- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

வரலாற்றுச் சாதனை!

தமிழ்முஸ்லிம்கள் சம்பாத்தியத்துக்காக புலம்பெயர்ந்து மலேயா-சிங்கப்பூருக்கு பயணப்பட்ட அந்தக் காலத்திலேயே தமிழகத்தின் பிறமாவட்ட மக்களிலிருந்து வேறுபட்டு குடும்பத்துடன் குடிபெயர்ந்தவர்கள் தென்காசி -கடையநல்லூர் முஸ்லிம்கள்!அதன் காரணமாக இன்று மலேசியா-சிங்கப்பூர் இருநாடுகளிலும் பல தலைமுறைகளாக குடும்பத்துடன் வாழ்வோரைக் கணக்கிட்டால்,இவ்விரு ஊர்மக்களும் அதிகமாக இருக்கிறார்கள். ஆற்றில் ஒரு கால் -சேற்றில் ஒரு கால் என வாழ்ந்தோரை விட இவர்கள் ஆழமாக வேர்விட்டுக் கிளைத்திருப்பதையும் காணமுடிகிறது!

இங்கேயே குழந்தைகுட்டிகளுடன் வாழ்ந்ததால், அவர்களது தாய் மொழிக்கல்வி பற்றி அவர்களுக்கு ஏற்பட்ட கவலையின் காரணமாக (சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் முன்முயற்சியில் – மர்ஹ¤ம் அ.நா. மெய்தீன் அவர்களின் கடின உழைப்பில்) உருவான ‘உமறுப்புலவர் தொடக்கப் பள்ளியும் – உயர்நிலைப்பள்ளி ‘யும் 1948 முதல் 1982 வரை சிங்கப்பூர்த் தமிழர்களுக்கு அரிய பொக்கிஷமாயின!

இன்று சிங்கப்பூரில் ஆசிரியர்களாக- குறிப்பாக, தமிழாசிரியர்களாகப் பணியாற்றும் உள்நாட்டுத் தமிழர்களில் பலர் தங்களது பள்ளிக்கல்விக்காக உமறுப்புலவரைத் தொட்டவர்கள்தான்! தொடக்கக் கல்விக்குப் பிறகும் -உயர்நிலைப்பள்ளி 1982-ல் மூடப்பட்ட பிறகும் வெவ்வேறு கல்வி நிலையங்களில் பயின்றவர்களும் பல எல்லைகளில் இன்னமும் தங்களது தாய்ப்பள்ளியை மறக்காத மாண்பினைப் பார்க்கிறோம்.

தமிழ்போதனா மொழிக் கல்வி வழங்கிய தென்கிழக்காசியாவின் ஒரே உயர்நிலைப் பள்ளி உமறுப்புலவர் மட்டும்தான்!

இன்றும் உமறுப்புலவர், ‘உமறுப்புலவர் தமிழ் மொழி மையமா’கவும் ‘உமறுப்புலவர் உபகார நிதி’யமாகவும் கல்விப் பணி செய்து நெஞ்சில் நீங்காத இடம் பெற்று நிற்கிறது!

உமறுப்புலவர், சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் ஓர் அரிய சாதனைச் சரிதம்!

இன்று சிங்கப்பூர்த் தமிழர்களால் செல்லமாக அழைக்கப் பெறும் அதே ‘எஸ்.கே.எம்.எல்.’ இந்த ஆண்டு தொடக்கத்தில் (ஜனவரி 2 -நாள்) வரலாற்றுப் பெருமை மிக்க சுல்தான் பள்ளி இணைமண்டபத்தில் இன்னொரு சாதனைச் சரிதத்தையும் நிகழ்த்தி வரலாற்றில் தனித்துவமான இடத்தினைத் தனதாக்கிக் கொண்டது.

க¨டையநல்லூர் பைஜுல் அன்வார் அரபிக்கல்லூரியுடன் இணைந்து எஸ்.கே.எம்.எல். 2005-ல் தொடங்கிய ‘பகுதிநேர அரபிக்கல்லூரி’ 5 வருட பட்டக் கல்வியை(பைஸி) கொடுத்து 42 ஆலிம்களையும்  ஆலிமாக்களையும் உருவாக்கி, அவர்களுக்கு ‘ஸனது’ வழங்கிய நிகழ்ச்சியை சிங்கப்பூரே பெருமிதத்துடன் பார்த்து நெகிழ்ந்தது!

தமிழகத்திலிருந்துதான் உலமாக்கள் வந்தாகவேண்டும் என்ற நிலையை சற்றே மாற்றி, தமிழக உலமாக்களுடன் இணைந்து- அவர்கள் ஒத்துழைப்புடனேயே- சிங்கப்பூரிலேயே உலமாக்களை உருவாக்க முடியும்- அது  காரியசாத்தியமானதே என்ற சிந்தனையை விதைத்தவர் ஹாஜி க.ஹ. அப்துல் மஜீது என்று அறிவிக்கப் பட்டது.

நன்றி: நர்கிஸ் – துணைத் தலையங்கம் – பிப்ரவரி – 2010