- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - https://chittarkottai.com/wp -

பொன்னாடைக்கு ஒரு பொன்னாடை!

சிறுகதைப் போட்டிக்கு வந்துள்ள சிறுகதைகள் கருவிலும், உருவிலும், கதைசொல் முறைமையிலும் பல்வேறு தளங்களில் பயணிக்கின்றன. தேர்வாளர்கள் பெரும் சவால்களை சந்திக்கின்றனர்.

இஸ்லாமியச் சிறுகதை முன்னோடி எழுத்தாளர் தொடங்கி, வெகுஜன ஊடகங்களில் உயரத்தில் நிற்கிற திறன்மிக்கோர், சமுதாயப் படைப்பிலக்கியப் பாதையில் சாதனைகள் படைத்து முன்னிற்போர், துவக்க நிலை எழுத்தாளர்கள் என்று கடுமையான போட்டி நிலவுகிறது.

இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில்தான் பரிசுப் பட்டியலைத் தர முடியும் என்ற நிலைமை.

இருந்தாலும் போட்டிக்கென வந்த ஒரு சிறுகதை, தேர்வாளர்கள் அனைவரையும் உருகச் செய்துவிட்டது; அதன் கருப்பொருள் மனதைப் பிசைந்து நெகிழ்த்துவிட்டது!

சமுதாயத்துக்கான எழுத்தை வாழ்நாள் முழுவதும் நேசித்து, சுவாசித்து மூன்று தலைமுறைக்கு எழுதிய மூத்த எழுத்தாளர் இளையான்குடி தந்த பெரியார் தமிழ்மாமணி ஷேக்கோ அண்ணன் அவர்கள், நான்காம் தலைமுறைக்கும் எழுதிவருவதோடு, நர்கிஸ¤ம் மல்லாரி பதிப்பகமும் இணைந்து நடத்திய ‘முகம்மது இஸ்மாயில் – இப்ராஹீம் பீவி நினைவு சிறுகதைப் போட்டி’ யிலும் ஓர் இளைஞருக்கே உரிய ஆர்வத்துடனும், துடிப்புடன் கலந்து கொண்டு நம்மை கௌரவித்திருப்பது மெய்சிலிர்க்க வைக்கிற விசயம்.

இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றினை எழுதியுள்ள இலங்கை-தமிழக ஆய்வாளர் அனைவராலும் ஒருமுகமாகப் பாராட்டப்பெற்று, வியந்து போற்றப்படும் வித்தகரான அன்னார், தான் ஒரு சீனியர் என்ற முறையில் சிறிதளவேனும் கர்வமோ, தயக்கமோ காட்டாது ஒரு சாதாரணப் போட்டியாளராய்க் கலந்து கொண்டிருப்பது சமுதாயத்துக்கு -குறிப்பாக இளய தலைமுறை எழுத்தாளர்களுக்கு உணர்த்தியிருக்கும் ஓர்  உன்னதப் பாடமாகும்.

எனவே, போட்டி ஏற்பாட்டாளர்கள் என்ற முறையில் நர்கிஸ¤ம், மல்லாரி பதிப்பகமும், தேர்வாளர்களும், புரவலர் ஹாஜி எஸ்.எம். காதிர் சுல்தான் அவர்களும் கலந்து பேசி ஒரு முடிவெடுத்திருக்கிறோம்.

அதன்படி அன்னாரை போட்டி வரயறைகளுக்கும் மேலே உயர்த்தி கண்ணியப் படுத்த முடிவு செய்திருக்கிறோம்.

அவர்களது ‘பொன்னாடை’ சிறுகதையை இந்த இதழிலேயே வெளியிட்டு அதற்கு அன்பளிப்பாக ரூபாய் பத்தாயிரம் பரிசளித்தும் கௌரவிக்கிறோம்.

அன்னாருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நல்ல ஆரோக்கியத்தையும், நீடித்த நல்வாழ்வையும் அளித்து, இன்னும் நிறைய எழுதி சமுதாயத்துக்கு வழிகாட்டுமாறு பிரார்த்தனை செய்கிறோம்.

ஏற்கனவே அறிவித்தபடி பிற போட்டியாளர்களின் தேர்வுபெற்ற கதைகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.

நன்றி: நர்கிஸ் – துணைத் தலையங்கம் – மே – 2010