் அதில் பங்குண்டு.  எனவே குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இஸ்லாத்தின் பக்கம் அழைக்கும் அனைவருக்கும் பள்ளியில் தஃவத் நிகழ்ச்சிகள் செய்ய உரிமையுள்ளது. அதற்கு எவரேனும் தடையாக இருப்பது அல்லாஹ்விடத்தில் மிகப் பெரிய தண்டணைக்குரிய குற்றமாகும்.  எனவே பள்ளிவாயல் நிருவாகிகள் இதனைக் கவனத்தில் கொண்டு இவ்விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து செயற்படக் கடமைப்பட்டுள்ளனர்.

பணிவான வேண்டுகோள் !!

இதுவரைக்கும் தப்லீக் அமைப்பினரிடம் இருக்கும் குர்ஆன் – சுன்னாவுக்கு மாற்றமான சில நடவடிக்கைகள் பற்றியும் அவர்களிடம் காணப்படும் நற்செயல்கள் சிலவற்றைப் பற்றியும் அறிந்தோம்.  இவைகளைச் சுட்டிக்காட்டியமை அவ்வமைப்பினரின் மீது கொண்ட ஆத்திரத்தினாலோ, காழ்ப்புணர்ச்சியினாலோ சத்தியமாக ஏற்பட்டவையல்ல.  ஏனெனில் நான் தனிப்பட்ட வகையில் தப்லீக் அமைப்பினரின் சில நடவடிக்கைகளை, செயற்பாடுகளை மனதாற நேசிக்கின்றேன்.  பாராட்டுகின்றேன்.  எம் அனைவரின் ஒரே நோக்கம் நாம் அல்லாஹ்வின் அன்புக்குரியவர்களாக ஆக வேண்டும்.  அவனது அன்பையும் அருளையும் பெற்றவர்களாக முஃமின்களாக மரணிக்க வேண்டும்.  நபியவர்களது ஷபாஅத்தைப் பெற்று அவர்களது தோழர்கள் புடை சூழ கவ்தர் எனும் ஆற்றில் சொர்க்கத்தில் நீரருந்த வேண்டும். இவைதாமே எம் அனைவரினதும் ஆசை இலட்சியம்! அப்படியானால் இவையனைத்தையும் பெற ஆசையிருப்பின் அல்குர்ஆன் வழியிலும், நபியவர்களின் சுன்னாவின் போதனைப்படியும் நடக்க வேண்டியிருக்கின்றதே! கண்பார்வையற்ற குறுடன் ஒருவன் குளிர்பானம் என நினைத்துக் கொண்டு பேதி மருந்தை அருந்த எத்திக்கும் போது நாம் தடுத்து நிறுத்துகின்றோம் ஏன்! நமது மனிதாபிமானம் அவ்வாறு செய்யத் தூண்டுகின்றது.  எமது மனச்சாட்சி எம்மை உறுத்துகின்றது.  இது ஒரு தார்மீகக் கடமை என எம் உள்மனம் போதிக்கின்றது.  அதேபோல்தான் இன்று எம் சில சகோதரர்கள் மார்க்க அறிவில் போதிய தெளிவற்ற காரணத்தால் நபிவழி என நினைத்துக் கொண்டு நாச வழியை நாடிச் செல்கின்றார்கள். எனவே இதைச் சுட்டிக் காட்டுவது எமது கடமையல்லாவா? .  இதற்காக இதைச் சொன்னவரைக் கோபிப்பது முறையா?  நியாயம் தானா? .  நிச்சயமாக இல்லை.  அல்லாஹ்வின் விருப்பமே பெரிது, நபியின் சுன்னாவே எம்உயிர் என நினைக்கும் எவரும் இதற் குப்பின் சுன்னாவின் வழியில் நடக்க முடிவு செய்ய வேண்டியுள்ளது.  பித்அத்துக்களையும் ஷிர்க்கான விடயங்களையும் அவை எங்கிருந்து எவரிடமிருந்து வந்தாலும் புறக்கணிக்க வேண்டியுள்ளது.  இதுவே என் கோரிக்கையும் அவாவுமாகும்.  முடிவெடுப்பது வாசகர்களான உங்கள் கைகளில்…

எனவே இந்தப் பிரசுரத்தில் கூறப்பட்ட விடயங்கள் பற்றி தப்லீக் சகோதரர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். தமது தவறுகளைத் திருத்திக் கொண்டு நபிவழிப்படி அவர்கள் தப்லீக் செய்ய முடிவெருப்பார்களாயின் அதை விட இவ்வுலகிலும் மறுமையிலும் சிறந்ததொரு காரியம் வேறு எதுவும் இருக்க முடியாது.  தப்லீக் மேலிடம் இதற்கெல்லாம் சம்மதிக்காத பட்சத்தில் அந்தந்த பகுதிகளில் உள்ள தப்லீக் உலமாக்கள், கார்க்கூன்கள் ஆகியோர் தமக்குள் மஸூராச் செய்து நபி வழிக்கு மாற்றமான விடயங்களைத் தவிர்த்து அவர்களின் வழிகாட்டல்ப்படி தப்லீக் செய்யக் கடமைப்பட்டுள்ளார்கள்.

