- சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள் - http://chittarkottai.com/wp -

கான்கார்ட் விமானங்கள்

ஒலியின் வேகத்தை விட வேகம் – கான்கார்ட் விமானங்கள்

1969ஆம் ஆண்டு பறக்கத் தொடங்கிய கான்கார்ட் விமானங்கள் ஏன் பறக்காமல் சிறகொடிக்கப்பட்டன?  காரணங்கள் தெரிந்து கொள்ள ஆவலாய் இருகிறதா? கொஞ்சம்
கொசுவர்த்தி சுத்துவோம்.

[1]பறக்கத் தொடங்கியதிலிருந்தே வேகமாய் பறக்க  வேண்டும் என்ற ஆவல் மனிதரிடையே இருந்து வந்தது. அதுவும் ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில், அதாவது மணிக்கு 1,225 கிலோமீட்டர் வேகத்தில் பறப்பது என்பது ஒரு மைல்கல்லாக இருந்தது. ராணுவ விமானங்கள் பல அவ்வேகத்தில் பறந்தாலும் பயணிகள் சேவையில் அவ்வேகத்தில் சென்ற விமானங்கள் இரண்டே இரண்டுதான் – ஒன்று கான்கார்ட். மற்றொன்று அதற்குப் போட்டியாக ரஷ்யா தயாரித்த டுப்பலோவ் 144.  இதில் வெற்றிகரமாக இயங்கியது என்னவோ கான்கார்ட்தான்.

மிகுந்த பொருட்செலவில் தயார் செய்யப்பட்ட விமானங்கள்தான் கான்கார்ட்.  அவற்றின் வரலாற்றை மற்றொரு சமயம் பார்க்கலாம். மொத்தமே 20 விமானங்கள் தான் தயாரிக்கப்பட்டன. அதில் 6 விமானங்கள் ஆராய்ச்சிக்களுக்காகவும் மீதமுள்ள 14 விமானங்கள் பயணிகள் சேவைக்காகவும் பயன்படுத்தப்பட்டன. பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனங்கள் ஆளுக்குப் பாதி என தலா ஏழு விமானங்களை சொந்தமாக்கிக் கொண்டனர். உலகிலேயே இவ்விரண்டு நிறுவனங்கள்தான் கான்கார்ட் விமான சேவையை பயணிகளுக்கு அளித்தன. சரி விஷயத்திற்கு வருவோம்.

[2]ஜூலை 25, 2000. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக விபத்தென்றால்  என்னவென்று அறியாத கான்கார்ட் விமானங்களின் முதல் விபத்து. ஆனால் எப்படிப்பட்ட கோர விபத்து. விமானத்தில் இருந்த 100 பயணிகளும் ஒன்பது பணியாளர்களும் அவர்களுடன் தரையில் இருந்த நால்வரும் மரணமடைந்த ஒரு பரிதாபமான நிகழ்வு. ஆனால் கான்கார்ட் என்ற சகாப்தத்தின் கடைசி அத்தியாயத்தின் ஆரம்பமாக இந்த விபத்து அமையும் என எத்தனை பேர் அன்று நினைத்தார்கள்?

இவ்விபத்து நிகழ்ந்ததால் அனைத்து கான்கார்ட் விமானங்களும் சோதனைக்குட்படுத்தப் படவேண்டும் என இச்சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்கள். இவ்வளவுக்கும் இவ்விபத்தின் காரணம் வேறொரு விமானத்தில் முறைகேடாக சேர்க்கப்பட்ட பகுதி ஒன்று ஓடுதளத்தில் விழுந்து, அவ்விமானத்தின் பின் சென்ற கான்கார்ட் விமானத்தின் சக்கரம் அதன் மேலேறியதால்தான் வெடித்தது எனக் கண்டறிந்தார்கள். எனினும் பல சோதனைகளுக்காக இவ்விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. [3]

பல சோதனைகள், சில மாற்றங்களுக்குப் பின் முதல் சோதனை ஓட்டம் (இது ஓட்டமா? சோதனை பறப்பு எனச் சொல்லலாமா?) நடந்தது ஜூலை 17 2001. வெற்றிகரமான ஓட்டம் என அறிவிக்கப்பட்ட பின், மேலும் சில சோதனைகளுக்குப் பின் பயணிகளுடன் பறக்கத் தொடங்கியது செப்டம்பர் 11, 2001. மற்றுமோர் மாபெரும் கொடுமை நடந்த தினம் அல்லவா அது? அந்த கோர சம்பவம் நடந்த பொழுது லண்டனிலிருந்து நியூயார்க் நகரத்தை நோக்கி பறந்து கொண்டிருந்தது மாற்றியமைக்கப்பட்ட கான்கார்ட் விமானம். நடந்த செய்தி கேட்டு மீண்டும் லண்டனை நோக்கி திருப்பி விடப்பட்டது.

அந்நிகழ்வின் பின் மீண்டும் 2001 நவம்பர் மாதம் இவ்விமான சேவை தொடங்கினாலும் முதலில் நிகழ்ந்த விபத்தின் காரணமாகவும், செப்டம்பர் 11 நிகழ்வின் பின் விமான பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததினாலும், உலக வணிகத்தில் ஏற்பட்ட பின்னடைவினாலும், தொடர்ந்து உயர்ந்து வரும் சீரமைப்பு செலவினங்களாலும் கான்கார்ட் சேவையினை நிறுத்துக் கொள்வதாக ஏப்ரல் 10, 2003 அன்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் ஏர் பிரான்ஸ் நிறுவனத்தார் அறிவித்தனர். அவ்வருடம் அக்டோபர் மாதமே இச்சேவை இறுதியாக நிறுத்தப்பட்டது.

இதுதாங்க கான்கார்ட் விமானங்களின் சேவை நிறுத்தப்பட்ட கதை.

கான்கார்ட் விமானங்களைப் பற்றி சில குறிப்புகள்.

நன்றி: விக்கி பசங்க