- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

இந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை!

லேமேன் பிரதர்ஸ் போன்ற உலகப் பெரும் வங்கிகள் திவாலானதைத் தொடர்ந்து இதுவரை சந்தித்திராத பொருளாதார நெருக்கடியில் உலகம் துவண்டு போய்க் கிடக்கிறது. உலகுக்குப் பொருளாதார முறைமைகளைக் கற்றுக்கொடுக்கும் ஆசான்களாகத் திகழ்ந்த அமெரிக்க – ஐரோப்பிய நிபுணர்கள் செய்வதறியாது கைபிசைந்து கொண்டு நின்ற வேளையில், இஸ்லாமிய ஷரீஅத் அடிப்படையிலான வங்கித் துறையும், அதனை தங்களது வழக்கமான வங்கிப் பரிவர்த்தனைகளுடன், இஸ்லாமிய வங்கி ஜன்னல்களையும் திறந்திருந்த சில பெரிய வங்கிகளின் அந்தக் குறிப்பிட்ட இஸ்லாமிய வங்கிக் கிளைகளும் எந்த பாதிப்பும் இல்லாமல் – மாறாக நஷ்டத்துக்கு பதிலாக லாபம் ஈட்டிக் கொண்டிருந்த உண்மையை உலகம் கண்டு வியப்பில் ஆழ்ந்தது!

இஸ்லாத்தையும் அதன் வழிமுறைகளையும் பயங்கர பூதமாக உருவகித்துப் பிரச்சாரம் செய்து வந்த ஊடகங்களும் இந்த உண்மையின் கனத்தைத் தவிர்க்க முடியாமல், அது பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டன.

விளைவு? இஸ்லாத்தின் பொருளாதார சட்ட வரைவுகளின் தனித்தன்மையும், எந்தக் காலத்துக்கும் பொருந்திய நடைமுறை சாத்தியங்களும் வெளிச்சத்துக்கு வந்தன. குறிப்பாக சிட்டி வங்கி -ஹெச்.எஸ்.பி.ஸி. வங்கி போன்ற பெரிய வங்கிகளின் இஸ்லாமியக் கிளைகள் காட்டிய பொருளாதார ஆரோக்கியம் உலகப் பொருளாதார மேதைகளை உசுப்பி விட்டிருக்கிறது.
சிறுபான்மை முஸ்லிம்களின் கல்வி-பொருளாதார- சமூகப் பின்னடைவுகள் பற்றி ஆராய்ந்த சச்சார் கமிஷன் பொது வங்கிகளை முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்ளாமைக்கு முக்கியக் காரணம் அவர்களது மார்க்கப்படி வட்டி கொடுக்கவோ வாங்கவோ கூடாது என்பதுதான் என்று அழுத்தமாகச் சொன்னது. கேரளா போன்ற மாநிலங்களின் பொது வங்கிகளில் முஸ்லிம்கள் வட்டியை வாங்காததால் தேங்கி -பயன்பாடு இன்றி முடங்கிக் கிடக்கும்.

கோடிக்கணக்கான பணம் பற்றியும் ஆதங்கம் தெரிவிக்கப்பட்டது இங்கு நினைவு கூறத்தக்கது.அரபு நாடுகளின் இஸ்லாமிய வங்கித் துறையில் பணியாற்றி அனுபவம் பெற்ற முஸ்லிமல்லாத பெரிய அதிகாரிகள் கூட பாரதூரமான பொருளாதார நெருக்கடிகளிலிருந்து தற்காத்துக் கொள்ள இஸ்லாமிய வங்கித்துறை சரியான பரிகாரம் என்று ஓங்கி முழங்கினார்கள்.

சென்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் முஸ்லிம் லீகின் வேலூர் எம்.பி. ஹாஜி அப்துல் ரஹ்மான் அவர்கள் ஆற்றிய முதல் நாடாளுமன்ற உரை இந்தியாவில் இத்துறைசார்ந்த அறிஞர்களையும் அரசியல் கட்சிகளையும்  ஈர்த்தது.

ராஜ்யசபாவின் துணைத்தலைவர் ரஹ்மான் கான், அஸாசுத்தீன் உவைஸி போன்ற பல முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிற கட்சி நடாளுமன்ற உறுப்பினர்களுடன்  இது பற்றி தொடர்ந்து விளக்கமளித்து வருகிறார்கள். ICIF (INDIAN CENTRE FOR ISLAMIC FINANCE) என்ற மத்திய நிறுவனத்தின் தேசியக் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் அல்ஹாஜ் எச். ரக்கீப் ஸாஹிப் அவர்கள் ‘இந்தியாவில் இஸ்லாமிய  வங்கித்துறைப் பயன்பாடு அதிகரிக்கப் பட்டால், முடங்கிக்கிடக்கும் பல லட்சம் கோடி பணம் நாட்டின் பரிவர்த்தனைக்கு வந்து பரஸ்பர பயன்பாட்டுக்கு உதவும் என்று மத்திய அரசின் ரிஸர்வ் பேங்க் உதவி கவர்னர் டாக்டர் கே.ஸி. சக்கரவர்த்தி போன்ற உயர் அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்தார். லண்டன், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, டோக்யோ, ஹாங்காங் போன்ற நாடுகளில் இஸ்லாமிய வங்கி முறை பலன்தரத் தொடங்கியிருக்கும் போது அது ஏன் இந்தியாவுக்கு பயன்தராது? என்று குரல் கொடுத்தது ICIF. இந்த  முயற்சிகள் இப்போது பயன்தரத் தொடங்கிவிட்டதற்கான அடையாளங்கள் தொடங்கிவிட்டன.

இந்திய தேசிய காங்கிரஸ், ஸமாஜ்வாதி பார்ட்டி, திமுக, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் போன்ற பெரிய கட்சிகள் இந்த திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மிக விரைவில் பிரதமர் இது பற்றி ஒரு முடிவெடுப்பார் என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

துபாய் இஸ்லாமிய வங்கியில் முன்னாள் அதிகாரியான சகோதரர் அப்துல் ரஹ்மான் எம்.பி. அவர்கள் ‘இந்த வங்கி முறையை இஸ்லாத்துடன் இணைத்துப் பேசாமல் மியூச்சுவல் •பண்ட்முறை போல மக்களுக்கு பாதுகாப்பான – வட்டியில்லாத- லாபகரமான வங்கி முறைமை’ என்று பிரபலப் படுத்தலாம் என்று ஆலோசனை சொல்லியிருப்பதாக பிரபல இதழான  •ப்ரண்ட்லைன் கூறுகிறது! வரவேற்கப் படவேண்டிய நல்ல முறைமை!

நன்றி: நர்கிஸ் – தலையங்கம் – நவம்பர் – 2009