- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

இந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்

அல்லாஹ்வின் அடியானாய் பேராசிரியர் பெரியார்தாசன் !

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அண்ணன் அப்துல்லாஹ் அவர்களே!

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் எனது ‘கோடுகள் கோலங்கள்’ நாவல் 1997-ல் மதரஸா மிஸ்பாஹுல் ஹுதாவின் ஏற்பாட்டில் வெளியீடு கண்டது, டத்தோ டாக்டர் முகம்மது இக்பால் அவர்கள் தலைமையில்!

வேறு நிகழ்வுகளுக்காக மலேசியப் பயணம் வந்திருந்த தாங்கள் அந்த விழாவுக்கு ஏற்பாட்டாளர்கள் அழைக்காமலே வருகை தந்தீர்கள். அந்த விழாவில் பத்து நிமிடம் பேசவேண்டிய அவசியம் இருப்பதாகக் கூறி அனுமதி கோரினீர்கள். எதிர்பாராத இன்ப அதிர்ச்சியில் இருந்த ஹாஜி ஜஹவர் அன்ஸாரி அன்பழைக்க நீங்கள் சுமார் 15 நிமிட நேரம் உரையாற்றினீர்கள்.

உரையின் சுருக்கம், சகோதரர் டாக்டர் தாவூத் பாட்சா அவர்கள் அளித்த எனது படைப்பிலக்கிய நூல்கள் வழி தமிழ்முஸ்லிம் வாழ்வியல் உயிர்ப்புகளை நன்கு புரிய முடிந்ததாகவும், ‘நம்பள்கி-நிம்பள்கி வாலாக்கள்தான் தமிழ் முஸ்லிம்கள்’ என்ற தாக்கம் உடைந்து போனதாகவும் கூறி என்னை வாழ்த்தினீர்கள்!

15 ஆண்டுகள் கழித்து, கடந்த 3 நாட்களாக நூற்றுக்கணக்கான ஈமெயில்கள் -போன் கால்கள் தாங்கள் முறைப்படி ஒரு முஸ்லிமாகிவிட்ட செய்திகளைச் சுமந்தவாறு! அல்ஹம்துலில்லாஹ்! தங்களது நேர்காணல்களை இப்போதுதான் முழுமையாகக் கேட்டேன்.

16 வயதில் பள்ளித்தோழன் சிராஜுத்தீன்- 2000-ம் ஆண்டில் அமீரகப் பயணம்- ஈமான் பேரவை- தாவூத் பாட்சா- ஐ.எ·ப்.டி. சிக்கந்தர்- ரஹ்மத் அறக்கட்டளை முஸ்தபா ஹாஜியார், கவிஞர் தண்ணன் மூஸா …….. இப்படி பலரது தொடர்புகளும், ‘நாத்திக நம்பிக்கைப் படி இறைவன் இல்லாமலே போனால் பரவாயில்லை; இறைவன் இருந்துவிட்டால்? ” என்ற பயம் ஏற்படுத்திய சிந்தனைகளாலும், சைவப் பிள்ளையாய் – பெரியார்தாச நாத்திகனாய் – பௌத்த சித்தார்த்த புத்திரனாய் பரிணாம வளர்ச்சி கண்டு இன்று ஒரிறைக் கொள்கையை உணர்ந்து புரிந்து – மொழிந்து நெகிழ்ந்து உருகி நிற்கும் உங்களுக்கு இந்தத் தம்பியின் சலாத்தை – அவனை கௌரவ ஆசிரியராகவும்,

தங்கை அனீஸ் பாத்திமாவை ஆசிரியராகவும் கொண்டு உலகத் தமிழ் நெஞ்சங்களை மாதந்தோறும் அரவணைக்கும் நர்கிஸ் மாத இதழின் சலாத்தினை ஏற்றுக் கொள்ளுங்கள்!

உங்களது எதிர்காலப் பயணத்தின் நோக்கங்கள் பற்றி நேர்காணலில் நேர்மையுடன் முன்வைத்த குறிப்புக்களில் பாசாங்கற்ற பண்பாட்டுச் சிதறல்களைப் புரிகிறோம்.

கியாமத்து நாளில் உன்னையே துணைவியாய்ப் பெற ஆசிக்கிறேன் என்று உங்கள் துணைவியாரிடம் கூறிய கூற்றைக் கேட்ட போது கண்கள் பனித்தன!

இன்ஷா அல்லாஹ் நாங்களும் உங்களின் புதிய பயணத்தில் உடன் வருவோம்; நர்கிஸின் லட்சக்கணக்கான வாசகர்களும் உடன் வருவார்கள்!

மீண்டும் ஒரு அன்பு முகமன், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அண்ணன் அப்துல்லாஹ் அவர்களே!

நன்றி: நர்கிஸ் – ஏப்ரல் – 2010