இவை எவற்றையுமே காதில் வாங்கிக் கொள்ளாத அளவுக்கு தப்லீக் பெரியார்களின் ஏவலாளர்களாக ஆகி விட்டவர்கள் தயவு செய்து நபிவழிப்படி தவ்ஹீதையும் குர்ஆன் ஹதீஸையும் போதிக்கும் – அதன் பக்கம் அழைக்கும் அமைப்புக்களை தாறுமாறாகப் பேசி, இல்லாத அவதூறுகளைக் கூறி மக்கள் மத்தியில் குழப்பத்தை விளைவித்து அல்லாஹ் கோபத்துக்கு ஆளாகிவிடாமல் தன் பாட்டுக்கு தப்லீக் செய்து கொண்டிருப்பது அவர்களது கடமையாகும்.  அதுவே அவர்களுக்கு ஆரோக்கியமானதும் கூட.. இதனை மீறி அவர்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகள் அனைத்தையும் இஸ்லாத்துக்கு எதிராக மேற் கொள்ளப்படும்; எதிர்ப்பாகவே கணிக்கப்பட வேண்டியுள்ளது.

நம் கடமை என்ன ?

தப்லீக் ஜமாஅத்தில் மேற்படி ஷேகுமார்களின் பித்அத்தான செயற்பாடுகளில் உடன்பாடில்லாத தன்னார்வத் தொண்டர்களான- மக்களை நல்வழிப்படுத்துவதை மாத்திரம் குறிக்கோளாகக் கொண்ட தப்லீக் கார்க்கூன்களைப் பொறுத்தவரைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் பயம் இருப்பின் றஸூலுல்லாஹ் மீது உண்மையான அன்பிருப்பின் குர்ஆன் ஹதீஸூக்கு மாற்றமான தப்லீக் பெரியார்களின் செயற்பாடுகளை நிராகரித்து விட்டு நபிவழிப்படி தப்லீக் செய்யுங்கள். அல்லது சேர்ந்து செய்வோம் வாருங்கள்.  உங்கள் கொள்கையினை மாற்றிக் கொள்ளுமளவுக்கு உங்களுக்கு மனம் இடம் கொடுக்காவிட்டால் – தப்லீக் பெரியார்களின் சொற்படியே அச்சரம் பிசகாமல் நடப்போம் என்பதில் பிடிவாதமாயிருந்தால்; நீங்கள் ஸூன்னாவைப் பின்பற்ற வில்லை. ஷேக்மார்களைப் பின்பற்றுகின்றீர்கள் என்பது உண்மையாகி விட்டது. எனவே ‘ தீன் என்பது அல்லாஹ்வுடைய கட்டளை, நபியவர்களுடைய வாழ்க்கை வழிமுறை. இந்த வாழ்க்கை எம்மிடமும் பூரா மனித சமூதாயத்திடமும் வருவதற்காக முயற்சி செய்வோம் வாருங்கள் ‘ என்று பள்ளியில் இஃலான் செய்வதை விட்டு விடுங்கள். ஏனெனில் இது பொய்யல்லவா?  நீங்கள்தான் நபிவழிப்படி நடக்கவில்லையே! குருவழிப்படியல்லவா நடக்கின்றீர்கள்? இதை நம்பி ஒருவன் இது தான் நபிவழியென நினைத்து நடந்தால் அதன் குற்றம் யாருக்கு ?

அவ்வாறே நபிவழிப்படி தப்லீக் செய்யும் சகோதரர்கள் தப்லீக் கார்க்கூன் சகோதரர்களுடன் நல்ல முறையில் நட்புடன் நடந்து கொள்ள வேண்டியிருக்கின்றது.  அப்போதுதானே நபி வழியை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும்? .  அவர்கள் எம்மைப் புறக்கணிப்பதால் நாமும் ஏன் அவர்களைப் புறக்கணிக்க வேண்டும். ? அதே போல் இவர்களிடம் காணப்படும் நற்பண்புகள் சுன்னாவின் அடிப்படையிலான விடயங்கள் சிலதை சுன்னாவின் வழி நடப்பதாகக் கூறும் சில தாயிகள் எடுத்து நடக்கத் தவறி விடுகின்றனர்.  உதாரணத்துக்கு வீடு வீடாகச் சென்று தஃவாச் செய்தல், பள்ளியை மையமாகக் கொண்டு செயற்படல் போன்றவற்றைக் கூறலாம்.  நாம் பள்ளிவாயலில் தஃவத் செய்யத் தவறியதால் இன்று பள்ளிகள் அனைத்தையும் இவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்கள்.  என வே நபிவழியை நம்வழியாக எடுத்து அதன் பால் நடந்து – மக்களை அழைத்து நேர்வழிகாட்டி இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் நபியவர்களின் ஷபாஅத்தையும் பெற்று வெற்றியடைய வல்ல அல்லாஹ் எம் அனைவருக்கும் அருள் பாலிப்பானாக.  ஆமீன்.

ஸல்லல்லாஹூ வஸல்லம அலா நபிய்யிநா முஹம்மதின் வஆலிஹீ வஸஹ்பிஹீ அஜ்மஈன்.  வல்ஹம்து லில்லாஹி றப்பில் ஆலமீன்.

முற்றும்