- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

உரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் !

நாட்டின் எல்லா திசைகளிலுமிருந்தும் மக்களின் அமோக ஆதரவுடன் காங்கிரஸ் தலைமை அரசு அமைந்துவிட்டது. திரு மன்மோகன் சிங் வரலாற்றுப் பூர்வமாக இரண்டாம் முறையாகப் பிரதமராகியிருக்கிறார்.

அத்வானி அன் கோ  சொன்னது போல  ‘பலகீனமான’ பிரதமராக அல்ல; அவர்களை மிகவும் பலகீனப் படுத்திவிட்ட ‘பலமிக்க’ பிரதமராக -கம்பீரத்துடனும்- நிமிர்ந்து நிற்பவராக நிர்வாகப் பொபேற்றிருக்கிறார்.

மந்திரிசபை அமைப்பில் அவர் சோனியாவுடன் இணைந்து எடுத்த முடிவுகள் மாறியிருக்கிற அரசியல் சூழ்நிலையின் யதார்த்தத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. ‘கூட்டணிக் கட்சிகளின் உரிமைக்குரலுக்கு மதிப்பு;

அதே நேரத்தில் தலைமைப் பொறுப்பின் தகுதிக்கேற்ப எற்பு’ என்ற நிலையில் நிலவரம் களைகட்டிவிட்டது. ஆட்சிச் சக்கரம் சுழலத் தொடங்கிவிட்டது. மகிழ்ச்சியடைகிறோம்.

இத்தகைய வலிமையான ஆட்சி அதிகாரத்தின் மூலமாக அனேக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகிற முக்கியக் காரணி ‘சிறுபான்மை முஸ்லிம்கள், முலாய சிங்கையும் மாயாவதியையும் கைகழுவிவிட்டு மீண்டும் காங்கிரஸ¤க்குத் திரும்பிவிட்டார்கள்’ என்பதுதான்!

இந்த உண்மையைத்தான் நாமும் இம்மாதத் தலையங்கத்தின் இந்த இரண்டாம் பகுதியில்  அடிக் கோடிடுகிறோம்.

காங்கிரஸை முஸ்லிம்கள் முழுமையாக எப்போதுமே கைவிட்டதில்லை. குறிப்பாக பாபரி மஸ்ஜிதை ‘கரசேவை என்று சொல்லி ஒரு வன்முறைக் கூட்டம் முழுமையாகத் தகர்த்துத் தரைமட்டமாக்கிவிட்டு, அந்த இடத்தில் பாதுகாப்பாக ஒரு ராமர் கோவிலுக்கு அடிப்படையும் போட அனுமதித்துவிட்டு காங்கிரஸின் அப்போதைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்ம ராவ் ‘அய்யோ அய்யோ வாக்குறுதியை மீறிவிட்டார்களே’ என்று காதில் பூச்சுற்றுவது போல ஒப்பாரி வைக்கும் வரை அவர்கள் நாடு முழுக்க காங்கிரஸ¤டன் அல்லது காங்கிரஸின் கூட்டாளிக் கட்சிகளுடன்தான் இருந்தார்கள். அதன் பின்னர்தான் அவர்கள் கொஞ்சம் மாறத் தொடங்கினார்கள் என்பது வரலாறு அழுத்தமாகப் பதிவு செய்யும் உண்மை.

இடையில் முலாயமுடனும், மாயாவதியுடனும் உறவு காட்டியது வடக்கில்தானே தவிர தெற்கில் அவர்கள் எப்போதுமே காங்கிரஸை நேசத்துடன்தான் பார்த்தார்கள்; வாக்குகளை அளித்துப் பரிபாலித்தார்கள் என்பதுவும் உண்மை!

அதனை உணர்ந்தது போல்தான் மன்மோகன் சிங் தலைமையிலான முதல் அரசு சிறுபான்மையோர் மீதான பாசத்துடன் – கரிசனத்துடன் சச்சார் கமிட்டியை அமைத்தது; அதன் கண்டுபிடிப்புகளை பிரபலப் படுத்தி ‘உச்சு’க்கொட்டியது. முஸ்லிம்கள் நீண்ட காலமாக கிடப்பில் கிடத்தப் பட்டுக் கிடந்த உரிமைகள் நமக்குக் கிடைக்கப் போகிறது என்று எதிர்பார்த்து …. எதிர்பார்த்து… எதிர்பார்த்து… ஏமாந்து போனார்கள். எதுவரை? மறுபடியும் வாக்குக் கேட்டு வரும்வரை! பரிதாப நிலை தெரியாமல் வாழாவிருந்தால் தவறில்லை; தெரிந்த பிறகும்
கண்டுகொள்ளாதிருந்தால் அது நம்பிக்கைத் துரோகம்தான் ! இருந்தும்…… இருந்தும்…. இப்போதும் கூட அவர்கள் காங்கிரஸ¤க்குத்தான் வாக்களித்திருக்கிறார்கள்!

இதில்தான் காங்கிரஸின் கவனத்துக்கான செய்தி இருக்கிறது!

நமது தலையங்கம் சொல்லநினைக்கிற தகவலும் இருகிறது!

முந்திய மந்திரிசபையில் சிறுபான்மையோர் மீது அன்பும் கருணையும் காட்டிய அர்ஜுன் சிங் இருந்தார்! அனைத்து எதிர்ப்புகளையும் அவர் தடுப்புச் சுவர்போல் நின்று தமது சூடான பதில்களால் தோற்கடித்தார்! ஆனால் அவருக்கு இப்போது இடமில்லை!முதுமை அதற்கான காரணமாக முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் கபில் சிபல் என்ற
முன்னேறிய சமூகத்தவர் அமர்த்தப்பட்டிருக்கிறார். இது சிறுபான்மையோரின் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது!

நன்றி: நர்கிஸ் – தலையங்களம் – ஜூலை 2009