- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

தலைக்குனிவேற்படுத்தும் தலைகள்!

ஒழுக்கம்தான் ஒரு மனிதனுக்கு உயிர்போன்றது. பிறர் ஒரு மனிதனின் தகுதியை அளவிடுவதில் முக்கியப்பங்கு வகிப்பதும் அதுவே! சாதாரண மனிதனுக்கே அது அவசியம் எனும்போது, தலைவர்களுக்கு அது மிக மிக முக்கியமானது அல்லவா?

எல்லா மொழிகளிலும் எல்லா அறநூல்களும் போதிக்கும் முதல் பாடம் ஒழுக்கம் சார்ந்ததுதான். எல்லா சமய நூல்களும் அதனைத்தான் முன்னிறுத்துகின்றன. நமது நாட்டின் அரசியமைப்புச் சட்டமும் ஜனாதிபதி முதல் சாதாரண பஞ்சாயத்துத் தலைவர் வரை ஒழுக்கத்தை- நாணயத்தை முன்வைக்கும் உறுதிமொழியை (சத்தியப் பிரமாணத்தை) எடுத்த பிறகுதான் அவர்களிடம் நிர்வாகப் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றே அறிவுறுத்துகிறது!

அதன் படித்தான் அவர்களும் பொறுப்பேற்று நம்மை ஆட்சி செய்கிறார்கள். ஆனால் ஆட்சிப் பொறுப்பினை ஏற்கும் வரை ‘மக்கள் சக்தியே மாபெரும் சக்தி’ எனவும் ‘மக்களுக்கு சேவை செய்வதே தம் ஒரே கடன்’ எனவும் முழங்கும் அவர்கள், பதவியேற்ற பிறகு பொதுமக்கள் நலனையே மறந்து விட்டு, தங்களின் சொந்த மக்களின் அல்லது சாதி மக்களின் நலனையே -அல்லது தங்களுக்கு லஞ்சக்காசு கொடுக்கும் மக்களின் நலனையே பிரதானமாகக் கொண்டு செயல்படுகிறார்கள் என்பது நடப்பு உண்மை.

இது நமக்கும் பழகிப் போய்விட்டது!

ஆனால் சமீப காலமாக இந்தத் தலைவர்கள் அல்லது அதிகாரிகள் தங்களது சத்தியப் பிரமாணத்தை முற்றிலும் மறந்தவர்களாக மட்டுமல்ல, தனிமனித வாழ்வின் அடிப்படை ஒழுக்கங்களைக் கூடக் கடைப்பிடிக்காமல் தாங்கள் வகிக்கும் பதவிக்குப் பெரும் இழுக்குச் சேர்க்கும் வகையில் நடந்து கொள்வது பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

சமீபத்தில் இந்திய மக்களை உறையவைத்தது, ஆந்திராவின் கவர்னராக இருந்த திரு என்.டி. திவாரி என்ற 86 வயதுப் பெரியவர்- மத்திய மந்திரி, மாநிலங்களின் முதல்வர் என்றெல்லாம் பெரும்பதவிகளை வகித்தவர், கவர்னர் மாளிகையிலேயே மிக மோசமான விபச்சார கேளிக்கைகளில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு பதவிபறிக்கப்பட்டது நாட்டின் பொதுவாழ்க்கையின் தரத்தை மிகவும் தரம் தாழச் செய்துவிட்டது!

மக்களை வெட்கித்தலை குனிய வைத்துவிட்டது!

இன்னொருவர், இவர் நாட்டின் பிரதமாராகவே இருந்தவர், மாநில முதல்வராகப் பல முறையும், கட்சிகளின் தலைவராகப் பலமுறையும், பல தளங்களிலும் பவனி வந்தவர், கர்நாடக மாநில முதல்வரை மிகமிகக் கேவலமான வார்த்தைகளால் பலர்முன் பகிரங்கமாக ஏசியிருக்கிறார். அவர் திரு தேவ கௌடா!

நாடு எங்கே போகிறது?

நமது தலைவர்களுக்கு  தனிமனித ஒழுக்கத்தை யார், எப்போது கற்றுக் கொடுக்கப் போகிறார்கள்?

நாட்டின் சட்டமும் தண்டனையும் சாமான்யனுக்குத்தானா?

நன்றி: நர்கிஸ் – தலையங்கம் – பிப்ரவரி – 2010