- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

எதிர்பாராமல் ஓர் ஆசுவாசம்!

நடந்து முடிந்த நாட்டின் பதினைந்தாம் பொதுத்தேர்தல் அனைத்து ஊடகக் கணிப்புகளையும் தகர்த்து விட்டு ஒரு புதிய ராஜபாட்டைக்குச் சாளரம் திறந்திருக்கிறது!
மதமாச்சரிய சக்திகள் வீறுகொண்டெழும் என்று எந்த முன்னுரைப்பும் அறியத்தராவிட்டாலும், மாறிய கூட்டணிக் காட்சிகளும், கொள்கையற்ற கோஷ்டி சேரல்களும் வாக்குச் சிதறலுக்கு வழியமைத்து உறுதியான அரசமைவுக்கு இடைஞ்சலாகிவிடுமோ என்ற அச்சம் இருந்தது. இடதுசாரிகள் திடீரென ஞானோதயம் வந்ததுபோல திசைமாறிப் பயணித்தது வேறு நாட்டின் மீது அக்கறை கொண்டவர்களை அலைக்கழித்தது. அதிலும் குறிப்பாக காங்கிரஸ் வடக்கே எந்த முன்னேற்றத்தையும் காட்டமுடியாமல் போகுமோ என்ற பீதியை லல்லு-பாஸ்வான் கூட்டணி ஏற்படுத்தியது.

காங்கிரஸ் தலைமை அரசு அமையும் வாய்ப்பு எதிர்பார்க்கப்பட்டது என்றாலும், மக்கள் தங்களுக்குள் போட்டிருந்த அதிரடித் திட்டத்தை எந்த ஆய்வாளராலும் வெளிப்படையாகக் கண்டு கொள்ள முடியவில்லை. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் ராகுல் இவ்வளவு உயிர்ப்புடன் வெளிவருவார் என்பதை எந்த அரசியல் ஆய்வாளரும் துல்லிதமாக அளவிடமுடியவில்லை; சில ஆச்சரியங்கள் நிகழலாம் என்று மட்டுமே ஆரூடங்கள்.

இந்திய மக்களின் இந்த ஜனநாயக எழுச்சி சரியான நேரத்தில் ஒரே அடியில் பல உண்மைகளை உணர்த்தியிருக்கிறது!

நாட்டுக்கு ஒரு நிலையான ஆட்சி வேண்டும்! நான்கரையாண்டுகள் ஆட்சிக்கு ஆதரவு தந்துவிட்டு, திடீர் ஞானோதயத்தில் நற்றாட்டில் விட்டுவிட்டுக் கழன்றுகொள்வோர் தேவையில்லை என்ற உணர்த்தல்!

காரத் காட்டிய கம்யூனிஸ்ட் பாதையில் நாட்டின் பாதுகாப்பைவிட சக்திக்கு மீறிய பேராசை மிகைத்து நின்றதை உணர்ந்துகொண்ட சாமர்த்தியம்!

லல்லுவும் -பாஸ்வானும் நடத்திய நகைச்சுவை நாடகத்தை இரக்கமில்லாமல் நசுக்கிய முதிர்ச்சி !

அத்வானியை முன்னிறுத்திவிட்டு, மோடியையும் சற்றே முன்னிறுத்தி வேவு பார்த்த வினயத்தை விஷம் என அடையாளம் கண்டுகொண்ட நேர்த்தி !

தமிழக அம்மா பிரதமர் கனவிலும், தமிழக ஆட்சிக் கலைப்பிலும் தேரோட்டம் போடத் தொடங்கிவிட்டதை தெளிவோடு கண்டு அவரை எங்கு வைக்கவேண்டுமோ அங்கு வைத்து அவசரமாக கோடைபங்களாவுக்குக் குடியேற்றிய நாசூக்கு!

மூன்று நான்கு என்று அணிகளை வரிசைப்படுத்தியவர்களுக்கு அறைந்து வைத்த ஆப்பு!

அடடா..! இந்திய வாக்காளர்களுக்குத்தான் என்னவொரு முதிர்ச்சி !

தேர்தல் தேரோட்டங்கள் கிழப்பிய தூசுப் போர்வையும் வெப்பமும் கலைந்து மறைந்த பின், நாட்டின் நாலாதிசைகளிலுமிருந்தும் ஒத்தடம் கொடுப்பது போல சாரல் ஏற்றி வந்த தென்றல்; அதனால் ஏற்பட்ட ஆசுவாசம்!

இந்திய ஜனநாயகம் தந்த இந்த ஆசுவாசத்துக்கு என்ன விலை தந்தாலும் தகும்!

நன்றி: நர்கிஸ் – தலையங்கம் – ஆகஸ்ட் – 2009