- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

வாழ்க்கை என்ன விளையாட்டா?

சானியா மிர்ஸா!

[1]இந்திய விளையாட்டு வரலாற்றில் புதிய வரலாற்றுப் புயல்!
டென்னிஸ் விளையாட்டில் இதுவரை எந்தப் பெண்ணும் சாதிக்காத சாதனைகளைச் செய்தவர்; செய்துகொண்டிருப்பவர்!
சென்ற ஆண்டு அவரது பெற்றோர் அவருக்கு குடும்பநண்பர் ஒருவரின் மகனை திருமண நிச்சயார்த்தம் செய்தனர். இருவருடங்கள் கழித்து திருமணம் என்றனர்.
திடீரென ‘புயல்’ அந்த ஒப்பந்தம் ரத்துச் செய்யப் பட்டுவிட்டதாக அறிவித்தது. அது போதாதென்று, சென்ற வாரம் இன்னொரு புதிய புயலைக் கிளப்பியது. பாகிஸ்தானிய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சுஐபு மாலிக்கை தான் விரைவில் திருமணம் செய்யப் போவதான அறிவிப்பே அது!

அதன் பின் நடந்தது எல்லாமே உலகம் முழுக்கத் தெரியும்! சுஐபு, முன்பே ஆயிஷா என்ற இன்னொரு ஹைதராபாத் பெண்ணை 2002-ல் திருமணம் செய்து கொண்ட செய்தி உலகம் முழுக்கச் சொல்லப்பட்டது.

அது விபரீதமானது; இருதரப்பிலும் அளிக்கப் பட்ட வாக்குமூலங்கள் குடும்ப கண்ணியத்தைக் கப்பலேற்றின. ஊடகங்கள் தங்கள் பாணியில் அவற்றைக் கொச்சைப் படுத்திக் குளிர் காய்ந்தன!

ஒரு பாகிஸ்தானியை மணப்பதா சானியா? அவர் இந்தியாவுக்கு இனிமேல் விளையாட அனுமதிக்கக் கூடாது! சுஐபு ஒரு தீவிரவாதி ! … இப்படி சந்தடி சாக்கில் சில சாக்கடைப் பேச்சுக்கள்! ஏச்சுக்கள்!

சுஐபின் பாஸ்போர்ட் முடக்கம்; கிரிமினல் வழக்கு; கைது செய்யப்படும் வாய்ப்பு ..இப்படி என்னென்னவோ கருத்து முன்வைப்புகள்! இதனைப் பார்த்துக் கொண்டிருந்த ஹைதராபாத்தின் மூத்த மார்க்க அறிஞர்களும், கண்ணியமான பெரியவர்களும் மத்தியஸ்தம் செய்தனர்!

ஒருவகையாக இதனைப் பதிவு செய்யும் வேளையில், பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது!

சானியா -சுஐபு திருமணம் தடங்கலைக் கடந்து கரையேறியிருக்கிறது! நிம்மதி, அவர்களது பெற்றோருக்கு மட்டுமல்ல; குடும்பத்தாருக்கு மட்டுமல்ல! நமக்கும் தான்!

இஸ்லாம் கட்டுப்பாடான ஒரு மார்க்கம் தான் ; ஆனால், காட்டுமிராண்டித் தனமானது அல்ல!

ஆணுக்கும் பெண்ணுக்கும் கண்ணியமான ஒழுக்கக்கட்டுப்பாடுகளை அது விதித்திருக்கிறது! அது அவர்களை இத்தகைய ஆபத்துக்களிலிருந்து- விபத்துக்களிலிருந்து பாதுகாப்பாற்றும் உபாயம்;

ஒரு வேலி ! ஒரு தடுப்பணை!

அந்த ஒழுக்க வட்டத்துக்குள் அவர்கள் நிற்கும் வரை கண்ணியம் காக்கப்படுகிறது; காப்பாற்றப் படுகிறது!

அதைவிட்டு, விளையாட்டாகவோ -அல்லது விரும்பியோ அவர்கள் எட்டெடுத்து வைக்கும் போது , விபரீதங்களின் பவனிதான்! சானியாவும் -சுஐபும் விளையாட்டில் வல்லவர்கள்! வென்றவர்கள்!

அந்த தைரியத்தில் மார்க்கம் பரிந்துரைத்த ஒழுக்க வட்டத்தைவிட்டு வெளியே கொஞ்சம் வந்து ஆடிப்பார்த்தார்கள்! நல்ல வேளையாக, மார்க்க அறிஞர்களும், மார்க்க உணர்வுள்ள
பெரியவர்களும் அவர்களை பாதுகாப்பு வட்டத்துக்குள் மீண்டும் இழுத்துக் கொண்டு வந்து விட்டுவிட்டார்கள்!

அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றி இரட்சிப்பானாக, ஆமீன்!

தலையங்கம்