- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

ரமலான் சங்கலபம்

நம் மீது இரக்கமுள்ள அல்லாஹ் நமது இம்மை வெற்றிக்கு சம்பாதித்துக் கொள்வதற்காக இன்னொரு ரமலானைத் தந்து இன்னருள் பாலித்திருக்கிறான்!

வருடம் முழுக்க அழுக்கேறியிருந்த கல்பை சுத்தி செய்துகொள்ளும் வாய்ப்பாக்கித் தந்திருக்கிறான்!

சில வருடங்களாக நாம் ஒவ்வொரு ரமலானிலும் ஒரு சங்கல்பம் செய்து கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறோம்!

அதனை ஒட்டி இதோ நம் பார்வைக்கு ஓர் ஆலோசனை!

நமது குடும்பவாழ்வியல் சமீப காலமாக பலவிதமான நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதை மறுப்பதற்கில்லை. பொருளாதார மந்தம் ஒருவகை நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறதென்றால், நம்மைச் சூழ்ந்திருக்கிற கலாசார – சுற்றுப்புறத் தாக்கங்கள் வேறுவிதமான நெருக்குதல்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

சமுதாயக் கல்விவளர்ச்சி பெருகிவருகிறது; குறிப்பாக பெண்கள் கல்வி கடந்த பத்தாண்டில் துரித வளர்ச்சி கண்டிருக்கிறது. இது காலாகாலமாக முடங்கிக் கிடந்த மகளிர் மனிதவளத்தை ஆக்கப் பூர்வமான ஓர் எல்லையை நோக்கி உயர்த்தியிருக்கிறது என்பது உண்மைதான் என்றாலும், உலகக்கல்வி மட்டுமே ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு முழுமையான மனிதவள மேம்பாடு ஆகாது என்ற உணர்வு தேவையான அளவுக்கு கவனம் பெறவில்லையோ என்ற தோற்றம் தெரிவதை மறுப்பதற்கில்லை. அவ்வப்போது வெளிவரும் சில செய்திகள் சிந்திக்க வைக்கின்றன. அவை சிறியவைதான் -எங்கேயோ எப்போதோ ஒன்றுதான்- என்று அலட்சியப் படுத்துவதைவிட அதீத அக்கறை காட்டி தடுத்து நிறுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டதை உணர்த்துவதாகவே கொள்ள வேண்டும்.

மேற்கல்விபெறும் வட்டங்களிலிருந்து மட்டுமல்லாமல் இத்தகைய தகவல்கள் கல்விஇடைநிறுத்தம் செய்த தளங்களில் இருந்தும் வருவதையும், அவை பெரும்பாலும் பொது ஊடகத் தாக்கங்கள் சார்ந்தவையாக உள்ளன என்பதையும், பெற்றோர் கவனக்குறைவுகளால் ஏற்படுபவை என்பதையும் ஆய்வுகள் புலப்படுத்துகின்றன.

நமது தளங்களில் இருந்து எப்போதோ அங்கொன்றாய் இங்கொன்றாய் வரும் இத்தகைய செய்திகளை ‘பிணந்திண்ணிகள்’ போலக் காத்திருக்கும் சில ஊடக நச்சரவங்கள் பலமடங்கு ஊதிப் பெரிதாக்கி ‘பம்மாத்து’க்காட்டுவதைப் பார்க்கிறோம்.

சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு கொலையை இந்த சக்திகள் எப்படிப் பார்த்தன- எப்படி வினயமாகத் திசைதிருப்பி, உயர் காவல் துறை அதிகாரியையே மூளைச்சலவை செய்து- தடுமாற வைத்து – நமது  மார்க்க விழுமியங்களையும் -வாழ்வியல் கூறுகளையும் தத்துவார்த்த நெடியுடன் உரசி ருசிபார்க்க முற்பட்டன என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.

நல்ல வேளையாக நமது சமுதாய அமைப்புக்கள் சுறுசுறுப்புடன் இயங்கி இந்த திசைதிருப்புக் கும்பலை நிலைகுலையச் செய்ததுடன், அதிகாரி வருத்தம் தெரிவிக்குமளவுக்கு உண்மையை வெளிக்கொணர்ந்தன.

இப்படி ஒவ்வொன்றுக்கும் போராட்டம் நடத்துவதை விட இத்தகைய தனிமனித -குடும்ப பிறழ்வுகளைக் கூட தடுத்து நிறுத்துமளவுக்கு நமது குடும்ப மேலாண்மை தரமிக்கதாய் அமையுமாறு பார்த்துக் கொள்வதுதான் சிறப்பானது அல்லவா?

நமது இந்த வருட ரமலான் சங்கல்பம் குடும்பக் கண்காணிப்பை மையப் புள்ளியாய்க் கொண்ட மேலாண்மை சங்கல்பமாக அமைய வெண்டும் என்பதே நம் ஆவல், வேண்டுகோள், ஆலோசனை!

இந்த புனித ரமலான் நம் அழுக்குகள் அனைத்தையும் அழிக்கட்டும்!

கருணையுள்ள ரஹ்மான் அனைவருக்கும் மனநிம்மதியை அளிக்கட்டும்!

நன்றி: நர்கிஸ் – தலையங்கம் – ஆகஸ்ட் 2009